தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 2
பகுதி 3 · 3 / 4
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, தமிழகத்திலே ஏற்கனவே இருக்கின்ற உற்பத்தி, தமிழகத்திலே கொடுப்பதைப்போல - தமிழகத்திலே மட்டும் அவர்கள் சப்ளை செய்து கொண்டிருக்கவில்லை சேலினைப் பொறுத்தவரையில். இந்திய நாடு முழுவதும் அவர்கள் கொடுக்கிறார்கள். எனவே, இந்திய நாட்டிலே வட பகுதியில் அவர்களுடைய விரிவாக்கத்திற்கான அனுமதியை மத்திய அரசு வைத்தபொழுது, இந்திய நாட்டினுடைய வட பகுதியில் அவர்கள்
தொழிலைத் துவங்க விரும்புகிறார்கள்; அதனால்தான் அந்தத் தொழிற்சாலையை அங்கே துவக்கினார்கள் என்று சொன்னேன்.
**கலைஞர் மு. கருணாநிதி :** தலைவரவர்களே, நான் அமைச்சரிடத்தில் தெரிந்துகொள்ள விரும்புவது, அசோக் லேலண்ட் எக்ஸ்பென்ஷன் இங்கே செய்ய வேண்டுமென்று தமிழக அரசு நாடியது உண்டா இல்லையா?
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** தலைவரவர்களே, அசோக் லேலண்ட் எக்ஸ்பென்ஷன் செய்யவேண்டுமென்று கேட்டு, அதனுடைய அடிப்படையில்தான் ஓசூரில் இடம் கொடுக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் முதலீட்டிலே அங்கே எக்ஸ்பென்ஷனும் நடைபெற்றிருக்கிறது. இன்னும் ஏன் அதிகம் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு வியாபார ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக, அவர்களுக்கு இலாபம் வருகிறது என்ற அடிப்படையில் வடநாட்டிற்குப் போயிருக்கிறார்கள்.
வட மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறார்கள் என்று நான் சொன்னேன்.
**திரு. க. அன்பழகன் :** தலைவரவர்களே, அமைச்சரவர்கள் சொல்கிறபொழுது வியாபார ரீதியாக வேறு மாநிலங்களுக்குப் போனார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். வியாபார ரீதிக்கு உட்பட்ட ஒன்றுதான் இன்சென்டிவ்ஸ் பெறுவது என்பதை அமைச்சர் ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது இன்சென்டிவ்ஸ் பெறுவது வேறு, வியாபார ரீதி வேறு என்று கருதுகிறாரா?
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, வியாபார ரீதியாக என்பதை அமைச்சர் வலியுறுத்துகிறார் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரவர்கள் சொன்னார்கள். நான் வலியுறுத்தவில்லை, அசோக் லேலண்ட் நிறுவனத்தினுடைய எம்.டி.யே சொல்லியிருக்கிறார். பத்திரிகைகளிலேயேயும் பல நேரங்களில் வந்திருக்கிறது. அவரே, திருப்பித் திருப்பிச் சொல்லியிருக்கிறார்; நாங்கள் போனது இந்த அரசின்மீது குறை கூறியோ அல்லது அரசு ஒத்துழைக்காத காரணத்தாலோ நாங்கள் போகவில்லை...
**கலைஞர் மு. கருணாநிதி :** தலைவரவர்களே, அமைச்சரவர்கள் குறிப்பிட்ட ஹோசூர் என்பது அதனுடைய செகண்ட் ஸ்டேஜ் ::பர்ஸ்ட் ஸ்டேஜ் எக்ஸ்பென்ஷனுக்குத் தமிழக
அரசோடு அவர்கள் தொடர்பு கொண்டு சில சலுகைகளைக் கேட்டுக் கொண்டது உண்டா இல்லையா? அதைத் தமிழக அரசு மறுத்து விட்டதாக முதலமைச்சரவர்கள் இங்கே சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையா அல்லவா?
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் அதைத்தான் மீண்டும் சொல்கிறேன். ஏற்கனவே, அவர்கள் மட்டுமல்ல, அசோக் லேலண்ட் நிறுவனம் மட்டுமல்ல, பல தொழில் அதிபர்கள் தொழில்களைத் துவங்குவதற்காக நாடி வருகிறபொழுது, அல்லது இன்சென்டிவ்ஸ் என்ற பிரச்சினை வருகிறபொழுது மாநிலத் தொழிலமைச்சர்கள் மாநாட்டிலேயே நான் பேசினேன், இதைத்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்கள் கூட இதற்கு முன்னாலே பட்ஜெட்டிலே பேசும்பொழுது இங்கே சொன்னார்கள்.
சில மாநிலங்களில் அவர்களுடைய வசதி வாய்ப்புக்கேற்ப அவர்கள் சில உதவிகளை, சலுகைகளைச் செய்கிறார்கள். தமிழக அரசைப் பொறுத்தவரையில் நாங்கள் சில வரம்புகளை, சில சீலிங்ஸ் வைத்திருக்கிறோம். புதிதாக Interest free sales tax loan தான் இப்பொழுது மற்ற மாநிலங்களிலே கொடுக்கப்படுகிற இன்சென்டிவ்ஸைப் பொறுத்தவரையில் அதிகமாகத் தருகிற ஒரேயொரு பிரச்சினை. அதைப் பொறுத்தவரையில் 48 இலட்சம் ரூபாய் என்பதைப் புதிய நிறுவனம் துவக்குவதற்கு உச்சவரம்பாகவும், விரிவாக்கம் என்றால் 15 இலட்சம் ரூபாயாகவும் வைத்திருக்கிறோம்.
வேறு மாநிலங்களில் ஒரு கோடி, இரண்டு கோடி, மூன்று கோடி என்று வருவதாக சொல்கிறார்கள். தமிழக அரசைப் பொறுத்தவரையில் பரவலாகத் தொழில் வளர்ச்சி வர வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். எனவே, அந்த உச்ச அளவை ஓரளவிற்கு இருக்கின்ற அந்த அளவை அதிகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் அரசுக்கு இருக்கிறது. அதைப்பற்றி நான் பின்னாலே சொல்கிறபொழுது சொல்கிறேன்.
**கலைஞர் மு. கருணாநிதி :** நான் தங்களிடமிருந்து ஒரு சுருக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன். தாங்கள் பதிலை வளர்த்தி எனக்கு வர வேண்டிய விடையை மறைக்கிறீர்கள். நான் அமைச்சரிடத்தில் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் அவர்கள் கேட்ட ::பர்ஸ்ட் ஸ்டேஜ் எக்ஸ்பென்ஷனுக்கு, அந்தத் திட்டத்திற்கு அவர்கள் கோரிய சலுகைகளைத் தர நீங்கள்
ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவர்களால் எந்தவிதமான எக்ஸ்பென்ஷனும் செய்ய முடியவில்லை. இது சரியா அல்லவா?
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, அவர்கள் சில கோரிக்கைகளைக் கேட்டார்கள். ஆனால் அவர்கள் போனதற்கு அதுவல்ல காரணம். இங்கிருந்து போனதற்கு, அவர்களுடைய தொழிற்சாலைகளின் உடைய விரிவாக்கம் தமிழகத்திலே வருவதற்கு அவர்கள் கேட்ட இன்சென்டிவ்ஸ் இங்கே கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அவர்கள் கோபம் கொண்டோ அல்லது தமிழக அரசின்மீது வருத்தப்பட்டோ அவர்கள் வேறு மாநிலங்களுக்குப் போகவில்லை.
**திரு. கே. எஸ். ஜி. ஹாஜாஷெரீப் :** தலைவரவர்களே, ஒரு உச்ச வரம்பு வைக்கப்பட்டிருக்கிறது என்று மந்திரியவர்கள் சொன்னார்கள். நீங்கள் எவ்வளவு லோன் கொடுத்தாலும் கூட IDBI refinancing செய்து விடுகிறார்களே, எனவே, உங்களுக்கு அதில் என்ன கஷ்டம்? ஏன் இந்த உச்சவரம்பு வைக்கிறீர்கள்? இப்பொழுது அந்த அசோக் லேலண்ட் தொழிற்சாலை இங்கே வந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்குமே; குறைந்தது 100 கோடி ரூபாய்க்கு மேலே வருஷாவருஷம் உங்களுக்கு லாபம் அதிலே வந்திருக்குமே.
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** பேரவைத் தலைவர் அவர்களே, நான் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அவர்களுக்கும் இதே பதிலைதான் சொல்கிறேன். இன்சென்டிவ்ஸ் நாங்கள் தரவில்லை என்பதற்காக அவர்கள் போகவில்லை அல்லது அவர்கள் கேட்ட அளவிற்குக் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் போகவில்லை. கேட்டது எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம்; ஆனால் கொடுப்பது ஒரு வரம்புக்கு உட்பட்டுத்தான் கொடுக்க முடியும். அப்படிக் கேட்டதை கொடுக்காததனாலே போனார்களா என்பதுதான் பிரச்சினை, கேட்பதை, எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம்.
ஆனால் அப்படிக் கேட்டதை கொடுக்கவில்லையென்ற காரணத்தால், போனார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த விரிவாக்கத்தை வேறு மாநிலத்திலே செய்வது வியாபார ரீதியாக, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு இலாபமாக இருக்கிறது என்ற அந்த அடிப்படையிலேதான் வேறு மாநிலங்களுக்கு அவர்கள்
போயிருக்கிறார்கள். அதைத்தான் சென்ற ஆண்டும் சொன்னோம்; அதைத்தான் இந்த ஆண்டும் சொல்கிறோம். நான் இன்னொன்றைக் கூடச் சொல்லவேன். அதே அசோக் லேலண்ட் நிறுவனம், கூட்டுத் துறையிலே, வார்ப்படங்கள் தயாரிக்கிற இன்னொரு...
**திரு. துரைமுருகன் :** சென்ற ஆண்டு முதலமைச்சர் பதில் அளிக்கும்போது, அந்தச் சலுகை கொடுக்கமாட்டேன் என்று சொன்னதால்தான் அவர்கள் வேறு மாநிலத்திற்குப் போனார்கள் என்று சொன்னார்களே, இப்பொழுது அமைச்சர் சொல்வது அதற்கு முரணாக இருக்கிறதே...
**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** முதலமைச்சரே சொல்லியாயிற்று என்றுதானே மாண்புமிகு உறுப்பினர் துரைமுருகன் சொல்கிறார், அதற்குப் பிறகு திருப்பி, திருப்பி ஏன் எழுந்து கேட்கவேண்டும். அடுத்ததற்கு போகலாம்.
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** பேரவைத் தலைவர் அவர்களே, என்னை மன்னிக்க வேண்டும். அடுத்ததற்கு போவதற்கு முன்னாலே, அதனுடைய தொடர்ச்சியாக, அதே நேரத்திலே இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அப்படி அவர்கள் கோபம் கொண்டு இங்கிருந்து போயிருந்தால், நம்முடைய புதுக்கோட்டையிலே, டிட்கோ நிறுவனத்தோடு சேர்ந்து, ஜாயிண்ட் செக்டாரிலே வார்ப்படங்கள் தயாரிக்கிற இன்னொரு தொழிற்சாலையிலே...
**கலைஞர் மு. கருணாநிதி :** மன்னித்துக் கொள்ள வேண்டும், அடிக்கடி குறுக்கிடுவதற்காக. அவர்கள் கோபம் கொண்டு போனார்கள் என்று யாரும் சொல்லவில்லை. எந்த ஒரு தொழில் அதிபரும் ஏதோ ஒரு முயற்சியில் ஈடுபட்டு, அதற்காக, அந்த நாட்டின் மீதே கோபித்துக் கொண்டு, அல்லது அந்த மாநிலத்தின் மீதே கோபித்துக் கொண்டு, அங்கே இருக்கிற தொழில்களையெல்லாம் கடைத்தெடுத்துக் கொண்டு போய்விடமாட்டார்கள். வேறு தொழில்களிலே அவர்கள் தொடர்பு கொள்வார்கள்.
ஆனால் ஒரு பெரிய தொழிற்சாலை, ஒரு எக்ஸ்டென்ஷன், இங்கே ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் இழந்து விட்டோம். அதற்கு அவர்கள் கேட்ட சலுகையை இந்த அரசு
தரவில்லை என்பதுதான் காரணம். அதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு.
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** அந்தக் குற்றச்சாட்டுக்குத்தான் ஆதாரம் இல்லை. அடிப்படை இல்லை என்று சென்ற ஆண்டும் மறுத்தோம், இந்த ஆண்டும் மறுக்கிறோம். அப்படி அவர்கள் வேறு மாநிலத்திலே இன்சென்டிவ்ஸ் அதிகம் கிடைக்கிறது என்ற காரணத்தாலே வேறு மாநிலத்திற்கு அவர்கள் போவது உண்மையாக இருக்குமானால், டிட்கோ நிறுவனத்தோடு கூட்டுத் துறையிலே இருக்கிற அந்த நிறுவனத்தையும் வேறு மாநிலத்திலேயிருக்கிற அந்த அரசோடு தொடர்புகொண்டு, அந்த மாநிலத்திலே கொடுக்கிற அதிகமான இன்சென்டிவ்ஸ் பெற்றுக்கொண்டு அங்கே துவங்கலாம்.
ஆனால் இங்கேயே துவங்குகிறார்கள் என்பதிலிருந்து இந்த அரசு கொடுக்கிற அந்த இன்சென்டிவ்ஸ் பொறுத்தவரை அதிலே, அவர்களுக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால், சேசிஸ் பொறுத்தவரையிலும் அவர்களுடைய விரிவாக்கத்தை, வேறு பகுதியில் வைத்தார்களே அதற்குக் காரணம், நான் சொன்னது திருப்பித் திருப்பிச் சொல்வது, நான் சொல்வது அல்ல, அந்த நிறுவனத்தினுடைய இயக்குநர், எம்.டி.யே சொன்னது, அதன் தலைவரே சொன்னது, பொருளாதார ரீதியாக, வியாபார ரீதியாக, வட மாநிலத்தை, வேறுமாநிலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதுதான்.
அதைப் போல மத்திய அரசு ரூ. 400 கோடி அளவிலே ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய அந்த ரெயில் பெட்டித் தொழிற்சாலையைத் தமிழகத்திற்கு, எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக்கொள்ளுங்கள், என்று தந்து கொண்டிருந்தார்கள். நீங்கள் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னீர்கள், அவர்கள் திருப்பி திருப்பதிக்குப் போய் விட்டார்கள் என்று இதே குற்றச்சாட்டைச் சென்ற ஆண்டும் சொன்னார்கள்; ஆனால் கலைஞர் அவர்கள் கொஞ்சம் மெருகோடு இந்த ஆண்டும் அதையே சொன்னார்கள்.
நான் திருப்பியும் அதற்குச் சென்ற ஆண்டு சொன்ன பதிலைத் தான் இந்த ஆண்டும் சொல்கிறேன். இடம் கேட்கிறார்கள். மத்திய அரசு தொழில் துவங்க வேண்டுமென்றால்; இந்தத் தொழிற்சாலை வருகிறது, அதற்கு இத்தனை ஏக்கர் இடம் வேண்டுமென்று
சொல்கிறார்கள். எல்லா மாநிலங்களும் எழுதுகிறோம், வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறோம் இங்கே வாருங்கள், இங்கே வாருங்கள், இங்கே துவங்குங்கள்: விரிவாக்கமா, இங்கே வாருங்கள் என்று தேடுகிறோம். இடத்தைத் தேர்வு செய்து, இங்கிருந்து ஆயிரம் ஏக்கர் இடம் தருகிறோம், நீங்கள் என்ன வெல்லாம் கேட்கிறீர்களோ, அவ்வளவும் தருகிறோம் என்று எழுதுகிறோம். ஆனால் முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு; முடிவு செய்கிறார்கள், திருப்பதிக்கு, ஆந்திராவுக்கு.
அதற்கு என்ன காரணம்? கலைஞர் அவர்கள்தான் கேட்கவேண்டும். நான் அதைத்தான் இங்கே சொன்னேன். அது ஏன் போனது என்று நாம் கேட்கிறோம். திருப்பியும் கேட்டோம். இங்கே கேட்டார்கள், போனதற்குப் பின்னாலே எழுதுகிறீர்களே, வருத்தப்படுகிறீர்களே என்று கேட்டார்கள். போனதற்குப் பின்னாலேயும் எழுதினோம். அப்படி அறிவிப்பு வந்ததற்குப் பின்னாலே எழுதினோம். போனதற்குப் பின்னாலே என்றால் துவக்கி வைத்து இப்பொழுது தான். ஜனாதிபதி வந்து துவக்கி வைத்தார்கள்.
ஆனால் அந்த நிலமைக்கு முன்னாலே நாம் மீண்டும், மீண்டும் எழுதினோம். நீங்கள் ரீ-கன்சிடர் பண்ணுங்கள்...
**கலைஞர் மு. கருணாநிதி :** நீங்களும் முதலமைச்சர் அவர்களும் பலமுறை விளக்கியும்கூட அதிலே நாங்கள் இன்னும் உங்களுடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிற சூழ்நிலையில் இருக்கிறோம். ஒருவேளை அது எங்களுடைய தவறாகக்கூட இருக்கலாம். நீங்கள் சொல்வது சரியாக இருந்து நாங்கள் அதைத் தெரிந்துகொள்ளாமலேகூட இருக்கலாம். மத்திய சர்க்காருக்கு நீங்கள் கடிதம் எழுதி, அந்தத் தொழிற்சாலை இங்கே வரவேண்டுமென்பதற்காக வற்புறுத்திய தொடர்பானவைகள் எல்லாம் எங்களுக்குத் தெரியாத காரணத்தாலே கூட அப்படிச் சொல்லலாம்.
எனவே, அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு, என்ன, என்ன கடிதத் தொடர்பு கொண்டீர்கள்? என்ன என்ன பதில் வந்தது, என்பவைகளை ஒரு அறிக்கையாக, இந்த அவையிலே வைப்பீர்களானால் நாங்களேகூட தெரிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய கருத்தில் பிடிவாதமாக இருக்க விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு கருத்து - நாங்கள் அந்தக் கருத்திலிருந்து எங்களை விடுவித்துக் கொள்வதற்குக்கூட அது உதவிகரமாக இருக்கும்.
எந்த, எந்த
நேரத்திலே, எப்படி, எப்படி கடிதம் எழுதினீர்கள்? மத்திய சர்க்கார் என்ன பதில் எழுதியது என்ற தொகுப்பை நீங்கள் இந்த அவைக்குத் தருவீர்களானால் அது இரு சாராருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். அந்தப் பிரச்சினை அதோடு முடியும்.
**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** அவையின் முன் அனுமதியுடன் அவையின் நேரம் நீட்டிக்கப்படுகிறது.
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏதோ எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்பதைப் போல நான் சொல்லவில்லை. அவர்கள் அந்த அளவுக்குப் போய் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வது அவர்கள் ஒரு லைனிலே இருந்து சொல்லுகிறார்கள். அவர்கள் ஏன் சொல்லுகிறார்கள் என்பது அவர்களுக்கே கூட தெரியலாம். அவர்களுக்குக் கூட நிச்சயமாகத் தெரியும். நாம் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்களைக் கேட்டுக் கொள்வது, இப்படி நம்மை நாமே குற்றம் சொல்லுவதைவிட, அவர்கள் இப்படி நாம் ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கொடுத்தும், மத்திய அரசு தமிழகத்தைத் தேர்ந்தெடுக்காமல் வேறு மாநிலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களே அதை நான் கண்டிக்கிறேன்.
மத்திய அரசு இனிமேல் துவக்குகிற தொழில்களையாவது தமிழகத்திலே துவங்கவேண்டும் என்பதைப்போல அவர்களுடைய பேச்சு இருந்திருக்குமானால், அது தமிழகத்தினுடைய தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள், என்னுடைய எண்ணம்.
