தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 4
பகுதி 4 · 4 / 4
இதை எப்படி இந்த பின்தங்கிய பகுதி, மிகவும் பின்தங்கிய பகுதி என்று நீங்கள் நிர்ணயிக்கின்றீர்கள் என்று கேட்டால் பின்தங்கிய பகுதி என்பது தொழிலாளர்களுடைய சராசரி விகிதம். அதிலே மாநில சராசரி விகிதம், 1.26 விழுக்காட்டிற்குக் குறைவாகத் தொழிலாளர்கள் இருக்கின்ற பகுதி. அதே வட்டத்தில் பெரிய தொழில்களோ, நடுத்தரத் தொழில்களோ ரூ. 15 கோடிக்குக் குறைவாக இருக்கவேண்டும். அவைகளை எல்லாம் பி.சி. - பின் தங்கிய பகுதியில் சேர்க்கின்றோம்.
இந்த அடிப்படையில் 105 இடங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதிலே மீண்டும் எம்.பி.சி. என்று எப்படி நிர்ணயிக்கிறோம் என்றால் அந்த வட்டத்தில் ஆலைத் தொழிலாளர்களாக சராசரி 25 சதவிகிதத்திற்குக் குறைவாக இருக்கவேண்டும். அந்த வட்டத்தில் நடுத்தரத் தொழில்கள் அல்லது எந்தப் பெரிய தொழிலும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலே 30 பின்தங்கிய வட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அவைகளுடைய பெயர்களை நான் இங்கே படிக்க விரும்புகிறேன். செங்கை - அண்ணா மாவட்டத்தில். பள்ளிப்பட்டு, தர்மபுரியில் பென்னாகரம், திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டத்தில் வேடசந்தூர், கொடைக்கானல். காமராசர் மாவட்டத்தில் திருச்சுளி, மதுரையில் உசிலம்பட்டி, திருநெல்வேலி-கட்டபொம்மன் மாவட்டத்தில் தென்காசி, இராதாபுரம் பெரியார் மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம்; சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, தென்னாற்காடு மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், திருக்கோவலூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் யாரும் பொறாமைப்படக்கூடாது.
அங்கே தொழிலே இல்லாத மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், வலங்கைமான், குடவாசல். பேராவூரணி, நன்னிலம், ஓரத்தநாடு, சீர்காழி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி. (சிரிப்பு, குறுக்கீடு). அவர் கேட்ட அந்த பைப் லைன் வந்தால் அங்கேயெல்லாம் தொழில் வரும்.
திருச்சி மாவட்டத்தில் உடையார் பாளையம், துறையூர், வட ஆற்காடு - அம்பேத்கார் மாவட்டத்தில் ஆற்காடு, திருவண்ணாமலை - சம்புவராயர் மாவட்டத்தில் செங்கம், போளூர், செய்யார், வந்தவாசி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில். இவைகளையன்னியில் மேலும் சில அறிவிப்புகளை நான் உங்கள் முன்னிலையில் வைக்க விரும்புகிறேன்.
அகில இந்திய அளவிலே மிகச் சிறப்பான ஊக்கச் சலுகைத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் மேலும் சில சலுகைகளை அளிக்க முன் வந்துள்ளேன்; கூடலூர். புதுக்கோட்டை, மானாமதுரை சிப்காட் தொழில் வளாகங்களிலும் மேலே கூறிய 30 வட்டங்களிலும் தொடங்கப்படும் தொழில்களுக்கு விற்பனை வரி விலக்கு மேலே குறிப்பிட்டதைப் போல அதாவது 5 ஆண்டுகளுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்படும். மீதம் உள்ள 75 பின்தங்கிய வட்டங்களிலும் அரசு நிறுவனங்கள் நடத்தக்கூடிய தொழில் மையங்களிலும் தொடங்கப்படும் தொழில்களுக்கு விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்.
(மேசையைத் தட்டும் ஒலி). தொழில்களை விரிவு படுத்துவதற்கும் (பகுதி 1) மற்றும் புதிய தொழில்களை ஏற்படுத்துவதற்கும் (பகுதி 2) விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது இந்த இரண்டு திட்டங்களிலும் விற்பனை வரி தள்ளி வைக்கும் உச்ச வரம்பு ரூ. 3 கோடியாக இருக்கிறது. புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு இனிமேல் 3 கோடி ரூபாய் என்ற உச்ச வரம்பு தளர்த்தப்பட்டு மூலதனச் செலவு அளவிற்கு உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விரிவு படுத்தக்கூடிய தொழில்களுக்கு அது மூலதனச் செலவில் 80 சதவீத அளவிற்கு வழங்கப்படும். இந்த இரண்டு பிரிவு திட்டங்களிலும் விற்பனை வரி தள்ளி வைப்பு 9 ஆண்டுகள் வரை வழங்கப்படும். மராட்டியத்தில், குஜராத்தில் இதன் காரணமாக தொழில் வருவதை எண்ணிப் பார்த்து இங்கே இதை அறிவிக்கிறேன்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொழில் நிறுவனங்கள். விற்பனை வரி செலுத்தினால் போதுமானது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆண்டிற்கான விற்பனை வரியையும், தள்ளி வைக்கப்
பட்ட முதல் ஆண்டிற்கான விற்பனை வரியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இஃதன்னியில் தற்போது தமிழகத்தில் இதர பகுதிகளில் முன்னோடித் தொழில்களைத் (பயனியர் இண்டஸ்ட்ரீஸ்) தவிர, இதர தொழில்களுக்கு விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் கிடையாது - இதுவரையிலும் கிடையாது - இனி மேல் இதர பகுதிகளில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதர பகுதிகளில் தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் (பகுதி 1) புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் (பகுதி 2) இந்தத் திட்டம் பொருந்தும்.
புதிய தொழில்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விற்பனை வரி தள்ளி வைப்பு வழங்கப்பட்டு உச்ச வரம்பு மூலதனச் செலவில் 60 சதவீதம் என்று வழங்கப்படும். ஏற்கெனவே இருக்கும் தொழில்களுக்கு விரிவுபடுத்துவதற்கு இந்த உச்ச வரம்பு மூலதனச் செலவில் 50 சதவீதமாக இருக்கும்.
மேலும் மாநிலத்தில் பெரிய தொழில்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் 50 கோடி ரூபாய்க்கு மேல் மூலதனச் செலவில் தொடங்கப்படும் தொழில்களுக்கு சிறப்புச் சலுகையாக மாநிலத்தில் எந்தப் பகுதியில் தொடங்கினாலும் 9 ஆண்டுகளுக்கு விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் மூலதனச் செலவு அளவிற்கு வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). இந்த அறிவிப்பின் மூலம் மாநிலத்தில் பெரிய தொழில்கள் ஏற்பட நல்ல வாய்ப்பு உருவாகும் என்று நான் நம்புகிறேன்.
எனவே நீங்கள் தந்துள்ள பல்வேறு கருத்துக்களை - எல்லாக் கருத்துக்களுக்கும் விடை அளிக்க, விளக்கம் அளிக்க நேரம் இல்லை என்றாலும் கூட அவைகளையெல்லாம் நெஞ்சிலே பதிய வைத்து ஆவன செய்வேன், அனைவரும் சேர்ந்து தமிழகத்திலே தொழில் வளர்ப்போம், வாரீர் என்று கேட்டு வெட்டுப் பிரேரணைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று இறைஞ்சி அமருகின்றேன்.
**திரு. எஸ். ஆர். இராதா :** பேரவைத் தலைவர் அவர்களே, கடந்தகால ஆட்சியில் செய்யப்பட்ட தொழில்களிலே இன்றைக்கு நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்புகளில் இரண்டு விடுபட்டிருக்கின்றன, ஒருவேளை விடுபட்டதோ அல்லது திட்டமே இல்லையோ என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலூர் பகுதியில்
15 கோடி ரூபாயில் டைமண்ட் தொழிற்சாலைக்கான திட்டம் இடப்பட்டது. அதே போல பல்கால் குரூப்பும், டிட்கோவும் சேர்ந்து 5 கோடி ரூபாயில் தண்ணீர்க் சக்தியை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு தொழில் திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இரண்டும் விடுபட்டிருக்கின்றன. எனவே கடந்த கால ஆட்சியிலே செய்யப்பட்டிருந்த அந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமா என்பதோடு, திருச்சி பகுதியில் இருக்கின்ற செயற்கை வைரக் கல் தயாரிக்கின்ற அந்தத் தொழில் இன்றைக்கு நெருக்கடிக்கு ஆளாகி 20 நாட்களாக அவர்களுக்கு மூலப்பொருள் கிடைக்காத நிலை இருக்கிறது.
நாம் உருவாக்கியிருக்கின்ற கார்ப்பரேஷன் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருப்பதாக அங்கிருக்கின்ற தொழிலாளர்கள் சொல்கிறார்கள். எனவே அவையும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது கருத்தில் வைக்கப்படும்.
**திருமதி. ஏ. எஸ். பொன்னம்மாள் :** தலைவர் அவர்களே, நம்முடைய அமைச்சர் அவர்களுடைய குறிப்பிலே எல்லாம்கூட ஏதோ நிலக்கோட்டைக்கு விவசாயத்தைச் சார்ந்த தொழில் ஆரம்பிக்கப்படும் என்று அதிலே இருக்கிறது. நானும் ஏதாவது வரும், வரும் என்று இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தும் பயன் எதுவும் இல்லை. நிலக்கோட்டை மிகவும் பின்தங்கிய பகுதி. ஏற்கெனவே முந்தைய அரசு அறிவித்த ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலே அதாவது திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒரு இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் போடுவதாகச் சொல்லி.
**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** என்ன வேண்டும் என்று கேளுங்கள். விரிவுரையிலேயே எங்களுக்கு என்ன கேட்கிறீர்கள் என்று விளங்காமல் போகிறது (சிரிப்பு).
**திருமதி. ஏ. எஸ். பொன்னம்மாள் :** அதாவது விவசாயத் தொழில் என்று சொல்லியிருக்கிறார்கள். அது என்ன தொழில்? லெமன் கிராஸை நிலத்திலே உற்பத்தி பண்ணி அந்தப் புல்லிலிருந்து ஏதோ தைலம் தயாரித்து அதை ஜப்பானுக்கு
எல்லாம் அனுப்புவதாக ஒரு திட்டம் கிண்டியிலே இருக்கிறதே அது செய்யப்படுமா? சோயாபீன்ஸ்லிருந்து எண்ணெய் தயாரிக்க வேண்டிய திட்டம் அதையாவது செய்வார்களா? ஒன்றுமே இல்லாமல் சும்மா ஸ்ட்ரோ மாதிரி விட்டுவிட்டார்களே?
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** தலைவர் அவர்களே, பெருந் “தொழில்கள்” கொள்கை விளக்கக் குறிப்பில் 3-ஆம் பக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலே இரப்பரை அடிப்படையாகக் கொண்ட பெருந் தொழிற்சாலை ஒன்றையும், திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டையில் விவசாயத்தினைச் சார்ந்த தொழிற் பிரிவு ஒன்றையும் அரசு அமைக்கும் என்று இருக்கிறது. அதை அம்மையார் படிக்கவில்லை என்று கருதுகிறேன்.
அங்கே எதை மூலப்பொருளாகக் கொண்ட தொழில் ஆரம்பிக்கலாம் என்பதை அக்கா சொன்னால், தம்பி கேட்கத் தயாராக இருக்கிறேன். (சிரிப்பு).
**திரு. எஸ். டி. உகம்சந்த் :** பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றைய தினம் மத்தியத் தொழில் வள அமைச்சர் அவர்கள் பாராளுமன்றத்திலே ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள். நலிந்த தொழிற்சாலைகளை எல்லாம் அரசாங்கம் எடுத்து நடத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றி மாநில அரசினுடைய கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** தலைவர் அவர்களே, அது மத்திய அரசால் இயலாது என்று சொல்லியிருக்கிறார்கள். மாநில அரசு முன் வந்தால் அதைத் தடுப்பதாக அவர்கள் இல்லை.
\***திரு. சா. பீட்டர் ஆல்போன்ஸ் :** கலைஞர் அவர்களே, நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த பேக்வேர்டு ஏரியாவுக்கு கேபிடல் சப்சிடி திட்டத்தை அறிவித்தார்கள். அதிலே சின்ன விளக்கம் கேட்க விரும்புகிறேன். அதாவது ப்ராஸஸிங் இண்டஸ்ட்ரிக்கும், மேன்யூஃபேக்சரிங் இண்டஸ்ட்ரிக்கும் ஒரு டிஃபரன்ஸ் உண்டு. இப்ப கேபிடல் சப்சிடி மேன்யூஃபேக்சரிங் இண்டஸ்ட்ரிக்குத்தான் உண்டு, ப்ராஸஸிங் இண்டஸ்ட்ரிக்கு கிடையாது என்று சொல்கிறார்களே, அதைப்பற்றி நம்முடைய முதல்வர் கருத்தை நான் அறிய விரும்புகிறேன்.
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** தலைவர் அவர்களே, இது எனக்குப் புதிய தகவலாக இருக்கிறது. அதைப் பற்றி விசாரித்து அவருக்கு விவரம் தருகிறேன்.
**திரு. இரா. மோகன் :** பேரவைத் தலைவர் அவர்களே, மூலப் பொருட்களுடைய திடீர் தட்டுப்பாட்டின் காரணமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிலே திடீரென்று மூடப்படக் கூடிய நிலைமைகள் ஏற்படுகின்றன. பல்வேறு மூலப் பொருள்கள் வடநாட்டிலிருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து நமக்கு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே தனியாக நம்முடைய மாநில அரசு மூலப் பொருட்கள் ஒழுங்காக தமிழகத்திற்கு வந்து சேர்கிறதா என்பதைக் கவனித்து, அந்த மூலப் பொருட்கள் முழுவதும் தொழிற்சாலைகளை சென்றடைகின்ற வண்ணம் ஒரு நல்ல ஏற்பாட்டைச் செய்யுமா என்று கேட்க விரும்புகிறேன்.
காரணம், பிக் அயர்னுடைய தட்டுப்பாட்டின் காரணமாக கோவையிலே நூற்றுக்கும் மேற்பட்ட ஃபவுண்டரிகள் இப்போது மூடப்பட்டிருக்கின்றன. அதைப் போல பல மூலப் பொருட்கள் தட்டுப்பாடு திடீரென்று ஏற்படுகிறது. ஆகவே அதைப் போக்குவதற்கு ஒரு நல்ல மானிட்டரிங் ஏற்பாடு செய்யப்படுமா என்று கேட்க விரும்புகிறேன்.
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** தலைவர் அவர்களே, பிக் அயர்னுக்காக சட்டமன்ற உறுப்பினர் ரமணியும் வாதித்து விட்டார். மோகனும் வாதித்து விட்டார். போதும்.
**திரு. எம். முகமதுத்தீக் :** தலைவர் அவர்களே, பூம்புகார் தொகுதியிலே ஏற்படுத்த இருக்கின்ற சிப்காட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதா? அதற்கான திட்டப் பணிகள் எப்போது துவங்கப்படும் என முதல்வர் அவர்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்.
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** அந்த மூன்று வளாகங்களுக்கும் மத்திய அரசினுடைய அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது.
**திரு. குமரி அனந்தன் :** மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, என்னுடைய அந்த உரையின்போதுகூட, சாத்தான்குளத்தினுடைய பின்தங்கிய நிலையைச் சொன்னேன். நேற்று நமது மாண்புமிகு டாக்டர் பொன்முடி அவர்கள் கூட்டிய அந்தக் குடிநீர்த் திட்டக் கூட்டத்திலே கூட, ‘ஒன்றுமே கிடையாது, நீங்கள் ஏதாவது கொடுத்தால்தான் உண்டு குடிப்பதற்கு’ என்று சொன்னேன்.
அதைப்போலவே தயவு செய்து மிகப் பின்தங்கிய பகுதி, நீங்கள். . . . .
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** கவலைப்பட வேண்டாம்; சாத்தான், குளத்தில் விழமாட்டான். (சிரிப்பு).
**திரு. கே. ரமணி :** தலைவர் அவர்களே, கோவை மாவட்டத்தில் பின்தங்கிய வட்டமாக அறிவித்திருந்த அவிநாசி இப்போது கொஞ்சம் வளர்ச்சியடைந்து, அந்தப் பட்டியலிலிருந்து போய்விட்டது. ஆனால் பல்லடம் தாலுக்கா இருக்கிறதே, அதிலே முக்கியமான பகுதி, நம் பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏ., இருக்கக் கூடிய பகுதி கூட இருக்கிறது. அதைப்பற்றி ஒன்றும் வரவில்லை. நான் முக்கியமாகக் கேட்கக்கூடியது அந்த மூடப்பட்ட பஞ்சாலைகளைப் பற்றிச் சொன்னதிலே, அதைப்பற்றி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை நடக்கிறது என்று சொன்னார்.
அதை வரவேற்கிறேன். புதுக்கோட்டையில் இருக்கும்படியான காவேரி மில்லும், நமது சமுதாயத்திலே இருக்கக்கூடிய மில்லும், மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவே மூடிக் கிடக்கின்றன. அந்தத் தொழிலாளிகள் இப்போது ரொம்பக் கஷ்டத்திற்கு ஆளாகி அவர்கள் போராட்டம் எல்லாம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி இந்தப் பட்டியலிலும் வரவில்லை. ஒன்றுமே சொல்லப்படாமல் இருக்கக்கூடிய ஒரு நிலை. . . .
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** நான் திறக்கப்படவே முடியாது என்று சொன்ன பட்டியலில் அந்த மில் இல்லை. ஆய்வு நடத்தப்படுகின்ற பட்டியலில் அந்த மில் இருக்கிறது.
