உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 3

பகுதி 3 · 3 / 4

நுணுக்கத்தைக் கொண்டு கும்மிடிப்பூண்டிக்கு அருகில் 40 கோடி ரூபாய் மூலதனத்தில் ‘டிட்கோ’ நிறுவனத்தோடு கூட்டு சேர்த்து கூட்டுத்துறையில் ‘டையனோ லாம்ப்ஸ்’ என்ற மின் விளக்குகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறது. இதற்கு அரசு தரவேண்டிய மூலதனத்தொகையை இப்போது தந்துள்ளது. இந்தத் தொழிற்சாலை மின்சார விளக்கு உற்பத்தியில் ஒரு நவீன முறையைக் கையாளக் கூடிய தொழிற்சாலை என்று கூறலாம். இந்த மின் விளக்குக்கு மின்சாரத் தேவை குறைவதோடு விளக்குகளும் சற்று அதிகமான ஒளி தரும்.

நான்காவதாக, ஸ்பெயின் நாட்டு தொழில் நுண்ணறிவைக் கொண்டு ‘மார்ட்டர் பிளாஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலையை கும்மிடிப்பூண்டிக்கு அருகில் 4½ கோடி ரூபாய் மூலதனத்தில் ‘டிட்கோ’ நிறுவனமும் ஒரு தனியார் நிறுவனமும் சேர்ந்து கூட்டுத் துறையில் நிறுவும்.

பலமாடிக் கட்டிடங்கள் பெருகி வரும் இந்நாளில் மழை மற்றும் புயல் காரணமாக கட்டிடங்களில் நீர் தேங்கி கட்டிடங்களைச் சேதப்படுத்தாமல் அம்மாதிரிக் கட்டிடங்களின் மேல் தளத்திலே நீர்க் கசிவு ஏற்படாதவாறு அவற்றைத் தடுக்க ‘மார்ட்டர் பிளாஸ்’ என்ற ஒருவிதப் பொருளை உபயோகிக்கும் முறை வெளிநாடுகளிலே இப்போது இருந்து வருகிறது. அத்தகைய பொருளைத் தயாரிக்கும் தொழில் நுண்ணறிவை ஸ்பெயின் நாட்டிலிருந்து பெற்று இப்பொருளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை கும்மிடிப்பூண்டிக்கு அருகிலே 4½ கோடி ரூபாய் மூலதனத்திலே ‘டிட்கோ’ நிறுவனமும் தனியார் நிறுவனமும் சேர்ந்து கூட்டுத் துறையிலே ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவிலே இத் தொழிற்சாலை நிறுவப்பட்டு உற்பத்தியைத் தொடங்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

(5) ஃபிரென்ச் நாட்டுத் தொழில் நுண்ணறிவைக் கொண்டு தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 54 கோடி ரூபாய் மூலதனத்தில் நிறுவப்பட்டுள்ள ‘டைட்டான்’ கடிகாரத் தொழிற்சாலை.

‘டிட்கோ’ நிறுவனமும் ‘டாட்டா’ நிறுவனமும் இணைந்து கூட்டுத் துறையில் கடிகாரம் தயாரிக்கும் தொழிற்சாலை.

இந்தியாவின் மொத்தத் தேவையில் 52 சதவீதம் கடிகாரங்களை இத்தொழிற்சாலை பூர்த்தி செய்கிறது. இத்தொழிற்சாலை தயாரிக்கும் ‘குவார்ட்ஸ்’ கடிகாரங்கள்தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகின்றன. இத்தொழில் நிறுவனம் கடிகாரங்களுக்குத் தேவையான ‘கேஸ்’-களை, கூடுகளை, உரிமம் பெற்று வெளிநாடுகளிலேயிருந்து இறக்குமதி செய்து வந்தது. இப்போது அந்தக் ‘கேஸ்’-களையும் இங்கேயே தயாரிப்பதற்கு அனுமதியைப் பெற்றிருப்பதால் இந்த ஆண்டு 30 கோடி ரூபாய் மூலதனத்தில் இந்த ‘கேஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலை பூர்த்தி செய்யப்பட்டு உற்பத்தியைத் தொடங்கும்.

(6) சோயா பீன்ஸ் எண்ணெய் உற்பத்தித் தொழிற்சாலை.

சோயா பீன்ஸ் என்ற ‘புரதச் சத்து’ நிறைந்த விதைகளைப் பயிர் செய்து அதிலிருந்து சோயா எண்ணெய் தயாரிக்கிற தொழிற்சாலையை கூட்டுத் துறை ‘டிட்கோ’-வும் ‘சக்தி நிறுவனமும்’ இணைந்து 27 கோடி ரூபாய் மூலதனத்திலே பொள்ளாச்சிக்கு அருகில் நிறுவி உள்ளன. ஆண்டு ஒன்றுக்கு இதற்குத் தேவையான 90 ஆயிரம் டன் சோயா விதைகள் இந்த மாநிலத்திலே உற்பத்தி செய்யப்படவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டு அந்த இலக்கினை நோக்கி இத்தொழிற்சாலை முன்னேறிக்கொண்டிருக்கிறது.

(7) செங்கை-அண்ணா மாவட்டம், மதுராந்தகத்தில் 17 கோடி ரூபாய் மூலதனத்தில் ‘ரெலையன்ஸ் செராமிக்ஸ்’ தொழிற்சாலை ‘டிட்கோ’ நிறுவனமும் ‘லைட் ரூபிங்’ என்ற நிறுவனமும் சேர்ந்து கூட்டுத் துறையில் 17 கோடி ரூபாய் மூலதனத்தில் மெருகூட்டப்பட்ட தரை மற்றும் சுவர் ஓடுகள் தயாரிக்கும் ரெலையன்ஸ் சிராமிக்ஸ் தொழிற்சாலை நிறுவப்பட இருக்கிறது.

(8) வடாற்காடு மாவட்டத்தில் வேலூரிலிருந்து வாணியம்பாடிக்குச் செல்லுகின்ற வழியில் தோல் பதனிடும் தொழிற்சாலை, தோல் பொருள்களைப் பதனிட்டு அவற்றிலிருந்து பல்வகையான பொருள்களைச் செய்வதற்காக கூட்டுத் துறையில் 1.6 கோடி ரூபாய் மூலதனத்தில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு, இப்போது

பூர்த்தியாகின்ற நிலையில் உள்ளது. இந்தத் தொழிற்சாலை தன் உற்பத்தியை இந்த ஆண்டே தொடங்க அரசு வழிவகைகளைச் செய்யும்.

இந்த 8 தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் ஏற்கெனவே ‘டிட்கோ’ நிறுவனம் கூட்டுத்துறையில் எடுத்துக்கொண்ட இரண்டு தொழிற்சாலைகளினுடைய உற்பத்தித் திறனைப் பெருக்கவும் அந்தத் தொழில் நிறுவனங்களுடைய உற்பத்தி சதவீதத்தை மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.

(9) தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூரில் 19 கோடி ரூபாய் மூலதனத்தில் செயற்கை இனிப்பு தயாரிக்கும் தொழிற்சாலை கல்கத்தாவைச் சேர்ந்த ‘உஸ்தாதே’ என்ற நிறுவனத்தோடு ‘டிட்கோ’ நிறுவனமும் சேர்ந்து கூட்டுத் துறையில் நிறுவி இருக்கும் ‘பையோ-டெக்’ என்ற நிறுவனமும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை அடிப்படையாகக் கொண்டு செயற்கை இனிப்புப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இது. இது ஒரு புது முயற்சி.

(10) ஓசூருக்குப் பக்கத்தில் தேன்கனிக்கோட்டையில் 6.14 கோடி ரூபாய் முதலீட்டில் கூட்டுத் துறையில் நிறுவப்பட்ட சங்கம் அலுமினியத் தொழிற்சாலை. இப்போது இதன் மூலதனம் 10.35 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் உற்பத்தியும் 4,000 மெட்ரிக் டன்னிலிருந்து 7,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. அலுமினியம் தகடுகள், பட்டாடைகள் ஆகியவற்றை இது உற்பத்தி செய்து வருகிறது. இந்த உற்பத்தியையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கூறிய 10 தொழில் நிறுவனங்களுக்கும் உரிய மொத்த மூலதனம் 236.8 கோடி ரூபாய் ஆகும்.

அடுத்து, மத்திய அரசால் நிறுவப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தன்னுடைய பணிகளை இப்போது செய்து வருகின்றது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாப்தா கிராக்கர் திட்டத்தை நிறைவேற்ற ஆர்.ஜி.பி. என்டர்பிரைஸ் நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கு வேண்டிய நாப்தா பெருமளவில் இந்தியாவில் கிடைக்காத காரணத்தால் நமக்குத் தேவையான முழு அளவையும் வெளிநாட்டிலிருந்து

இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. அந்த இறக்குமதியைக் கொண்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, நூறு சதவீதம் ஏற்றுமதி சார்புடையதாக அமைக்க வேண்டுமென்பது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு திட்டங்கள். அதற்கான பேச்சுவார்த்தைகளை அந்த நிறுவனம் தமிழக அரசோடு அண்மையிலே நடத்தி முடித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி). அதற்கு வேண்டிய அனுமதியை மத்திய அரசு கொடுத்தவுடன் இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் நிறுவத் தேவையான வழிவகைகளை நம்முடைய அரசு செய்துகொடுக்கும்.

ஏனென்றால் இத்தகைய பெரும் தொழில், அதுவும் பெட்ரோ கெமிக்கல் தொழில் அமைவதால் அதனைச் சார்ந்த பல்வேறு தொழில்கள் வளர வாய்ப்பு உள்ளது. இதனால் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் வழிவகுக்கும் என்பதால் அரசு இதிலே முழுக் கவனம் செலுத்தி வருகின்றது.

அடுத்து தொழில் மையங்கள், ஏதோ நிதிநிலை அறிக்கையிலே சொன்னீர்கள், ஒன்றையும் காணோமே என்று நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் மெத்த வருத்தப்பட்டார்கள். மத்திய அரசு அண்மையிலே அறிவித்துள்ள தொழில் மையங்கள் அமைத்திடும் பொறுப்பு சிப்காட் நிறுவனத்திடத்திலே தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 3 இடங்கள் மைய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் மையங்களுடைய நோக்கம் என்னவென்றால் பிற்பட்ட பகுதிகளிலே தொழில் வளம், அதைப் போல முன்னேற்றத்தை ஊக்குவிப்பது ஆகியவைகளாகும்.

அதற்கு அடிப்படையாக இருப்பது, ஒரு பகுதியில் மலிந்திருக்கும் வறுமை, வேலைவாய்ப்பு இல்லாமை, குறைந்த வசதியுள்ள வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தத் தொழில் பேட்டைகளை அமைக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

ஏற்கெனவே ஹோசூர், இராணிப்பேட்டை, மானாமதுரை போன்ற இடங்களில் இந்தத் தொழில் பேட்டைகள் இருந்த போதிலும் கூட, மத்திய அரசு நீங்கள் 6 இடங்களை

எங்களுக்கு எழுதுங்கள்; அதில் நாங்கள் 3 இடங்களைத் தேர்வு செய்து அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கூட கேட்டார்கள், 25 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு 3 இடமாவது 6 இடமாவது? ஒரு இடத்திற்கு 30 கோடி ரூபாய் தேவை என்று கேட்டார்கள். கேள்வி சரியானதுதான். ஆனால் மைய அரசு அதற்குரிய தொகையைத் தருகின்ற காரணத்தால் நம்முடைய 25 கோடி ரூபாய் அதற்காகச் செலவழிக்கப்படுகிற தொகை அல்ல என்பதை நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இருந்தாலும் கூட 6 இடங்கள் குறித்து நாம் மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்கிறோம். ஒன்று மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகே, பூம்புகாருக்கு அருகே உள்ள இடம். பெரியார் மாவட்டத்தில் ஈரோட்டில் அதற்கடுத்த புறநகர் பகுதியிலே உள்ள இடம்; திருநெல்வேலியிலே புறநகர் பகுதியிலே உள்ள இடம்; மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்திற்கும், விருதுநகருக்கும் இடைப்பட்ட பகுதியில்; திருச்சி மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்திற்கும், அரியலூருக்கும் அருகில்; சேலம் மாவட்டத்தில் ஓமலூர்; ஒரு மையம் ஏற்படுவதற்கு 25 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரையில் செலவாகும்.

இந்த 6 மையங்களையும் ஏற்படுத்த வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவோம். அவர்கள் மூன்றுதான் தர முடியும் என்று சொல்லிவிடுவார்களேயானால் அதை ஏற்றுக் கொண்டு மீதம் உள்ள 3 மையங்களை அமைக்கிற முயற்சியிலே மாநில அரசு ஈடுபடும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).

நான் முதலிலேயே குறிப்பிட்டது போல் தமிழ்நாட்டில் பொதுவாகக் காவிரி தீரத்தில், தஞ்சை, தென்னாற்காடு பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கிற சாத்தியக் கூறுகள் மிக அதிகமாகியுள்ளது. இதை மூலப் பொருளாகக் கொண்டு ஆண்டு ஒன்றுக்கு 5 இலட்சம் டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவ ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி மத்திய அரசின் பரிசீலனைக்காக அனுப்பி இருக்கிறோம். இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நன்னிலத்திற்கு அருகே பனங்குடி என்ற இடத்தில் அனேகமாக நிறுவப்படக் கூடும்.

இந்த எண்ணெய்

சுத்திகரிப்பு ஆலையால் தஞ்சை, தென்னாற்காடு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு ஒரு உகந்த சூழ்நிலை ஏற்படும்.

அடுத்து சர்க்கரை ஆலைத் தொழில் பற்றி இங்கே பலரும் பேசி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போதுள்ள சர்க்கரை ஆலைகளின் மொத்த எண்ணிக்கை 27. கூட்டுறவுத் துறையிலே உள்ள ஆலைகள் 12. பொதுத் துறையிலே உள்ள ஆலைகள் 3. தனியார் துறையிலே உள்ள ஆலைகள் 12. கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கிய புதிய ஆலைகள் 9. அவற்றில் கூட்டுறவுத் துறை ஆலைகள் 4. தனியார் துறை ஆலைகள் 5. தனியார் துறை எல்லாம் ஆரம்பித்து விட்டார்கள்.

கூட்டுறவுத் துறையிலேதான் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று திரு. திருநாவுக்கரசு அவர்கள் சொன்னார்கள். தனியார் துறையிலே கூட தஞ்சை மாவட்டத்தில் வழங்கப்பட்ட ஆலையைப் பொறுத்தவரையில் இன்னும் எந்தவிதமான ஆரம்ப வேலைகளும் நடக்கவில்லை என்பது எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும் என்று நான் நம்புகிறேன். கூட்டுறவுத் துறை ஆலைகள் செய்யாறு, சிதம்பரம் ஆகிய இடங்களில் வேலைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டன.

செய்யாறு கூட்டுறவு ஆலை வரும்போது, போளூருக்கும் ஆலை வேண்டும் என்ற குரலை அந்த வட்டாரத்தில் உள்ளவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேருடைய குரல் எதிரொலியாக நம்முடைய திரு. லத்தீப் அவர்கள் இங்கே போளூர் சர்க்கரை ஆலை வேண்டும் என்று கேட்டார்கள். நல்ல வேளையாக சேப்பாக்கத்திற்குக் கேட்காமல் அவர்கள் போளூருக்கு வேண்டும் என்று கேட்டவரையில் திருப்தி. இந்த ஆண்டு உள்ள நிதி நிலைமையிலே அது இயலாது.

எதிர்காலத்தில் போளூருக்கும் சர்க்கரை ஆலை வரும் என்ற தித்திப்பான செய்தியை நான் திரு. லத்தீப் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தர்மபுரி மாவட்டத்திலேயும், புதுக்கோட்டை மாவட்டத்திலேயும் இரண்டு இடங்களில் சர்க்கரை ஆலைகள் துவங்கும் வேலைகள் இந்த ஆண்டு தொடங்கப்பட்டிருக்கின்றன.

தர்மபுரியில் எங்கே துவக்குவது என்பதில் இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே பெரிய போட்டா போட்டி நடைபெற்றது. எனவே அந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும் நடு இடமாகப் பார்த்து அரூர் தாலுக்காவில் கோபாலபுரம் என்ற ஊரில் - ரொம்ப விசேஷமான இடம் என்று கருதி அந்த இடத்தில் - சர்க்கரை ஆலை அமைக்கப்படும். அந்தக் கோபாலபுரம் அரூர் தொகுதியிலே உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. தொகுதியிலே உள்ளது.

ஆனால் அதற்கான கரும்பு விவசாயிகள் எல்லாம் மொரப்பூர் தொகுதியில் அதாவது தி.மு.க. உறுப்பினருடைய தொகுதியிலே உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியிலே நிறுவுவதாக இருக்கிறது. பார்க்கலாம்.

**திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசுத் துறையிலேயும், கூட்டுறவுத் துறையிலேயும் 4 தொழிற்சாலைகளுக்கு உரிமம் பெற்று இரண்டு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒன்றின் இடத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறிவிட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் நாகுடி என்ற இடத்தில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையை நிறுவ வேண்டும் என்று இடம் எல்லாம் தேர்வு செய்து முடிந்து விட்டது.

ஆனால் இப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப் பார்த்தால் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் கவலையாக இருக்கிறது. நாகுடியிலே ஆரம்பித்தால் பக்கத்திலே இருக்கிற பட்டுக்கோட்டை, பேராவூரணியிலே இருந்து கரும்பு வருவதற்கு வசதியாக இருக்கும். அந்தப் பகுதி சி.எம்.பி. ஏரியா. அறந்தாங்கியில் ஒரு பகுதியில் காவிரித் தண்ணீர் கிடைக்கிற வசதி இருக்கிறது. அதுபோல் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளிலும் கிடைக்கின்ற காரணத்தால் அதுதான் பொருத்தமான இடம்.

எனவே அதை மாற்றாமல் அங்கேயே அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும். அதனை அரசியல் ரீதியாக இப்போது வேறு பகுதிக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. அதனை உறுதிபடுத்துகிற வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் பார்க்கலாம் என்று சொல்கிறபோது எங்கே அந்தத் தொகுதியை விட்டுப் போய்

விடுமோ என்று கவலையாக இருக்கிறது. லைசென்ஸ் நாகுடிக்குத்தான் கிடைத்திருக்கிறது. எனவே அங்கேயே ஏற்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.