உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 3

பகுதி 4 · 4 / 4

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** பேரவைத் தலைவர் அவர்களே, என்றைக்கும் எனக்கு குறுகிய நோக்கம் இருந்ததில்லை என்பது திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பிரச்சினை என்னவென்றால், அங்கே தண்ணீர் வசதி இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இருந்தாலும் நானே நேரில் வந்து அந்த இடத்தைப் பார்த்து அந்த ஆலை அமைக்க முடியுமா என்று பார்க்கிறேன். எம்.எல்.ஏ. என்ற முறையில் அவர்கள் கூட வருவார்களோ, அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது.

(சிரிப்பு). பாவமாக இருக்கிறது எனக்கு. சர்க்கரை ஆலைகளைக் குறித்த இந்த ஆட்சியினுடைய கொள்கை. .... .... ....

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** இங்கு குறிப்பிட்டது, ரொம்பப் பேர் சாப்பிடாமல் இருக்கின்றார்கள் என்றுதான். (சிரிப்பு).

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்த சர்க்கரை ஆலைகளைக் குறித்த இந்த ஆட்சியினுடைய கொள்கை, பொதுத் துறையிலே, கூட்டுறவுத் துறையிலே அமைந்திடவேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய கொள்கையாக இருந்து வருகிறது. எனவே எல்லா உறுப்பினர்களும் இங்கே எடுத்துக் காட்டியிருப்பதைப் போல, கொள்கை விளக்கக் குறிப்பிலே எடுத்துச் சொல்லியிருப்பதைப் போல, வருங்காலத்தில் நிறுவப்படும் சர்க்கரை ஆலைகள் எல்லாம் கூட்டுறவுத் துறையிலேதான் அமையும் என்பதை இங்கே நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்க்கரை ஆலைகளுடைய மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது மாசுக்கட்டுப்பாடு. அதாவது, பொல்லூஷன் கண்ட்ரோல். அதைப் பற்றிக் கூட சொன்னார்கள். தோல் தொழிற்சாலை

பற்றிக்கூட சொன்னார்கள். அந்த மாசுகளையும் அதுபோல கழிவு நீரால் ஏற்படக் கூடிய உபாதைகளையும் அகற்ற வேண்டும் என்று பல லட்சம் ரூபாய்கள் செலவிலே அரசு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. வெகு விரைவிலே இந்த ஆண்டே கூட, அந்தத் திட்டங்கள் மிக முனைப்பாக செயல்படுத்தப்படும் என்பதையும் நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை இந்த அவைக்கு நான் சொல்லியாக வேண்டும். வட சென்னையில் அனல் மின் நிலையம் ஒன்று அமைக்கின்ற திட்டத்தை ஏற்கெனவே இந்த அரசு தொடங்கியது. அந்தத் திட்டத்தின்படி முதல் கட்டத்தில் 210 மெகாவாட் கொண்ட 3 அலகுகள், இரண்டாவது கட்டத்தில் 210 மெகாவாட் கொண்ட 2 அலகுகள், மூன்றாவது கட்டத்தில் 500 மெகாவாட் கொண்ட 2 அலகுகள், ஆகமொத்தம் 2,050 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கத் திட்டங்கள் இடப்பட்டுள்ளன.

முதல் கட்ட மின் நிலையத் திட்டத்திற்கு மைய மின் அதிகார மன்றம் மார்ச் 1984-லிலும், மைய திட்டக்குழு ஏப்ரல் 1987-லும் அனுமதி தந்துவிட்டன. இதற்கு 547 கோடி ரூபாய் செலவாகும் என்று 1984 ஆம் ஆண்டிலே கணக்கிடப்பட்டது. இப்போது திருத்திய மதிப்பீடு இவ்வளவு நாள் ஆன காரணத்தினாலே 721 கோடி ரூபாய் ஆகிறது. தாமதத்தால் ஏற்பட்ட திருத்திய மதிப்பீடு இது. 541 கோடி ரூபாய் என்பது 721 கோடி ரூபாயாக தாமதித்தால், திருத்திய மதிப்பீடாக ஆகியிருக்கிறது.

இத் திட்டத்தின் முதல் இரண்டு ஆலைகளுக்கு 150 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க, அதாவது இந்திய நாணயத்தின்படி 225 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி முன் வந்துள்ளது. அவர்கள் முன்வந்து விட்ட காரணத்தினாலே நாம் அந்தக் காலத்திலிருந்து இப்போதும் வட்டி செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் முன்வந்த காலத்திலிருந்து வட்டி செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை மாநில அரசுக்கு ஏற்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு செங்கை-அண்ணா மாவட்டத்தில் எண்ணூர், புழுதிவாக்கம் கிராமங்களில் 2171 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி 1986-ல் தொடங்கப்பட்டது. ஆனால் வி.ஜி. பன்னீர்தாஸ் நிறுவனத்திற்குச்

சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் நிலமும், கிருஸ்தவ நகர சங்கத்துக்குச் சொந்தமான 117 ஏக்கர் நிலமும் அங்கே இருக்கிறது. அவர்கள் வட்டாட்சியிலே அந்த நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலே வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கு தள்ளப் பட்டது. அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுக்காலமாக அந்த வழக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எந்த முடிவும் ஏற்படவில்லை. இப்போது இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர்களுடன் கலந்து பேசப்பட்டது.

அவர்கள் ஒரேயடியாக மறுத்துவிட்டார்கள். அங்கே ‘ஒண்டர் லேண்ட்’ ஏற்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுடைய அண்ணாவினுடைய கனவு, ஒண்டர் லேண்ட் ஏற்படுத்துவது. ஆகவே தரமுடியாது என்று சொன்னார்கள். நான் சொன்னேன். உங்களுடைய அண்ணன் கனவு ‘ஒண்டர் லேண்ட்’. எங்களுடைய அண்ணாவின் கனவு என்ன தெரியுமா? தமிழ்நாட்டிலுள்ள மக்களை வாழவைப்பது. அதற்கு மின்சாரம் தேவை என்று நான், ‘வலியுறுத்தி, வலியுறுத்தி, வலியுறுத்தி’ நம்முடைய குமரி அனந்தன், நமது இலக்கியச் செல்வர், அடிக்கடி சொல்வார்கள், மூன்று முறைகள் சொல்வார்கள்.

ஒவ்வொரு வலியுறுத்தி என்பதிலும் சில பொருள்கள் அடங்கியிருக்கிறது. அதை வெளியிலே சொல்ல விரும்பவில்லை. எனவே ‘வலியுறுத்தி, வலியுறுத்தி, வலியுறுத்திக்’ கேட்டுக்கொண்டதன் பேரில், கேட்டுக்கொண்டதன் பேரில், கேட்டுக்கொண்டதன் பேரில் (சிரிப்பு) இப்போது அவர்கள் உச்ச நீதி மன்றத்திலேயிருந்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார்கள். எனவே இந்த இடத்திலே ஜூன் முதல் வாரத்திலேயே இந்தத் திட்டப் பணிகள் தொடங்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு அறிவிப்புகளை உங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டக்கூடியவைகளை எடுத்துச் சொல்லி, இங்கு எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள் யாரையும் புண்படுத்துவதற்காகச் சொல்லப்பட்டவைகள் அல்ல, நடந்தவைகள் நடந்தவைகளாக இருந்தாலும் கூட, நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கவேண்டும் என்ற முறையில், தமிழ்நாடு தொழில் வளம் கொழிக்கின்ற பூமியாக இருக்கவேண்டுமென்ற

முறையில், எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை என்று கேட்டுக் கொண்டு, தொழிலாளர்களுடைய அரசாக இருக்கின்ற காரணத்தினால், இந்த அரசு தொழிலதிபர்களையும் அழைத்துப் பேசி தொழில் அமைதி ஏற்படுகின்ற வகையிலே எல்லா வகையான சலுகைகளை அவர்களுக்கு அளிக்கும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறேன். கவர்னர் அளித்த சலுகைகளும் சட்ட வடிவமாகும் என்பதை எடுத்துச் சொல்லி, தொழிலுக்கு எல்லா வகையிலும் ஊக்கமளித்திருக்கிறது, அந்த வகையிலே நீங்களும் ஊக்கமளிக்க வேண்டும், ஆக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, தந்துள்ள வெட்டுத் தீர்மானங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று பணிவன்போடு கூறுகிறேன்.

**திரு. எஸ். திருநாவுக்கரசு :** தலைவர் அவர்களே, நேரம் இப்போதே 3 மணியாகிறது. விரைவிலே முடித்துவிடுகிறேன். ஒரு சின்னப் பிரச்சினை. பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கிற தொழிற்சாலைகள் தமிழ் நாட்டிலே 80, 85 இருக்கின்றன. ஜூட் லாபி காரணமாக, டெல்லியிலே ஒரு ஆர்டர் போட்டு, எல்லாம் சணல் பைகளிலே போட வேண்டுமென்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். அதனால் 60 தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே 50,000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

சிறுசிறு தொழிற்சாலைகள் அவை. அறந்தாங்கியில் மட்டும் 10 தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதுதான் பிரச்சினை. மற்ற இடங்களிலும் இருக்கின்றன. அதிலே 60 தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கூட அந்த அசோசியேஷனைச் சேர்ந்தவர்கள் வந்து பார்த்து, பிரச்சினைகளைச் சொல்லி இருக்கிறார்கள். சிப்காட், டிக் நிறுவனங்களிடமிருந்து லோன் வாங்கியிருக்கிறார்கள். அவை மூடி இருக்கிற காரணத்தாலே, சிறுசிறு தொழிற்சாலைகள் நஷ்டத்திலே இருக்கின்றன.

தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். எனவே ஒரு கமிட்டி போட்டு, விசாரித்து அவர்களுக்கு எப்படிப் பரிகாரம் காணலாமென்று பார்க்கலாம்.

இரண்டாவது, இங்கேயுள்ள சிமெண்ட் பேக்டரி, சுகர் பேக்டரி எல்லாம் வேறு மாநிலங்களிலிருந்து வாங்காமல், தமிழ் நாட்டிலே இருக்கிற யூனிட்டுகளுக்கு பிரையாரிட்டி கொடுத்து

வாங்க வேண்டுமென்று ஆர்டர் போட்டால் அந்தச் சிறு தொழிலதிபர்கள் காப்பாற்றப்படுவார்கள். தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். இதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனிக்க வேண்டும். அதற்கு ஒரு கமிட்டி போட்டு விசாரிக்கலாம்.

அடுத்து, முதலமைச்சர் அவர்கள் சொன்ன செய்தி பத்திரிகையில் வந்தால், ஒரு சலுகையை நானும், திரு. கே. கே. எஸ். எஸ். ஆரும் கேட்டோமென்று தவறாகச் செய்தி வந்து விடக்கூடாது. அதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எம். எல். ஏ-க்களைப் பாராட்டுகிற விஷயத்திலே, 13 வருடங்கள் என்று முடிவெடுக்கிறபோது, 3 தடவை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலே போதும். அவர்களுக்கு அந்தப் பாராட்டு கிடைத்து விடுகிறது. அவர்கள் அதற்குத் தகுதி பெற்று விடுகிறார்கள்.

நாங்கள் 4 முறை வெற்றி பெற்று வந்தும், அந்த உரிமை, அந்த மூத்த உறுப்பினர்கள் பட்டியலில் வரவில்லையே என்பதற்காகக் கேட்டோம். வரவில்லை என்பது கட்சியினுடைய முடிவு. அப்படிக் கேட்டதற்குக் காரணம் உரிமை - சலுகையில்லை - உரிமை. 4 முறை வெற்றி பெற்ற காரணத்தால் அது உரிமை. அதை அறிவிக்க வேண்டுமென்று கேட்டோம். அவ்வளவுதான். முன்னாலே சொன்ன பிரச்சினையில், மாண்புமிகு முதலமைச்சரவர்கள் கமிட்டி போட்டு விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** முதலிலே எடுத்து வைத்த வேண்டுகோளுக்கு நன்றி. அது கவனிக்கப்படும். கடைசியாகச் சொன்னதற்கு என்னுடைய அனுதாபம்.

**திரு. ஆர். சிங்காரம் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இங்கே தெரிவித்ததுபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாகுடியில், நம்முடைய முன்னாள் அமைச்சர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் தொகுதியில் சர்க்கரை ஆலை வைப்பதற்கு நான் மனப்பூர்வமான இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த நாகுடியில் வைக்க முடியாவிட்டால், அருகில் உள்ள பேராவூரணி நிரம்ப

வசதிகள் படைத்தது. அங்கே வைப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளுமா என்று அறிய விரும்புகிறேன்.

**திரு. எஸ். திருநாவுக்கரசு :** தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்கள் இதைக் கனிவோடு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், நான் அமைச்சராக இல்லாமல் போன பிறகும் கூட, 7 முறை டெல்லிக்குப் போய், அப்போது ஜாயின்ட் டைரக்டராக இருந்த திரு. லட்சுமி ரதனை, முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தனிப்பட்ட முறையில் பார்த்து அவரிடம் சொல்லிச் சொல்லி, அதிகாரிகளைப் பார்த்து, அமைச்சர்களைப் பார்த்து அனுமதி வாங்கி வந்தேன்.

தயவு செய்து அங்கே ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

**திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு முதலவர் அவர்கள் பல திட்டங்களை இங்கே அறிவித்தார்கள். ஆனால் ஏற்கெனவே சாங்க்ஷன் செய்யப்பட்டு, மதுரை மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் போடவேண்டுமென்று இடமெல்லாம் பார்த்து, கடைசியில் என்ன கொடுமையோ தெரியவில்லை. சார், அதை இல்லை என்று முடித்துவிட்டார்கள், முந்தைய அரசினர்.

அதை துறையிலிருந்து அறியும்போது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. செம்பட்டி என்ற இடத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் பார்த்தார்கள். அதை ஆரம்பிப்போம் என்று சொன்னார்கள். தயவு செய்து நம்முடைய மாண்புமிகு முதலவர்கள் திண்டுக்கல் - அது என்ன மாவட்டம் (குறுக்கீடு) காயிதே மில்லத் திண்டுக்கல் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ...

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நேரம் அப்படி.

**திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள் :** அங்கே ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் ஆரம்பிக்க அரசு முயற்சி எடுக்குமா?

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** தலைவர் அவர்களே, பரிசளிப்பு விழாக்களில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம்

பரிசு என்று உண்டு. யாருக்காவது கொடுக்க முடியாவிட்டால் கொடுக்க வாய்ப்பு இல்லாவிட்டால், ஆறுதல் பரிசு என்று உண்டு. அம்மையார் அவர்களுக்கு ஆறுதல் பரிசு உண்டு.

**திரு. பெ. சீனிவாசன் :** தலைவர் அவர்களே : ஆலங்குளம் சிமெண்ட் பேக்டரி தூசியால் விவசாயம் கெடுகிறது. தொழிலிலும் நஷ்டம் ஏற்படுகிறது. அரியலூர் பேக்டரியை மார்டன் சேஷனுக்கு எடுத்துக்கொள்ளும்போது, ஆலங்குளம் சிமெண்ட் ஆலையும் அதோடு சேர்க்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** கவனிக்கப்படும்.

**திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கும் அளவுக்கு கடுமையான மின் பற்றாக்குறை இருக்கிறது. எனவே மின் பற்றாக்குறை நீங்க, ஏகாதிபத்திய - முதலாளித்துவ நாடுகளின் தவறான பிரச்சாரத்தைப் புறக்கணித்து, சோவியத் யூனியன் உதவியோடு இந்திய அரசு கூடங்குளத்திலே அமைக்க இருக்கிற அணுமின் நிலையத்திற்கு தமிழக அரசு உதவிகளைப் புரிந்து விரைவில் அது வர துணை புரியுமா என்று அறிய விரும்புகிறேன்.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மின்சாரத் தட்டுப்பாட்டை நாளைக்கே கூடங்குளம் போக்கும் என்று நண்பர் உறுதி அளித்தால் இன்றிரவே கூடங்குளம் மின்நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

**திரு. வி. கே. சின்னசாமி :** மாண்புமிகு தலைவர் அவர்களே, ஏற்கெனவே கூட்டுறவு நூற்பாலை ஒன்று பெரியார் மாவட்டம் பவானிசாகர் பகுதியில் துவக்கப்படுவதற்கு உத்தரவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டு, தொழில்துறை அமைச்சர் மாற்றப்பட்டதால் அதுவும் மாறியதாகச் சொல்லப்பட்டது. பெரியார் மாவட்டம் நிறைய பஞ்சு உற்பத்தியாகிற மாவட்டம். பெருவாரியான விவசாயிகள் - ஆயிரக் கணக்கில் - லட்சக் கணக்கில் உற்பத்தி செய்கிறார்கள்.

அங்கே உற்பத்தியாகும்

பஞ்சை திருப்பூரிலிருந்து வெளி மாநிலத்தினர்கள்கூட வாங்கிச் செல்கிறார்கள். அது புதுக்கோட்டைக்குப் போனதாகத் தகவல், எனவே எங்கள் பகுதியில் ஒரு கூட்டுறவு நூற்பாலை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, எங்கள் மாவட்டத்தின் இரண்டு சர்க்கரை ஆலைகளும் தனியார் துறையில் இயங்குகின்றன. பெரியார் மாவட்டத்தில் அதிகப்படியான கரும்பும் விளைகிறது. எனவே அங்கே கூட்டுறவுத் துறையில் ஒரு ஆலைக்கு அனுமதி வழங்குவதாக மாண்புமிகு முதலவர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அதற்கு நன்றி தெரிவித்து, கூட்டுறவுத் துறையில் ஒரு சர்க்கரை ஆலையும் ஒரு நூற்பாலையும் துவங்க வருங்காலத்திலாவது அரசு ஆவண செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அறந்தாங்கியை விட்டுக் கொடுத்தால் அது உங்கள் தொகுதியில் வைக்கப்படும்.