உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

நமது விளக்கம்

பகுதி 9 · 9 / 15

**முதல்வர்:** ஜனநாயகம் உங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பின்னால் பேசுகின்ற நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பிரதமர் இந்திரா காந்தியின் கடிதம்.

‘ராஜமன்னார் குழு’ அறிக்கை டில்லி போய்ச் சேர்ந்ததாகக் கூடத் தெரியவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். ராஜமன்னார் அறிக்கை அங்கே போய்ச் சேர்ந்து, 22-ஆம் தேதி அன்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் எழுதிய கடிதத்தை இங்கே படிக்கிறேன்.

பிரதமர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு :—

புது டில்லி, ஜூன் 22, 1971.

அன்புள்ள திரு. கருணாநிதி அவர்களுக்கு :

தாங்கள் ஜூன் 15-ஆம் தேதியிட்டு எழுதிய கடிதமும் அதனுடன் அனுப்பிய மைய-மாநில உறவு-ஆய்வுக் குழு அறிக்கையின் பிரதியும் கிடைக்கப் பெற்றேன். உங்கள் அரசு இந்தப் பரிந்துரைகளைப் பரிசீலனை செய்யும் என்று நினைக்கிறேன். இது குறித்து நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் ஏற்கனவே ஆராய்ந்து அறிக்கையினை அளித்திருக்கிறது. மேற்படி அறிக்கையை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

இந்தப் பிரச்சினையில் தங்களுடைய அரசின் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பினால் அவற்றையும் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இது முக்கியமான பிரச்சினை ஆகும். இதுபற்றி எல்லா முதல்வர்களையும் கலந்து பேசுவதாக இருக்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள, இந்திரா காந்தி.

என்பதாக இந்திய முதல் அமைச்சருடைய கடிதத்தில் கூட இது பற்றிப் பரிசீலிப்பதற்கு இந்தியத் தலைமை அரசு தயாராக இருப்பதற்கு அறிகுறி காணப்படுவதைக் குறித்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

காலம் தாழ்த்திக் கடிதத்தை வெளியிட்ட காரணம்.

22-ஆம் தேதி வந்த கடிதத்தை இதுவரையில் வெளியிடாமல் நேற்றையதினம் வெளியிட்டதற்குக் காரணம், 28-ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இருக்கிறதே என்பதற்காகத்தான். முதலில் வெளியிட்டால் ஒருவேளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், இப்படி முதலமைச்சர்களை எல்லாம் கூட்டிப் பிரதமர் பேசுவதா? அப்படியானால் மத்திய அரசு வலுவிழந்து விடாதா? என்ற அளவில் தீர்மானம் வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக வெளியிடாமல் இருந்தேன்.

எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் வாதத் திறமை மிக்கவர். ஆகவே தான் தீர்மானத்தையும் இந்திரா காந்தியின் கடிதத்தையும் ஒன்றுக்குச் சொல்லித் தீர்மானத்திற்குப் பிறகு கடிதம் வந்ததாக இருக்கட்டும் என்று பேசினார்கள். அதை நான் புரிந்துகொண்ட காரணத்தால்தான் கடிதம் வந்த விவரத்தை இங்கே தெரிவித்தேன்.

நம்முடைய மத்திய அரசோடு மாநில அரசுக்கிருக்கின்ற உறவுகள் எந்தெந்த வகையிலிருக்க வேண்டும். அதிகாரங்கள் எப்படியெல்லாம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று

கூறியுள்ள ராஜமன்னார் குழுவினுடைய அறிக்கை, பேரவையிலும், மேலவையிலும் மிக விரைவில் விவாதிக்கப்படும் சமயத்தில் உறுப்பினர்கள் நல்ல பல கருத்துக்களை வழங்க இருக்கின்ற காரணத்தால், நான் அதைப் பற்றி இப்பொழுது விரிவாகப் பேச விரும்பவில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் கூறுகின்ற மாநில சுயாட்சிக் கொள்கையை இன்றையதினம் எதிர்க்கின்ற சில பெரியவர்கள் கூட, ஒரு காலத்தில் சுயாட்சி தேவை என்பதற்கு அவர்கள் பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

நம்முடைய நண்பர் சுவாமிநாதன் அவர்கள் இங்கே பேசுகின்ற போது மாநில அரசு அதிக அதிகாரங்கள் பெற வேண்டுமென்ற கொள்கைக்கு ஆதரவாகப் பேசியது வரவேற்கத் தக்க கருத்தாக இருந்தது. ஆனால் அவருடைய கட்சிக்குள்ளே இது விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்கிறதா என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை.

பெரியவர் கே. சந்தானம் அவர்கள் “சுயராஜ்யா” பத்திரிகையில் ராஜமன்னார் குழுவினுடைய அறிக்கையைப் பற்றி ஆதரித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்திக் கூறி வருகின்ற மாநில சுயாட்சிக் கொள்கைக்கு மூதறிஞர் ராஜாஜி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இவை இரண்டும் ஒரே பத்திரிகையில் வருகின்ற காட்சியை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நண்பர் சுவாமிநாதன் மாநில சுயாட்சிக் கொள்கையை ஆதரித்தும் பேசியிருக்கிறார்.

ராஜாஜிக்குப் பதில் சொல்ல.

ஒருவேளை ராஜாஜி அவர்கள் பார்த்துவிட்டு ஏன் இப்படிப் பேசியிருக்கிறாய் என்று கேட்டால், பதில் சொல்ல, ராஜாஜி அவர்கள் எழுதிய புத்தகமே இருக்கிறதென்று நண்பர் சுவாமிநாதன் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘நமது ஜனநாயகம்’ என்ற புத்தகம், அதிலே சொல்லியிருக்கிறார்.

‘இந்திய தேசிய வாழ்விலும், பண்பாட்டிலும் குடி கொண்டுள்ள பிரிவினைப் போக்குக் காரணமாக, சம அந்தஸ்துள்ள சுயாட்சி உறுப்புகள் அடங்கிய சமஷ்டி யூனியன் உருவாக்கவே நாம் உழைக்க வேண்டும். பிரிவினைப் பாடுகளில்லாத நாடு இந்தியா என்ற கருத்தினாலெழும் தேசபக்தி வேறு. எனவே சமஷ்டி அமைப்பு உருவாவதைத் தவிர்க்க

முடியாது என்பதை நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.’

நேற்று நான் சட்டமன்றத்தில் பேசி, எடுத்துக் காட்டிப் பேசியது ஒரு பகுதி. இன்றையதினம் படித்துக் காட்டுவது ராஜாஜி அவர்கள் சுயாட்சிக்காகவே பாடுபட்டிருக்கிறார் என்பதற்காகத்தான் எடுத்துக் காட்டுகிறேன். இதற்கு ராஜாஜி அவர்கள் சமாதானம் சொல்லலாம். அன்று சொன்னதை இன்று மாற்றிக்கொள்ள எனக்கு உரிமையுண்டு என்று சொல்லலாம். அவருடைய முன்னுரையில் அவர் எழுதியிருப்பதை இங்கே எடுத்து வைக்கிறேன்.

‘இதிலடங்கிய பிரச்சினைகள் பற்றி நான் சொல்லியிருப்பவை யாவும் எள்ளளவும் பட்சபாதமின்றித் தீர்க்க சிந்தனையின் பயனாக அடையப் பெற்ற முடிவுகள் என்பதை வாசகர்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறேன்.’

இது அவர்கள் முன்னுரையில் வெளியிட்டுள்ள கருத்து! ‘நமது ஜனநாயகம்’ என்ற புத்தகத்திலிருக்கிறது. ஒருவேளை நண்பர் சுவாமிநாதனைக் கேள்வி கேட்டால் இது நல்ல ஆயுதமாகவிருக்கும் என்பதற்காக இந்தப் புத்தகத்தின் தலைப்பையும் எடுத்துச் சொன்னேன்.

மத்திய அரசு, மாநில அரசுகளுடைய எல்லா விவகாரங்களிலும் இன்றைய தினம் தலையிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் தலையிட வேண்டிய விவகாரங்களில் தலையிடுவதில்லை. அதைத்தான் நம்முடைய எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் வெகு வேகமாக எடுத்துச் சொன்னார்கள்.