உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 2

பகுதி 2 · 2 / 4

கொண்டாடினோம். ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட, தமிழ்நாடு முழுவதும் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டு, அத்தகைய திட்டங்கள் தமிழகத்திற்கு மேலும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளான நான், டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுவிலே, நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தினுடைய வரைவை மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் எல்லாம் வரவேற்று ஏற்றுக் கொண்ட நேரத்திலே சேலம் திட்டம் அதிலே இடம் பெறவில்லை என்ற காரணத்தால், அந்த 4-வது ஐந்தாண்டுத் திட்ட வரைவினை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று புறக்கணித்த அந்தச் செய்தி அப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளி வந்ததையும், அதற்குப் பிறகு, ஓரிரு மாதங்களுக்குள், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், சேலம் திட்டத்திற்கான ஒப்புதலை வழங்க, அந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை அந்தப் பகுதியிலே நடத்துவதற்காக அவர்கள் வந்தபோது தலைவர் அவர்களே, தாங்களும் நானும் அவர்களை வரவேற்று, அந்த விழாவை நடத்தியதும், தாங்கள் அப்போது சேலத்து மாங்கனி - முக்கனியை வெள்ளியால் செய்து - தங்கமுலாம் பூசிய அந்த முக்கனியை, இந்திய பிரதமர் அவர்களுக்கும், எனக்கும், மற்ற அமைச்சர் பெருமக்களுக்கும், வழங்கிய அந்த நிகழ்ச்சியை நானும் நீங்களும் மறந்துவிட முடியாது, இன்று ஆளும் கட்சியில் உள்ள சிலபேர் மறந்திருந்தாலும் கூட.

எனவே அந்த அளவுக்கு தமிழ்நாடு அரசு போராடி அந்த சேலம் திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே பெற்றோம். அதற்கு பிறகும் அதிலே பல சங்கடங்கள் இன்னல்கள் ஏற்பட்டன. அது இங்கே நடைமுறைக்கு வரக் கூடாது என்பதற்காக பல இன்னல்கள் ஏற்பட்டன. அவைகளையும் தவிர்த்து மத்திய அரசோடு வாதாடி, அந்தத் திட்டம் உருவாவதற்கான சூழ்நிலையை அன்றைக்கு நாம் மேற்கொண்டோம். இருந்தாலும்கூட இன்றைக்கு அந்தப் பெரிய திட்டம் பெரிய அளவிற்கு சுருக்கப்பட்டு, இங்கே அது ஒரு சேலம் ஸ்டீல் ரோலிங் கம்பெனி என்ற அளவிற்கு ஆக்கிவிட்டோமோ

என்று ஐயத்தக்க அளவிற்கு அது கவனிப்பாரற்ற நிலைமையிலே இருந்து வருகிறது என்பதை மெத்த வேதனையோடு, நான் இந்த மாமன்றத்தில் மத்திய அரசிற்கு, இந்த அரசின் சார்பாக எடுத்துக் காட்டுகிற அந்தப் பணியிலே என்னையும் இணைத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜனதா ஆட்சிக்காலத்திலே மத்திய அமைச்சராக இருந்த மாண்புமிகு திரு பிஜு பட்நாயக் அவர்கள் தொழில் அமைச்சர் பொறுப்பிலே இருந்த நேரத்திலே துர்க்காபூர் ஆலைக்கு பல முக்கியமான திட்டங்களை அனுமதித்து விட்டார்கள்.

அதுபோலவேதான் கர்நாடகத்தில் குதிரைமுக்கு என்ற இடத்திலும், ஆந்திராவில் விசாகையிலும், இரும்புத் தொழிற்சாலைகள் இன்றைக்கு ஏற்பட்டு அவை நடைமுறைக்கு வருகிற இந்தக் காலகட்டத்தில் நாம் அரும்பாடுபட்டு, பல நேரங்களில் போராடி எழுச்சி நாள் கொண்டாடி என்.டி.சி. கூட்டத்திலும் தமிழ்நாடு சார்பில் வலுவான வாதங்களை எடுத்து வைத்து நான்காவது ஐந்தாண்டு திட்டத்தைக் கூட நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி அவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த சேலம் இரும்புத் தொழிற்சாலைத் திட்டம் இன்றைக்கு வெறும் ஒரு ஸ்டீல் ரோலிங் கம்பெனி என்ற அளவிற்கு ஆக்கிவிடுமோ என்று அச்சப்படத்தக்க அளவிற்கு கூனிக் குறுகிப் போய்க் கொண்டிருக்கிறது.

இன்றைக்குள்ள ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் அத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கிறதோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே ஆட்சியாளர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாம் கோரிய அந்த இரும்புத் தொழிற்சாலைத் திட்டம் உருவாவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

13,000 தொழிலாளர்களைக் கொண்ட பி.அண்ட்.சி. மில் இன்று மூடப்பட்டிருக்கிறது. இது தொழில்துறை மானியம் என்றாலும் கூட தொழிலும் தொழிலாளர்களும் இணைந்தே இருக்கிறார்கள். தொழிலாளர்கள் இல்லாமல் தொழில் இல்லை. தொழில்களை நம்பி தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். எனவே, இந்தியாவிலேயே மிகப் பெரிய ஏன் ஆசியாவிலேயே மிகப்

பெரிய, முதல் முதல் ஒரு பெரிய, மகத்தான யூனியனைப் பெற்றதொரு நிறுவனம் பி.அண்ட்.சி. மில் நிறுவனம். தமிழகத்தினுடைய மிகப் பெரிய தியாகிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து அந்த பி.அண்ட்.சி. மில் தொழிலாளர்களுடைய இயக்கத்தில் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். இன்னமும் அந்த ஆலை திறக்கப்படாத ஒரு நிலைமை. இதில் இந்த அரசு எடுத்துக்கொண்டுள்ள அக்கறை என்ன, ஆர்வம் என்ன என்று பார்க்கிற நேரத்தில் இந்த அரசு சார்பில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள், எல்லாக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் அவர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்ட ஆர்வம்.

அங்குள்ள மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பலமுறை பேசி அவர்கள் எடுத்த அந்த நடவடிக்கைகளுக்கு இந்த அரசு எந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டது? எந்த அமைச்சர்கள் டெல்லியில் யார் யாரை எவ்வளவு முறை சந்தித்தார்கள்? பி.அண்ட்.சி. ஆலை திறக்கப்படவேண்டும், 13,000 தொழிலாளர்கள் வேதனை தீர்க்கப்படவேண்டும் என்பதற்கு இந்த அரசு எடுத்துக்கொண்ட அக்கறை என்ன என்பதை எல்லாம் யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், எனவே 13,000 தொழிலாளர்கள் சார்பாக உரிய நேரத்தில் உற்ற குரலை இந்த அரசு கொடுத்திடவில்லை என்பதற்காக என்னுடைய குற்றச்சாட்டை இந்த அரசின் மீது சுமத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

பெரிய தொழில் திட்டங்கள் எதுவும் நிதி நிலை அறிக்கையிலும் சரி அல்லது நம்முடைய தொழில் அமைச்சர் அவர்கள் தந்துள்ள இந்தக் கொள்கை குறிப்புகளிலும் சரி இல்லை என்பதை நான் வருத்தத்தோடு இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக வரவு-செலவுத் திட்டத்தில், நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற பல்வேறு தொழில் துறை திட்டங்கள், வேலைவாய்ப்புக்கான திட்டங்கள், ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று பல தொழில்களைத் தொடங்கப் போகிறோம் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கிற திட்டங்கள் “பாலோஅப் ஆக்ஷன்” என்று சொல்லுவார்களே அந்த தொடர் நடவடிக்கைகளின் பேரில் நிறைவேற்றப்படுகின்றனவா என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு கிடைக்கிறது.

கடந்த 1977-ம் ஆண்டு முதல் நிதி நிலை அறிக்கையிலும் சரி அல்லது தொழிலமைச்சரின் அறிக்கையிலும் சரி எவ்வளவோ தொழில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவைகள் எதுவும் நிறைவேற்றப்படுகிற அளவிற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பெரிய தொழில் திட்டம் என்ற பெயரால் நம்முடைய நிதி அமைச்சர் நாவலர் அவர்கள் இங்கே படித்த அறிக்கையில் வடஆற்காடு மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட இருக்கிறது என்பதாகும். ஆனால் அந்த வெடி மருந்து தொழிற்சாலை எப்போது ஆரம்பிக்கப்படும் என்றால் அமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிற கொள்கைக் குறிப்பேட்டை எடுத்துப் பார்த்தால் 83-84ம் ஆண்டுதான் அது அங்கே தொடங்கப்படும். அதற்கிடையில் அதற்கான ஆய்வுவேலைகள் நடைபெறும் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

1983-84ல் தொடங்கப்பட இருக்கிற வெடிமருந்து தொழிற்சாலைக்கு, வட ஆற்காடு காட்டுப்பாடி அருகில் தொடங்கப்பட இருக்கிற வெடி மருந்து தொழிற்சாலைக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட் உரையில் அதைப்பற்றி கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர் அவர்கள் 200 கோடி ரூபாய் அளவிலே நிறைவேற இருக்கிற நியூஸ் பிரிண்ட் உற்பத்தி தொழிற்சாலை பற்றிய குறிப்பு எதையும் வெளியிடவில்லை.

200 கோடி ரூபாய் அளவிலே, கிட்டத்தட்ட, நிறைவேற இருக்கின்ற நியூஸ் பிரிண்ட் உற்பத்தி செய்கின்ற ஒரு தொழிற்சாலை பற்றிய எந்தக் குறிப்பையும் நிதி நிலை அறிக்கையிலே தராது விடப்படையக்கூடிய ஒன்றாகும். எதிர்க்கட்சித் துணை தலைவர் பேராசிரியர் அவர்கள் கூட நிதிநிலை அறிக்கையின் மீது பேசுகிறபோது குறிப்பிட்டார்கள் - இவ்வளவு பெரிய திட்டத்தை நிதியமைச்சர் அவர்கள் பட்ஜெட் உரையிலே அறிவிக்காமல் மறைத்து விட்ட மர்மம்தான் என்ன என்று கேட்டார்கள்.

இங்கேகூட அந்தத் திட்டத்தைப் பற்றிப் பல நண்பர்களும் வரவேற்றுப் பேசியிருக்கிறார்கள். இருபதுகோடி ரூபாய் திட்டத்தை இவ்வளவு அவசரமாக அறிவித்து விட்டு,

ஆனால் அது 1983-84ம் ஆண்டிலேதான் தொடங்கப்படும் என்ற நிலையில் இப்போது முன் கூட்டியே அறிவிப்பதிலே இந்த ஆர்வம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் அளவிலே உள்ள இந்த நியூஸ் பிரிண்ட் தொழிற்சாலை பற்றிய அறிவிப்பை நிதியமைச்சர் செய்யாததற்கு என்ன காரணம்? அதைப் பற்றிப் பெரிய விளம்பரங்கள் கூட வராததற்கு என்ன காரணம் என்பதெல்லாம் புரியாத புதிராக இருக்கிறது.

நான் இந்தத் திட்டத்தைப் பற்றிக் கூட நிதிநிலை அறிக்கையிலே தேடிப்பார்த்துக் கிடைக்காமல் உங்களால் தரப்பட்ட பெரிய புத்தகங்களிலே தேடிப்பார்த்த போது அதிலேதான் இதற்கு 27½ கோடி ரூபாய் ஒதுக்கி, இந்தக் காகித தொழிற்சாலை நியூஸ்பிரிண்ட் தொழிற்சாலை, வெறும் காகித தொழிற்சாலை அல்ல, நியூஸ்பிரிண்ட் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவிருக்கிறது. எனவேதான் நியூஸ்பிரிண்ட் காகித தொழிற்சாலைக்கு 1979ம் ஆண்டு அன்றைக்கு செலவாகும் என்று அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகை 153 கோடி ரூபாய் - 153 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1980ல் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்டு பேப்பர்ஸ் லிமிடெட் சேர்மன் அளித்துள்ள ஒரு அறிக்கையில், அந்த அறிக்கைப் புத்தகத்தில் 160 கோடி ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். அந்த வேறுபாடுகளை வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டும். 1979லே 153 கோடி என்று அறிவிப்பு. 1980ல் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்டு பேப்பர்ஸ் லிமிடெட், சேர்மன் 160 கோடி ரூபாய் அளவிற்கு வருகிறது என்று அறிவித்து, இதோ என் கையிலிருக்கிற 6வது ஐந்தாண்டுத் திட்டம் என்று இந்த அரசால் தரப்பட்ட இந்தப் புத்தகத்தில் மாநில திட்டக்குழு அளித்துள்ள இந்தப் புத்தகத்தில் 180 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு இந்தப் புத்தகம் வெளிவந்து சில மாதங்களுக்குள்ளாக இந்த மானியக் கோரிக்கையிலே அமைச்சர் அறிக்கையிலே 105ம் பக்கத்திலே 180 கோடி என்று அறிவித்து இன்றைக்கு இதிலே ஒரு திருத்தம் போடப்பட்டு அமைச்சர் முன்னுரையிலே 190 கோடி ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்.

1979லே 153 கோடி, 1980ல் சேர்மன் அறிக்கையிலே 160 கோடி, இங்கே தரப்பட்டிருக்கிற மாநில திட்டக் குழுவின்

6வது திட்ட அறிக்கையிலே 180 கோடி, தொழில் துறை அளித்துள்ள குறிப்பில் 190 கோடி என்று அறிவித்திருக்கிறார்கள். ஆக, ஓராண்டுக்குள் அல்லது, ஒரு சில மாதங்களுக்குள் சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு வித்தியாசம் ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்திற்கு நான் கொண்டு வர விரும்புகிறேன்.

சேர்மன் ரிப்போர்டில், நியூஸ்பிரிண்ட் தொழிற்சாலை இருக்கிறதே அதன் சேர்மன் அளித்துள்ள இந்த ரிப்போர்டில் சொல்கிறார், மாநில அரசு 22 கோடி ரூபாய்தான் தரும். 22 கோடிக்கு மேல் தராது; 22 கோடி ரூபாய் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறதென்று சொல்கிறார்கள். சேர்மனே 22 கோடிதான் எதிர்பார்க்கிறார். ஆனால் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை 27½ கோடி.

இந்தக் காகித ஆலைத் திட்டம் 50,000 டன் நியூஸ் பிரிண்ட் 40,000 டன் எழுதுகிற தாள், மற்ற தாள்கள் இவைகளை உற்பத்தி செய்யும் என்று அமைச்சர்களுடைய அறிக்கையிலே தெளிவாகத் தரப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தொழிற்சாலை சேர்மனாக நியமிக்கப்பட்டிருக்கின்றவருடைய அறிக்கை என்ன சொல்கிறது? டைரக்டர்ஸ் ரிப்போர்ட்டிலே அவர் சொல்கிறார், 83,000 டன் நியூஸ்பிரிண்ட், 17,000 டன் எழுதும் தாள், மற்ற தாள்கள் என்று, கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா லெட்டர் ஆப் இன்டென்ட் கொடுத்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

The Government of India, Ministry of Industry issued a letter of intent No.L.I/183 (79), dated July 3, 1979 to the Company for manufacture of 83,000 tons of newsprint and 17,000 tons of writing and printing paper out of bagasse. The Company is taking steps to obtain extension of the validity of the letter of intent என்று இதிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 83 ஆயிரம் டன் நியூஸ்பிரிண்ட் உற்பத்தி செய்வதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது 50 ஆயிரம் டன் நியூஸ்பிரிண்ட் உற்பத்தியாகும் என்று அறிக்கைகளிலே தரப்பட்டிருக்கின்றது.

எனக்குள்ள சந்தேகம் எல்லாம் இந்த தொழிற்சாலை, இந்த நியூஸ் பிரிண்டை தயாரிக்க முடியுமா? நியூஸ்பிரிண்ட் தயாரிக்க முடியுமென்று ஒரு முக்கியமான பணியை முன் வைத்துதான் மத்திய அரசு கூட இதற்கான லெட்டர் ஆப் இன்டென்ட் தந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு

மேலான விவரங்கள் மத்திய அரசுக்கே கூட தெரிவிக்கப்பட்டவில்லை என்று நான் கருதுகிறேன். ஆனால் இந்தத் தொழிற்சாலை நியூஸ் பிரிண்ட் தயாரிக்கக்கூடிய அளவிற்கு தன்னுடைய வழிமுறைகளை வகுத்துக் கொண்டு பணியினை முடுக்கி விட்டிருக்கிறதா என்றால் இல்லை. இந்தத் தொழிற்சாலைக்கு சேர்மனாக யாரை நியமித்து இருக்கிறார்கள்? இந்தக் கேள்வியைச் சொல்வதற்கு முன்பு ஒரு பழைய விஷயத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

1975-76-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றபொழுது, நம்முடைய இன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு அரங்கநாயகம் அவர்கள், இந்த வரிசையிலே எதிர்க்கட்சி வரிசையிலே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக அமர்ந்து ஒரு பிரச்சினையை எழுப்பினார்.

“தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்பிக் தொழிற்சாலையைத்தான் சொல்ல வேண்டும். அங்கே 84 கோடி ரூபாய் அளவில் தொழிற்சாலையை ஆரம்பிக்கின்றார்கள். அடுத்து கடலூரில் 120 கோடி அளவில் ஆரம்பிக்க உரிமம் வழங்கி இருக்கிறார்கள். கடலூரில் ஆரம்பிக்கவில்லை; உங்களுக்குத் தெரியும், என்றாலும் அவர்கள் சொன்னதைச் சொல்கிறேன். “ஏறத்தாழ 220 கோடி அளவில் ஒரு மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை ஒரு தனி மனிதர் நடத்தக்கூடிய நிலையில் இன்றையதினம் இந்த அரசு செய்திருக்கிறது.

அவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் அவைகளை ஆரம்பிக்கத் தயாராக வந்தார்கள்? அதிலே குறிப்பாக திரு. சிதம்பரம் செட்டியார் என்னும் நபர் எந்த அடிப்படையில் தலைசிறந்து நிற்கிறார்? என்ற விளக்கத்தை தொழில் அமைச்சர் சொல்லவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று திரு.

அரங்கநாயகம், இன்றைய கல்வி அமைச்சர் அவர்கள், அன்றைக்கு எதிர்க்கட்சியிலேயிருந்து கேட்ட பொழுது, அன்றைய தொழில் அமைச்சர் மாதவன் அவர்கள் அளித்த பதில், “அண்ணா அவர்களுடைய கொள்கை தொழில் துறையில் பின்பற்றப்பட வேண்டுமென்று சொன்னார்கள். ‘ஸ்பிக்’ எப்படி உருவானது என்று கேட்டார்கள். அண்ணா அவர்கள் இருந்தபொழுது சவுத் இந்தியா கார்ப்பரேஷன் என்ற தனி நிறுவனம் அண்ணா அவர்களை சந்தித்து கூட்டுத்துறையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று ஒரு மனு

கொடுத்தார்கள். அண்ணா அவர்கள் 6.12.1968-ல் அவர்களோடு சேர்ந்து கூட்டு முறையிலே ஆரம்பிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டார்கள் என்று அன்றைய தொழில் அமைச்சர் மாதவன் அவர்கள் இன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம் அவர்களுக்கு, அன்றைக்கு 1975-76 ஆம் ஆண்டில் மானிய கோரிக்கை மீது பதில் அளித்து இருக்கின்றார்.

இது ஒரு ஜாயிண்ட் செக்டார், ஜாயிண்ட் செக்டார் என்பது 51 சதவீதம் அரசாங்கத்தினுடைய முதலீடும், மிச்சம் உள்ளது தனியார்களுடைய முதலீடுகளும் ஷேர்களும் என்ற அளவிற்கு உள்ளது ஜாயிண்ட் செக்டார், கூட்டுத் துறை என்பது ஆகும். ஆனால் இது கூட்டுத் துறை அல்ல. நீங்கள் இன்றைக்கு தொடங்குகின்ற இந்த காகிதத் தொழிற்சாலை; நியூஸ்பிரிண்ட் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலை கூட்டுத்துறை அல்ல; நீங்களே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

இந்த அரசு தொழிற்சாலைக்கு நீங்கள் யாரை சேர்மேன்னாக, தலைவராக நியமித்திருக்கிறீர்கள் என்பதுதான் உள்ளபடியே ஆழ்ந்து நோக்கத்தக்க ஒன்றாகும். இதிலே டைரக்டர்களாக சி.வி.ஆர். பணிக்கர், ஐ.ஏ.எஸ்., திரவியம், ஐ.ஏ.எஸ்., வெங்கடேசன், ஐ.ஏ.எஸ்., தீதா கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., விஸ்வநாதன், மானேஜிங் டைரக்டர், சேஷசாயி பேப்பர் & கோ லிமிடெட் என்று ஐந்து பேரை போட்டுவிட்டு, சேஷசாயி பேப்பர் லிமிடெட் கன்சல்டிங் கம்பெனி என்கிற காரணத்தினால், காரணம் காட்டப்பட்டு திரு.

விஸ்வநாதன் அவர்களை இந்த நியூஸ்பிரிண்ட் தொழிற்சாலைக்கு தலைவராக நியமித்து இருக்கிறார்கள். இது சரிதானா என்று நான் உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். கன்சல்டண்ட் என்று இருக்கின்றவரை ஒரு டைரக்டராக கூட இப்படிப்பட்ட தொழிற்சாலையில் நியமிப்பது இல்லை. அது ஒரு மரபு. டைரக்டராக கூட நியமிக்கக் கூடாது என்ற நிலை இருக்கும் பொழுது, கன்சல்டண்டாக இருக்கிற ஒருவரை இந்த தொழிற்சாலையினுடைய தலைவராக நியமித்து இருப்பது முறைகேடு அல்லவா?

யாருக்கு மேல் இவர் இருக்கிறார்? பணிக்கர் என்ற உயர்தர அதிகாரிக்கு மேல்; திரவியம் என்ற இரண்டாவது செயலாளருக்கு மேல்; வெங்கடேசன் என்கிற முன்னாள் நிதித்துறை செயலாளருக்கு மேல்; தீதா கிருஷ்ணன் என்கிற

முன்னாள் தொழில்துறை செயலாளருக்கு மேல்; இவர்களுக்கு எல்லாம் மேலாக இந்த விஸ்வநாதன் என்ற தனி மனிதர் இன்றைக்கு கன்சல்டண்ட் என்கிற பெயரால் நியமிக்கப்பட்டிருக்கிறார். நான் எழுப்புகின்ற வாதம் எல்லாம், கன்சல்டண்ட் என்று இருக்கின்ற காரணத்தினாலே அவர் இந்த சேர்மேன்னாக பொறுப்பேற்றிருக்கக் கூடாது, நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய வாதம் ஆகும்.

ஆனால் இவர்கள் தந்துள்ள எந்த அறிக்கையிலாவது இப்படிப்பட்ட ஒரு பெரிய 200 கோடி ரூபாய் திட்டத்தை - 190 கோடிக்கும் 200 கோடித் திட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை - அடுத்த மாத அறிக்கையிலே அது 200 கோடி ஆகலாம், அதற்குப் பிறகு 300 கோடியாகக் கூட ஆகலாம்; ஆனால் நான் கேட்பது எல்லாம் இவ்வளவு பெரிய மாபெரும் திட்டத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறவர் என்ன என்ன வழிமுறைகளின்படி நியூஸ்பிரிண்ட் தயாரிப்பதற்கு தன்னுடைய முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று எங்கேயாவது குறிப்பிடப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை. ஒருவேளை நான் இந்த வினாவை எழுப்பிய பிறகு அதை இங்கே குறிப்பிட்டுக் கூடும்.

மெக்ஸிகோ நாடு வரையிலே சென்று மெக்ஸிகோ நாட்டிலே கரும்பு சக்கையிலிருந்து, அதாவது Bagasse என்று சொல்லப்படுகிற கரும்பு சக்கையிலிருந்து நியூஸ்பிரிண்ட் காகிதம் தயாரிக்கும் திட்டத்திற்கு கொலாபரேஷன் மூலம் ஒரு ஒப்பந்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதிலே கியூலி புராசஸ் என்ற ஒரு புராசஸ் இருக்கிறது என்று நான் கேள்விப்படுகிறேன். அந்த கியூலி புராசஸை வைத்து உலகத்திலே வேறு எந்த முனையிலாவது, வேறு எந்த இடத்திலாவது நியூஸ்பிரிண்ட் என்கிற அச்சுத் தாள் தயாரிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் நமக்குப் பதில் வந்து கொண்டிருக்கிறது.

இதே மெக்ஸிகோ கம்பெனி, இதே கியூலி புராசஸை கொண்டு, கரும்புச் சக்கையிலிருந்து அச்சடிக்கின்ற பத்திரிகை தாள் உற்பத்தி செய்யும் யுக்தியை - டெக்னாலஜியை - மெக்ஸிகோவிற்குப் பக்கத்திலே உள்ள பெரு என்ற நாட்டிலே பயன்படுத்தினார்கள். அங்கே ஒரு நியூஸ் பிரிண்ட் தொழிற்சாலையை ஆரம்பித்தார்கள். நிலைமை என்ன? அது செயல்படவே இல்லை என்றுதான் புறப்

ஆகியிருக்கிறது. ஆகவே கியூலி என்ற அந்த புராசஸ், மெக்ஸிகோ நாட்டிலிருந்து அளிக்கப்படுகிற புராசஸ் லாயக்கற்றது, கைவைக்கக்கூடாது, நியூஸ் பிரிண்ட் தயாரிக்கிற அளவுக்கு அது சக்தியற்றது, எனவேதான் பக்கத்திலே உள்ள பெரு நாட்டிலே அது பயன்படுத்தவில்லை, அது உபயோககரமாக இல்லை என்று இவ்வளவும் தெரிந்தபிறகும் அவர்களோடு கொலாபரேஷன் வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அந்த கியூலி புராசஸைப் பற்றி கூறுகிற அந்த நிறுவனம் இருக்கிறதே: அது உலகத்திலே செல்வாக்கு உள்ள நிறுவனமா என்றால் இல்லை.

அது ஒரு தனியார் நிறுவனம், இன்னும் சொல்லப்போனால் பெரிய பெரிய லிமிடெட் கம்பெனிகூட அல்ல. புரப்ரைட்டரி கன்சர்ன் என்று சொல்வார்களே, அப்படி புரப்ரைட்டரி கன்சர்ன்தான். கியூலி புராசஸ் என்பது, நான் விசாரித்த வரையில், கரும்பு சக்கையிலிருந்து கியூலி புராசஸை பயன்படுத்தி வேறு எந்தக் காகிதமும் தயாரிக்கலாமே தவிர நியூஸ்பிரிண்ட் என்ற அச்சுத் தாளை தயாரிக்கவே முடியாது என்று நான் கேள்விப்படுகிறேன். அது நடக்கமுடியாத காரியம்.

Not Feasible என்று என்று நான் கேள்விப்படுகிறேன். இதைக்குறித்து அதிகாரிகள் கூட மறுப்புக் கருத்துக்கள் தெரிவித்ததாகவும் கேள்விப்படுகிறேன். இன்றைய தொழில் துறைச் செயலாளருக்கு முன்பு இருந்த, 3 தொழில் துறை செயலாளர்களும் இது கைவைக்கக்கூடாத திட்டம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். அது உண்மையா அல்லவா என்பதை அமைச்சர்தான் எனக்குச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இதற்கு முன்பு இருந்த அதிகாரிகள் எல்லாம் கூட, இது பீசிபிள் அல்ல என்ற கருத்தை, மூன்று செயலாளர்கள் நிதித்துறை செயலாளர் உள்பட தெரிவித்திருந்தும் கூட இப்போது இண்டஸ்ட்ரீஸ் செக்ரட்டரியையே நிறுவனத்தினுடைய எக்ஸிக்யூடிவ் டைரக்டராகவும் ஆக்கி விஸ்வநாதன் அவர்களை தலைவராகக் கொண்டு 200 கோடி ரூபாய் திட்டத்தைச் செயல்படுத்துவதினுடைய நோக்கம் என்ன?

நான் கேள்விப்படுகிறேன். அது உண்மையாக இருக்கக்கூடாது. வெளிநாட்டுச் செலவாணியில் இந்த 200 கோடி ரூபாயில் 10 சதவீதம் கமிஷன் இருக்கிறது என்றும் அதிலே யார் யார் ஈடுபடக்கூடும் என்றும் பயங்கரமான செய்திகள் கேள்விப்படுகிற காரணத்தினால் இதைத்

தொடங்குவதற்குமுன்பு நான் உங்களை எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஊழல்களுக்கு இடம் தந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். நான் கேட்டுக்கொள்வது எல்லாம் இந்தத் திட்டத்தைப் பற்றி ஃபீசிபிள் என்று ப்ரூப் செய்யப்படாத டெக்னாலஜியை நீங்கள் தேர்ந்தெடுத்ததேன்? இது ஒன்று. அந்த கியூலி புராசஸ் வேறு எங்காவது வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறதா? இரண்டு. நம்முடைய அதிகாரிகள் முக்கியமான 3 இண்டஸ்ட்ரீஸ் செகரட்டரிகள் இது நாட் பீசிபிள் என்று எதிர்ப்பு தெரிவித்து உண்டா இல்லையா?

உண்டு என்றால் அந்தக் குறிப்புகளை அவையிலே வைத்து மற்றவர்கள் பார்க்க உதவுவார்களா? கன்சல்டண்டான விஸ்வநாதன் அவர்கள் சேர்மனாக இருப்பது முறையானா? எனவே இந்தக் கேள்விகள் எழுகின்ற பல்வேறு ஊழல்களுக்கு காரணமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தாலே நீங்கள் ஈடுபடுவது முறையற்றது. முறையாக நீங்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். ஜாயிண்ட் செக்டார் அல்ல இது; அரசுத் துறை என்று சொல்லிவிட்டு, கன்சல்டண்டை ஒரு சேர்மனாகப் போட்டு, இந்தக் காரியத்தை நடத்துவது தகாது என்பதை எடுத்துக் கூறுகிறேன்.

தொழில்துறை அமைச்சருடைய பதிலிலிருந்து அசோக் லேலண்ட் சார்பாக கோரிக்கையே வைக்கப்படவில்லை என்று தெரிகிறது. தமிழ்நாட்டிலே அந்த வியாபாரத்தை நடத்தத் தேவையில்லை, வேறு மாநிலத்திற்குத்தான் செல்ல விரும்பினார்கள் என்று அவர்கள் சொல்வதிலிருந்து அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிகிறது. அது உண்மைதானா.