உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 3

பகுதி 1 · 1 / 4

**உரை : 3**

**நாள் : 03.05.1989**

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் வளர்ச்சி குறித்த இன்றைய மானியத்தில் எதிர்க் கட்சிகளினுடைய தலைவர்களும், உறுப்பினர்களும், ஆளும் கட்சியினுடைய உறுப்பினர்களும் தங்களுடைய மேலான கருத்துக்களை இங்கே எடுத்து வைத்து இருக்கின்றார்கள். முடிவு எடுப்பது என்பது குறித்து நம்முடைய எதிர்க் கட்சியினுடைய துணைத் தலைவர் நண்பர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் கூறிய அந்த வாசகத்திற்கு மாத்திரம் ஒரு விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்.

முதலமைச்சர் விரைவில் முடிவு எடுப்பார் என்று குறிப்பிட்டார். கூடுமான வரையில் எடுத்த முடிவுகளை நான் மாற்றுவது இல்லை என்பது அவருக்குத் தெரியும். அண்மையிலே கூட இந்த மாமன்றத்தினுடைய பொன் விழாவையொட்டி பழைய உறுப்பினர்களுக்கு, முன்னாள் பேரவைத் தலைவர்களுக்கு, துணைத் தலைவர்களுக்கு எல்லாம் மரியாதை செய்வது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டபோது அவர்கள் ஒரு பதினான்கு ஆண்டுக் காலம், பதினைந்து ஆண்டுக் காலம் இந்த அவையிலே பணியாற்றியவர்களாக இருக்க வேண்டுமென்ற வரிசையிலே ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அது வெளியிடப்படுகிற நேரத்திலே என்னுடைய அருமை நண்பர் திருநாவுக்கரசு அவர்களும், மற்றொரு அருமை நண்பர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

அவர்களும், தங்களிடத்திலும் பேசி, என்னிடத்திலும் பேசி, செயலாளரிடத்திலும் பேசி நாங்கள் நான்கு முறை இருந்திருக்கிறோம்; எனவே எங்களையும் அந்தப் பட்டியலிலே இணைக்க வேண்டும் என்று சொன்ன போது அவர்கள் குறிப்பிட்டதைப் போல் நான் விரைந்து முடிவு எடுத்து உடனடியாக அந்தப் பட்டியலில் அவர்களுடைய பெயர்களும்

இணைக்கப்பட வேண்டுமென்று தங்களைக் கேட்டுக் கொண்டேன். தாங்களும் பெருந்தன்மையோடு அதனை ஏற்றுக் கொண்டீர்கள். அவர்களால் இன்னொரு பத்துப் பேருக்கு அந்தப் பட்டியலிலே பிறகு தொடர்ந்து இடம் கிடைத்தது. ஆனால் இன்றைக்கு நான் கேள்விப்படுகிறேன். அவர்கள் அந்த விழாவிலே கலந்து கொள்வது இல்லை என்று முடிவு எடுத்து விட்டதாக. ஆக அவர்கள் பெருந்தன்மைக்குத் தருகின்ற மதிப்பு இதுதான். எடுக்கிற முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டுமென்று எண்ணி இந்த முடிவுகள் எடுக்கப்படும்பொழுது, அந்த முடிவுகளை நிறைவேற்ற முடியாத அவலத்தையிலே அவர்கள் இருப்பது எனக்குப் புரிகிறது.

இருந்தாலும் கூட நீங்கள் எடுத்த முடிவு, முடிவுதான். அவர்கள் வந்து விழாவைச் சிறப்பிக்காவிட்டாலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா சொன்னாரே, அவருடைய தம்பிகள் என்ற முறையிலே எங்கு இருந்தாலும் வாழ்த்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) முடிவு பற்றி அவர் இங்கு முழங்கிய காரணத்தால் . . . . .

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** வாழ்த்துவதோடு அந்தப் பரிசுப் பொருள்களை வீட்டுக்கே அனுப்பி வையுங்கள்.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** அதைப் பெற்றுக் கொள்வார்களோ என்னமோ எனக்குத் தெரியாது. வர இயலாமல் இருந்தால் பரிசுப் பொருள்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்; வர முடியாது என்று சொன்னால் அனுப்பி வைப்பது சிரமம். ஏனென்றால் முன்பு இந்தியத் திருநாட்டினுடைய வெள்ளி விழா கொண்டாடப்பட்டபோது தாமிரப் பத்திரங்கள் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட பொழுது, பெருந்தலைவர் காமராசருக்கு, தந்தை பெரியாருக்கு, மூதறிஞர் ராஜாஜிக்கு எல்லாம் தாமிரப் பட்டயங்கள் வழங்கப்படும் என்று பத்திரிகைகளிலே விளம்பரம் வந்தபொழுது மூதறிஞர் ராஜாஜி எனக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

“அந்தத் தாமிரப் பத்திரங்கள் எனக்கும் உண்டு என்று பத்திரிகையில் படித்தேன். அதை, யாரையாவது அனுப்புகிறேன், கொடுத்து அனுப்புங்கள்” என்று எனக்கு எழுதி இருந்தார். தாமிரப் பத்திரங்களைக் கொடுப்பதற்கு விழா எதுவும் ஏற்பாடு செய்யப்படாமல் இருந்தபொழுதே அவருடைய பெரும் குணம், “ஒரு ஆளை அனுப்புகிறேன், கொடுத்து அனுப்புங்கள்”

என்று எழுதி இருந்தார். ஆனால் நான் அதை எடுத்துக்கொண்டு தந்தை பெரியாருடைய இல்லத்திற்கும், பெருந்தலைவர் காமராசர் இல்லத்திற்கும், அதைப் போலவே மூதறிஞர் ராஜாஜி இல்லத்திற்கும், நானே சென்று அந்தத் தாமிரப் பத்திரங்களை அவர்களுடைய கரங்களில் ஒப்படைத்து வந்தேன். எனவே எத்தனை மாறுபாடுகள், எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட இது போன்ற பொது நிகழ்ச்சிகளிலே அவர்களே ஒரு புதிய முறையை வகுத்துக் கொடுத்துவிட்டு அந்த முறையை ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு வேளை இப்படி மறுப்பதற்காகவே எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்களோ என்று எண்ணுகின்ற அளவுக்கு ஒரு நிலைமை ஏற்பட்டதற்காக நான் வருத்தப்படுகின்றேன்.

இதை நான் முன்கூட்டியே சொல்வதற்குக் காரணம் இன்று நான் இந்தத் தொழில் துறை மானியத்தில் பேசிய பிறகு அதிலே ஏதாவது நான் தவறாகப் பேசி இருந்து, அதை வைத்துக் கொண்டு முதலமைச்சர் இப்படிப் பேசிவிட்டார், அதற்காகப் புறக்கணிக்கிறோம் என்று சொல்லி விடக்கூடாதல்லவா, எனவேதான் முன்கூட்டியே அவர்களால் அறிவிக்கப்பட்ட செய்தியை இங்கே தெரிவிக்க வேண்டியது எனக்கு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. என்னுடைய உருக்கமும், உணர்வும் நம்முடைய நண்பர்கள் திருநாவுக்கரசுக்கும், கே.

கே. எஸ். எஸ். ஆருக்கும் நிச்சயமாகப் புரியும் என்று கருதுகின்றேன்.

தொழில் துறை மானியத்திலே எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்களுக்குச் சில விளக்கங்களை நான் இங்கே அளிக்க விரும்புகிறேன். நேரம் அதிகமாகி விட்டது என்ற போதிலும் கூட சில முக்கியமான கருத்துக்களை, சில அறிவிப்புகளைத் தொழில் துறை தொடர்பாக அறிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

பொதுவாக ஒரு இருபதாண்டுக் கால திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியில் தொழில் வளம் சுருங்கிவிட்டது, குறைந்து விட்டது என்ற ஒரு பிரச்சாரத்தைத் தேர்தல் நேரத்திலேயே மத்தியிலே இருந்து வந்த அமைச்சர்கள் தொடர்ந்து செய்து வந்தார்கள். அதற்கு நம்முடைய நண்பர் திருநாவுக்கரசு அவர்கள் அளித்த விளக்கங்கள், நான் அளிக்க இருக்கின்ற விளக்கங்கள் இவை இரண்டும் போதுமான பதில்களா, அல்லவா என்பது வேறு

விஷயம். இருந்தாலும் எதுவுமே நடைபெறாமல் இருந்து விடவில்லை. நடைபெற்றவைகளிலே சில குறைபாடுகள் இருந்திருக்கலாம்; சில தயக்கங்கள், தாமதங்கள் இருந்திருக்கலாம். எனவே, எதுவுமே நடைபெறவில்லை இருபதாண்டுக் காலத்தில், திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சிகளில் என்பது ஒரு தவறான குற்றச்சாட்டு என்பதை நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இதே மாமன்றத்திலேதான் 1957-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய குழுத் தலைவராக - எதிர்க்கட்சித் தலைவராகக் கூட அல்ல, எதிர்க்கட்சித் தலைவர் அப்பொழுது வி. கே. இராமசாமி முதலியார் - முன்னேற்றக் கழகத்தினுடைய குழுத் தலைவராக இருந்தபொழுது அன்றைக்கிருந்த முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரைப் பார்த்து சொன்னார்கள். நாங்கள், தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது; தென்னகம் புறக்கணிக்கப்படுகிறது என்று முழங்குகிற முழக்கத்தை நீங்கள் சாதகமாக எடுத்துக் கொண்டு, எங்களைக் காட்டியாவது, தமிழகத்தினுடைய தேவைகளைப் பெறுங்கள் என்று அன்றைக்கு அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பதினெட்டு ஆண்டுக் காலம் - 49-இலே தொடங்கி, பதினெட்டு ஆண்டுக் காலம் எதிர்க்கட்சியாக இருந்த அந்தக் காலக் கட்டத்திலேயெல்லாம் தமிழகத்திற்குத் தொழில் வளம் தேவை, வட மாநிலங்களிலே தொழில் வளம் பெருகுகிறது; இங்கே தொழில் வளம் இல்லை என்பதை எடுத்துக்காட்ட எத்தனையோ சான்றுகளை மேடைகளில், ஏடுகளில், கருத்தரங்குகளில் எடுத்துச் சொன்ன வரலாறு மறந்துவிடக் கூடிய ஒன்று அல்ல.

அன்றைக்கு நெய்வேலி நிலக்கரி என்றும், காவிரி வட்ட எண்ணெய் என்றும், சேது சமுத்திரத் திட்டம் என்றும், சேலம் இரும்பு என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்களுடைய தலைமையிலே குரலெழுப்பியபோது, அந்தக் குரல் கேலிக்குரியதாக ஆக்கப்பட்டதும் உண்டு. கட்டினால் தங்கம் என்கிறார்கள், தோண்டினால் இரும்பு என்கிறார்கள் என்றெல்லாம் கேலி பேசப்பட்டதுண்டு.

ஆனால், அன்றைக்கு அண்ணா தலைமையிலே, திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன அந்தக் கருத்துக்கள், நெய்வேலியிலே நிலக்கரி இரண்டாவது சுரங்கம் அமைக்கிற அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதையும், காவிரி வட்டத்திலே எண்ணெயாவது, இவர்களுக்கெல்லாம் ஏதோ கோளாறு என்று கேலி பேசப்பட்ட காலம் மாறி இன்றைக்கும் காவிரி வட்டத்திலிருந்து எண்ணெய் பெருக்கெடுத்து, அதனை எடுக்கின்ற சூழ்நிலை உருவாகியிருப்பதையும் காணும்பொழுது, தமிழகத்தினுடைய தொழில் வளர்ச்சிக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக வருவதற்கு முன்பிருந்தே குரல் கொடுத்த ஒரு இயக்கம், அந்தக் குரலை மதித்துத்தான் தீர வேண்டும் என்று அளவிற்கு அன்றைக்கு டெல்லி அரசு தமிழகத்திற்குத் தொழில்களைத் தர முன்வந்த அந்தக் கால கட்டத்தை யாரும் மறந்து விட இயலாது.

இங்கே நம்முடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நண்பர் வரதராசன் அவர்கள் பேசிய பொழுது சொன்னார்கள். மத்திய அரசினுடைய முதலீடுகள் இந்த மாநிலத்தைப் பொறுத்தவரையில் மிகக் குறைவாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, வேதனையையும் தெரிவித்து, தன்னுடைய கண்டனத்தையும் இங்கே எடுத்துக் காட்டினார்கள்.

நான் ஒரு புள்ளி விவரத்தைச் சொன்னால் வியப்பாகவும் இருக்கும்; வேதனையாகவும் இருக்கும்.

1969-70-ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசினுடைய தொழில் முதலீடு - நான் மாநில அரசினுடைய தொழில் முதலீட்டையெல்லாம் சொல்லவில்லை. 69-70-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலே மத்திய அரசினுடைய தொழிலுக்கான முதலீடு 98 கோடி ரூபாய். 86-87-இல் 6,761 கோடி ரூபாய். 69 மடங்கு அதிகம். மராட்டியத்தில் 69-70-ஆம் ஆண்டு மத்திய அரசினுடைய முதலீடு 120 கோடி ரூபாய். 1986-87-ல் 10,905 கோடி ரூபாய். அதாவது 91 மடங்கு அதிகம்.

குஜராத் மாநிலத்தில் 1969-70 ல் மத்திய அரசினுடைய முதலீடு 97 கோடி ரூபாய். 1986-86-ல் 3,179 கோடி ரூபாய். அதாவது 33 மடங்கு அதிகம். பஞ்சாபில் 1969-70-ல் மத்திய அரசினுடைய முதலீடு 34 கோடி ரூபாய். 1986-87-ல் 641 கோடி ரூபாய். 19 மடங்கு அதிகம்.

இராஜஸ்தானில் 1969-70-ல் 34 கோடி ரூபாய். 1986-87-ல் 780 கோடி ரூபாய். 23 மடங்கு அதிகம். உத்தரப் பிரதேசத்தில் 1969-70ல் 154 கோடி ரூபாய். 1986-87ல் உத்தரப் பிரதேசத்தில் 3,913 கோடி ரூபாய். அதாவது 25 மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் 1969-70ல் 311 கோடி ரூபாய் மத்திய அரசு முதலீடு. 1986-87-ல் 3,018 கோடி ரூபாய். சுமார் 10 மடங்குதான் அதிகம். ஆந்திராவில் 69 மடங்கு அதிகம். மகாராஷ்டிராவில் 91 மடங்கு அதிகம்.

குஜராத்தில் 33 மடங்கு அதிகம். பஞ்சாபில் 19 மடங்கு அதிகம். இராஜஸ்தானில் 23 மடங்கு அதிகம். உத்தரப் பிரதேசத்தில் 25 மடங்கு அதிகம். தமிழ் நாட்டில் மாத்திரம் 10 மடங்குதான் அதிகமாகி இருக்கிறது, 1969-லிருந்து 1987 வரையில். எனவே, இங்கே எடுத்துச் சொல்லப்பட்ட வாதங்கள் மத்திய அரசினுடைய முதலீடு நம்முடைய மாநிலத்தில் மிகக் குறைவாகத்தான் ஆண்டுதோறும் செய்யப்பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு மேலும் வலுவூட்டுகின்றன என்ற வகையில்தான் இந்தப் புள்ளி விவரங்கள் அமைந்திருக்கின்றன.

மாநில அரசைப் பொறுத்தவரையில் தொழில் வளர்ச்சியைப் பற்றிக்குறிப்பிட வேண்டுமென்றால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் சேலம் உருக்குத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அதனுடைய பணிகள் தொடங்கப்பட்டன. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அன்றைக்கு ஏடுகள் படித்த யாரும் மறந்திருக்கவும் இயலாது. முதலமைச்சராக நான் அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு பொறுப்பேற்றவுடன் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுவினுடைய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நேரத்தில் சேலம் திட்டத்தை வலியுறுத்திப் பேசியும் கூட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அது அன்றைக்கு இடம் பெறாத காரணத்தால் அன்றைக்குத் தமிழ் நாட்டு மக்கள் அத்தனை பேர்களுடைய சார்பாகவும், இந்த நான்காவது திட்டத்தின் வரவை நான் புறக்கணிக்கிறேன் என்று எடுத்துச் சொன்னேன்.

இவ்வளவு வேகமாகக் கருத்தைச் சொல்லி விட்டார்களே என்று அன்றைக்கு மத்தியிலே அமைச்சராக இருந்த திரு. சி. எஸ். அவர்கள் கூட என்னிடத்தில் வருத்தப்பட்டுக்கொண்டார். ஆனால் அப்படி நான் பேசிய அடுத்த வாரமே அன்னை இந்திரா காந்தி அவர்கள் சேலம் இரும்பாலைத் திட்டத்திற்கான அறிவிப்பைச் செய்து, என்னை டெல்லிக்கு உடனடியாக வரச்செய்து, அந்த அறிவிப்பை என்னுடைய கரங்களில்

ஒப்படைத்தார்கள். இப்படிப் போராடிப் பெற்ற உருக்காலைத் திட்டம் இன்றைக்கு உருக்காலைத் திட்டமாக இல்லை. வெறும் உருட்டாலைத் திட்டமாகி விட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதை மீண்டும் உருக்காலைத் திட்டமாக மாற்றியமைக்கிற வரையில் இந்த அரசு ஓயாது அதற்காகப் பாடுபடும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

அதைப் போலவே நெய்வேலியில் இரண்டாவது அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி கண்டன. அதைப்போலவே, மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டன. ஒரு குறிப்பைச் சொல்லவேண்டுமென்றால் 1967-ம் ஆண்டு கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது மின்சார உற்பத்தி 1,470 மெகா வாட்டாக இருந்தது. 1976-ம் ஆண்டு மின்சார உற்பத்தி 2,364 மெகாவாட்.

894 மெகாவாட் உற்பத்தி அப்போது பெருகியது. அடுத்து இப்போது 3,900 மெகாவாட்டாக மின் உற்பத்தி உயர்ந்திருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக்கொண்டாலும் கூட, அது போதுமானதாக இல்லை; இந்த உற்பத்தியில் ஏற்படுகிற இடையூறுகள், இன்னல்கள், அதனால் இன்றைக்கு இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிற தொல்லை, இவைகளையெல்லாம் நாம் மறந்து விட முடியாது.

நெய்வேலி முதல் திட்டம் காங்கிரஸ் ஆட்சியிலே எப்படி ஆரம்பிக்கப்பட்டதோ, அதைப்போலத்தான் கல்பாக்கம் மின் நிலையத் திட்டமும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இங்கே நடைபெற்றபோது, முன்பு ஆரம்பிக்கப்பட்டது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

அதுமாத்திரம் அல்லாமல், ஆசியாக் கண்டத்திலே மிகப் பெரிய உரத் தொழிற்சாலை, ஸ்பிக் உரத் தொழிற்சாலை கூட்டுத் துறையிலே நிறுவப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேதான். 1969-லேயிருந்து 1976 வரையில் 23 தொழிற்சாலைகளை பொதுத் துறையிலேயும், கூட்டுத் துறையிலேயும் இந்த அரசு ஏற்படுத்தியது. இதற்கு மொத்த முதலீடு சுமார்

300 கோடி ரூபாயாகும். 1967-க்கு முன்னாலே மாநில அரசு பொதுத் துறையிலே செய்த முதலீடு 14.54 கோடி ரூபாய், 68-லேயிருந்து 76 வரை, பொதுத்துறையிலே செய்த மொத்த முதலீடு 40.92 கோடி ரூபாய். அவை Asbestos pipe, Asbestos sheet, Ariyalur cement, Arakonam steel, Alankulam cement இரண்டாவது கட்டம், இவைகள் எல்லாம் அந்தத் தொகைக்குள்ளே அடங்கும்.

ஜாயின்ட் செக்டார், அதாவது கூட்டுத் துறை என்ற தத்துவத்தை இந்தியாவிலே முதன் முதலாகக் கொண்டு வந்து, தமிழ்நாட்டிலே கழக ஆட்சிக் காலத்திலேதான். அதன் காரணமாக இன்று அந்த ஜாயின்ட் செக்டார் கூட்டுத் துறையிலே சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. 26 சதவீதம் அரசும் 25 சதவீதம் தனியாரும், 49 சதவீதம் பொதுமக்களுடைய பங்கும் என்ற வகையிலே அமைவதுதான், ஜாயின்ட் செக்டார்-கூட்டுத்துறை என்பதாகும்.

சில தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கழக ஆட்சியிலே சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், சிட்கோ, Small Industries Development Corporation 1971-ல் நிறுவப்பட்டது. நடுத்தரத் தொழில்களை அமைக்கவும் மற்றும் பெரிய தொழில்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கவும், அதற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுத் தரவும் சிப்காட் State Industries Promotion Corporation of Tamil Nadu என்ற நிறுவனம் 1971-லே கழக ஆட்சியிலே நிறுவப்பட்டது.

67-க்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சியில் நிறுவப்பட்ட டிட்கோ Tamil Nadu Industries Development Corporation நிறுவனத்தோடு இணைந்து தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளை சிப்காட் தொடர்ந்து செய்து வருகிறது. டிட்கோவும், சிப்காட்டும் சேர்ந்து சுமார் 1400 கோடி ரூபாய் அளவிற்கான மூலதனத்திற்கு வழி செய்துள்ளன. டிட்கோ, பொதுத் துறையிலே இதுவரையில் ஆரம்பித்த தொழில்களினுடைய எண்ணிக்கை 10. இந்தப் பத்தில், 67-க்கு முன்பு இரண்டும், 69-லிருந்து 75 வரை ஐந்தும், பின்பு 13 ஆண்டுக் காலத்திலே மூன்றும் தொடங்கப்பட்டன.

இந்த மூன்றில் காட்டுப்பாடியில் நிறுவப்பட்ட வெடி மருந்துத் தொழிற்சாலை மட்டுமே இப்போது உற்பத்திச் செய்து கொண்டிருக்கிறது. வாலி

நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட மெக்னீசியம் மெட்டல் தொழிற்சாலையும், காட்டுப்பாடியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் தொழிற்சாலையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்ற குறிப்பையும் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இப்போதுள்ள கூட்டுத் துறைகளினுடைய தொழில்களினுடைய எண்ணிக்கை 43. இதிலே 23 தொழிற்சாலைகள் 69லேயிருந்து 76-ஆம் ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கின்றன. மீதம் உள்ள இருபதில் 10 தொழிற்சாலைகள் கடந்த ஆட்சியிலே தொடங்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளவை 10 தொழிற்சாலைகள். பொதுத்துறைக்கும், கூட்டுத் துறைக்கும் மொத்த முதலீடு 921 கோடி ரூபாயில், டிட்கோ முதலீடு மாத்திரம் 92 கோடி ரூபாயாகும்.

மீதம் உள்ள மற்ற தொகைகளை நிதி நிறுவனங்களும், பொதுமக்களும் தருகின்றார்கள். 92 கோடி ரூபாய் முதலீடு செய்தும் கூட, சரியான டிவிடெண்ட் லாபப் பங்கு கிடைக்காத காரணத்தால் இந்த முதலீட்டுக் கொள்கையை அரசு மறு பரிசீலனை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டதையும் உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.

ஏற்கெனவே சொன்னதைப் போல, டிட்கோவினுடைய முதலீடு 26 பர்செண்ட், தனியார் முதலீடு 25 பர்செண்ட், பொது மக்களுடைய பங்கு 49 பர்செண்ட். 26 சதவீதம் டிட்கோ, இதுவரை செய்த மொத்த முதலீடு 92 கோடி ரூபாய். பெரிய தொழிற்சாலை நிறுவவேண்டும் என்றால், அதிக முதலீடு மேலும் தேவைப்படுகிறது. அதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 25 கோடி யிலிருந்து, ரூ. 30 கோடி வரையிலும், தேவைப்படுகிற நிதியை ஒதுக்க வேண்டியிருக்கிறது. அந்த நிதியை டிட்கோவிற்கு அரசுதான் ஒதுக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் ரூ. 30 கோடி ஒதுக்கப்படக்கூடிய சூழ்நிலைக்கு மாறாக அரசு ரூ. 6 கோடி அளவிற்குத்தான் முதலீடு செய்யக்கூடிய அளவிற்கு நிதிநிலை இடம் அளிக்கிறது என்பதையும் நான் அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எனவே தான் இந்த நிலையில் கூட்டுத் துறையில் டிட்கோ 26 சதவீதம் முதலீடு செய்ய இயலாத

நிலை. இதே நிலை மற்ற மாநிலங்களில் ஏற்பட்டு, இந்த முதலீட்டு விழுக்காட்டில் மாற்றங்கள் செய்துள்ளன மற்ற மாநிலங்கள் அவைகளையும் கருத்திற் கொண்டு, இனிமேல் அப்படிப்பட்ட தொழில் முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் பங்கு 11 சதவீதம் என்று மாத்திரமே இருக்கும். சில தொழில் முயற்சிகளுக்கு பழையபடி ஜாயின்ட் செக்டார் - கூட்டுத்துறை முறை நீடிக்கும். 11 சதம் என்ற முறையில் அசோசியேட் செக்டரி அதாவது ஊக்கமூட்டும் துறை என்ற தலைப்பில் இந்த முறையானது நடைமுறைக்கு வரும்.

எனவே கூட்டுத் துறையில் நடைமுறையிலே உள்ள பல தொழில் திட்டங்களிலேகூட, அவசியமானால் 26 சதவீதம் என்ற முதலீட்டைக் குறைத்துக்கொண்டு, அசோசியேட் செக்டராக 11 சதவீத முதலீட்டிலே செயல்படலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுத்துறையிலே செய்யப்பட்டுள்ள முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வது டிஸ் - இன்வெஸ்ட்மென்ட். அதைத்தான் மாண்புமிகு உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள்.

அதற்கு நான் பிறகு வருகிறேன். இப்போது ‘டிஸ்-இன்வெஸ்ட்மென்ட்’ என்ற கொள்கை ஆராயப்பட்டு, சில தொழில் நிறுவனங்களுக்கு இதை நடைமுறையில் கொண்டுவருவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு முதலீட்டைத் திரும்பப் பெற கூட்டுத் துறையிலே ஏற்பட்ட ஒப்பந்தங்களிலே வழிவகை உண்டு. 26 சதவீதம் அரசு கூட்டுத் துறையில் முதலீடு செய்திருக்குமானால், அதைத் திரும்பப் பெற ஒப்பந்தத்திலே வழிவகை இருக்கிறது. அதைத் திரும்பப் பெற்று, இன்னொரு தொழிலுக்கு அதை முதலீடு செய்யவும், தனியார் அந்தத் துறையை ஏற்று நடத்தவும் முதலிலே ஒரு ஆரம்பப் பணிக்காக ஊக்கத் தொகையாக அரசு அதை அளிக்கிறது.

அதைத்தான் திருநாவுக்கரசு அவர்கள் கேட்டார்கள். அப்படி இருக்கும்போது அதை ஒத்துக்கொள்கின்ற நீங்கள் முன்பு காரைக்குடியில் இருந்த ஒரு தொழிற்சாலையில் இந்த அரசு விற்றதை எப்படி கண்டித்தீர்கள் என்று கேட்டார்கள். அந்த வேறுபாட்டைத்தான் நான் விளக்க விரும்புகிறேன். காரைக்குடியில் தமிழ்நாடு கெமிக்கல் ப்ராடக்ட்ஸ் என்ற ஒரு தொழில் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டது கூட்டுத் துறையில். அந்தத் தொழிலை