உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 5

பகுதி 2 · 2 / 5

நாட்டு நிறுவனம் இதற்காக நம்மை அணுகியிருக்கின்றது. அதுவும் விரைவில் நிறைவேறும், தொடங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

கன்னியாகுமரி மாவட்டம் தொழில் வளம் இல்லாத மாவட்டம் என்றால், அதைப்போலத்தான் எங்களுடைய மாவட்டமும் தொழில் வளம் இல்லாத மாவட்டம். எனவே, நாம் இருவரும் வருங்காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு, கன்னியாகுமரியிலும் தஞ்சையிலும் தொழில் வளர்ப்போம். பொதுவாகத் தமிழகத்திலேயும் தொழிலை வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக.

மாண்புமிகு உறுப்பினர் தா. கிருட்டிணன். பொட்டாசியம் குளோரைடு தீப்பெட்டி தயாரிக்க மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும். அதற்குத் தமிழ்நாட்டில் 11 சதவீதம் விற்பனை வரி செலுத்தவேண்டியுள்ளது என்றும் கூறினார்கள். தற்போது தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாம் அறிவித்த வரிச்சலுகையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் தீப்பெட்டி தயாரிப்பதற்காக பொட்டாசியம் குளோரைடு மூலப் பொருளாக வாங்கப்பட்டால், அதற்கு விற்பனை வரி 3 சதவீதம்தான் விதிக்கவேண்டுமென்று இந்த மன்றத்திலே அறிவித்திருப்பதை நான் திரு.

கிருட்டிணன் அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றேன். அதற்கான நோட்டிபிகேஷன் விரைவில் வெளியிடப்படும் என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கழக ஆட்சியின்போது, தொழில் துறையில் ஒரு முற்போக்குக் கட்டமாக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஜாயிண்ட் செக்டார் என்று இருந்தது. ஜாயிண்ட் செக்டார் என்றால் அரசு சார்பிலே 26 சதவீதம் பங்கு. அசோசியேட் செக்டார் என்றால் அரசின் சார்பில் 11 சதவீதம் பங்கு. கழக ஆட்சி முன்பிருந்த போது அப்படி ஒன்றை முன்பு ஆரம்பித்தோம். இப்படி 11 அல்லது அதற்கும் குறைவான சதவிகிதத்தை அரசு முதலீடு செய்யும்.

இதன் மூலம், தனியார் நிறுவனங்கள். அரசின் ஆதிக்கம் அதிகம் இல்லாமல், அதே நேரத்தில் தொழில் வளர்ச்சிக்கான அனைத்து அரசு

உதவிகளையும் பெற்றுச் சுதந்திரமாகத் தொழிற்சாலைகளைச் செயல்படுத்த அப்போதே வழிவகை காணப்பட்டது. 1989-ல் கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்படி, இதுவரை 49 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கழக ஆட்சியிலே தொழிற்சாலைகளைப் பெருக்க இவ்வாறு வழிவகைகளைக் கண்டதற்கு மாறாக, அ.தி.மு.க. ஆட்சியில் மாண்புமிகு உறுப்பினர்கள் எல்லாம் இங்கே சுட்டிக் காட்டியதைப் போல, நன்றாக நடைபெற்ற தொழிற்சாலைகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இங்கே மாண்புமிகு உறுப்பினர் அழகிரி அவர்கள் விளக்கமாகச் சொன்னார். ரங்கநாதன் அவர்கள் அதைச் சுட்டிக் காட்டினார். தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அரியலூர் சிமெண்ட் ஆலை, ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆலங்குளம் ஆஸ்பெஸ்டாஸ் பயிற்சித் தொழிற்சாலை, ஸ்டோன்வேர் பைப்ஸ், விருத்தாசலம் ஆகியவை 1995-96-ல் மாத்திரம் 186 கோடி ரூபாய்க்கு சிமெண்ட் பைப் போன்றவைகளை விற்பனை செய்து.

அந்த ஆண்டு 7.5 கோடி ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது. ஆனால் இந்த கம்பெனியை தனியார்மயமாக்க டெண்டர் கோரப்பட்டது. நலிவடைந்த தொழிற் சாலையாக இருந்தால், நிறுவனமாக இருந்தால், தனியாரிடத்தில் தள்ளிவிடலாம் என்று அரசு எண்ணுவது இயற்கை. ஆனால் 7 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய ஒரு தொழிற்சாலையை தனியார்மயமாக்க டெண்டர் கோரப்பட்டது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றார்கள். அப்போது இன்றைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

அன்றையதினம் கழகத்தின் பொருளாளர் என்ற முறையில் - இன்றைக்கும் பொருளாளர்தான் - அன்றையதினம் கழகத்தின் பொருளாளர் என்ற முறையில் ஒரு வழக்கைத் தொடுத்து இடைக்கால தடை வாங்குகிற அந்த வழக்கில் தொழிலாளர்களோடு பங்கு கொண்டு, அந்த வழக்கில் ஈடுபட்டார். அதன்காரணமாக அப்போது விற்பனை தடுக்கப்பட்டு 3,000 தொழிலாளர்களுடைய நலன் பாதுகாக்கப்பட்டது என்பதை நான் இங்கே அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

1000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள் - எங்கே? தமிழ் நாடு தொழில் வெடி மருந்து தொழிற்சாலையில். அது முதன் முதலாக 1995-96 ஆம் ஆண்டுதான் லாபம் பெறவே தொடங்கியது.

அது ஆரம்பத்திலேயிருந்தே நஷ்டத்தில் போய்க் கொண்டிருந்தது. அதை அவ்வப்போது சீர்திருத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அந்த நலிவைப் போக்கி, 1995-96 ஆம் ஆண்டில் தான் அது இலாபம் பெறத் தொடங்கியது. அன்று அந்தப் பணியை ஏற்றுக்கொண்டிருந்த இன்றைய தொழில் துறை செயலாளர் அந்த இலாபத்திற்கு காரணகர்த்தாவாக விளங்கினார். உடனே, இலாபம் பெற்றால் இருக்கலாமா? அதையும் தனியாருக்கு விற்பனை செய்ய அன்றைக்கிருந்த அரசு, கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் - ஒரு தனியார் அல்ல இரண்டு தனியார்கள் - தெரியும் என்று கருதுகிறேன் - நான் சொல்ல விரும்பவில்லை பெயர்களை எல்லாம்.

இரண்டு தனியார்களுக்கு விற்பனை செய்ய முன் வந்தார்கள். 10 ரூபாய் ஷேரை, 10 ரூபாய் பங்குத் தொகையை, 2 ரூபாய் 50 காசுக்கு முதலில் விற்க முனைந்தார்கள். பிறகு, அவர்கள் சரிதான், 10 ரூபாய் ஷேரை 2½ ரூபாய்க்கு கொடுக்க வருகிறார்களே என்று, அவர்கள் ஒரு ரூபாய்க்கு கேட்டார்கள். அதைக் கொடுக்கிற நேரத்தில், எப்படி கொடைக்கானல் ஓட்டலுக்கு மறுப்பு எழுதினாரோ அந்தச் செயலாளர், அதைப்போல இந்தச் செயலாளர் அங்கே இருந்த காரணத்தால், இதற்கு வன்மையாக ஒரு மறுப்பை அவர் எழுதினார்.

இந்த எதிர்ப்பின் காரணமாக அந்த விற்பனையும் நல்வேளையாக நின்றுவிட்டது. இல்லாவிட்டால் இந்த அரசு வரும்போது, இந்த தமிழ்நாடு சிமெண்ட் தொழிற்சாலைகளும் இருந்திருக்காது. இந்த வெடி மருந்து தொழிற்சாலையும் இருந்திருக்காது.

அதைப்போலவே அரக்கோணம் தமிழ்நாடு ஸ்டீல்ஸ் - எஃகு நிறுவனம். அது 1972 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். சுமார்

ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலை. 1995-96 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் விற்பனை செய்த பொருள்களின் மதிப்பு 87.72 கோடி ரூபாய். அந்த நிறுவனத்தினுடைய ஆதாயத்தை விட, அதிலே மிக முக்கியமானது என்ன வென்றால். அந்த நிறுவனத்திற்கான நிலம் 645 ஏக்கர் - அந்த 645 ஏக்கர் நிலத்தின் மீது மாத்திரமே குறிவைத்திருந்த ஒருவர், அந்த நிறுவனத்தை தான் வாங்கிக் கொள்வதாகச் சொல்லி, பேரம் பேசி, விலை பேசிய நேரத்தில், அப்போதும் நல்லவேளை தொழிலாளர்கள் - தொழிலாளர்கள் தங்களை மாத்திரம் காப்பாற்றிக் கொள்ளவில்லை.

தொழிற்சாலைகளையும் காப்பாற்றுகிறார்கள் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதற்கு இதை விட வேறு ஒரு எடுத்துக்காட்டு இருக்க முடியாது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள். எனவே அந்த விற்பனையும் தடுக்கப்பட்டது. இல்லாவிட்டால் அரக்கோணம் எஃகு நிறுவனமும் இந்த அரசை விட்டு போய் இருக்கும் தனியாருக்கு. ஆனால் இந்தக் கழக அரசைப் பொறுத்தவரையில் அரசுக்குச் சொந்தமான இதுபோன்ற நிறுவனங்களை, அது நலிவடைந்தபட்சத்தில், நலிவடைந்திருந்தாலும் அதை மீண்டும் தூக்கி நிமிர்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கும்பட்சத்தில், நிச்சயமாக தனியாருக்கு அவைகளை தாரை வார்க்காது என்ற உறுதியை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

(மேசையைத் தட்டும் ஒலி).

கடந்த கால ஆட்சியில் தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு நடத்தப்பட்டன என்பதற்கு மத்திய அரசினுடைய ஆய்வுத் துறை - ஆடிட்டிங் - அவர்கள் இந்த அவையில் வைத்த கணக்குப் புள்ளி விவரமே சான்று. அப்போது மாண்புமிகு உறுப்பினர்கள் எல்லாம் இங்கே இருப்பவர்கள் எல்லாம் அன்று இருந்திருக்கிறார்கள். அந்தக் குறிப்பு என்ன சொல்கிறது? ஸ்பிக் நிறுவனப் பங்குகளை டிட்கோ நிறுவனம் வாங்கிக் கொள்ளாமல் அந்த நிறுவனமே குறைந்த விலையிலே அந்தப் பங்குகளை வாங்கிக்கொள்ள வழி செய்த வகையில், அரசாங்கத்திற்கு 12.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று மத்திய அரசின் தணிக்கை அதிகாரி

அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவருக்குக் கிடைத்த விவரம் அவ்வளவுதான். ஆனால், உண்மையிலேயே ஏற்பட்ட நஷ்டம் 33 கோடி ரூபாய் அரசுக்கு. 58.45 இலட்சம் பங்குக்குக் கிடைத்திருக்கவேண்டிய நஷ்ட ஈடு 46.76 கோடி. ஆனால் இவர்கள் மிகக் குறைந்த விலைக்கு விற்ற காரணத்தால், கிடைத்த நஷ்ட ஈடு 12.37 கோடி. ஆகவே, டிட்கோவிற்கு ஏற்பட்ட நஷ்டம் 33 கோடி ரூபாய்.

**திரு. ஆர். சொக்கர் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, டிட்கோவினுடைய 1991-92 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 31-3-1992 ஆம் தேதியில் ஸ்பிக்கினுடைய ஒரு பங்கின் விலை 210 ரூபாய் டிட்கோ கொடுத்த பங்கு மொத்தம் 50 இலட்சத்து 83 ஆயிரம் பங்குகள். ஆகவே, டிட்கோவினுடைய அறிக்கையின்படியே 106 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பு. இதை 12 கோடியே 37 இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, கொடுத்துவிட்டார்கள். இந்தக் கணக்கின்படி.

அவர்களுடைய கணக்கின்படியே 82 கோடி ரூபாய் நஷ்டம் என்பதுதான் சரியான கணக்கு என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** தேதியைக் கூட திருத்திச் சொல்லவேண்டும். 21-3-1992. 21-3-1992 ஆம் தேதிதான் பங்கை விட்டுக் கொடுக்கிறார்கள். அதற்கு முன்தினம் 20-3-1992 ஆம் தேதி. ஸ்பிக் பங்கின் சந்தை விலை ரூபாய் 105. முதல்நாள் 105 ரூபாயாக இருந்தது. பங்கினுடைய சந்தை விலை, ஒரு பங்கு ஒரு ஷேர் விலை 105 ரூபாயாக இருந்தது. நியாயமாக 105 ரூபாயை அடிப்படையாக வைத்து விற்றிருக்க வேண்டும்.

**திரு. ஆர். சொக்கர் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குறுக்கிட்டுச் சொல்வதற்கு மன்னிக்கவேண்டும். அந்தப் பங்கைக் கொடுப்பதாக அப்போதைய அரசு முடிவு எடுத்த தேதிதான் 21-3-1992. ஆனால் பங்கைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று முடிவு எடுப்பதற்கு ஏப்ரல் மாதம் வரையிலும் கடைசி தேதி இருந்தது. ஆனால் பங்கினுடைய விலை ஏறிக்

கொண்டே போகிற நேரத்தில், அதற்காக காத்திராமல் மிகக் குறைந்த தேதியிலே ரெக்கார்டு தேதியை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நிர்ணயம் செய்த காரணத்தால்தான் இந்த 82 கோடி ரூபாய் அளவிற்கு அந்த நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மத்திய அரசினுடைய தணிக்கை அதிகாரி 12 கோடி என்கிறார். எனக்குக் கிடைத்த விவரத்தின்படி 80 கோடிக்கு மேல். எப்படியோ கோடி கோடியாகப் போய் இருக்கிறது. இதுதான் உண்மை. இதிலே, இந்த மத்திய அரசினுடைய தணிக்கை அதிகாரியினுடைய அறிக்கை இந்த அவையிலே இருந்தபோது, அதைப்பற்றிப் பேச எந்த உறுப்பினருக்காவது வாய்ப்பு கிடைத்ததா, பேச முடிந்ததா? (குறுக்கீடு). 'had TIDCO adopted this rate for computing the value of premium to be received it would have a revenue advantage of Rs.

12.09 crores' அதாவது டிட்கோ நிறுவனம் இந்த முறையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, பிரிமியம் வசூலித்து இருந்தால். 12.09 கோடிரூபாய் வருவாய் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்று மத்திய அரசின் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் 'as such discounting the rate further to arrive at the present value was not proper and was not supported by said formula'. அதாவது, இந்த நிலையில், தற்போதைய நிலையில், மேலும் தள்ளுபடி செய்வது முறையானது அல்ல, எந்தக் கொள்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், இருக்கலாம்.

கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதில் யாருக்கும் இன்னொரு கருத்து இருக்க முடியாது அந்த நிலையிலேதான் அந்தப் பங்கு விற்பனை நடைபெற்றிருக்கிறது.

தலைவர் அவர்களே, இந்த அரசு தொழில் அதிபர்களைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு அரசாங்கம் உதவியாக இருக்கவேண்டும். அதாவது 'Investor-friendly' என்று நிதிநிலை அறிக்கையிலேயே நான் குறிப்பிட்டு இருக்கிறேன். அதுமாத்திரமல்ல, விரைந்து முடிவு எடுக்கவேண்டிய ஒரு அரசுதான் முதலீட்டாளர்களுக்குத் தேவையும் கூட. நம்முடைய பழனிசாமி அவர்கள் பேசும்போது இதைக் குறிப்பிட்டார். விரைவில்

காரியங்கள் நடைபெறவேண்டும். திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத்தான் முதலீட்டாளர்களும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் கூட முக்கியமல்ல. அவர்கள் கேட்காத சலுகைகளை அளிப்பதாகக் கூறி இடையிலே பேரம் பேசுவதைத்தான் அவர்கள் விரும்புவதில்லை. தொழிற்சாலைகள் அமைக்க 'Good atmosphere' பொருத்தமான ஒரு சூழ்நிலையைத்தான் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதனைத் தீர்த்துவைக்கும் அரசைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், விரும்புகிறார்கள். தொழில் முனைவோருக்கு முக்கியமான தேவைகளிலே ஒன்று மின்சாரம். மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் அதைக் குறிப்பிடத் தவறவில்லை. மின்சாரத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தப் புதிய முதலீடும் செய்யப்படவில்லை. 1989-லே நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்துவிட்ட அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.

அவர்கள் வடசென்னையிலே ஒரு மின் நிலையத்தை உருவாக்க மத்திய அரசோடு பேசி அதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த நிலையத்தை உருவாக்கமுடியாமல் அந்த இடத்திற்கு உரியவர்கள் உச்சநீதிமன்றத்திலே சென்று தடையாணை பெற்றுவிட்டார்கள். ரூ. 500 கோடியிலே உருவாக வேண்டிய அந்தத் திட்டம் தாமதப்பட்டது. 1989-லே நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தைப் பற்றி ஆய்வு செய்து, இந்த ரூ. 500 கோடியிலே உருவாகி இருக்கவேண்டிய திட்டம், இப்போது ரூ.

700 கோடி அளவிற்கு வளர்ந்து விட்டது. இருந்தாலும் அதை நிறைவேற்றவேண்டுமென்று நிலத்திற்கு உரியவர்கள் யார் என்று தேடிப் பார்த்து பன்னீர்தாஸ் குடும்பத்தினர் என்பதை அறிந்து பன்னீர்தாஸினுடைய இளவல் சந்தோஷம் அவர்களை அழைத்துப் பேசி, அவர் என்னிடத்திலே சொன்னார், பன்னீர்தாஸினுடைய பெயரிலே அங்கே ஒரு பொருட்காட்சியோ, கண்காட்சியோ அமைக்கப் போகிறோம். தங்கக் கடற்கரையைப் போல, அது எங்கள் அண்ணனின் ஆசை என்று சொன்னார்.

நான் அவரிடத்திலே சொன்னேன். உங்கள் அண்ணனின் ஆசை அந்த

இடத்தை மாத்திரம் வளப்படுத்துவது. எங்கள் அண்ணாவின் ஆசை தமிழ்நாட்டையே வளப்படுத்துவது. ஆகவே தயவுசெய்து அந்த இடத்தை விட்டுக்கொடுங்கள் என்று கேட்டு அவரிடத்திலே பிறகு பேச வேண்டிய முறையில் எல்லாம் பேசி, பிறகு அவர் வேறு வழி இல்லாமல் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அவர் தாக்கல் செய்திருந்த வழக்கைத் திரும்பப் பெற்று, அடுத்த ஒரு வாரத்திற்கெல்லாம் அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வி. அவர்களை அழைத்து அதனுடைய தொடக்க விழா நடைபெற்றது.

அதற்குப் பிறகு அதனுடைய பணிகள் பாதி அளவிற்கு நிறைவேறிய நேரத்திலே ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சியிலே இந்தத் திட்டம் தொடர்ந்தது என்பதைத் தவிர, தொடர்ந்த நேரத்திலே எவ்வளவு ஊழல்கள் அதிலே உருவாயின. எத்தனை வழக்குகள் நடைபெற்றன என்பதையும் நாடு மிக நன்றாக அறியும். இந்த ஒரு திட்டத்தைத் தவிர மின்சாரத் துறையில் வேறு எதுவும் நடைபெறவில்லை. அதுவும் எம்.ஜி.ஆர். தொடங்கி, பிறகு கைவிடப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டம் அந்த ஒரு திட்டம்தான்.

அதன் பிறகு இப்போது இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, 100 மெகாவாட் திறன் கொண்ட 20 மின் திட்டங்களை டிட்கோ மூலம் இணைத்துறையிலோ அல்லது கூட்டுத் துறையிலோ, அசோசியேட் செக்டாரிலோ அல்லது ஜாயிண்ட் செக்டாரிலோ தொடங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை மின்சாரம் தேவை தொழிலுக்கு என்று இங்கே வலியுறுத்திய அறிவுறுத்திய உறுப்பினர்களுக்கு எல்லாம் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

ஒவ்வொன்றும் 100 மெகாவாட் திறன் உள்ள 20 மின் திட்டங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த 100 மெகாவாட் திட்டம் ஒவ்வொன்றின் உத்தேச மதிப்பீடு ரூ. 400 கோடியாகும். மொத்தம் 2000 மெகாவாட் இந்த 20 திட்டங்களில். 20 திட்டங்களுக்கும் சேர்த்து மொத்த முதலீடு ரூ. 8000 கோடியாகும். இந்தத் திட்டம் நிறைவேற உத்தேசிக்கப்பட்ட இடங்கள் - மணலி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பெரும்புதூர், மறைமலை நகர், கடலூர்-1, கடலூர்-2, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருமங்கலம், வாடிப்பட்டி,

நிலக்கோட்டை, ஓசூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, பெருந்துறை, 20-வது திட்டம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. திருவாரூருக்கு இருக்கலாம் என்று நினைக்கிறேன். (சிரிப்பு) (குறுக்கீடு). மின்சாரத்தைப் பெருக்குவதற்கு இந்தத் திட்டங்கள் மாத்திரமல்ல, NAPTHA அல்லது L.S.H.S. என்று சொல்லப்படுகிற Light Sulphur Heavy Stock அல்லது Furnace Oil பயன்படுத்துகின்ற ஒரு எரிபொருள், அந்த எரிபொருள் ஒதுக்கீட்டிற்காக மத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

நேரிலேயும் பேசியிருக்கிறோம். கடிதங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டும் இருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விநியோகம் செய்யும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு. இந்த 100 மெகாவாட் தமிழ்நாடு மின் நிலையங்களுக்குமிடையே ஒரு 'பவர் பர்சேஸ் அக்ரீமென்ட்' ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். மின்சார வாரியம் 100 மெகாவாட் மின்நிலையங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகைக்கு.

கவர்ன்மெண்ட் கேரண்டி, அரசின் உத்திரவாதம் வழங்கப்படும். 15 ஏக்கர் நிலத்தை ஒவ்வொரு இடத்திலேயும் டிட்கோ நிறுவனம் ஏற்பாடு செய்யும். சிறிய திட்டம் என்பதால் 18 முதல் 20 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடித்துக்கொண்டு, மின் உற்பத்தியைத் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியோடு, இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

மின்சாரப் பற்றாக்குறையை எதிர்பார்த்து. முன்னெச்சரிக்கையாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் இல்லாதவர்களையெல்லாம் அழைத்து. இந்தத் திட்டத்தைத் தொடங்கக் கூறாமல் டெண்டர் மூலம் இந்தத் திட்டங்களை ஒப்படைக்க இருக்கிறோம். மேலும், இடம் கொடுக்கிறோம். எரிபொருள் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். மின்சார வாரியத்தின் மூலம் பல உத்தரவாதங்களைத் தருகிறோம். சர்க்கார் உத்தரவாதம் தருகிறோம். ஜாயிண்ட் செக்டாரிலோ, அசோசியேட் செக்டாரிலோ நடத்தத் தயாராக இருக்கிறோம்.

தொழில் முனைவோருக்கு முழு சுதந்திரமும் தந்து அமைப்பதால், பலரும் இத்தொழில்களைத்

தொடங்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மின்சாரத்தை அடுத்து தொழிற்சாலைக்கு முக்கியமான தேவை சாலை வசதி ஆகும். நான் நம்முடைய மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திரு. சிதம்பரம் அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். அவர்கள் சென்ற முறை வந்தபோதும் அதைப்பற்றி என்னிடத்திலே பேசினார்கள். இப்போதும் நான் அவர்களிடத்திலே பேசினேன். அகலமான, அதே நேரத்தில் நீளமான சாலைகள் தொழிற்சாலை உருவாவதற்குத் தேவை என்பதைப் பற்றி இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.

இப்பொழுது, சென்னையிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் சாலையை, சென்னையிலிருந்து ஓசூர் வரையிலே இன்னும் அகலப்படுத்தி, ராணிப்பேட்டையிலே எப்படி தொழிற்பேட்டை இருக்கிறதோ, அதைப்போல சாலையின் இருமருங்கிலும் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற ஒரு மாபெரும் திட்டத்தை இந்த அரசு வகுக்கவிருக்கிறது என்பதையும் (மேசையைத் தட்டும் ஒலி). அதைப்போலவே, சென்னையிலிருந்து மறைமலை நகர், விழுப்புரம் வரையிலும், விழுப்புரம் தாண்டியும்கூட சாலைகளை அகலப்படுத்தி, இருமருங்கிலும் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற ஒரு மகத்தான திட்டத்தை இந்த அரசு வகுக்கவிருக்கின்றது என்பதையும், திரு.

அழகிரி அவர்கள் குறிப்பிட்டதைப்போல், சென்னை - திருச்சி புகைவண்டிப் பாதையை இன்றைக்கு மீட்டர் கேஜ்-ஆக இருப்பதை பிராட் கேஜ்-ஆக மாற்றுவதற்கு எல்லாப் பணிகளையும், எல்லா முயற்சிகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது என்பதையும் நான் இங்கே எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அடுத்து, தண்ணீர் ஒரு முக்கியமான பிரச்சினை. தண்ணீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில், உதாரணமாக கடலூரில் நிலத்தடி நீர் அதிகமாக உள்ளது. அந்தப் பகுதியிலே ஏராளமான தொழிற்சாலைகளைத் தொடங்கலாம் என்கிற எண்ணமும், அதற்கான திட்டங்களும் இந்த அரசுக்கு இருக்கின்றது. சென்னையிலே, நாங்கள் இன்றைக்கு 65 மில்லியன் கேலன் தண்ணீர் விநியோகம் செய்கிறோம். அதிலே, ஏராளமான நீர் கழிவுநீராக வீண் ஆகிவிடுகிறது. இந்தக் கழிவுநீரைச் சுத்தம் செய்து தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

வெளிநாடுகளில், இந்தக் கழிவு நீரைச் சுத்தம் செய்து குடிநீருக்கே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் குடிநீருக்கே பயன்படுத்தும் போது, நாம் ஏன் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது? சென்னையில், தற்போது மெட்ராஸ் ரீஃபைனரீஸ், தொழிற்சாலையில் இந்த முறை இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். எனவே, தொழிற்சாலைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையெல்லாம் செய்து கொடுக்க இந்த அரசு முனைப்பான பணிகளிலே ஈடுபட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆட்சியில் தமிழகத்திற்கு வரவேண்டிய, எல்லை வரையில் வந்துவிட்ட சிங்கப்பூர் காரிடார் பெங்களூருக்குப் போய்விட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதைப்பற்றி அப்போது எவ்வளவு வேகமாக அறிக்கைகளையெல்லாம் மாண்புமிகு உறுப்பினர்கள். பல்வேறு கட்சித் தலைவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதும். தொழில் துறையிலே அக்கறை உள்ளவர்கள், தமிழகம் தொழில்மயமாக வேண்டுமென்று எண்ணியவர்கள் எல்லாம் வெளியிட்டார்கள் என்பதும் நாம் மறந்துவிட்ட செய்திகள் அல்ல.

எனவேதான், மத்தியிலே, டெல்லியிலே உள்ள பிரதமரை சந்தியுங்கள். அவரிடத்தில் பேசுங்கள் என்றெல்லாம் நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்களும் மற்றவர்களும் சொன்னார்கள். நான் டெல்லியிலே உள்ள பிரதமரை மாத்திரமல்ல, சிங்கப்பூர் பிரதமருக்கும் எழுதியிருக்கிறேன். சிங்கப்பூர் காரிடார் போன கவலையில். சிங்கப்பூர் பிரதமருக்கே நான் கடிதம் எழுதினேன். 19, ஜூலை 1996-ல் சிங்கப்பூர் பிரதமர் எனக்கு எழுதிய பதில்.

To

Mr. Karunanidhi,