உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 4

பகுதி 3 · 3 / 4

ஆண்டு ஒரு கன மீட்டர் விலை - சாம்பல் வண்ணப் பாறை, கருப்பு வண்ணப் பாறை என்று இரண்டுவிதமான பாறைகள் அங்கே ஏற்றுமதிக்காக விற்பனை செய்யப்படும் பாறைகள் - டாமின் விதித்த விலை 277 முதல் 294 வரையிலான டாலர். தனியார் அதே நேரத்திலே அதே கல்லுக்கு 420 டாலர். 1984-85-ல் டாமின் 258 முதல் 269 டாலர், தனியார் 475 டாலர். 1985-86-ல் டாமின் 299 டாலர், தனியார் 460 டாலர். 1986-87-ல் டாமின் 404 முதல் 427 டாலர், தனியார் 475 டாலர்.

1987-88-ல் டாமின் 512 முதல் 538 டாலர், தனியார் 575 டாலர்; அப்போதுதான் கவர்னருடைய கவனத்திற்கு வந்து, அந்த அதிகாரி பிடிபடுகிறார். அது மட்டுமல்ல, டாமின் சார்பாக ஏற்றுமதி செய்யப்பட்ட சாம்பல் வண்ணப் பாறை மிக நல்ல தரம் வாய்ந்தது. தனியார் ஏற்றுமதி செய்த சாம்பல் வண்ணப்பாறை மிகமிகக் குறைந்த தரம் வாய்ந்தவை. அவை அதிக விலைக்கு விற்று டாமின் சார்பாகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால், பெரும் ஊழல் நடைபெற்ற காரணத்தால்தான் பெரும் இழப்புக்கு இந்த நிறுவனம் ஆளானது.

கருப்பு வண்ணப் பாறையை 1986-87-ல் என்ன பெரிய அநியாயம் நடந்திருக்கிறது என்று பார்த்தால் - ஒரு கன மீட்டர்; டாமின் 714 டாலர், தனியார் 1,500 டாலர். தரக் குறைவான அந்தக் கருப்பு வண்ணப் பாறை தனியார் 1,500 டாலருக்கு விற்ற நேரத்தில், நம்முடைய டாமின் 714 டாலருக்கு விற்றிருக்கிறது, இதன் காரணமாக ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட நஷ்டம் மாத்திரம் 48 இலட்சம் ரூபாய். 1986-ம் ஆண்டில் திருவக்கரையில் உள்ள சுரங்கப் பாறைக்கு 1,281 டாலர் கொடுக்க ஜப்பான் நிறுவனம் “ஓரியண்ட் சான்யோ” முன்வந்தது.

ஒரு கன மீட்டருக்கு 1,281 டாலர் கொடுக்க அந்த நிறுவனம் வந்தது. ஆனால் டாமின் நிறுவனம் அவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டு மிட்சுபிஷி கார்ப்பரேஷனுக்கு ஒரு கன மீட்டருக்கு 550 டாலர் வீதம் 1982 ஆம் ஆண்டு கொடுத்த அதே விலைக்கே ஏற்றுமதி செய்தது. இதனால் அந்த ஒரு சுரங்கத்திலே மாத்திரம் ஏற்பட்ட நஷ்டம் 41 இலட்சம் ரூபாய். கவர்னர் ஆட்சியிலே பழைய நிர்வாக இயக்குநரை மாற்றி விட்டு பாண்டியன் குறிப்பிட்டாரே, அந்த நிர்வாக இயக்குநர் - அவரை மாற்றிவிட்டு புது நிர்வாக இயக்குநரைப் போட்டவுடன், நவம்பர் மாதம் 714 டாலர் என்ற நிலை மாற்றப்பட்டு, டிசம்பர் மாதம் முதல் 2,050 டாலர் என கன மீட்டருக்கு விற்கப்படுகிற

நிலை உருவானது என்பதையும் நான் ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இதனால், இப்படி இந்த விலை மாற்றங்களின் காரணமாக டாமினுக்கு ஏற்பட்ட நஷ்டம். கிட்டத்தட்ட டாமின் வசம் 3,500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் இருக்கிறது. அதிலே 2,500 ஏக்கரில் ஏற்பட்ட நஷ்டம் அந்த நேரத்திலே 10 கோடி ரூபாய், எனவேதான் அந்த அதிகாரி மீது நாம் இன்றைக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்; விசாரணை முறைப்படி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது; மேலும் நடவடிக்கை எடுக்க சில ஆதாரங்கள் தேவைப்படுகிற காரணத்தால் இங்கு மாத்திரம் அல்ல, வெளிநாட்டிலே இருந்தும் கூட ஆதாரங்கள் தேவைப்படுகின்ற காரணத்தாலே சற்றுக் கால தாமதம் ஆகிறதேயல்லாமல் நிச்சயம் தவறு செய்தவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள்; தண்டிக்கப்படுவார்கள் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(மேசையைத் தட்டும் ஒலி). 1987-88-ல் இதைப் பார்த்தால் புரியும். 1987-88-ல் விற்பனை 11.75 கோடி ரூபாய்; மொத்த நஷ்டம் 11 இலட்சம் ரூபாய். 1988-89-ல் விற்பனை 10.63 கோடி ரூபாய்; லாபம் 2.12 கோடி ரூபாய்; புத்தகத்திலே கூட தவறாக 2.1 என்று போட்டு விட்டார்கள். இப்போது 1989-90-ல் விற்பனை 14.14 கோடி ரூபாய்; லாபம் 5.27 கோடி ரூபாய். இந்த 5.27-ஐ புத்தகத்திலே 2.12 என்று தவறாக அச்சாகி இருக்கிறது; திருத்திப்படித்துக்கொள்ள வேண்டுகிறேன்.

11 கோடிக்கு விற்பனையான போது 11 இலட்சம் நஷ்டம். 14 கோடிக்கு விற்பனை ஆகிற போது இப்போது 5 கோடி ரூபாய் லாபம் என்றால், எவ்வளவு பெரும் தவறு அதிலே நடைபெற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். எனவே தான் இதிலே நடைபெற்றிருக்கின்ற தவறுகளை விசாரிக்க, நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்காது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிவகங்கை கிராஃபைட்டைப் பற்றியும் இங்கே பேசி இருக்கின்றார்கள். அதிலும் இந்த அதிகாரிதான் இருந்தார். இந்த அதிகாரி இருந்த தீட்டப்பட்ட திட்டம் அது. 1984ஆம் ஆண்டு 85 சதவீத கரிசச்சேறு கூடிய கிராஃபைட் சுத்திகரிப்பாலை

ஒன்றை 3.4 கோடி ரூபாய் செலவில் அமைக்க முதலிலே திட்டம் தயாரிக்கப்பட்டது. இன்றைக்கு 96 சதவீத கரிச சத்தோடு கூடிய கிராஃபைட்டுக்கு வெளிநாட்டில் நல்ல கிராக்கி இருக்கும் என்ற ஒரு கருத்து அறிவிக்கப்பட்டு, 27 கோடி ரூபாய் திட்டச் செலவில் நூறு சதவீத ஏற்றுமதி நோக்கோடு தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. முதலிலே 3.4 கோடி ரூபாய் என்று ஆரம்பித்து இது அதிகச் சத்தோடு கூடியது; நூறு சதவீதம் ஏற்றுமதிக்கு உரியதாக ஆக்கலாம் என்று 27 கோடி ரூபாயில் அது திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு அனுமதி கோரி தமிழக அரசின் திட்ட ஆய்வுக் குழுக் கூட்டத்திலே ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 1988-லே விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்திலே தலைமைச் செயலாளர், உலகில் வேறு தொழில் நுட்பம் உள்ளதாக, ஹம்போல் ஹெவி ஆலை நிறுவனத்திடம் இயந்திரங்கள் மதிப்பீடு முதலிய விவரங்களை எல்லாம் கோரலாம் என்று அவர் கூறினார். அப்போதைய, நிறுவனத் தலைவர் இந்தத் தலைவர் அந்த ஆதாரங்கள், தகவல்கள் தன்னிடத்திலே இல்லை என்று கூறிவிட்டார்.

பிறகு அவர் மாற்றப்பட்டார். கவர்னர் ஆட்சியில் மாற்றப்பட்டார் என்பது நான் முன்பே கூறியுள்ள செய்தியாகும். அதற்குப் பிறகு நம்முடைய நண்பர்கள் இங்கே எடுத்துக்காட்டியதுபோல அங்கே அந்தப் பாறைகள் மாத்திரம் வெட்டப்படுகின்ற வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆய்வு அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை. அந்த ஆய்வு அறிக்கைக்காக “இந்தியன் பியூரோ ஆஃப் மைன்ஸ்” பாண்டியன் கிராஃபைட்ஸ் மற்றும் தேசிய உலோகத் தொழிற்கூடம் இவைகளிடமிருந்து அந்த அறிக்கைகளைப் பெற சில காலம் ஆகும்.

இப்பொழுது அந்த அறிக்கையை, விரிவான திட்ட அறிக்கையை ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிப்பதாக 9-4-1990 அன்று பெறப்பட்ட கடிதத்திலே உறுதி அளித்து இருக்கிறார்கள். 14 ஆயிரம் டன் கிராஃபைட் கனிமம் அங்கே வெட்டி எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனுடைய மதிப்பு ஏறத்தாழ 55 இலட்சம் ரூபாய் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு மேலும் அங்கே கிராஃபைட் எடுத்து வெளியிலே வீணாக அவைகளைப் போட்டால் அது கெட்டுவிடக் கூடும் என்பதற்காக அந்த வெட்டுகின்ற பணி நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த ஆய்வு அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு நடவடிக்கைகள்

எடுக்கப்படும்; கிராஃபைட் தொழில் அங்கே தொடங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

தஞ்சை மாவட்டத்திற்கு வேதாரண்யத்திலே சோடா தொழிற்சாலை தொடங்குவதைப் பற்றி நம்முடைய ராஜேந்திரன் அவர்கள் இங்கே பேசி இருக்கிறார்கள். நம்முடைய நண்பர் அழகர்சாமி அவர்களும் அதைக் குறிப்பிட்டார்கள், தேர்தல் அறிக்கையிலே சோடா ஆஷ் ஆக ஆரம்பித்து இப்போது அது குறுகிவிட்டது; இதுவாவது வருமா என்ற சந்தேகத்தை நம்முடைய ராஜேந்திரன் அவர்கள் எழுப்பினார்கள் நான் அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தத் திட்டம், சோடா ஆஷ் திட்டம் என்று ஆரம்பிக்க வேண்டுமென்று ஆய்வு செய்யப்பட்ட பொழுது, 250 கோடி ரூபாய் செலவாகும் என்றெல்லாம் மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தை நடத்துவதைப்பற்றி 'டாக்' - அவர்கள் சொன்னார்களே, ஏன் டாட்டாவை நாடிப் போனீர்கள், 'டாக்'-ஐ நாடிப்போகக் கூடாதா என்று. தூத்துக்குடி ஆல்கலி அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்ட பொழுது, அவர்கள் சொன்னார்கள். நம்முடைய நாட்டில், அதாவது இந்தியாவில் தற்போது சோடா ஆஷ் உற்பத்தி மிக அதிகமாக இருக்கிறது; 1989-90 ஆம் ஆண்டில் மாத்திரம் தேவை 15.40 இலட்சம் டன், ஆனால் இது இப்பொழுது கிடைப்பது 15.496 இலட்சம் டன் என்கிற அளவிற்குத் தயாரிக்கப்படுகிறது.

எனவே, சோடா ஆஷ் தொழிற்சாலையை ஆரம்பித்தால், அந்த உற்பத்தியை விற்பனை செய்வதற்குப் பதிலாக வேறு ஆரம்பிக்கலாம், என்று சொல்லி, கேஸ்டிக் சோடா தொழிற் சாலைத் திட்டத்தை, அந்த யோசனையை அவர்கள் வெளியிட்டார்கள். அதற்கு 60 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டது. மேலும் அந்தப் பகுதியிலே கிடைக்கின்ற உப்பைப் பயன்படுத்தி, மரைன் கெமிக்கல் காம்ப்ளக்ஸ் ஒன்று 14 அல்லது 15 கோடி ரூபாய் செலவிலே நிறுவுவதற்கும் அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்காக ஒரு திட்ட அறிக்கை தயார் செய்யும் பொருட்டு, டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தார் நியமிப்பதற்குக் கூட்டுத்துறை நிறுவனமான 'டாக்' நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 'டாக்' நிறுவனம் சோடா ஆஷ் தயாரிக்கும் தொழில் நுட்பம்

தான் அவர்களிடத்திலே உள்ளது. இந்தத் தொழில் நுட்பத்தைப் பற்றிய திட்டவட்டமான நிலைமைகள் அவர்களிடத்திலே இல்லாத காரணத்தால் அவர்களே இவர்களுடைய உதவியை நாடி, டாட்டா கன்சல்டன்சியைப் பயன்படுத்தி அவர்கள் அதனைச் கோரியிருக்கிறார்கள். வேதாரண்யம் பகுதியிலே காஸ்டிக் சோடா ஆலை நிறுவுவதற்குத் தேவைப்படும் 15 மெகாவாட் மின்சாரத்தைக்கூட தமிழ்நாடு மின்சார வாரியம் தருவதற்குத் தயாராக இருக்கிறது. இவ்வளவு ஏற்பாடுகளும் நடந்து விட்ட காரணத்தால், இந்த இரண்டு தொழிற்சாலைகளுமே நிச்சயமாக வேதாரண்யம் பகுதியிலே வரும் என்ற உறுதியை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.ஆர்.ஐ.-யைப் பற்றிப் பேசப்பட்டது. நான் முதலிலே கோடு காட்டினேன். என்.ஆர்.ஐ.-யைப் பொறுத்தவரையிலே இங்கே நம்முடைய நண்பர் பொன்னுசாமி அவர்கள் சொன்னார்கள். பழனி பெரியசாமிக்குப் பல இடையூறுகளை எல்லாம் தந்து விட்டோம் என்று; அவர் இங்கே ஒரு ஓட்டல் கட்டுவதற்குக் கடந்த அரசில், அந்த அரசோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது ஒரு ஜாயிண்ட் செக்டார் என்றெல்லாம் கூடப் பேசப்பட்டது. “பல்லவா ஓட்டல்” என்றெல்லாம் பேசப்பட்டது.

அதிலே ஒன்றும் தவறு இருப்பதாக நான் சொல்ல மாட்டேன். ஆனால், தவறு என்னவென்றால், அவருக்காக ஒரு இடத்தைக் கொடுத்து விட்டு, அந்த இடத்தினுடைய மதிப்பு ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் என்று சொன்னார்களே, அது தான் தவறு, நாற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு இடத்திற்கு, ஒன்றே முக்கால் கோடி ரூபாய் என்று மதிப்பிட்டு, அந்த ஒன்றே முக்கால் கோடி ரூபாயைக்கூட அவர் தரவேண்டியதில்லை, அரசு ஒரு பங்குதாரராக, அந்த ஒன்றே முக்கால் கோடி ரூபாய் தருகிறது என்ற காரணத்தினாலேதான், நம்முடைய அரசின் நிலம் வீணாக யாரிடத்திலோ போய்ச் சேரக்கூடாது என்பதற்காகத்தான் அதை மீண்டும் அரசே எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்தோமே அல்லாமல், தனிப்பட்ட யாரிடத்திலும் எந்த விரோதமும் கிடையாது.

அவர்கள் ஒரு சர்க்கரை ஆலையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலே நாம் ஒன்றும் தவறாகக் குறுக்கிடவில்லை. இது நியாயமான குறுக்கீடு. ஏனென்றால், நாற்பது கோடி

ரூபாய் பெறுமானமுள்ள ஒரு நிலத்தை, யாரோ ஒருவருக்குத் தனியாக ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு, அதுவும் அரசு ஒரு பங்குதாரராகச் சேர்ந்து, பணத்தையும் பெறாமல் ஒரு நிலைமையை ஏற்படுத்துவது என்றால், அதை இந்தப் புதிய அரசு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, வேறு அல்ல.

அதற்காக, என்.ஆர்.ஐ. மக்கள் யாரும் இங்கே வராமல் போய் விடவில்லை. நம்முடைய இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கூட அதைப்பற்றிப் பேசினார்கள். நம்முடைய உகம்சந்த் கூட அதைப்பற்றிப் பேசினார்கள். என்.ஆர்.ஐ. சார்பாகப் பலபேர் தமிழ்நாட்டிலே தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ் பைப் பிரைவேட் லிமிடெட், ஏறத்தாழ மூன்று கோடி ரூபாய்; மிஸ்டர் விஸ்வநாத் என்பவர், கென்யா நாட்டுக்காரர், அங்கே இருப்பவர், அவர் நடத்திக்கொண்டு இருக்கிறார்.

அதைப்போலவே, மீஞ்சூர் ஷெல் கேஸ்டிக் பிரைவேட் லிமிடெட், நாடிமுத்து அண்ட் எம்.எஸ். துரை, சவுதி அராபியா. அவர் இங்கே தொழில் நடத்துகிறார்.

கிரசண்ட் செராமிக், ஜான் சுந்தரராஜன், யூ.எஸ்.ஏ., பிரீஸ் ஓட்டல் பிரைவேட் லிமிடெட், மெஸ்ஸர்ஸ் ஆர். சிவராமன் அண்ட் அசோசியேட், ஸ்ரீலங்கா, உமா ஓயர் பிராடக்ட் பிரைவேட் லிமிடெட், சதாசன், நைஜீரியா, வஸ்திரா அப்ளையன்ஸ் பிரைவேட் லிமிடெட், நித்தியானந்தம், இந்தோநேஷியா, அதைப்போல, யு.எஸ்.ஏ. விலேயிருந்து, சிங்கப்பூரிலேயிருந்து, கல்ப் - இலேயிருந்து, மலேசியாவிலேயிருந்து, யு.கே. விலேயிருந்து, பிரான்சிலேயிருந்து, இப்படி 19 பேர் கிட்டத்தட்ட ஐம்பது கோடி ரூபாய் அளவுக்கான தொழிலைத் தமிழ்நாட்டிலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்.ஆர்.ஐ. என்றால் நமக்கு ஒன்றும் அலர்ஜி இல்லை. அவர்கள் நடத்திக் கொள்கிற விதத்தில் ஏற்படுகிற முரண்பாடுகள், நம்முடைய அரசுக்கு அல்லது நாட்டிற்கு, நம்முடைய மக்களுக்குத் தீமை பயக்கிற வகையிலே வருகிற நிலைமைகளைத்தான், அந்த ஊழல்களை முடி மறைக்கின்ற

நேரத்திலே அதை வெளிக் கொணர்ந்து அவைகளை நாம் அடையாளம் காட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறோமே அல்லாமல் வேறல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூடப்பட்ட ஆலைகளைப் பற்றிப் பேசப்பட்டது நம்முடைய ரமணி அவர்கள் காலையிலே அதைப்பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார். மூடப்பட்ட ஆலைகளைத் திறப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்ததற் கிணங்க, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ், அவிநாசி 10-3-1989-ல் திறக்கப்பட்டது. வாசுதேவா டெக்ஸ்டைல்ஸ், கோவை 13-3-1989-ல் திறக்கப்பட்டது. ஆர்.எ.வி. டெக்ஸ்டைல்ஸ், கோவை 12-4-1989-ல் திறக்கப்பட்டது.

பாலாஜி காட்டன் மில்ஸ், சேலம் 21-8-1989-ல் திறக்கப்பட்டது. ருக்மணி மில்ஸ், சிலைமான் 7-8-1989-ல் திறக்கப்பட்டது. சற்குணா டெக்ஸ்டைல்ஸ், கோவை 10-7-1989-ல் திறக்கப்பட்டது. பாலாஜி ஸ்பின்னர்ஸ், கோவை 25-11-1989-ல் திறக்கப்பட்டது. அமராவதி டையிங் அண்ட் காட்டன் மில்ஸ் 8-11-1989-ல் திறக்கப்பட்டது. தெய்வசிகாமணி ஸ்பின்னிங் மில்ஸ் 1-1-1990-ல் திறக்கப்பட்டது. ஆக மூடப்பட்டிருந்த ஆலைகளில் 9 ஆலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

திறக்க உத்தேசித்து, மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிற நிலையில் உள்ள ஆலைகள் 6. மிகச் சிறியவை என்பதாலும், அவைகளை ஏற்று நடத்தினால் லாபகரமாக இராது என்பதாலும் விடப்பட்ட ஆலைகள் 7. இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் ஆய்வில் உள்ள ஆலைகள் 8. அரசாங்கமே ஏற்று நடத்துவது என்ற முடிவை அறிவித்து மத்திய அரசுக்கு அன்று எழுதி இதுவரையில் சரியான பதில் கிடைக்காத காரணத்தால் அண்மையில் இங்கே வந்த அமைச்சர் யாதவ் அவர்கள் இதைப்பற்றி நான் கவனிக்கிறேன் என்று சொன்ன உறுதிமொழியின் காரணமாக நம்முடைய அமைச்சர்கள் அங்கே டெல்லிக்குச் செல்கிறார்கள்.

நம்முடைய கைத்தறித் துறை அமைச்சர் அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களும் டெல்லியில் மத்திய அரசு அமைச்சர்களைக் கலந்து பேசி நல்ல முடிவோடு இன்னும் இரண்டொரு நாட்களில் வருவார்கள் என்பதையும், இந்த 6 ஆலைகள் வெகு விரைவில் திறக்கப்படும் என்பதையும், நான் இங்கே மிகுந்த மகிழ்ச்சியோடு அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

நெய்வேலி ராயல்டி பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும், அப்படியில்லாமல் பேசக்கூடாது என்ற நிலையில் பொன்னுசாமி அவர்கள் பேசுகிறபோது, அது என்ன 2½ ரூபாய், 5 ரூபாய் வாங்கி இருக்கக்கூடாதா என்று கேட்டார், நெய்வேலி நிலக்கரி ராயல்டிக்கு ஒரு அட்டவணை தயாரித்து இருக்கிறார்கள். என்னென்ன நிலக்கரிக்கு எவ்வளவு ரூபாய் என்று அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அட்டவணையின்படி நெய்வேலி நிலக்கரி என்பது தரத்தில் சற்று தாழ்ந்த நிலக்கரி லிக்னைட், எனவே அதற்கு 2½ ரூபாய் ராயல்டி என்று அட்டவணை போட்டிருக்கிறார்கள்.

ஆனால், நடந்தது என்னவென்றால் முன் இருந்த அரசு அதனுடைய மத்திய அமைச்சர் வசந்த்சாத்தே அவர்கள். 1989-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26-ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் ராயல்டி டன் ஒன்றுக்கு 2½ ரூபாய் வீதம் இனிமேல் வழங்கப்படும் என்றும், 1976-லிருந்து அதற்கு ஈடாக ஒரு மானியத் தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார், 1976-லிருந்து தரப்படும் என்று சொல்லியிருந்தார். நாங்கள் கூடாது, 1956 முதல் 1976 வரையில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு எங்களுக்கு லாபத்தில் பங்கு வேண்டுமென்று கேட்டார்கள்.

அதனால் அங்கே லாபமே வரவில்லை. அதனால் பங்கு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு 1976 வரையில் லாபம் கிடைக்கவில்லை என்று கணக்குக் காட்டியவர்கள், 1976-க்குப் பிறகு லாபம் வர ஆரம்பித்ததும், லாபத்தில் பங்கு என்ற ஒப்பந்தம் முடிந்துவிட்டது - காவிரிப் பிரச்சினை மாதிரி - அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனிமேல் ராயல்டிதான் தரப்படும் என்று சொன்னார்கள். அந்தக் கணக்கு என்ன என்று நாங்கள் கேட்டோம். இடையில், இடைக்காலத்தில் யாரும் வலியுறுத்தவில்லை.

இந்த அரசு வந்த பிறகு அதை வலியுறுத்திக் கேட்கத் தொடங்கியது. ராஜீவ் காந்தி காலத்தில் அதைக் கேட்கத் தொடங்கினோம். அப்போது எங்களுக்குச் சொல்லப்பட்ட பதில் 1976-லிருந்து 1989 வரையில் வழங்க வேண்டிய உரிமைத் தொகைக்கு ஈடான மானியத் தொகை ரூ. 19.09 கோடி என்றும், அதிலே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வழங்கிய மின்சாரத்திற்காக - அதாவது மின்சார வாரியத்திற்கு வழங்கிய மின்சாரத்திற்காக ரூ.

7.09 கோடி என்றும், அதைக் கழித்துக்கொண்டு நிகராக உங்களுக்குத் தர வேண்டியது 12 கோடி

ரூபாய்தான் என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள். 12 கோடிதான் என்று சொல்லிவிட்டார்கள். அதற்குப் பிறகு நாம் அவர்களோடு வாதாடி, அதிகாரிகள் மட்டத்தில் டெல்லியில் அண்மையில் பேச்சு நடைபெற்று, அவர்கள் 1956-லிருந்து 1976 வரைக்கும் உள்ள உரிமைத் தொகையான ரூ. 4.28 கோடி தர சம்மதித்து, 1976-லிருந்து 1986 வரையில் உள்ள ராயல்டி 19 கோடி ரூபாயும் சேர்த்து, மொத்தமாக ரூ. 23.37 கோடி கொடுக்கிறோம். அதிலே நீங்கள் தரவேண்டிய ரூ.

7.09 கோடியைக் கழித்துக் கொண்டு 16.28 கோடி கொடுக்கிறோம் என்றார்கள். பிறகுதான் இந்த வயதானவன் டெல்லிக்குச் சென்று நம்முடைய அமைச்சர் ஆரிஃப் முகமது அவர்களைச் சந்தித்து அவர்களிடத்திலே நீண்டநேரம் வாதாடி 30 கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி). அந்த ரூ. 7 கோடியை நீங்களே தள்ளிவிடுங்கள் என்று சொல்லி அந்த ரூ. 7 கோடியையும் சேர்த்து, ரூ. 23 கோடி - அஃதன்னியில் இது வரையில் தராததற்கு வட்டியைக் கொடுங்கள் என்று கேட்டு அவர்கள் வட்டியையும் சேர்த்துக் கொடுத்து, 30 கோடி ரூபாயை நாம் இன்றைக்குப் பெற்றிருக்கிறோம்.

அதற்காகவாவது பொன்னுசாமி மகிழ்ச்சி அடைந்து இருக்கவேண்டும். மகிழ்ச்சி அடையாமல் ஏன் இன்னும் அதிகம் வாங்கவில்லை என்று கேட்டார். நல்லதுதான். அப்படிக் கேட்பது நல்லது. இப்படி எல்லாம் கேட்டால்தான் நாங்கள் அங்கே செல்லும்போது இப்படியெல்லாம் கேட்கிறார்கள் ஆகவே தயவு செய்து கொடுங்கள், இல்லாவிட்டால் உங்கள் ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர் வரும் என்று சொல்லி, அவர்களிடத்திலே கேட்பதற்கு, இங்கே எதிர்க்கட்சிகள் வேகமாகப் பேசுவதை நான் நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்வேன் என்பதை மாத்திரம் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

நம்முடைய நண்பர் சொக்கர் அவர்கள் நேற்றையதினம் பேசும்போது, டி.ஐ.ஐ.சி. பற்றிக் குறிப்பிட்டு, அனுமதி அளிப்பதற்கும் தொகை வழங்குவதற்கும் உள்ள முரண்பாடுகள் என்று ஒன்றைக் குறிப்பிட்டார். இது ஓர் ஆண்டு கூட அல்ல. 9 மாத காலத்திற்கானது. அவர் அதிலே உள்ள ஒரு அடிக்குறிப்பைப்

படித்துவிட்டு, அப்படிச் சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகை டி.ஐ.ஐ.சி.-யின் 103.97 கோடி ரூபாய். வழங்கப்பட்ட தொகை 60.78 கோடி ரூபாய். இதைத்தான் கவனிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்டது ரூ. 103 கோடி, வழங்கப்பட்டது ரூ. 60 கோடி, இப்போது அவர்கள் நமக்கு அறிவித்து விட்டார்கள். நீங்கள் அனுமதிப்பதை அதிகமாகச் சொல்லி, வழங்குவது குறைவாக இருக்கும்போது, அனுமதிப்பதையும் அளவோடு அனுமதியுங்கள் என்று அவர்கள் கூறிய பிறகு இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகை 97.10 கோடி ரூபாயாகவும், வழங்கப்பட்ட தொகை 65.07 கோடி ரூபாயாகவும் அமைந்திருக்கிறது.

அதிலே வழங்கப்பட்ட தொகை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு ரூ. 60 கோடி சொச்சம், இந்த ஆண்டு ரூ. 65 கோடி சொச்சம், அதிகமாகத்தான் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் கூறிய அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டுதான் ஐ.டி.பி.ஐ. கருத்துக் கூறும்போது எதைச் சொன்னார்களோ, அந்த அடிப்படையில் நாம் இதை இன்றைக்கு அனுமதித்து வழங்கியிருக்கிறோமே அல்லாமல் வேறு அல்ல. இன்னொன்று சொன்னார்கள். நல்ல உதாரணத்தோடு Old wine in new bottle or different bottles என்று சொன்னார்கள்.

மலிவு விலை மது பற்றிப் பேசப்படுகிற நேரத்தில் அவர்கள் ஒயினைப் பற்றிப் பேசினார்கள். பேசிவிட்டு, அந்த விற்பனை வரி ஒத்திவைப்பு, சேல்ஸ்டாக்ஸ் deferral என்பதும் Interest free Sales Tax Loan என்பதும் இரண்டும் ஒன்றுதான். அதனால்தான் இது, ஒரேவிதமான ஒயினை இரண்டு பாட்டில்களில் ஊற்றித் தரப்படுகிறது என்ற விதத்திலே பேசினார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. உண்மை என்னவென்றால், வட்டியில்லா விற்பனை வரிக் கடன் திட்டத்தில் விற்பனை வரியை முறையாகச் செலுத்திவிட்டு பிறகு ஒரு உச்ச வரம்புக்கு உட்பட்டு அதற்கு ஈடாக அரசு தொழில் வளர்ச்சி நிறுவனங்களிடமிருந்து வட்டி இல்லாத கடன் வழங்கும், அதுதான் விற்பனை வரிக் கடன் திட்டம்.

விற்பனை வரியைக் கட்டுவதற்கும் வட்டியில்லாத கடன் பெறுவதற்கும் சில நேரங்களில் கால இடைவெளி ஏற்பட்டு தாமதம் ஏற்படுகிற காரணத்தால் அதற்கு நிதி நெருக்கடி, நிறுவனத்திற்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டுதான் விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டத்தினை முழுமையாக இந்த அரசு செயல்படுத்தியது.

விற்பனை வரியைத் தள்ளி வைப்பது என்று ஒரு திட்டம். விற்பனை வரிக்கடன் திட்டம் என்பது ஒன்று. விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் என்பது மற்றொன்று. இரண்டும் ஒன்றல்ல. இதைச் செம்மையாகச் செயல்படுத்துவதற்காக மாவட்ட அளவிலே உதவி ஆணையர், வணிகவரி அவர்களுக்கு இதனை வழங்க அதிகாரமும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதைச் செயல்படுத்துவதற்கு சட்டத்திருத்தமும் கொண்டுவர இருக்கிறோம். அதனால் விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் உரிய நேரத்தில் விரைவாக மாவட்ட அளவிலேயே செயல்பட வழிவகை செய்யப்படும் என்றாலும் கூட, முன்பு இருந்த விற்பனை வரி கடன் திட்டத்தின் அடிப்படையிலே ஓரிரு ஆண்டுகளாகக் கடன் பெற்று வருகிற தொழில்கள் தொடர்ந்து விற்பனை வரி கடன் பெறுவதற்கு நிதிநிலை அறிக்கையிலே 10.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறோம்.

மேலும் இவர்கள், தங்கள் விருப்பப்படி விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டத்தின் கீழ் தங்களை மாற்றிக் கொள்ளலாம். ஆப்ஷனல், அல்லது தொடர்ந்து விற்பனை வரி கடன் திட்டத்தில் கடனைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே இரண்டு திட்டங்களுக்கும் வகை செய்யப்பட்டுள்ளத. இதைத் தொடர்ந்து இன்னும் சில செய்திகள் இந்த அவைக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன்.

நேற்றைக்கு சொக்கர், தேடினார். தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன், காணவில்லை என்றார்கள். இந்த விற்பனை வரிச் சலுகைகளை எல்லாம் அறிவித்தார்கள், 105 வட்டங்களிலே 30 மிகவும் பின்தங்கிய வட்டங்கள் வரும் என்றார்கள். எங்கே தேடுவேன் என்று கேட்டார். நான், தேடட்டும், ஒருநாள் வரையிலும் தேடட்டும் என்பதற்காகக் காத்திருந்தேன். இன்றைக்கு அது குறித்து சில அறிவிப்புகளைச் சொன்னால்கூட அவை பத்திரிகைகளில் சில நேரங்களில் தவறாக வந்துவிடுகிறது என்பதற்காக அந்த அறிவிப்புகளை அச்சடித்தே வைத்திருக்கிறேன், அது பிறகு வழங்கப்படும்.

இந்த 105 பகுதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பகுதிகளாக இருக்கிறதே, அதற்கு நாம் நம்முடைய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம். 'TIIC' சார்பாக ரூ. 6 கோடி வழங்கியிருக்கிறோம். சிப்காட் வாயிலாக ரூ. 2.74 கோடி

வழங்கியிருக்கிறோம். தொழில் வணிக இயக்குநரகம் வாயிலாக ரூ. 56 இலட்சம் ஆக மொத்தம் ரூ. 9.30 கோடி வழங்கியிருக்கிறோம். ஆனால் பின்தங்கிய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 105 இடங்களிலே, 17 மாவட்டத்திலுள்ள 44 வட்டங்கள் மாத்திரமே இந்த மானியத்தைப் பயன்படுத்தி தொழில்கள் நிறுவி உள்ளன. இங்கே 323 நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன, இங்கே 105 இடங்களில் 44 வட்டங்களில் மாத்திரம் 17 மாவட்டங்களில் 323 நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அவைகளை நேரம் இல்லாவிட்டாலும் சொல்லுவது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் சொல்ல விரும்புகிறேன், தொழில் மானியமாக இருப்பதால்.

செங்கை - அண்ணா மாவட்டத்தில் செய்யூர் 1. காஞ்சிபுரம் பயன்பெற்ற தொழில் 1. மதுராந்தகம் 27, பொன்னேரி 22, திருத்தணி 1, கும்மிடிப்பூண்டி 15, அது இந்த 105-ல் வராது, சிதம்பரனார் மாவட்டம் விளாத்திகுளம் 2, கோவை பொள்ளாச்சி 2, அவிநாசி 18, தர்மபுரி தென்கனிக்கோட்டை 4, தர்மபுரி 7, அரூர் 4, கிருஷ்ணகிரியில் 2, பென்னாகரம் 1, திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் பழனி 28, வாடிப்பட்டி 3, வேடசந்தூர் 3, கன்னியாகுமரியில் தோவாளை 3, மதுரை ஆண்டிப்பட்டி 5, பெரியகுளம் 4, நெல்லை கட்டபொம்மன் நாங்குநேரி 7, ராதாபுரம் 4, தென்காசி 1, நீலகிரியில் கூடலூரில் சில தொழில்கள்.

அவ்வளவுதான். வட ஆற்காடு அம்பேத்கார் மாவட்டம் செய்யாரில் 4, போளூர் 1, பசும்பொன் தேவர் திருமகனார் காரைக்குடி 2, சிவகங்கை 1, தாராபுரம் 7, கோபிச்செட்டிப்பாளையம் 2, பெருந்துறை 6. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி 3, 1, அறந்தாங்கி 4, ஆவுடையார்கோவில் 6, கந்தர்வகோட்டை திருமயம் 3, இராமநாதபுரத்தில் இராமநாதபுரம் - 2, சேலம் - ஆத்தூர் 1, சங்ககிரி 1, தென்னாற்காடு மாவட்டம் சிதம்பரம் 8, செஞ்சி 1, கள்ளக்குறிச்சி 15, காட்டுமன்னார்கோவில் 3, திண்டிவனம் 10, உளுந்தூர்பேட்டை 7, விழுப்புரம் 1, திருச்சியில் முசிறி 64, பெரம்பலூர் 5, இப்படி 323 தொழில்கள் பயன் பெற்றிருக்கின்றன.

105 இடங்களில் 44 வட்டங்களிலே மாத்திரம்தான் அவர்கள் இந்த உதவியைப் பெற்று தொழில் தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் 105-லேயே ‘பேக்வேர்டு, மோஸ்ட் பேக்வேர்டு’ என்று பிரித்து, 30 வட்டங்

களைத் தனியாக அறிவித்து அவர்களுக்கு மேலும் சில சலுகைகளைச் செய்யலாம் என்ற முயற்சியை இப்போது அரசு மேற்கொண்டிருக்கிறது, அதை அறிவிக்க நான் விரும்புகிறேன்.