உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 5

பகுதி 1 · 1 / 5

**உரை : 5**

**நாள் : 14.08.1996**

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசின் தொழிற்கொள்கை குறித்தும், தொழில் திட்டங்கள் குறித்தும் வளர்ச்சிக்கான நிலைகள் குறித்தும் இந்த அவையில் மாண்புமிகு உறுப்பினர்கள் அழகிரி அவர்களும், தா. கிருட்டிணன் அவர்களும், சி. டி. தண்டபாணி அவர்களும், ப. ரங்கநாதன் அவர்களும், இராம. சிவராமன் அவர்களும், பெரியண்ணன், அப்துல்நாசர் அவர்களும், பொள்ளாச்சி ராஜா அவர்களும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தீரன் அவர்களும், அ.தி.மு.க.

சார்பில் பழனிசாமி அவர்களும் நல்ல கருத்துக்கள் பலவற்றை எடுத்துக்கூறி, தொழில்துறையிலே இன்னும் ஆற்றிட வேண்டிய பணிகளையும் ஆக்கபூர்வமாகச் சுட்டிக்காட்டி, இந்தத் துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்கான முனைப்புடன் முயற்சிகளை மேற்கொள்கின்ற இந்த அரசுக்கு மேலும் ஊக்கத்தைத் தந்துள்ளமைக்காக என்னுடைய நன்றியை அவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்தகால ஆட்சி நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு முடிவுற்று, ஆட்சி தொடங்கி சற்றொப்ப 95 நாட்கள் ஆகின்றன என்கிற நிலையில், இந்த 95 நாட்களில் தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் எவ்வளவு முற்போக்கான காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை நன்கு உணர்ந்துள்ள இந்த அவையின் பெருமக்கள், அதற்கான பாராட்டுகளையும், இன்னும் பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு இந்த அரசு எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறார்கள்.

தொழில் கொள்கையைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஒரு ஏற்ற இறக்கம் அடிக்கடி ஏற்படுவதும், பிறகு

அது சரிசெய்யப்படுவதும், மீண்டும் அந்த இறக்கம் உருவாவதும், மீண்டும் சரிசெய்யப்படுவதுமான ஒரு சூழ்நிலை தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொழில் வளம் தமிழ்நாட்டில் பெரியது என்றெல்லாம் சொல்லப்படுகிறபொழுது, முதலாவது ஐந்தாண்டுத் திட்டம், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் இவைகளுக்காக பெருநிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு, அதன் காரணமாகத் தமிழ்நாடு தொழில் வளம் பெறக்கூடிய அந்தப் பயனைப் பெற்றது.

ஆனால், நான்காவது, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் எல்லாம் தொடங்கப்பட்ட காலத்தில் அந்தத் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கப்படாமல், இங்கே மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியதைப் போல தமிழகம், வடக்கே உள்ள சில மாநிலங்களுக்குக் கிடைத்த அளவுக்கு நிதியைப் பெறமுடியாமல், அதுமாத்திரமல்லாமல், முதலிடத்திற்கான ஒதுக்கீடுகளைப் பெறமுடியாமல், தொழில் வளர்ச்சிலே தாழ்ந்துபோய் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், தொழில் துறையிலே பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஏனென்றால் தொழில் தொடங்க எண்ணுகின்ற தொழில் அதிபர்கள், தொழில் முனைவார்கள், தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் நுழைவதே சிரமமான ஒரு காரியமாக இருந்தது. மாண்புமிகு உறுப்பினர் ரங்கநாதன் அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போல, தொழில் தொடங்க வருகின்றவர்கள் உரியவர்களைச் சந்திப்பது என்றால் அதற்கே தொகை வழங்க வேண்டும் என்ற ஒரு தீங்கான நிலைமை, வரவேற்க இயலாத ஒரு நிலைமை, வருந்தத்தக்க ஒரு நிலைமை தமிழ்நாட்டிலே இருந்தது.

இந்த இரண்டு, மூன்று மாத காலங்களிலேதான் அரசிலே உள்ள நாங்கள் வெளிப்படையாகத் தொழில் அதிபர்களைச் சந்தித்துப் பேசுகிறோம். நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிட்டதைப் போலவும், அந்த விவாதத்தில் நடைபெற்ற பதிலுரையிலே நான் சுட்டிக்காட்டியதைப் போலவும், தொழிலைப் பொறுத்தவரையில், தொழில் திட்டங்களைப் பொறுத்தவரையில், தொழில் அதிபர்களோடு நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரையில், கழக அரசு ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறதென்பதை உணர்ந்துகொண்ட தொழில் அதிபர்கள் நம்பிக்கையோடு தொழில் தொடங்க இன்றைக்கு முன்வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூன்று மாத காலத்தில்

தமிழகத்தில் எந்த அளவுக்குத் தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் இங்கே கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். தொழில் அதிபர்கள் எல்லாம் இது ஒரு நல்ல தொடக்கம் என்று பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் இந்தியாவிலே, தொழில் வளர்ச்சியிலே முன்னால் இருந்த தமிழகத்திற்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பதை நான் விரிவாக யாரையும் குறைசொல்ல வேண்டும், குற்றம் சாட்ட வேண்டும் என்ற முறையிலே சொல்ல விரும்பாவிட்டாலும், பொதுவாக உணரப்பட்ட ஒரு உண்மையை யாரும் மறைத்துப் பயன் இல்லை. 1967-ஆம் ஆண்டு அண்ணா அவர்களுடைய தலைமையிலும் 1969, 1971 பின்னர் 1989 ஆம் ஆண்டுகளில் என் தலைமையிலும் கழக அரசு அமைந்தபோது, தொழில் துறையிலே சிறந்த கொள்கைகளை இந்த அரசு கடைப்பிடித்தது.

ஆனால் அந்த முறை மாற்றப்பட்டு, தொழிலதிபர்கள் தொழில் தொடங்குவதற்கு முன்பே செலுத்த வேண்டிய காணிக்கை செலுத்தினால்தான் அவர்களைச் சந்திக்கவே இயலும் என்ற ஒரு நிலை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் தொழில் துறையிலே பெரும் பின்னடைவு தமிழகத்திலே ஏற்பட்டது என்பதை நான் திட்டவட்டமாகக் கூற முடியும். இந்த மூன்று மாத காலத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பிரதிநிதிகள் என்னுடனும், தொழில் துறை அதிகாரிகளுடனும், அரசின் தலைமைச் செயலாளருடனும் கலந்து பேசி ஒருசில தொழில்களைத் தொடங்க எம்.ஒ.யு.

கையெழுத்து ஆகியுள்ளது என்பதையும் இந்த அவையிலே உள்ள நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். எம்.ஒ.யு. என்றால் Memorandum of Understanding என்கிற உடன்பாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியிருக்கின்றன. உதாரணமாக கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், திருப்பெரும்புதூர் வட்டத்தில், இருங்காட்டுக் கோட்டையில் முதற்கட்டமாக 1500 கோடி ரூபாய் முதலீட்டிற்கு மேல் ஆண்டு ஒன்றுக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவுகிறது.

அதிலே நேரடியாக 3,000 பேருக்கும், அதன் தொடர்பு தொழிலாக ஏற்படுகின்றவர்கள் 20,000 பேருக்கும் வேலை வாய்ப்புகள்

ஏற்படும் என்பதை ஏற்கெனவே நான் அறிவித்திருக்கின்றேன். இந்தக் கார் திட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது, நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள், ஏற்கெனவே இருந்த அரசு ஆரம்பித்த திட்டங்களும் இந்தக் குறிப்பேட்டிலே இடம் பெற்றிருக்கின்றன என்று கூறினார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிப் பல திட்டங்கள் ஐந்தாண்டுக் காலத்தில் நிறைவேற்றப்படாவிட்டாலும்கூட, கடைசிக் காலத்தில் ஒரே ஒரு கார் திட்டம், மெகா திட்டம் - சூப்பர் மெகா திட்டம் என்கிற பெயரிலே அறிவிக்கப்பட்டது உண்மை.

மகேந்திரா ஃபோர்டு கார் நிறுவனத்தினுடைய திட்டம் அது. அதிலே ஏற்பட்ட விசித்திரம் என்னவென்றால், 3-1-1996-இல் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதற்கு முதல் நாள் 3-1-1996 அன்று அது குறித்த ஆணையை அரசு பிறப்பிக்கின்றது. அந்த ஆணைப்படி, அரசு ஆணைக்கும் ஒப்பந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டுக்குத்தான் நான் இதைக் குறிப்பிடுகின்றேன் - அரசின் ஆணைப்படி அந்த சூப்பர் மெகா திட்டம் என்ற பெயரில் 1500 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்படும் திட்டங்கள் எல்லாம் சூப்பர் மெகா திட்டங்கள் என்று கருதப்பட்டு, அதற்காக சில பிரத்தியேகச் சலுகைகள் அளிக்கப்படும் என்று அந்த ஆணையிலே அறிவிக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின்படி ஆரம்பிக்கப்பட்ட தொழில்களுக்கு 14 ஆண்டுகளுக்கு விற்பனை வரி தள்ளுபடி, இதுதான் முதன்முதலாக தமிழ்நாட்டில் அளிக்கப்பட்ட சலுகை. அது சூப்பர் மெகா திட்டம், 1500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்படுகிற திட்டம் என்பதால் 14 ஆண்டுகளுக்கு விற்பனை வரி தள்ளுபடி அல்லது விற்பனை வரி ஒத்திப்போடுதல் இந்த இரண்டில் ஒன்றை, அந்தத் தயாரிப்பாளர் அவருடைய ஆப்ஷனுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இதிலே விற்பனை வரியை அறவே தள்ளுவதைவிட ஒத்திப்போடுவதுதான் அவருக்குச் செளகரியமானது. அதைத்தான் அவர்கள் அநேகமாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கருதுகின்றேன். ஏனென்றால் தள்ளிவிட்டால் 100 ரூபாய்க்கு ஒரு பொருளை விற்கும்போது வரி இல்லை என்றால் 100 ரூபாயோடு போய்விடும். வரி என்றால் 110 ரூபாய்க்கு --- அந்த 10 ரூபாய் -- அதை சர்க்காருக்குக் கட்டாமல்

அவர்களே வைத்துக் கொண்டு இந்த 14 ஆண்டுக் காலம் அந்தப் பணத்தை புரட்டிக் கொண்டே இருப்பார்கள். எனவே அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். தாராளமான சலுகை இப்படி வழங்கப்பட்டது. இந்த விற்பனை வரி தள்ளுபடி 14 ஆண்டு காலத்தில், முதலீட்டுத் தொகையைவிட குறைவாக வந்தால் மீண்டும் சலுகை நீட்டிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கூட நீடிக்க இயலும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

எல்லை இல்லாமலேயே விற்பனை வரி சலுகை 14 ஆண்டுகள் முடிவடையும் வரையிலே அனுபவிக்க அவர்களால் இயலும். இந்தச் சலுகையெல்லாம் நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல 1500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து தொடங்கும் தொழிற்சாலைக்கு மாத்திரமே உண்டு. ஆனால் 3 ஆம் தேதியன்று ஃபோர்டு கம்பெனியோடு ஒப்பந்தம் கையெழுத்தான நேரத்தில், அந்த ஒப்பந்தத்தில் இந்தச் சலுகைகள் எல்லாம் குறிப்பிடப்பட்டு உறுதியளிக்கப்பட்ட போதிலும், ஃபோர்டு நிறுவனம் 5 ஆண்டு காலத்தில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள தொகை எவ்வளவு என்பது குறிப்பிடப்படவே இல்லை.

1500 கோடி முதலீடு செய்தால்தான் இந்த சலுகைகள் என்று அரசின் ஆணையில் இருக்கிறது. ஆனால், ஒப்பந்தத்தில் இந்த 1500 கோடியும் இல்லை; அடுத்தடுத்து வருகின்ற ஆண்டுகளிலே எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற குறிப்பும் அந்த ஒப்பந்தத்திலே இல்லை.

ஆனால், அதற்கு அடுத்து, கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தோடு இந்த அரசு, இந்த புதிய அரசு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, முதலீடு தொகை எவ்வளவு என்று அதிலே உறுதியாகக் குறிப்பிடப்பட்டது. துவக்கத்தில் 1500 கோடி ரூபாய்; முதற்கட்ட முடிவில், அதாவது 5 ஆண்டுகளில் 2400 கோடி ரூபாய்; இரண்டாவது கட்ட முடிவில், அதாவது 10 ஆண்டுகளில் 3400 கோடி ரூபாய் என்று திட்டவட்டமாக நாம் செய்துகொண்ட கொரிய கார் ஒப்பந்தத்தில், உறுதியாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.

மேலும், அ.தி.மு.க.

ஆட்சியில் ஃபோர்டு நிறுவனத்திற்கு நில ஆர்ஜித சட்டத்தின்கீழ் 335 ஏக்கர் ஒப்படை செய்யப்பட்டது. தற்பொழுது கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்திற்கு, அதே நில ஆர்ஜித சட்டத்தின்கீழ் 534 ஏக்கர் தரப்பட்டுள்ளது. இதிலே, நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இந்த நிலத்தை அரசாங்கத்தின் அனுமதியின்றி அந்த நிறுவனம் வேறு யாருக்கும் விற்கவோ மாற்றவோ கூடாது - இது நம்முடைய ஒப்பந்தம். ஆனால், அ.தி.மு.க. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அதுபோன்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை.

அவர்கள் இஷ்டத்திற்கு யாருக்கும் விற்றுக் கொள்ளலாம். இந்தக் கட்டுப்பாடு அந்த ஒப்பந்தத்திலே இல்லாத காரணத்தால், அரசாங்கம் தொழிற்சாலை தொடங்குவதற்கு ஒப்படை செய்த நிலத்திலே ஒரு பகுதியை அவர்கள் விலைக்கு விற்கக்கூட உரிமை உண்டு என்று ஆகிறது.

எனவே, இந்த 3 மாத காலத்தில் இந்த இரண்டு கார் ஒப்பந்தங்களுக்குப் பிறகு, இந்த அரசு செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தம், எம்.ஒ.யு. கையெழுத்தான மற்றொரு தொழிற்சாலை, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பில்கிங்டன் நிறுவனம் 550 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டுக்கு அருகில் செங்குன்றம் கிராமத்தில் கண்ணாடி தொழிற்சாலை -- இதற்கான கையெழுத்து 16-7-1996-ல் ஆனது. கொரியா காருக்கான கையெழுத்து 18-7-1996-ல் ஆகி இருக்கிறது.

இந்த இரண்டு மூன்று மாத காலத்திலே இந்த இரண்டு பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்திற்குக் கொண்டுவந்த பெருமை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்களுக்கும் இந்த அரசுக்கும் (மேசையைத் தட்டும் ஒலி) உண்டு என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மூன்றாவதாக எம்.ஒ.யு. கையெழுத்தான மற்றொரு தொழிற்சாலை டிட்கோ நிறுவனமும் மத்திய அரசுக்கு சொந்தமான டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்சி இந்தியா லிமிடெட் நிறுவனமும் இணைந்து 'கியூஜி குரா' என்ற ஜப்பான் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி உதவியுடன் ஆப்டிக்கல் ஃபைபர் டெலிஃபோன் கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை 41.5 கோடி ரூபாய் முதலீட்டில் மறைமலைநகரில் தொடங்குவதற்கான

ஒப்பந்தம் 2-8-1996-லே கையெழுத்து ஆகி இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இதைத் தவிர பரிசீலனையில் உள்ள திட்டங்கள், பரிசீலனையில் உள்ள திட்டங்கள் என்றால் பரிசீலனையிலேயே இருந்துவிடாது; விரைவிலே நிறைவேறப் போகின்ற திட்டங்கள் என்றுதான் அதற்குப் பொருள்.

(1) 45 கோடி ரூபாய் செலவில் பல்க் டிரக் மற்றும் இண்டர்மீடியட்ஸ்.

(2) 60 கோடி ரூபாய் செலவில் பிளாட் பேக்ஸ் மற்றும் லார்ஜ் வால்யூம் ஆம்ப் ஐ.வி. ப்ளூயிட்ஸ்.

(3) 70 கோடி ரூபாய் முதலீட்டில் இண்டஸ்ட்ரியல் என்சைம்ஸ்.

(4) 40 கோடி ரூபாய் முதலீட்டில் பென்சைல் கெமிக்கல்ஸ்.

(5) 1200 கோடி ரூபாய் செலவில் கேஸ் வாங்கி வைக்குமிடம் எல்.என்.ஜி. ரிசீவிங் டெர்மினல்.

(6) 300 கோடி மதிப்பீட்டில் ஹெவி மினரல் செபரேஷன் மற்றும் இல்மினேட் பெனிபிசியேஷன்ஸ் & ரூடைல் தயாரிப்பு.

(7) 550 கோடி ரூபாய் முதலீட்டில் செயின்ட் கோபென் கிளாஸ் திட்டம் - கண்ணாடி தொழிற்சாலை திட்டம்.

இஃதன்னியில், நான் டில்லி சென்று வந்த பிறகு சொல்லுகின்ற செய்தி, மத்திய அரசு லைசென்ஸ் வழங்க - உரிமம் வழங்க தயார் நிலையிலே உள்ள தொழிற்சாலைகள். திருப்பெரும்புதூரில் 13 கோடி ரூபாய் முதலீட்டில் இரத்தம் சேகரிக்கும் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுக்கான அனுமதியை இன்னோவால் மெடிக்கல் இந்தியா என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இந்த அரசு பரிந்துரைத்து, அதற்கான முடிவை மத்திய அரசு விரைவிலே அறிவிக்க உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

(மேசையைத் தட்டும் ஒலி). இந்தப்

புதிய தொழிற்சாலை அமைப்பதில் அரசு நிறுவனமான டிட்கோ, 11 சதவிகிதம் முதலீடு செய்யவுள்ளது. தொழில் நுட்ப உதவி, ஜெர்மனியைச் சேர்ந்த BIRKMEIER G.M.B.H. என்ற நிறுவனம் வழங்கி உள்ளது. அடுத்து, 240 கோடி ரூபாய் முதலீட்டில், டிட்கோவின் பங்கு முதலீட்டுடன் 100 சதவிகித பெட்ரோலியம் ரிஃபைனரி ப்ராஜக்டுக்கான அனுமதியும் வந்துகொண்டிருக்கிறது. ஐதராபாத் மற்றும் குவைத் தொழிலதிபர்களை முதலீட்டாளர்களாகக் கொண்ட பென்னார் குருப் நிறுவனம் அமைப்பதற்கான உரிமம், மத்திய அரசால் விரைவில் வழங்கப்பட உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம்முடைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மணி அவர்கள் பேசுகின்றபோது, ரப்பர் டயர் தொழிற்சாலை பற்றிக் குறிப்பிட்டார்கள். டிட்கோ மூலம், ரப்பர் டயர் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இடத் தேர்வு நடைபெறும் நிலையில், நிலச் சொந்தக்காரர்கள் நீதிமன்றத்திலே தடையுத்தரவைப் பெற்றுவிட்ட காரணத்தால், அது நின்றுவிட்டது. ஆனால் தடையுத்தரவைத் தளர்த்தவோ அல்லது நீக்கவோ முன்பிருந்த அரசு தொடர் நடவடிக்கை எதும் எடுக்கவில்லை.

நான் மணி அவர்களுக்கு உறுதி கூறிக் கொள்கின்றேன். இந்த அரசு பொறுப்பேற்றவுடன் இத்தொழிற்சாலை துவக்கப்படுவதில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்து, வேறு ஒரு இடத்தை - இப்போது தகராறுக்குள்ளான இடத்தை மாற்றிவிட்டு, வேறு ஒரு இடத்தை, குமரி - நெல்லை மாவட்ட எல்லையில் விரைவில் தேர்வு செய்து, ரப்பர் தொழிற்சாலை உடனடியாகத் தொடங்கப்படவேண்டுமென்று முடிவெடுத்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

(மேசையைத் தட்டும் ஒலி).

தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலும், குமரி மாவட்டப் பகுதிகளிலும் கிடைக்கும் மணலைப் பயன்படுத்தி, சிந்தெடிக் ரூடைல் என்ற பொருளை உற்பத்தி செய்ய, ரூ. 400 கோடி செலவில் ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆஸ்திரேலியா