தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 3
பகுதி 2 · 2 / 4
தொடங்கும்போது அரசு மற்றும் அனந்தசாமி என்ற ஒரு தனியார் அந்தக் கூட்டுத் துறையிலே பங்கு ஏற்று அது ஆரம்பிக்கப்பட்டது. நான் விவரங்களுக்குள்ளே நுழையவில்லை. அது தேவையும் இல்லை என்ற காரணத்தால், அதற்குப் பிறகு 1977-ல் அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு அந்தத் தனியாரிடமிருந்த பங்குகளை எல்லாம் அரசே பெற்றுக்கொண்டு, அரசு உடைய பங்கு 62 சதவீதம் என்று உயர்ந்தது. எனவே அது ஏறத்தாழ அரசுத்துறையினுடைய தொழிலாக அன்றைக்கு மாறி விட்டது.
தனியாருக்கும் அரசுக்கும் பங்கு இருந்து, தனியார் 25, அரசு 26 சதவீதம் என்று இருந்து, அரசு ஒதுங்கிக் கொண்ட நிகழ்ச்சியல்ல இது. தனியாரிடமிருந்து அந்தத் தொழிலை அரசே பெற்றுக்கொண்டு, அது அரசுத்துறை தொழிலாக ஆன பிறகு, அரசு அதை விற்க முன் வந்ததுதான் கண்டனத்திற்கு உரியதாக ஆனதே தவிர, வேறு அல்ல. அதுமட்டுமல்ல, நிதிச் செயலாளர் அவர்கள் அன்றைக்குப் பக்கம் பக்கமாக எழுதுகிறார். இதை விற்கக் கூடாது என்று.
விற்கப்பட்ட பிறகுகூட, அக்கவுண்டண்ட் ஜெனரல் அதிலே ஏற்பட்ட தவறுகளை எல்லாம் பக்கம் பக்கமாகச் சுட்டிக்காட்டுகிறார். அது முறைகேடாக விற்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் காட்டுகிறார். இன்னும் இதிலே வேடிக்கை என்னவென்றால், அரசாங்கத்தினுடைய தொழில்களிலேயே ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 கோடி வருமானமுள்ள தொழிலாக இருந்தது இந்த காரைக்குடியிலே இருந்த தொழிற்சாலை ஒன்றுதான். அதை விற்க வேண்டுமா என்பதுதான் பிரச்சினையே தவிர, வேறு அல்ல.
எனவே அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதற்கும் நான் சொல்கின்ற இந்தக் கருத்திற்கும் நிரம்ப வேறுபாடு இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற தவறுகள் இப்போது நாம் வகுத்துள்ள இந்த ‘டிஸ்-இன்வெஸ்ட்மென்ட்’ என்ற கொள்கையிலே நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியினை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்து அரசு சார்பு நிறுவனமான டாமின் பற்றி வைக்கப்பட்டுள்ள கொள்கைக் குறிப்பைக் குறித்து இங்கே பலரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தச் சிறிய
நூலில் தெரிவிக்கப்பட்டிருக்கிற கருத்துக்களை அவை உறுப்பினர்கள் அனைவரும் படித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இருந்தாலும் அதிலே ஒன்றிரண்டைக் கோடிட்டுக் காட்ட வேண்டியது என்னுடைய கடமை. அந்த டாமின் நிறுவனத்திற்கு 83 ஆம் ஆண்டு நம்முடைய மறைந்த மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் அதை அரசுடைமையாக ஆக்க வேண்டுமென்று சுற்றொப்பு 36 ஆயிரம் ஏக்கர், அந்தக் கற்கள், பாறைகள் இருக்கிற அந்த இடத்தை அரசு எடுத்துக் கொண்டது.
36 ஆயிரம் ஏக்கர் எடுத்துக் கொண்டாலும்கூட அதிலே அந்த டாமின் நிறுவனம் அதிலே முதன்முதலாக தாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மூவாயிரத்து சொச்சம் ஏக்கரைத்தான் அவர்கள் பெற்று அங்கே பணியைத் தொடங்கினார்கள். அந்த மூவாயிரத்து சொச்சம் ஏக்கராவிலாவது பணியை முடித்தார்களா, அந்தக் கற்களை எடுத்தார்களா என்றால் இல்லை. 2,500 ஏக்கராவைத்தான் பயன்படுத்திக் கல்லை வெட்டினார்கள். அப்படி வெட்டி ஏற்றுமதி செய்யப்பட்டதில் தனியாருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக அது அமைந்து விடுகிறது.
அதனால்தான் அந்த 10 கோடி ரூபாய் 5, 6 ஆண்டுக் காலத்திலே நமக்கு வர வேண்டிய பணம் வராமல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் சொல்லும்போது நான் அதைக் கண்டு பிடிக்க வேண்டும், குற்றம் சாட்ட வேண்டும் என்ற முனைப்போடு செய்ததாக யாரும் கருதக் கூடாது. நவம்பர் மாதத்திலே - அதாவது 88வது ஆண்டு நவம்பர் மாதத்திலே கவர்னர் அவர்களுடைய கவனத்திற்கு இது கொண்டு வரப்பட்டு, அப்போதே ஒரு கமிட்டி போடப்பட்டு, அந்தக் கமிட்டி இவைகளையெல்லாம் ஆராய்ந்து அந்த டாமின் நிறுவனத்திலே நடத்தப்பட்டு வருகிற முறைகேடுகளையெல்லாம் வெளிக் கொணரத் தலைப்பட்டது.
வெளிக் கொணர்ந்த பிறகு அந்த அதிகாரி மீது அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அது கூட போதுமான நடவடிக்கை அல்ல என்று நம்முடைய
திரு. பி. எச். பாண்டியன் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார். இது நடவடிக்கையிலே ஒரு படி. அடுத்த படி, மூன்றாவது படி, நான்காவது படி, இவைகள் எல்லாம் வேறு இருக்கிறது. இருந்தாலும் முதல் படியாக அவர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு மேல் நடைபெறுகின்ற விசாரணை எல்லாம் வேறு இருக்கிறது. நடவடிக்கை வேறு இருக்கிறது. ஆனால் எப்படி அந்தத் தவறுகள் நடைபெற்றன என்று பார்த்தால் உள்ளபடியே நாம் மிகவும் வேதனைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
1983-84 ஆம் ஆண்டு தனியாரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயிருந்து கற்களை எடுக்கிறார்கள். நாமும் டாமின் என்ற நிறுவனத்திற்கு எடுத்துக் கொண்ட அந்தப் பகுதியிலேயிருந்து கற்களை எடுக்கிறோம். சாம்பல் வண்ணப் பாறை, அதைப்போல கருப்பு வண்ணப் பாறை என்று இரண்டு ரகம். அந்த சாம்பல் வண்ணப் பாறையை தனியார், நாம் இரண்டு பேரும் ஏற்றுமதி செய்யும்போது, தரம் குறைந்த சாம்பல் வண்ணப் பாறையை ஒரு கன மீட்டருக்கு 420 டாலர் என்ற விலையிலே தனியார் ஏற்றுமதி செய்கிறார்கள்.
அதே நேரத்தில் நம்முடைய டாமின், தரம் சிறந்த சாம்பல் வண்ணப் பாறையை ஒரு கன மீட்டருக்கு 277 டாலரிலிருந்து 294 டாலர் என்ற விலைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். தனியார் தரம் குறைந்த பாறையை ஒரு கன மீட்டருக்கு 420 டாலர் என்று ஏற்றுமதி செய்ய, நாம் தரத்திலே சிறந்த சாம்பல் வண்ணப் பாறையை 277லிருந்து 294 டாலர் என்ற அளவிற்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். இது 1983-84 இல்.
1984-85-ல் இதே சாம்பல் வண்ணப் பாறையை - தரம் குறைந்தது - தனியார் ஏற்றுமதிக்கு ஒரு கன மீட்டர் 475 டாலர். நாம் தரம் உயர்ந்த சாம்பல் வண்ணப் பாறையை ஒரு கன மீட்டருக்கு 258லிருந்து 269 டாலர் என்று ஏற்றுமதி செய்திருக்கிறோம். 1985-86-ல் தனியார் ஏற்றுமதி செய்த சாம்பல் வண்ணப் பாறை, தரம் குறைந்தது ஒரு கன மீட்டர் 460 டாலர். அதே நேரத்தில் நம்முடைய டாமின், தரம் உயர்ந்த சாம்பல் வண்ணப் பாறையை ஒரு கன மீட்டருக்கு 299 டாலர் என்று ஏற்றுமதி செய்கிறது.
1986-87-ல் தனியார் ஏற்றுமதி செய்த தரம்
குறைந்த சாம்பல் வண்ணப் பாறை கன மீட்டர் 475 டாலர். நமது டாமின், தரம் உயர்ந்த சாம்பல் வண்ணப் பாறையை ஒரு கன மீட்டர் 404லிருந்து 427 டாலர். 1987-88-ல் தனியார் ஏற்றுமதி செய்த தரம் குறைந்த சாம்பல் வண்ணப் பாறை ஒரு கன மீட்டர் 575 டாலர். நமது டாமின் நிறுவனம், தரம் மிக உயர்ந்த சாம்பல் வண்ணப் பாறையை ஒரு கன மீட்டருக்கு 512லிருந்து 538 டாலர். இது சாம்பல் வண்ணப் பாறை.
கருப்பு வண்ணப் பாறை விஷயத்தில் அதை விட அதிகத் தவறு. 1986-87 ஆம் ஆண்டு குன்னங்கிராமம் - இந்தக் குன்னங்கிராமம்தான் இந்தக் கற்பாறைகளுக்கு சிறந்த இடம் என்று புகழப்படுகிற இடம் - அந்த குன்னங்கிராமத்தில் டாமின், தனியார் இருசாராரும் கருப்புப் பாறைகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
அதில் டாமின் வெட்டிய பாறைகள் தனியார் அனுப்பிய பாறைகளை விட உயர்ந்த தரம் உள்ளவை. அந்தப் பாறை ஏற்றுமதியில் 1986-87ல் டாமின் நிறுவனம் பெற்ற சராசரி விலை ஒரு கன மீட்டருக்கு 714 டாலர். அதே ஆண்டு ஜெம் கிரானைட்ஸ் என்ற தனியார் ஒரு கனமீட்டருக்கு 1,500 டாலர் என்ற விலையிலே ஏற்றுமதி செய்திருக்கிறார். 2 மடங்கு அதிகமாக. நாம் ஏற்றுமதி செய்தது கன மீட்டருக்கு 714 டாலர். தனியார் நிறுவனம் ஒரு கன மீட்டருக்கு 1,500 டாலர் என்ற விலையிலே ஏற்றுமதி செய்தது.
இதன் காரணமாக மாத்திரம் ஒரு சுரங்கத்திலே ஏற்பட்ட நஷ்டம் ஒரே ஆண்டில் 48 இலட்சம் ரூபாய். 1986 ஆம் ஆண்டு திருவக்கரையிலே உள்ள ஒரு சுரங்கப்பாறையில் ஒரு கன மீட்டருக்கு 1,281 டாலர் கொடுக்க ஜப்பானிய நிறுவனமான ஓரியண்ட் சாங்கியோ என்ற நிறுவனம் முன் வந்தது. ஆனால் நம்முடைய டாமின் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. அதற்கு மாறாக மிட்சுபிஷி கார்ப்பரேஷனுக்கு ஒரு கன மீட்டருக்கு 550 டாலர் வீதம் 1982 ஆம் ஆண்டு கொடுத்த அதே விலைக்கே ஏற்றுமதி செய்தது.
இன்னொருவன் 1,281 டாலருக்குக் கேட்கிறான், அவனுக்குக் கொடுக்காமல் 1982 ஆம் ஆண்டு விலையை வைத்து 1986 ஆம் ஆண்டில் 550 டாலருக்கு அந்த நிறுவனம் தருகிறது.
இதனால் ஒரு சுரங்கத்திலே மாத்திரம் ஏற்பட்ட இழப்பு ரூ. 41 இலட்சம். கவர்னருடைய ஆட்சியில் இதனுடைய பழைய மேனேஜிங் டைரக்டரை மாற்றிவிட்டு புதிதாக மேனேஜிங் டைரக்டர் நியமிக்கப்பட்டவுடன் - உங்களுக்குச் சொல்கிறேன் - 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கருப்புப் பாறைக்கு ஒரு கன மீட்டருக்கு 714 டாலர் என்ற நிலை மாற்றப்பட்டு டிசம்பர் மாதம் 2,050 டாலராக உயர்த்தப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 2,050 டாலர் கன மீட்டருக்கு விற்கப்படுகின்ற அந்தக் கல் முதல் மாதம் - நவம்பர் மாதம் ஒரு கன மீட்டர் 714 டாலர் என்றுதான் விற்கப்படுகிறது.
கவர்னர் ஆட்சியிலேகூட இந்த நடவடிக்கைகளை அவர் பொறுப்பு ஏற்று சில மாதங்களுக்கெல்லாம் தொடர்ந்து எடுத்திருப்பாரானால் இன்னும் அதிகத் தொகை அரசுக்குக் கிடைத்திருக்கக்கூடும். அவரும் நவம்பர் மாதத்திலேதான் - அந்த ஆட்சியிலே நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தால் ஒரு மாதம்தான் தப்ப முடிந்தது என்பதையும் நான் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த முறைகேடு காரணால் டாமின் இதுவரை பயன்படுத்திய 2,500 ஏக்கரில் 10 கோடி ரூபாய் 1983 ஆம் ஆண்டு முதல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
அது மாத்திரமல்ல, குளோபல் டெண்டர் - உலகத்திலே பல பகுதிகளிலேயிருந்து கோரப்படுகின்ற டெண்டருக்குப் பெயர் குளோபல் டெண்டர். இதற்கு மாறாக முதலில் கொடுக்கப்பட்ட தனிப்பட்ட ஒருவருக்கேதான் அடுத்த ஆண்டு டெண்டர் கோரப்படாமலேயே தொடர்ந்து தனியாரை விடக் குறைந்த விலையிலே தரப்பட்டு வந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு பொதுத் துறையே மோசம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. நான் எந்த அமைச்சர்கள் மீதும் - அவரும் சொன்னார்.
அப்போது நான் இந்தத் துறைக்கு அமைச்சராக இல்லை என்று கூடச் சொன்னார் - எனவே இந்தத் துறையை நிர்வகித்து வந்தவர்கள் அல்லது நிர்வகித்து வந்த அந்த எம்.டி.க்கு மேலேயிருந்து அவரை ஊக்கப்படுத்தியவர்கள், இவர்கள் எல்லாம் எந்த முறையிலே எவ்வளவு பெரிய ஊழலை இந்தத் துறையில் நடத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் இதை வைத்துக் கொண்டு பொதுத் துறையே
தேவையில்லை என்ற முடிவுக்கு இந்த அரசு வந்துவிடுகிறதா என்றால் இல்லை. பொதுத்துறையே மோசம் இல்லை. பொதுத் துறையிலும் மோசமானவர்கள் புகுந்து விடுவதுண்டு என்பது உண்மையே தவிர பொதுத் துறையே மோசமான ஒன்று அல்ல. கவர்னர் ஆட்சிக் காலத்தில் 3 ஐ. ஏ. எஸ். அதிகாரிகளைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு டாமினுக்கு போக மீதம் உள்ள நிலங்களை தொழிற்சாலை வைத்துள்ள தனியாருக்கு குத்தகை உரிமம் தரலாம் என்ற ஒரு முடிவு எடுத்தது.
அதைத்தான் இப்போது நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் உங்களுக்கு என்ன கொள்கை தேசியமயத்தில், பஸ் தேசியமயம் என்கிறீர்கள். இதைத் தனியாருக்குத் தருவதாகச் சொல்கிறீர்கள். என்ன கொள்கை? அதைப்போல சர்க்கரை ஆலை கூட்டுறவு என்கிறீர்களே, என்ன கொள்கை என்றெல்லாம் கேட்டார்கள். நாம் எந்த ஒரு கொள்கையிலும் முழுமையாக தேசியமயக் கொள்கை என்று இந்தியா முழுமையும் இன்றைக்கு யாரும் நிலைநாட்டிவிட முடியாது. மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் நாடுகளிலே கூட தனியார் துறைக்கு இடம் இருக்கிறது.
அறவே தனியார் துறை அழிக்கப்பட்டு விடவில்லை. இதிலே நாம் எண்ணிப் பார்க்க வேண்டியது என்னவென்றால் மொத்தம் இருப்பது 36,000 ஏக்கரா. கொஞ்ச நஞ்சமல்ல. இந்த 36,000 ஏக்கராவையும் டாமின் நிறுவனமே வெட்டியெடுப்பது என்றால் நம்முடைய பேரப் பிள்ளைகள் அல்ல, கொள்ளுப் பேரன், அந்தக் கொள்ளுப் பேரனுக்கும் கொள்ளுப் பேரன் காலத்திலே கூட அது முடிவடையாது.
அதையும் நாம் மறந்து விடக்கூடாது. இப்போது அரசிற்கு வரக்கூடிய வருமானத்தை இழந்துவிடலாமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். என்னதான் நாம் முயற்சியை எடுத்தாலும், நம்முடைய அரசுடைமையாக்கப்பட்ட ‘டாமின்’ நிறுவனத்தின் மூலம் 36,000 ஏக்கராவையும் வெட்டி எடுக்க முடியாது. 10 ஆண்டுக் காலத்திலே 2,500 ஏக்கராவைத்தான் வெட்டி எடுத்து இருக்கிறோம். 36,000 ஏக்கராவிலும் வெட்டி எடுக்க முடியாது. அது மாத்திரமல்ல.
இன்னொரு உண்மையை உங்களுக்குச் சொல்வேன். ஒரு கன மீட்டருக்கு - ஒரு தனியாருக்கு நாம் அதைக் கொடுத்தால் ஒரு கன மீட்டருக்கு
அவர்கள் அரசாங்கத்திற்கு, கருப்புக் கல்லுக்குத் தரக்கூடிய கட்டணம் 400 ரூபாய். தொடர்புடைய பஞ்சாயத்து யூனியனுக்கு ஒரு கன மீட்டருக்கு அவர்கள் தர வேண்டிய கட்டணம் 1,000 ரூபாய். சாம்பல் வண்ணப் பாறையாக இருந்தால் ஒரு கன மீட்டருக்கு அரசிற்கு அவர்கள் தரவேண்டிய கட்டணம் 200 ரூபாய். தொடர்புடைய பஞ்சாயத்து யூனியனுக்கு தரவேண்டிய கட்டணம் 500 ரூபாய். இதன் மூலம் அரசிற்குக் குறைந்தது 10 முதல் 15 கோடி ரூபாய் வரை அதிக வருவாய் வரும்.
தொடர்புடைய பஞ்சாயத்து யூனியன்களுக்கு மொத்தத்தில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் வரும்.
இதை இழக்கலாமா, தேசியமயக் கொள்கை என்கின்ற பெயரால் என்றுதான் நான் கேட்க விரும்புகிறேன். தேசிய மயக் கொள்கைக்கு விரோதமான கருத்து அல்ல இது. தேசிய மயக் கொள்கையை எது, எதிலே இன்றைக்கு நிறைவேற்ற முடியுமோ அவைகளில் நாம் நிறைவேற்றத் தயங்கமாட்டோம். அதே நேரத்தில் தேசியமயக் கொள்கையையும் கடைபிடித்து, படிப்படியாக அரசுடைமையாக்கப்பட்ட இடங்களில் அரசே இந்த விற்பனை நடத்தி ஏற்றுமதி செய்கின்ற ஒரு நிலை வளர்கிற வரையில் தற்காலிகமாக இதைத் தனியாருக்குத் தருவதன் மூலம் அரசிற்கு ஆண்டொன்றிற்கு சுமார் 15 கோடி ரூபாயும், பஞ்சாயத்து யூனியன்களுக்கு, தொடர்புடைய பஞ்சாயத்து யூனியன்களுக்கு எல்லாம் 30 கோடி ரூபாயும் கிடைக்கின்ற அந்த நிலையை இழந்துவிடலாமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் தீவிரமாக அரசு பரிசீலித்து வருகிறது என்று குறிப்பிட்டேனே அல்லாமல், திடீர் முடிவு ஏன் எடுக்கவில்லை என்று ‘திருநாவுக்கரசு அவர்கள்’ கேட்டார்கள்.
அன்றைக்கே அவர்கள் வேறு ஒரு விவகாரத்திலே பேசும்போது, இன்னும் முடிவு எடுக்கவில்லை இந்த அரசு, இது கவர்னர் ஆட்சி எடுத்த முடிவு என்று அன்றைக்கே அவர்கள், தான் சொன்னது தவறு என்று திருத்திக் கொண்டு பேசினார்கள். நான் இன்றைக்கும் சொல்கிறேன். இந்தத் தனியார்களுக்குத் தருகிற நேரத்தில் என்னென்ன நிபந்தனைகளோடு தரலாம், கேட்டவர்களுக்கெல்லாம் தந்துவிடலாமா என்றெல்லாம் பார்க்கவேண்டுமே. சில உறுப்பினர்கள் இங்கே பேசும்போது சொன்னார்கள்.
நம்முடைய சொக்கர் அவர்கள் என்று கருதுகிறேன். சொக்கருடைய பேச்சில் நான் சொக்கியே போனேன். காரணம், அவருடைய பேச்சிலே முக்கால் பகுதி பாராட்டுரையாகவே இருந்ததை நான் எண்ணிப் பார்க்கிறேன். சில அறிவுரைகளையும் தந்தார். ஆராய்ந்து பார்க்கக்கூடிய சில செய்திகளையும் சொன்னார், அவர் சொன்னார். இதில் ஏன் தொழில் நிலையம் இருக்கிறதா, இல்லையா என்றெல்லாம் எதற்காகத் தரம் பிரித்துப் பார்க்க வேண்டும், எல்லோருக்கும் கொடுத்து விடலாம் என்று சொன்னார்.
அப்படி எல்லோருக்கும் கொடுப்பதால்தான் பல தீய விளைவுகள் ஏற்படும். எனவேதான் இவைகளை ஒழுங்காக வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொறுப்பானவர்களுக்கு, அந்த வசதி படைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்புப் படைத்தவர்களுக்கு, அந்தத் தொழிற்சாலையை இயக்கக் கூடியவர்களுக்குத் தரக்கூடிய அந்த நிலைமைகளை எல்லாம் ஆராய வேண்டும் என்பதற்காகத்தான் உடனடியாக நாம் முடிவு எடுக்காமல் இதைப் பற்றி இன்றைக்கு ஆய்வு செய்து கொண்டு இருப்பதாக அரசின் சார்பிலே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இன்னொன்றையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.
இது அமைச்சர்களைப் பொறுத்த ஒன்றல்ல. அதனால் நம்முடைய முன்னாள் அமைச்சர்கள் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் சொல்ல வேண்டிய விஷயம் இது. நம்முடைய முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களையே, அவரிடத்திலிருந்த செயலாளர்கள் எந்த அளவுக்கு அவர் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்காக நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்.
திருச்சியில் முதுவத்தூர் என்ற இடத்தில் நாள்தோறும் 20 டன் சிமெண்ட் தயாரிக்கின்ற ஒரு சிறிய தொழிற்சாலையை சுமார் 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1967இல் அரசு அமைத்தது. இந்தத் தொழிற்சாலை 1974ஆம் ஆண்டில் மத்திய அரசின் சிமெண்ட் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, சிமெண்ட் ஆராய்ச்சி முறை நடத்த மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 1967-லே ஆரம்பிக்கப்பட்ட அந்த மினி
சிமெண்ட் தொழிற்சாலை, 20 டன் தயாரிக்கின்ற தொழிற்சாலை, மத்திய அரசினுடைய சிமெண்ட் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 1983ஆம் ஆண்டில் அந்த நிறுவனம், அந்தத் தொழிற்சாலையை தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது. அதை நடத்த இயலாத காரணத்தால், தனியாருக்கு அதை விற்று விடலாம் என்று முடிவு எடுத்து, 1986இல் அரசு ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது. அந்த ஒப்பந்தப் புள்ளிகள் 18-7-1986-க்குள் அரசிற்கு வந்து சேர வேண்டும் என்று அரசு அறிவித்தது.
நான்கு பேர் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பினார்கள். யார் அந்த நான்கு பேர்? அ. கோபலரான், சென்னை, ஒப்பந்தப் புள்ளி 11.70 இலட்சம். எம். எஸ். அப்துல் சலாம். சென்னை, ஒப்பந்தப் புள்ளி 37.51 லட்சம் ரூபாய்; கேதார்நாத் அகர்வால், அவுரா, ஒப்பந்தப்புள்ளி 44.44 லட்சம் ரூபாய்; என் பழனிச்சாமி, கோயமுத்தூர் ஒப்பந்தப்புள்ளி 45 லட்சம் ரூபாய். விலை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு குறைந்த பட்சம் ‘அப்செட் பிரைஸ்’ 43 லட்சம் ரூபாய்க்கு நிறுவனத்தை விற்கலாம் என்ற ஆலோசனையைக் கூறியிருந்தது.
ஒப்பந்தப் புள்ளியிலிருந்த 4 நபர்களில் பழனிச்சாமி என்பவர் தான் 45 லட்சம் ரூபாய் தர முன்வந்தார். அதை ஏற்கலாம் என்று அப்போதைய நிதிச் செயலாளர் கோப்பில் கருத்துத் தெரிவிக்கிறார். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு 29-8-1986-ல் தொழில் அமைச்சர் திரு. இராஜாராம் அவர்கள் கையெழுத்து இடுகிறார்; பிறகு அடுத்த மாதம் 28.9.1986-ல் முதல்வருக்காக என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் கையெழுத்து இடுகிறார்; அப்போது முதலமைச்சர் அவர்கள் இங்கே இல்லை.
அமெரிக்காவில் இருக்கிறார். இரண்டாவது முறையாக சிகிச்சைக்காகச் சென்றதாக நினைவு. பிறகு 2 நாளில், இந்தக் கையெழுத்து இடப்பட்ட - 2 நாளில் முதலமைச்சர் 30-9-86-ல் சென்னை திரும்பி விடுகிறார். திரும்பி வந்தவுடன் இந்தக் கோப்பை முதலமைச்சர் பார்க்க விரும்புகிறார் என்று அந்தத் துறையினுடைய செயலாளர் 6-10-1986-ல் எழுதுகிறார். உடனே முதலமைச்சர் அலுவலகத்திற்கு அந்த கோப்பு வருகிறது. செயலாளர் எழுதுகிறார்.
கோப்பு முதலமைச்சர் அலுவலகத்திற்கு வருகிறது. வந்தவுடன் அது முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டதா - இல்லை 4½ மாதம்
அலுவலகத்தில் இருக்கிறது. முதலமைச்சருக்குக் காட்டப்பட்டதா? இல்லையா தெரியாது. 4½ மாதம் இருக்கிறது. ஒப்பந்தப்புள்ளி ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிகமாக கேட்ட தொகை 45 லட்சம் ரூபாய்க்கு தரப்பட்டு அவருக்கு அந்த மினி தொழிற்சாலையைத் தந்து விடலாம் என்று முடிவான அந்த பைல், அந்தக் கோப்பு 4½ மாதங்களுக்கு மேலாக முதலமைச்சர் அறையிலே இருக்கிறது. அதை வரவைத்தது முதலமைச்சரின் செயலாளர் பரமசிவம் அவர்கள். ஒப்பந்தப்புள்ளியிலே அவர் எழுதுகிறார்.
ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு நீண்ட காலம் கடந்துவிட்டபடியால் - ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நீண்ட காலம் கடந்து விட்டதாம். கடந்ததா, கடக்க வைக்கப்பட்டதா? 4½ மாத காலம் வைத்து இருந்தது யார்? இவர்கள் வைத்து விட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நீண்ட காலம் கடந்து விட்டபடியால் இந்தக் கோப்பில் மறு ஒப்பந்தப் புள்ளி பெற்று நடவடிக்கை எடுக்கலாம் என்று செயலாளர் பரமசிவம் எழுதுகிறார். அப்போதும் முதலமைச்சருக்குத் தெரிந்து இருக்க நியாயம் உண்டோ இல்லையோ எனக்குத் தெரியாது.
24-2-87-ல் அந்த கோப்பை திரும்ப அந்தத் துறைக்கு அனுப்புகிறார். அதாவது முதலமைச்சர் அப்படி விரும்புவதாகத் தெரிவித்து செயலாளர் எழுதி அந்தத்துறைக்கு அந்தக் கோப்பினை அந்த பைலை அனுப்புகிறார். மீண்டும் அந்த சிமெண்ட் தொழிற்சாலையை அப்படியே போட்டுவைக்காமல் ஏற்கெனவே கொடுத்தபடி மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் திரும்பவும் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு 28-5-87 அன்று அந்தக் கோப்பு முதலமைச்சரின் ஆணையினைப் பெற அனுமதிக்கப்படுகிறது.
மே மாதம் 28ஆம் தேதி அனுப்புகிறது. அந்தக் கோப்பு முதலமைச்சரின் அலுவலகத்திலேயே டிசம்பர் மாதம் வரை, டிசம்பர் மாதம் முடிய இருந்து விட்டு அவருடைய மறைவுக்குப் பிறகு திரும்ப வருகிறது. அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சியில் அந்தக் கோப்பு பரிசீலனைக்கு வந்தபோது மைய ஆராய்ச்சி நிறுவனம் அந்த சிமெண்ட் தொழிற்சாலையை ஏற்று நடத்த இயலாது என்று கூறிவிட்ட காரணத்தால் மீண்டும் டெண்டர் விடப்படுகிறது.
அப்படி டெண்டர் விடும்போது 5 பேரிடமிருந்து
ஆபர் வருகிறது. அதிலே மிக அதிகமாகக் கிடைத்தது 34 லட்சம் ரூபாய் அதிக டெண்டர். முதலிலே கேட்டது 45 லட்சம் ரூபாய். அதற்கு தரப்படவில்லை. இப்போது அதிகமான டெண்டர் 34 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோனியர் இஞ்ஜினியரிங் சிண்டிகேட் நிறுவனம் 30-12-88-ல் 34 லட்சம் ரூபாய்க்கு அதை வாங்கிக் கொள்கிறது. 45 லட்சம் ரூபாய்க்கு கொடுக்க மறுத்து காலம் தாழ்த்தி கோப்புகள் பந்தாடப்பட்டு அதிலே ஆணையே பிறப்பிக்காமல் இருந்ததன் விளைவாக இந்தத் தொழிற்சாலையை விற்றதிலே 11 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
ஏன்? என்ன காரணம்? எந்தக் காரணமும் இல்லை. முதலில் 45 லட்சம் ரூபாய்க்குக் கேட்டவர் நம்முடைய பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த நண்பர் பொங்கலூர் பழனிச்சாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்தவர். இந்த ஒரே ஒரு காரணம்தான். இந்த ஒரு காரணத்திற்காக 11 லட்சம் ரூபாயை இந்த அரசு இழந்தது. அந்தக் காழ்ப்புணர்வோடு முதலமைச்சர் அவர்களுடைய செயலாளர் செயல்பட்டு இருக்கிறார். முதலமைச்சருக்கே தெரியாமல்; இதைத்தான் முன்பு, திருநாவுக்கரசு அவர்கள் கேட்டார்கள், வந்தவுடனே இப்படி அதிகாரிகளையெல்லாம் மாற்றி விட்டீர்களே என்று.
இப்படி முதலமைச்சரைக் காட்டிக் கொடுத்த அதிகாரியை நான் மாற்றாமல் இருக்க முடியுமா என்று இப்போது நான் நண்பர் திருநாவுக்கரசு அவர்களைக் கேட்க விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) போகட்டும், என்ன செய்யப் போகிறோம். நடந்தவைகளைச் சொல்லிவிட்டோம். என்ன நடக்கப்போகிறது என்பவைகளை அறிவிக்க வேண்டாமா அந்தக் கட்டத்திற்கு வருகிறேன்.
236 கோடி ரூபாய்க்கான தொழிற்சாலைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டு முடிவு அடையாமல் அல்லது அரைகுறை நிலையிலே இருக்கிற தொழிற்சாலைகளைப்பற்றிய விவரங்களை இங்கே எடுத்து வைக்க விரும்புகிறேன்.
‘டிட்கோ’ நிறுவனத்திற்குக் கிடைத்த உரிமங்களை அடிப்படையாக வைத்து கடந்த காலத்திலே பல்வேறு தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில்
சில தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துகிற முறையில் வேகமும் விறுவிறுப்பும் இல்லை என்று உணர்ந்து இந்த அரசு குறிப்பிட்ட காலத்தில் அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
முதலாவதாக, மத்திய அரசும் மாநில அரசும் முதல் முறையாக கூட்டு முயற்சியில், ஜெல்லி ஃபீல்ட் கேபிள்ஸ் தொழிற்சாலை - தொலைபேசிக் கம்பி மற்றும் வடம் மற்றும் தொலைபேசிக்கு வேண்டிய சில உபகரணங்களை உற்பத்தி செய்கின்ற ஒரு தொழிற்சாலையை 22 கோடி ரூபாய் மூலதனத்திலே வடஆற்காடு மாவட்டத்திலேயுள்ள அரக்கோணத்தில் நிறுவ உள்ளது. இவற்றுக்குத் தேவையான நிலத்தை மாநில அரசு இந்தத் தொழில் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
மொத்த மூலதனத்தில், மாநில அரசு 25 சதவீதத்தையும் மத்திய அரசு 26 சதவீதத்தையும் கொடுத்து புதிய தொழில் நிறுவனத்தை நிறுவுகிறது. இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விரைவாக இதை முடிப்பதற்கு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
(2) இத்தாலி நாட்டின் தொழில் நுணுக்கத்தைக்கொண்டு: பெட்ரோ-கெமிக்கல்ஸ் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலை.
‘டிட்கோ’ நிறுவனமும் யூ-பி பெட்ரோவும் சேர்ந்து கூட்டுத் துறையில் மணலியில் 71 கோடி ரூபாய் மூலதனத்தில் பெட்ரோ-கெமிக்கல்ஸ் தொழிற்சாலையை நிறுவி வேலைகள் நடந்து வருகின்றன.
(3) ‘டைனாவிஷன்’ என்ற நிறுவனம் கழகம் ஆட்சியில் இருக்கும்போது 1972-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது தொலைக்காட்சிப் பெட்டிகளை 1975-ல் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு இந்நிறுவனம் விரிவாக்கப்படாமலே இருந்தது. எந்தவிதமான நவீன முயற்சிகளையும் மேற்கொள்ளாமலே இருந்தது. ஆகவே தொலைக்காட்சிப் பெட்டிகள் உற்பத்தியில் சில நவீன சாதனங்களையும் முறைகளையும் கையாளும்படி ‘டிட்கோ’ நிறுவனம் அவர்களுக்கு ஆலோசனை கூறியது.
இந்த நிறுவனம் அமெரிக்காவிலேயுள்ள தொழில்
