தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 2
பகுதி 4 · 4 / 4
**திரு. என். எஸ். வி. சித்தன் :** மத்திய சர்க்கார் என்ன பதில் கொடுத்தார்கள், நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னால் அதற்குத் தக்கவாறு முடிவெடுக்கலாம். அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே, தயவுசெய்து அதற்குப் பதில் சொல்லுங்கள்.
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு உறுப்பினர் சித்தன் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, திருப்பதிக்குப் போனது போனதுதான். கால்கோள் விழாவெல்லாம் நடந்துவிட்டது. மாண்புமிகு ஜனாதிபதி
அவர்களும், ரயில்வே அமைச்சரும் வந்து விழா நடத்தி விட்டார்கள். இனிமேல் சித்தனே போய் கேட்டாலும் இங்கே கொண்டுவர முடியாது. (குறுக்கீடு) அதற்குத்தான் மாண்புமிகு சித்தன் போன்றவர்கள் உதவி செய்யவேண்டும். இனிமேல் வர இருக்கின்ற தொழிற்சாலைகளாவது அல்லது மத்திய தொழில்களாவது இங்கே வரவேண்டும். நாம் இடம் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். நான் ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூட சொன்னேன். எச். எம். டி. - யைப் பற்றிச் சொன்னேன்.
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸைப் பற்றிச் சொன்னேன். நாம் கேட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி இந்த மன்றத்திலே சொல்லலாம். இது ஒன்றும் ரகசியம் இல்லை. அவை எல்லாம் அங்கே இருக்கின்றன. நீங்கள் அங்கே போகிறபோது, இங்கே சொல்வதை விட, அங்கே சொல்லி, பிரதமரிடத்திலே சொல்லி, மத்தியத் தொழில்கள் எல்லாம், விரிவாக்கமோ அல்லது புதிய தொழிற்சாலைகள் வருகிறபோது தமிழகத்திலே துவங்குவதற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடைய உதவி வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
**கலைஞர் மு. கருணாநிதி :** தமிழ்நாடு வளம் பெற, தொழில் துறை பெருக, எந்த அளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ஆட்சியோடு ஒத்துழைக்க வேண்டுமோ, மத்திய சர்க்காரோடு வாதாட வேண்டுமோ அதற்குத் தயாராக இருக்கிறது. அதையும் நான் என்னுடைய உரையிலே கூட குறிப்பிட்டேன். மத்திய சர்க்காரோடு வாதாடி, போராடி தமிழ்நாட்டுக்குத் தேவையான வளங்களைப் பெற கழகம் உங்களோடு துணை நிற்கும் என்று நான் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறேன்.
நீங்கள் சொல்வதற்கு முன்பே அதைச் சொல்லி இருக்கிறேன். நான் கேட்பதெல்லாம், அந்த ரயில்பெட்டித் தொழிற்சாலைக்கு மத்திய சர்க்காரோடு நீங்கள் எப்படி வாதாடினீர்கள், எந்தெந்த நேரத்திலே கடிதங்கள் எழுதினீர்கள், எந்தெந்த தேதியில் எழுதினீர்கள் அதற்கு என்ன பதில் வந்தது என்பதை எல்லாம், அந்தத் தொகுப்பை இந்த அவைக்கு வைத்தால் மத்திய சர்க்காருக்கு எதிராக வாதாடுவதற்கு இன்னும் எங்களுக்கு வலு கிடைக்கும் என்பதற்காகத்தான் கேட்கிறேன்.
உதவுவீர்களா?
**THIRU K.S.G HAJA SHAREEF :** Sir, You will kindly remember that on the very first occasion, when I began to speak in this house, I have given full support to the Government. I said although I am a Opposition Leader, I will not oppose anything and everything I will certainly appreciate what the Government does. Whatever the Government wants, we will certainly co-operate with them and see that our State becomes the first and foremost.
I continue to state this and I will assure the Hon. Minister and other colleagues that what all lies in our power, we will certainly co-operate with them to see that this State becomes one of the most powerful State in our country. Kindly tell us what are all your difficulties. Let them not put the blame on somebody, if they are not prompt in taking action and seizing of the opportunity.
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அவர்களுக்கும் நான் தமிழக மக்களின் சார்பிலும், என் சார்பிலும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே முதன் முதலிலே வாதத்தைத் துவக்கிய மாண்புமிகு உறுப்பினர் பழனியப்பன் அவர்கள் இங்கே ஒன்றைச் சொன்னார்கள்.
நாம் மத்திய அரசை இப்படித் தொழில்கள் வேண்டும் என்று கேட்கின்றபோது மாநிலத்திலே இருக்கிற எல்லா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து, கையெழுத்துப் போட்டு எழுதி அனுப்பினால், என்ன என்று கேட்டார்கள். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், அதேபோல காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களும், சொன்னதை அதோடு இணைத்து, இங்கே இருக்கின்ற நாம் எல்லாம் சட்டமன்றத்திலே ஆதரவு தருகிறோம் என்ற எண்ணத்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துப் போடுகிறோம் என்பதோடு நிற்காமல், அங்கே உள்ள நாடாளுமன்றத்திலே உள்ளவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அதைப் போலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அங்கே ஏதாவது மத்திய தொழில் துவங்கப்படப் போகிறது என்று தெரிந்த
உடனே அல்லது இங்கே இருந்து எதை எதை எல்லாம் அனுப்பி இருக்கிறோமோ அதை சம்பந்தப்பட்ட அமைச்சரிடத்திலே, ஒன்றாகச் சேர்ந்து, புதிதாக வரவிருக்கிற தொழில் தமிழகத்திலேதான் வரவேண்டும் என்று அந்த அமைச்சரிடத்திலே வலியுறுத்தி, வற்புறுத்துவதற்கு உதவி செய்வார்களானால் நான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
**கலைஞர் மு. கருணாநிதி :** நான் மாண்புமிகு அமைச்சருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். ரயில்வேயிலே கூட மதுரை மண்டலத்தோடு நெல்லை - குமரி பாதையை இணைக்கவேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. பல கட்சித் தலைவர்கள் அதில் ஈடுபட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிலே ஈடுபட்டு மகஜர் தந்தார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் அதிலே உறுதியாகவும், வலிவாகவும் இல்லாத காரணத்தால்தான் அது நம்மை விட்டுப் போய்விட்டது.
நாங்கள் எல்லாம் ஒத்துழைத்தாலும் கூட, ஆட்சியாளர்கள் உறுதுணையாக இருந்து அவர்களோடு வாதிடினால்தான் வெற்றி கிடைக்கும். அதனால்தான் கேட்டேன், ஏற்கனவே இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை குறித்து நாம் எழுதிய கடிதப் போக்குவரத்து என்ன என்ன என்று தெரிவிக்கப்படுமா என்று. அதற்கு பதில் சொல்லாமலேயே மாண்புமிகு திருநாவுக்கரசு, திரு நெடுமவல் அரசராக ஆகிவிடுவது நல்லதல்ல.
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கனவே சொன்னதைப் போல மாநில அரசின் சார்பாக அந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சம்பந்தமாக என்னென்ன வகையில் கடிதங்களை நானும், முதலமைச்சர் அவர்களும் மத்திய அரசுக்கு எழுதினோம் என்பதை அவர்கள் பார்க்க விரும்பினால் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறேன். அதிலே ஒன்றும் சங்கடம் இல்லை. ரகசியம் இல்லை. இங்கிருந்து எழுதிய கடிதங்களின் காப்பி இருக்கின்றன.
அதைக் காண்பிக்கத் தயக்கம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முயற்சி எடுக்காததால்தான் திருப்பதிக்கு அதுபோய் சேர்ந்துவிட்டது என்று சொல்வது சரியல்ல. அதைப் போல ஆரம்பிக்கப்பட்டிருக்கிற மத்திய தொழிற்சாலைகள் குறித்து திட்டம் தீட்டுகிறபோது இங்கே இடம் பார்த்துச்சொல்லுங்கள் என்று
சொல்கிறார்கள். நாமும் தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு எங்கேயிருக்கிறது என்பதைப் பார்த்து சொல்கிறோம். ஆனால் முடிவு எடுக்கவேண்டியது மத்திய அரசு. அப்படி அவர்கள் முடிவு எடுக்கிறபோது தமிழகத்தின் பக்கம் கருணை காட்டவேண்டும் என்றுதான் நாம் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
மாண்புமிகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அவர்கள் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். நேரம் ஆகிவிட்டது. மீண்டும் நான்கு மணிக்கு நாம் வரவேண்டியிருக்கிறது என்று சொன்னார்கள். ஆகவே, அரசின் சார்பாக சில அறிவிப்புகளை, இனி வர இருக்கும் நாட்களின் என்ன செய்ய இருக்கிறோம் என்பதை, ஓரிரண்டு சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஏற்கனவே இங்கே சொன்னது போல், 190 கோடி ரூபாய் அளவில் திருச்சி மாவட்டத்தில் புகலூரில் காகிதத் தொழிற்சாலை ஆரம்பிக்க இருக்கிறோம்.
20 கோடி ரூபாய் செலவிலே வடஆற்காடு மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலை ஆரம்பிக்க இருக்கிறோம். 4 கோடி ரூபாய் செலவில் ஸ்டீல் ரோலிங் மில் அரக்கோணத்தில் ஏற்படுத்த இருக்கிறோம். திருத்தணியில் சர்க்கரை ஆலை அமைக்க இருக்கிறோம். திரு. சித்தன் அவர்கள் பேசுகிறபோது என்று நினைக்கிறேன் - சிறிய சர்க்கரை ஆலைகள் அமைப்பதாக அறிவிப்பு செய்தீர்களே, அது என்ன நிலைமையில் இருக்கிறது என்று கேட்டார்கள். தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய இடங்களில் இப்படிப்பட்ட சிறிய சர்க்கரை ஆலையை ஏற்படுத்த - ஏறத்தாழ 450-500 டன் கபாசிட்டி கொண்ட சர்க்கரை ஆலை ஏற்படுத்த - அரசு பரிசீலித்துக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். மெட்ராஸ் ::பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் - அது மத்திய அரசு நிறுவனம் - திரு. மகாலிங்கம் அவர்கள் தலைவராக இருந்திருக்கிறார்கள். பாண்டிச்சேரி முன்னாள் கவர்னர் திரு. செடிவால் அவர்கள் மத்திய அரசு நிறுவனமான மாடர்ன் பேக்கரிஸ் நிறுவனத்தில் தலைவராக இருந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் சில நிறுவனங்களில் தனியார் சிலர் தலைவர்களாக நியமிக்கப்
பட்டிருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதும் அல்ல. திரு. டாண்டன் என்பவர் பஞ்சாப் நேஷனல் பாங்க் சேர்மேனாக இருந்திருக்கிறார். இப்படி பல்வேறு நிறுவனங்களில் போட்டிருக்கிறார்கள். இங்கே விஸ்வநாதன் என்பவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கிறார். செஷசாயி மில்லில் நியூஸ் பிரிண்ட் பேப்பர் உற்பத்திச் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். அது தனியார் துறைக்கு போகக்கூடாது என்ற அளவில் அவர்களுக்கு இருக்கிற தொழில் நுட்ப ரீதியான அறிவைப் பெற்று, பொதுத்துறையில் ஆரம்பிக்கப்படும் இந்தத் தொழிலில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற முறையில் திரு.
விஸ்வநாதன் அவர்கள் 'கன்சல்டண்ட் அண்ட் ஒன் ஆஃப் தி டைரக்டர்ஸ் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏறத்தாழ 30 கோடி ரூபாய்க்குள்ளேதான் நம்முடைய பணம் இதிலே இருக்கிறது. மீதத்தை ஐ. டி. பி. ஐ-யும் உலக வங்கியும் போடுகின்றன. பின்னர் இதற்கு தலைவரை நியமிக்கின்ற போது 4 டைரக்டர்களில் மானேஜிங் டைரக்டராக வரக்கூடியவர் அரசாங்க அதிகாரியாகத்தான் இருப்பார், ஐ. டி. பி. ஐ-யும் உலக வங்கியும் யாரை தலைவராக நியமிக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்தான் தலைவராக வரமுடியும்.
இதுதான் இருக்கின்ற நிலைமை. தற்காலிகமாக அந்த அமைப்பை உருவாக்குவதற்காக நாம் எடுத்துக்கொண்டிருக்கிற முயற்சிகளில் அவரைத் தலைவராக வைத்திருக்கிறோம். இதிலே ஒன்றும் ரகசியம் இல்லை. இதிலே ஒன்றும் ஊழலோ தவறோ இல்லை. லெட்டர் ஆஃப் இன்டன்ட் 83 ஆயிரம் டன் என்றும் அந்த நியூஸ் பிரிண்டைப் பொறுத்தவரையில் 50 ஆயிரம் டன்தான் இங்குள்ள கெப்பாசிட்டி என்றும் போடப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதிலே ஒன்றும் குற்றச்சாட்டு இல்லை.
வாங்குகின்றபோது அதிகமாக வாங்குகிறோம். அவ்வளவுதான். ஆனால் ப்ரொடக்ஷன் கெப்பாசிட்டி என்று சொல்கிறபோது எவ்வளவு முடியுமோ அதைத்தான் செய்கிறோம். ஆகவே லெட்டர் ஆஃப் இன்டன்ட் குறைவாக வாங்கி ப்ரொடக்ஷன் அதிகமாகச் செய்ய முடியாது. ஆகவேதான் லெட்டர் ஆஃப் இன்டன்ட் அதிகமாக வாங்கி இருக்கிறோம். முடிந்தால்
ப்ரொடக்ஷனை இன்க்ரீஸ் பண்ணுவதற்கும் எக்ஸ்பாண்ட் பண்ணுவதற்கும் முயற்சி செய்கிறோம்.
அடுத்து இன்னொன்றை இங்கே சொன்னார்கள். நான் இந்த பழமொழியை இங்கே சொல்வதற்காக தயவுசெய்து கோபித்துக் கொள்ளக் கூடாது. அரண்டவர்கள் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கூடச் சொல்வார்கள். அதே போன்று எதை எடுத்தாலும் ஊழல் என்று சொல்கிறார்களோ என்னவோ தெரியாது. 200 கோடிக்குத் திட்டம், அதிலே 10 சதவீதம் ஊழல் என்றும், அதாவது வெளிநாட்டிலே பணம் வாங்கப்படுவதாகவும் சொன்னார்கள். இதிலே யாரோ பெரும் புள்ளிகள் எல்லாம் தலையிடுகிறார்கள் என்றும் சொன்னார்கள்.
அதற்கெல்லாம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மேலும் இவையெல்லாம் ரகசியமாகச் செய்யப்படுகிற பிரச்சினைகளும் அல்ல. உலக வங்கி இதைக் கவனித்துக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசின் நிறுவனமான ஐ. டி. பி. ஐ. இருக்கின்றது. அதனுடைய ஆலோசர்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். வெளிநாட்டிலே இருந்து இயந்திரம் வாங்கினாலோ அல்லது டெக்னிக்கல் நாலெட்ஜாக இருந்தாலோ மத்திய அரசினுடைய அனுமதியோடு தான் அவை நிச்சயமாக நடைபெற இருக்கின்றது.
எனவே மத்திய அரசும் தவறு செய்யும் என்று டாக்டர் கலைஞர் அவர்கள் நிச்சயமாகச் சொல்ல மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். எனவே இதிலே எல்லாம் ஏதோ ஊழல் நடந்துவிட்டுப் போகிறது என்று சொல்லி...
**கலைஞர் மு. கருணாநிதி :** தலைவரவர்களே, நான் இங்கே எடுத்துச் சொன்ன குறைபாடுகள் மத்திய அரசினுடைய கவனத்திற்கும் வரவேண்டும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஏன் என்றால் நீங்கள் அங்கே பெறுகின்ற க்யூ. சி. ப்ராசஸ் பற்றிச் சோதித்தபோது அது எந்த நாட்டிலேயும் வெற்றிகரமாக அமைந்த ப்ராசஸ் என்று நிரூபிக்கப்படாத அதாவது “ப்ரூவ்” செய்யப்படாத ஒரு ப்ராசஸாகும். அதுமட்டுமல்ல. மெக்ஸிகோவுக்கு பக்கத்திலே இருக்கக்கூடிய பெரு நாட்டிலேயே அந்தப் ப்ராசஸ் பரிசோதனை செய்யப்பட்டு அது பயன்படவில்லை என்று செய்தி வந்திருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்.
எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் மாநில அரசு ஆனாலும்
சரி, மத்திய அரசு ஆனாலும் சரி. அவர்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகத்தான் இதைச் சொன்னேனே தவிர வேறல்ல.
**மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் :** தலைவரவர்களே இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய திட்டக்குழு இதைப் பற்றி நன்கு ஆராய்ந்து அதிலே உள்ள டெக்னாலஜியைப் பொறுத்தவரையிலும் அவர்களே விரிவாக ஆராய்ந்த பிறகுதான் இதை 6-வது ஐந்தாண்டுத் திட்டத்திலே சேர்த்துக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டார்கள். அதோடு மட்டுமல்ல. இதற்காக உலக வங்கி நிதி தருவதாகவும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே அவர்கள் இதைப் பார்த்து இந்த டெக்னாலஜி பீசிபிள் என்கிற அடிப்படையிலேதான் இதை மேற்கொண்டு பரிசீலனை செய்திருக்கிறார்கள். நம்முடைய 6-வது ஐந்தாண்டுத் திட்டத்திலேயும் அதற்காக சேர்த்து நிதி ஒதுக்கமும் செய்திருக்கிறார்கள். ஆகவே மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் டெக்னாலஜியைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை. மாண்புமிகு தொழில் அமைச்சர் அவர்கள் சொன்ன விளக்கம் அதாவது முதலீட்டைப் பொறுத்தவரையில் அவர்கள் சொன்ன விளக்கம் ஆக்சுவல் ரிப்போர்ட் தயார் செய்கிறபோது அதைப்போல் வருவது உண்டு என்பதுதான்.
அதனால் அவர்கள் சந்தேகப்படவேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
**கலைஞர் மு. கருணாநிதி :** தலைவரவர்களே, தொழில் அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று. இருட்டாக இருப்பதால்தான் அங்கு என்ன இருக்கிறது என்று தெரியாத காரணத்தால்தான் கேட்டேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.
**மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு :** சரி. மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அரண்டவன் என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். அப்படி அரண்டவன் என்று நான் சொல்ல மாட்டேன். நான் அப்படிச் சொல்லவும் இல்லை. அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆகவேதான்
அந்தப் பழமொழியைக்கூட கொஞ்சம் மாற்றி அரண்டவர்கள் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்று சொன்னேன். மரியாதையாகத்தான் சொன்னேன். 200 கோடியிலே 10 சதவீதம் என்றால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பெரிய குறை இருக்கின்றது என்றால் அது பத்திரிகையிலே எப்படி வரும்? வெளிநாட்டிலே போய் 20 கோடி ரூபாயிலே இந்த அரசு ஏதோ தவறான வகையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. வாங்க இருக்கின்றது என்பது போன்ற ஒரு பிரமையை உண்டாக்குவதற்காகத்தான் நீங்கள் சொன்னீர்கள்.
அப்படிக் குற்றச்சாட்டு சொன்ன காரணத்தால்தான் நான் சொன்னேன். ஆகவே அதிலே அப்படிப்பட்ட எந்த நிலைமையும் இல்லை. தவறுகள் நடப்பதற்கான எந்தவிதமான வாய்ப்போ, சந்தர்ப்பமோ கூட நிச்சயமாக இல்லை. ஏனென்றால் உலக வங்கியின் நிறுவனத்திலே இருந்து அவர்களுடைய ஆலோசகர்களை எல்லாம் இதிலே போட்டிருக்கிறார்கள். இயக்குநர்களைப் போட்டிருக்கிறார்கள். இதற்காகத்தான் நான் அதை சுட்டிக்காட்டினேன். அதுமட்டுமல்ல, 20 கோடி ரூபாய்க்கு வரப்போகின்ற வெடிமருந்து தொழிற்சாலையைப் பற்றி அவசரம் அவசரமாகச் சொன்னார்கள்.
இவ்வளவு பெரிய 109 கோடி ரூபாய்க்கான திட்டம் பற்றி ஏன் நீங்கள் பட்ஜெட்டில் சொல்லவில்லை என்று சொன்னார்கள். இதிலே ஏதோ இருக்கின்றது. அதனால்தான் மறைத்திருக்கிறீர்கள் என்று கூட அவர்கள் சொன்னார்கள். இந்தத் திட்டம் பற்றி ஏற்கனவே சென்ற ஆண்டு பட்ஜெட்டிலேயே சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தத் திட்டம் வரப்போகிறது என்று அறிவித்திருக்கிறோம்; ஆகவே ஒவ்வொரு வருடமும் அதைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை.
அதை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதிலே ஒன்றும் இரகசியமும் இல்லை. சென்ற ஆண்டு பட்ஜெட்டிலே வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கின்றது.
சென்ற ஆண்டு சொன்ன அதே திட்டத்தை இந்த ஆண்டும் சொல்ல வேண்டியதில்லை என்ற அந்த காரணத்தினாலே தான் சொல்லாமல் விட்டிருக்கிறோம். அதிலே ஒன்றும் இரகசியம்
இல்லை. இதற்கு முன்னாலே இருந்த செயலாளர்கள் எல்லாம் மறுப்பு தெரிவித்திருக்கிறார்களா என்று கேட்டார்கள்? எனக்குத் தெரிந்த வரையில் நிச்சயமாக அப்படி இல்லை. கூட்டம் போட்டு விவாதிக்கிறபோது ஒவ்வொருவரும் அவர்களுடைய கருத்துக்களை சொல்வதிலோ, கருத்துக்களை பரிமாறிக் கொள்வதிலோ பின்வாங்கவில்லை. இறுதி முடிவு எடுக்கிறபோதும் அதிகாரிகள்தான் எடுப்பார்கள். அதிகாரிகள் என்றால் தமிழ்நாடு அரசினுடைய அதிகாரிகள் மட்டும் அல்ல.
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல ஐ. டி. பி. ஐ. உலக வங்கி போன்ற நிறுவனங்களில் இருக்கிற அத்தனைபேரும் சேர்ந்துதான் முடிவு எடுப்பார்கள்.
உலக வங்கியினுடைய டீம் கூட இங்கே இரண்டு மூன்று தடவை வந்து சென்றனர். இப்போது கூட தமிழகத்தினுடைய தொழில்துறை செயலாளர் வெளிநாட்டுக்குப் போயிருக்கிறார்கள். அமெரிக்காவிற்கெல்லாம் போயிருக்கிறார்கள். உலக வங்கியோடு இது சம்பந்தமாக விவாதம் நடத்துவதற்காக இப்படி பல்வேறு சட்டத்திலேயும் மத்திய திட்டக் குழுவிலேயும், கடுமையாக விமர்சிக்கப்பட்டு வர இருக்கிற ஒரு நல்ல ப்ராஜக்ட், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அதை வரவேற்க வேண்டும்.
அதற்கு மாறாக ஏதாவது சொல்லி, அது இங்கே வராமல் போய்விடக்கூடாது என்பதினால்தான். . .(குறுக்கீடு)
**கலைஞர் மு. கருணாநிதி :** பத்திரிகைகளில் தவறாக வரக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். நல்ல ப்ராஜக்ட் வர வேண்டும் என்பதை வரவேற்க வேண்டும் என்று சொன்னார்கள். வருகிற ப்ராஜக்ட் நல்ல ப்ராஜக்டாக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
