தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 2
பகுதி 1 · 1 / 4
**உரை : 2**
**நாள் : 16.04.1981**
**கலைஞர் மு. கருணாநிதி :** பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் அமைச்சர் அவர்களாலே அவையின் முன் வைக்கப்பட்டுள்ள தொழில் கொள்கைகள், திட்டங்கள் இவைகளைக் குறித்தும், மானியக் கோரிக்கை குறித்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய கருத்துக்களை வெளியிட விரும்புகிறேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான தொழிலாக பெரும் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக் கூடியதாகவும் வளத்தை தரக்கூடியதாகவும் அமைந்துள்ள வேளாண்மைத் தொழிலுக்கு அடுத்தபடியாக, பெரிய தொழில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கை நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். வேளாண்மைத் தொழில் தமிழகத்திலேயும் சரி, இந்தியத் திருநாட்டிலேயும் சரி, மிக முக்கியமான பெரும்பான்மை மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்ற தொழில் என்றாலும் கூட, என்னதான் அதற்கு ஊக்கமும் உற்சாகமும், உரமும், சலுகைகளும் வழங்கினாலும் அதனுடைய வளர்ச்சி ஒரு கட்டத்தோடு நின்றுவிடக்கூடியது என்பதும், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் பல்வேறு தொழில்களை, சிறு தொழில்களானாலும் நடுத்தர தொழில்களானாலும், பெரும் தொழில்களானாலும், இவைகளை வளர்ப்பதன் மூலமும், விரிவாக்குவதன் மூலமும் புதிதாக உருவாக்குவதன் மூலமும், தொடர்ந்து வேலைவாய்ப்புகளை மக்களுக்கு அளிக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும் இயலும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மக்கள் தொகையின் பெருக்கம் என்ற அடிப்படையில் பார்க்கிறபோது அது விகிதாச்சார வகையிலே பெரும் அளவு குறைந்து இருக்கிறது. எண்ணிக்கை அளவிலே மக்கள் தொகை கடந்த காலத்தைவிட இப்போது அதிகமாகி இருக்கிறது என்றாலும் கூட விகிதாச்சார வகையிலே மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகிறபோது குறைந்த கணக்கைத்தான் விழுக்காடு நிலையில் காட்டிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கும் மக்கள் தொகை கணக்கை எடுத்துக்கொண்டால் அது மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டு வருகிறது என்பதை அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட வரைவுகளிலேயே குறிப்பிடப்பட்டு இருப்பதை நான் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
நாட்டில் உள்ள வேலை இல்லாதோர் தொகை என்ற புள்ளி விவரத்தைப் பார்க்கிறபோது நாட்டினுடைய சராசரி 8.5% இருக்கிறது. தமிழ் நாட்டின் சராசரி 16.1% இருக்கிறது. இந்தக் கணக்கினை அரசு தந்துள்ள குறிப்புகளிலேயே நம்மால் காண முடிகிறது. எனவே வேலை இல்லாமல் இருக்கின்றவர்கள் தொகை என்ற புள்ளிவிவரப்படி நமது மாநிலம் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக அமைந்து இருக்கிறது என்பது பெருமைக்குரியது அல்ல. இரண்டாவது என்பது பரிசு பெறுகின்ற நேரத்திலே, முதல் பரிசு, இரண்டாவது பரிசு, மூன்றாவது பரிசு என்று இந்த மூன்று பரிசுகளும் பாராட்டத்தக்கது என்றாலும் கூட, வேலை இல்லாதோர் தொகையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் நிலையில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, நம்முடைய மாநிலம் இரண்டாவது மாநிலமாக இருக்கிறது என்பதை நாம் வேதனையோடுதான் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
6-வது திட்ட வரைவு ஒன்று நம்முடைய மாநில திட்டக் குழு தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. அதிலே கூட 'High proportion of people in Tamil Nadu are below the poverty line.' என்பதை மிகத் தெளிவாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இங்கே ஆளும் கட்சியின் சார்பிலே பேசிய மாண்புமிகு உறுப்பினர்கள் பலர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே தொழில்துறை மிகவும் பின் தங்கிவிட்டது என்றும்; பல தொழிற்சாலைகள் ஆங்காங்கு அமைக்க வழி இருக்கின்றது என்று அதிகாரிகளால்
சுட்டிக்காட்டப்பட்டு கூட, அவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுகின்ற அக்கறை கழக ஆட்சிக்கு இல்லாமல் இருந்தது என்றும், இன்றைக்கும் பேசினார்கள். நேற்றையதினமும் சிலர் பேசும்போது அத்தகைய கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அரசின் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கின்ற தொழில் கொள்கைகளும், திட்டங்களும் என்ற புத்தகத்திலே கூட திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் தொழில் துறையில் காட்டப்பட்டுள்ள அக்கறை எத்தகையது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) 1971-ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கே முழுவதும் சொந்தமாக வரையறுக்கப்பட்டதொரு பொது நிறுவனமாக (ரூபாய் ஆறு கோடி ஒப்பிய மூலதனத்துடன்) தனியார் துறையில் நடுத்தர, பெரிய தொழில்கள் முன்னேற்றத்துக்கும் விரிவடைவதற்கும் இதுவரை இம்மாநிலத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளை விரைந்து தொழில் மயமாக்குவதற்குமான முக்கிய குறிக்கோள்களுக்காக சனவரித் திங்களில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கமைந்த முன்னேற்றத் திட்டத்துடன் தனது பணிகளைத் தொடங்கியது. அதில் இருந்து சிப்காட் நிறுவனம் கடந்த ஏழு ஆண்டுகளாக நடுத்தர, பெரிய தொழில்கள் முன்னேற்றமும் விரிவடையவும் ஆன பணிகளைச் சிறந்த முறையில் செய்து வருகிறது.
1980-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை இந்நிறுவனம் பல்வேறு திட்டங்களின்கீழ் மொத்தம் ரூ. 6,136.65 இலட்சம் உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், இதன் மூலம் 46,000 பேருக்கு மேல் மொத்த நேரடி வேலைவாய்ப்பை நல்கியுள்ளது. இந்நிறுவனத்தின் நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமாகக் கருதக்கூடியது, ஊக்குவிக்கப்பட்ட முதலீட்டில் பெரும்பகுதி இம்மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளிலேயே பயன்படுத்தப்பட்டது என்பதாகும்.
இதுவரையில் அளிக்கப்பட்ட மொத்த உதவித் தொகை பின்தங்கிய பகுதிகளில் நிறுவப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 53 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று இந்த அரசின் சார்பிலே தரப்பட்டுள்ள குறிப்பிலே எவ்வளவு நல்ல நோக்கத்தோடு இந்த சிப்காட் நிறுவனம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1972-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்றும் அதனால் சற்றொப்ப 46,000 பேர்களுக்கு மேல் வேலை
வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் எடுத்துக்காட்டி இருப்பதை நான் இந்த அவையின் முன் வைப்பது என்னுடைய கடமை என்று கருதுகிறேன்.
அதைப்போல மற்றொரு நிறுவனம் 'தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம்; 'சிட்கோ' என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 23-ஆம் நாள் நிறுவப்பட்டு பின்னால் 1971-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 21-ஆம் நாள் ஒரு பொது நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் மூலக் குறிக்கோள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியினைக் குறிப்பாக சின்னஞ்சிறு தொழில் துறைகளில் பரவலான, விரிவான வளர்ச்சியும், முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகும் என்று அரசின் குறிப்பிலே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தொடர்ந்து சிட்கோ நிறுவனம் தொடங்கப்பட்ட 1971-ஆம் ஆண்டு முதல் 1979-80-ஆம் ஆண்டுவரை சுமார் 514 தொழிற் கூடங்களை தவணைமுறைத் திட்டத்தின்கீழ் அம்பத்தூர், இராணிப்பேட்டை, ஓசூர், நாமக்கல் முதலான இடங்களில் கட்டி வழங்கியுள்ளது. 1979-80-ஆம் ஆண்டு 58 தொழிற் கூடங்கள் அம்பத்தூர், இராணிப்பேட்டை, புதுக்கோட்டை முதலான இடங்களில் கட்டப்பட்டு வழங்கப்பட்டது என்று இந்த அரசின் தொடர் பணிகளையும் இணைத்து இதிலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எனவே கழக ஆட்சிக் காலத்தில் தொழில் வளர்ச்சியில் காட்டப்பட்ட அக்கறை குறைந்திருந்தது என்று சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் தொடர் நடவடிக்கையாக, இந்த ஆட்சி காலத்தில், கழக ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்பு இருந்த ஆட்சிக் காலத்திலும் தொழில்துறை முன்னேற்றத்தில் காட்டப்பட்ட ஆர்வம் காட்டப்படவில்லை என்ற குறைபாட்டை நான் தெரிவிப்பது இந்த அரசை குறைசொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் அல்ல, தொழில்கள் மேலும் பெருகிட வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
எந்த அளவுக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற தொழில்கள் இழப்புகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்கிற புள்ளி
விவரங்கள் "Comptroller and Auditor-General of India" அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை இந்த அவையில் 23.1.1981-ல் வைக்கப்பட்டது. அந்த ஆடிட் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. Tamilnadu Sugarcane Farm Corporation அதாவது தமிழ்நாடு கரும்பு பண்ணை கார்ப்பரேஷன் 1974-75-ஆம் ஆண்டில் அதாவது கழக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. 22.2.1974 முதல் 30.6.1975-க்குள் 6.12 இலட்சம் ரூபாய் இலாபத்திலே அந்த பண்ணை நடைபெற்றது.
ஆனால் கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா அவர்களின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் 1976-77-ல் 10.58 இலட்சம் ரூபாய் நஷ்டமும், 1977-78-ல் 28.06 இலட்சம் ரூபாய் நஷ்டமும், 1978-79-ல் 5.84 இலட்சம் ரூபாய் நஷ்டமும் என்ற அளவுக்குத்தான் இந்த சுகர்கேன் பார்ம் கார்ப்பரேஷன் நடைபெற்றிருக்கிறது என்பது இந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையில் இது மட்டுமல்ல, இன்னும் பல இழப்புகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்த அறிக்கையில் 154-ம் பக்கத்தில் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் டெவலெப்மெண்ட் கார்ப்பரேஷன் 1978-79-ஆம் ஆண்டு கணக்கின்படி 46.86 இலட்சம் ரூபாய் நஷ்டம், தமிழ்நாடு ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 1978-79-ஆம் ஆண்டு கணக்கின்படி 37.66 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு ஹாண்டிகிராப்ட்ஸ் டெவலெப்மெண்ட் கார்ப்பரேஷன் 1976-77-ஆம் ஆண்டு கணக்கின்படி 25.12 இலட்சம் ரூபாய் நஷ்டம், தமிழ்நாடு செராமிக் லிமிடெட் 1978-79-ஆம் ஆண்டு கணக்கின்படி 30.53 இலட்சம் ரூபாய் நஷ்டம்.
தமிழ்நாடு சுகர்கேன் பார்ம் கார்ப்பரேஷன் 1979-80-ஆம் ஆண்டு கணக்கின்படி 5.84 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் 1978-79-ஆம் ஆண்டு கணக்கின்படி 10.30 இலட்சம் ரூபாய் நஷ்டம்.
தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் - 1978-ஆம் ஆண்டு கணக்கின்படி 66.18 இலட்சம் ரூபாய் நஷ்டம், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் - 1978-79-ஆம் ஆண்டு கணக்கின்படி 6.02 இலட்சம் ரூபாய் நஷ்டம். சதர்ன் பிரிக் ஒர்க்ஸ் லிமிடெட் - 1978-79-ஆம் ஆண்டு கணக்கின்படி 9.42 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் - 1978-79-ஆம் ஆண்டு கணக்கின்படி 28.37 இலட்சம் ரூபாய் நஷ்டம். பெரம்பலூர்
சுகர் மில்ஸ் லிமிடெட் 1978-ஆம் ஆண்டு கணக்கின்படி 63.28 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு மோபாட்ஸ் லிமிடெட் 1978-79-ஆம் ஆண்டு கணக்கின்படி 38.83 இலட்சம் ரூபாய் நஷ்டம். இப்படி நஷ்டத்திலே இயங்குகின்ற அளவுக்கு இந்தத் தொழிற்சாலைகள் நடத்தப்பட்டு வருவது நிர்வாகத்தினுடைய திறமையின்மையைக் காட்டும் என்பதை நான் இந்த அவையில் அவைகள் திருத்தப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்து 6-வது ஐந்தாண்டுத் திட்ட வரைவு அறிக்கை. மாநில திட்டக் குழுவினால் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் ஒரு கருத்து கூறப்பட்டிருக்கின்றது. அந்தக் கருத்தோடு ஒத்துச் செல்லுகின்ற இணைந்து வாதிடுகின்ற நிலை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு என்பதை நான் இங்கே எடுத்துக் காட்டுகிறேன். மொத்த இந்தியாவுக்கும் மைய உதவி 1979-ல் 15,668 கோடி ரூபாயாக இருக்க, அதில் தமிழ்நாட்டிற்கு மாத்திரம் கிடைத்திருப்பது 516 கோடி ரூபாய்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அது மாத்திரமல்ல, தமிழ் நாட்டினுடைய மக்கள் தொகை கணக்கை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் கூட 8 சதவீதம் நமக்குக் கொடுப்பதற்கு பதிலாக 4 சதவீதம்தான் கொடுத்து இருக்கின்றது என்பதும் மாநிலத் திட்டக் குழுவின் அறிக்கையிலே கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது. நியாயமாக இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்கவேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அந்தக் கருத்தை நான் ஒத்துக்கொள்கிறேன். தொடர்ந்து பல ஆண்டுகாலமாக மத்திய அரசோடு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானாலும் சரி அல்லது இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியானாலும் சரி வற்புறுத்திப் பெற வேண்டியதற்கான வாதங்களை எடுத்து வைத்து நாம் இங்கே தருவித்துக் கொள்ள வேண்டும் பல திட்டங்களை என்று சொல்லுகின்ற நேரத்திலே கழக ஆட்சிக் காலத்திலே அதற்காக வாதாடிய அளவுக்கு இந்த ஆட்சிக் காலத்திலே அதற்காக வாதாடப்பட்ட வில்லை என்பதுதான் எனக்கு இருக்கக் கூடிய குறையாகும்.
அவர்கள் நமக்கு எதையும் அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிற அதே நேரத்தில் அவர்களாக முன்வந்து அளித்த ஒரு திட்டம் பற்றி இங்கே கூட மாண்புமிகு உறுப்பினர்கள் பலரால்
எடுத்துக் காட்டப்பட்டது. பல கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் எடுத்துச் சொன்னார்கள். இரயில் பெட்டிகளைத் தயாரிக்கின்ற தொழிற்சாலைத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ள அந்த திட்டத்தை மத்திய அரசு தமிழ் மாநிலத்திற்கு வழங்க முன்வந்தபோது, அதைப் பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் யாருடையது என்பதை தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டும். 400 கோடி ரூபாய் திட்டத்தின்படி ஆயிரம் ஏக்கர் மொத்த இடம் தேவை என்றும் அதிலே தொழிற்சாலை அமைப்பதற்கு 200 ஏக்கர் போதுமானது என்றும் தொழிற்சாலைக்கு தொடர்புடைய பல கட்டிடங்களைக் கட்டவும் வேறுபல வசதிகளுக்கும் மீதம் உள்ள இடம் தேவைப்படும் என்றும் அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்றும் இந்த அரசை மத்திய அரசு கேட்ட நேரத்தில் மாநில அரசு அதுபற்றி கேளாக் காது படைத்த அரசாக இருந்துவிட்ட காரணத்தால் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய 400 கோடி ரூபாய் இரயில் பெட்டித் தொழிற்சாலைத் திட்டம் கிடைக்காமல் போய்விட்டது.
ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு பெரும் திட்டம் அது. அந்தத் தொழிற்சாலையிலே 10,000 பேருக்கு வேலை வாய்ப்பும் அந்தத் தொழிற்சாலைக்கு தேவைப்படும் உபகரணங்களான துணைப்பொருட்களைத் தயாரிக்கின்ற தொழில்களிலே 5,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பும் கிடைக்கக்கூடிய அந்த மிகப் பெரிய திட்டத்தை 400 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே உள்ள திட்டத்தை உரிய நேரத்திலே நாம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் அந்தத் திட்டம் திருப்பதிக்கு அதாவது ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்ட பிறகு ஏன் அந்தத் திட்டத்தை இங்கே கொண்டு வரப் போராடக்கூடாது என்று சில உறுப்பினர்கள் கேட்பதும் எனக்கு விந்தையாக தோன்றுகிறது.
நாம் அந்த திட்டத்தை அவர்கள் வழங்கிய போது ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதற்கான வசதி வாய்ப்புகளை மத்திய அரசுக்கு செய்து கொடுக்க நாம் தயாராக இல்லை. இப்போது அந்தத் திட்டம் பறிபோய்விட்டது. ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டது. ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்ட பிறகு, அந்தத் திட்டம் தமிழகத்திற்கு வேண்டும்
என்று எப்படி கேட்பது? எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்பது என்று எனக்கே புரியவில்லை. அந்தக் குற்றச்சாட்டை கூறியவர்கள்தான் விளக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்வேன். அது மாத்திரம் அல்ல, அசோக் லேலண்ட் எக்ஸ்பென்ஷன் என்ற அளவிலே ஒரு பெரிய தொழில் திட்டத்தைச் சொல்லி, சில சலுகைகளை தரவேண்டுமென்று வைத்துக் கேட்ட நேரத்திலே, அந்தச் சலுகைகளை அளிக்க இயலாது என்று ஒரே பிடிவாதமாக அளிக்க மறுத்துவிட்ட காரணத்தால் இன்றைக்கு அந்த தொழிற்சாலை ராஜஸ்தானத்திலும், மராட்டிய மாநிலத்திலும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புத் தருகிற திட்டமாக அங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதையும், அவர்கள் கேட்ட சலுகைகளை அந்த இரு மாநிலங்களும் தருகிற அளவிற்கு முன் வந்த காரணத்தால், அசோக் லேலண்ட் எக்ஸ்பென்ஷன் திட்டம் இங்கே இடம் பெறாமல் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டது என்பதையும் ஒரு குறைபாடாகத்தான் கருத வேண்டும் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.
கழக ஆட்சிக் காலத்திலே, மத்திய அரசோடு வாதாடி போராடி திட்டங்களைப் பெறவில்லை என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் ஒருவர் பேசும்போது கூறினார். திராவிட முன்னேற்றக் கழக அரசு மத்திய அரசோடு, விரோதத்தை வளர்த்துக் கொண்ட காரணத்தால் பல திட்டங்கள் நமக்கு கிடைக்கவில்லை என்று இங்கே கூறினார்கள். அவர்களாவது நட்பை வளர்த்துக் கொள்ளட்டும். நான் அதை வரவேற்கிறேன். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி விரோதத்தை வளர்த்துக்கொள்ளவில்லை.
எந்த நேரத்திலேயும் உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற அந்த அடிப்படையிலேதான் மத்திய அரசோடு தன்னுடைய வாங்கலை எடுத்து வைத்திருக்கிறது.
சேலத்திலே இரும்புத் தொழிற்சாலை திட்டம் தேவை என்பதற்காகவும்; நெய்வேலி திட்டத்திற்காகவும் தூத்துக்குடி துறைமுக திட்டத்திற்காகவும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்த காலத்திலே எழுச்சி நாள்
