நமது விளக்கம்
பகுதி 10 · 10 / 15
மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏன் ?
காவிரி நதிநீர்ப் பிரச்சினை, மத்திய அரசு என்றைக்கோ தலையிட்டுத் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினை. 1968-ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் வரையில் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடும், தீர்ந்து விடும் என்று சொல்லி, கேரள முதலமைச்சரும், மைசூர் முதலமைச்சரும், தமிழக முதலமைச்சரும் கூடிக் கூடிப் பேசுகின்ற காட்சிகள் தமிழ் நாட்டிலும், அதைப் போலவே டெல்லியிலும், மைசூரிலும் நடந்து நடந்து; கடைசியாகப் பேச்சு வார்த்தை முறிந்து விட்டது என்று பேச்சு வார்த்தைக்கு முன்னிலை வகித்த மத்திய அரசு அமைச்சர் டாக்டர் கே.
எல். ராவ் அவர்களே ஒத்துக் கொண்டு, பேச்சுவார்த்தை முறிந்து விட்டது, இனித் தொடரக் காரணமில்லை என்று கண்டு கொண்ட காரணத்தினால், இதை நடுவர் தீர்ப்புக்கு விட்டுவிடவேண்டுமென்று அவர் சொன்னார். சொன்ன பிறகும் கிட்டத்தட்ட ஓராண்டுக் காலமாகியும் நாள் கடத்தி வருகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டது போல், மைசூரில் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், அதற்காக அப்பொழுது அங்கே சென்ற பிரதமர் இந்திரா காந்தி, நடுவர் தீர்ப்புக்கு இப்பிரச்சினையை விட்டு விடுவதென்று தைரியமாகச் சொன்னார்கள். இப்பொழுது இடையில் ஏன் குறுக்கிட்டு, அவர்கள் நடுவர் தீர்ப்புக்கு அதை விடுவதற்குத் தயங்குகிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை.
நாங்கள் ஒரு காலத்தில் திராவிட நாடு திராவிடருக்கே ஆக வேண்டும் என்ற பிரிவினையைக் கேட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால் நாட்டினுடைய பாதுகாப்பு, சூழ்நிலை இவைகளையெல்லாம் உணர்ந்து அந்தப் பிரிவினைக் கொள்கையையே கைவிட்டு விட்டவர்கள் நாங்கள். இன்றைய தினம் நாங்கள் இந்த அரசுப் பொறுப்பிலிருக்கிறோம். அதிகாரங்கள் எங்களுக்கு அதிகமாகத் தேவை என்று கேட்கிறோம். கேட்கின்ற உரிமை எங்களுக்குண்டு. ஆனால் அந்த அதிகாரங்களைப் பெறுகின்ற வரையில் அந்த அதிகாரங்களுக்குட்பட்டு நடக்கின்ற அடக்க உணர்ச்சியை இந்த அரசு பெற்றிருக்கிறதென்று உங்களுக்குத் தெரியும்.
வீராணம் திட்டத்திற்கு அண்ணா அவர்கள் காலத்தில் கால்கோள் விழா நடத்தினோம். ஆனால் அந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கிட்டத்தட்ட 1¼ ஆண்டுக் காலமாகியது. அனுமதி கிடைக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் தொடங்கலாமென்று நாங்கள் தொடங்கிடவில்லை. ஆனால் இன்றையதினம் மத்திய அரசு, மைசூரில் என்ன நடக்கிறது என்பதை ஏன் மறந்து விட்டதென்று நான் கேட்க விரும்புகிறேன்.
வீராணமாவது கொஞ்சம் பெரிய விஷயம்.
நான் உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இது சின்ன விஷயம். நம்முடைய கோட்டையைச் சுற்றி, கோட்டை மதில், ஏராளமாகப் புல் பூண்டுகள் கிளம்பியிருந்தன. நம்முடைய அதிகாரிகளை வரவழைத்து அந்தப் புல்பூண்டுகளைச் செதுக்கி, அழகான செடிகளை வைக்கக் கூடாதா? வண்ண மலர்களை வளர்க்கக்கூடாதா? என்று கேட்டேன். அதிகாரிகள் தலையைச் சொறிந்துகொண்டு உரைத்தார்கள்:— ‘இந்தக் கோட்டை மத்திய அரசின் ராணுவத்திற்குச் சொந்தம்.
இந்தப் புல் பூண்டுகளைச் செதுக்க அவர்களிடமிருந்து அனுமதி பெறவேண்டும்’ என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்த அன்றையப் பாதுகாப்புத் துறையினுடைய உதவி அமைச்சர் திரு. கிருஷ்ணு அவர்களை நானே நேரில் அழைத்து வந்து கோட்டையைச் சுற்றிக்காட்டிக் கோட்டையின் முகப்புப் பக்கத்தில் முளைத்துக் கிடக்கும் புல் பூண்டுகளைச் செதுக்கிவிட்டு அங்கே நல்ல செடிகளை வளர்ப்பதற்கு எங்களுக்கு அனுமதி தாருங்கள்
என்று கேட்டேன். அனுமதி வழங்குகிறேன் என்று சொல்லி விட்டுப்போனார். அதற்கு ஒரு கடிதம் எழுதியவிட்டு பிறகு இரண்டொரு நினைவூட்டுக் கடிதங்கள் எழுதிய பிறகு சென்னைக்கு வந்திருந்தபோது மீண்டும் ஞாபகப்படுத்திய பிறகு, மத்திய சர்க்காரிடமிருந்து அனுமதி கிடைத்துப் புல் பூண்டுகள் செதுக்கப்பட்டு நல்ல செடிகள் வளர்க்கப்படுகின்றன. அந்தக் காட்சியினை நீங்கள் நாள்தோறும் பார்க்கிறீர்கள். கோட்டையைச் சுற்றியிருக்கிற புல் பூண்டுகளைச் செதுக்க மத்திய சர்க்காருடைய அனுமதியை நாங்கள் நாடினோம்.
ஆனாலும் எங்களுக்கென்று அதிகாரங்கள் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களுடைய அதிகாரத்திற்குட்பட்டு அடக்கத்தோடு நாங்கள் இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு மைசூரின் போக்கை ஏன் கண்காணிக்கவில்லை? திட்டக்குழுவினுடைய ஒப்புதலைப் பெறாமல் இன்றைய தினம் அங்கே அணைகளைக் கட்டிக் கொண்டே போகிறார்கள்.
திரைப்படத்துக்கு அனுமதி மறுப்பு.
ஹேமாவதி, கபினி, ஹரங்கி போன்ற அணைகள் அங்கே கட்டப்படுகின்றன. அதிலே இன்னொரு வேடிக்கை. அதைப் பற்றிப் பேச அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கோட்டையில் நம்முடைய அமைச்சர்கள் அறையில் கூட்டப்பட்டது. அதை அரசு செய்திப்படமாக எடுத்தார்கள். அந்தச் செய்திப் படம் வெளியிடப்படுவதற்காகத் தணிக்கைக் குழுவிற்குச் சென்றது. தணிக்கைக் குழு அந்தச் செய்திப் படத்தை அனுமதிக்க மறுத்து விட்டது. என்ன காரணம் தெரியுமா?
காவிரி நதி நீர் தகராறில் “மத்திய அரசு காலதாமதம் செய்வது குறித்து” ஆராய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டமென்று படத்தில் காட்டப்பட்டது. அதற்குப் பின்னால் ஒரு வரி. அந்த வார்த்தை கூடாதென்று சென்சார் போர்டார் நிராகரித்து விட்டார்கள். அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. இங்கேயிருந்து டெல்லியிலிருக்கின்ற தலைமை அதிகாரிக்கு உடனடியாக அந்தப் படத்தை அனுப்பி அங்கே அப்பீல் செய்தோம். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று மத்திய சர்க்கார் காலதாமதம் செய்து வருகிறது என்பதை எடுத்துவிடவேண்டும் என்றார்.
மத்திய சர்க்கார் காலதாமதம் செய்கின்றது என்ற வார்த்தைகள் இருக்கக் கூடாதென்று வெளியிட அனுமதி மறுத்து விட்டார்கள்.
பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாடு பூராவும் நடந்தது. சென்னையிலும் நடந்தது. நானும் மற்ற கட்சித் தலைவர்களும் சென்னையில் கலந்து கொண்டோம். அதுவும் செய்திப் படமாக்கப்பட்டு சென்சார் போர்டுக்குச் சென்றிருக்கிறது. அதையும் மறுத்து விட்டார்கள்.
இன்றைய தினம் அந்த அளவுக்கு சென்சார் போர்டினுடைய அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசு தாமதம் செய்கின்றதென்று சொல்லக் கூடாதாம்.
ஆனால் ஒரு திரைப்படத்தில் இந்திரா காந்தியைப் போலவே வேடம் போட்டு அந்த அம்மையாரைக் கிண்டல் செய்வதுபோல் படமெடுக்கலாமாம்? அதை இங்கேயிருக்கின்ற சென்சார் போர்டு பார்க்கின்ற போது தணிக்கை செய்தார்களா?
நம்மால் திருப்பிச் செய்ய முடியாதா ?
ஆனால், இன்றைக்கு மத்திய அரசு காலதாமதம் செய்கின்றது என்ற வார்த்தையை அனுமதிக்கவில்லை. ஆக, அவர்கள் அவைகளைப் பற்றிக் கூடக் கவலைப்படவில்லை மத்திய அரசின் அதிகார பீடம் இருக்கிறதே, அதற்கு ஒரு சிறு மாசம் யாரும் கற்பிக்கக் கூடாது என்று கருதுகிறார்கள். அதிலே வெட்கப்படுகிறவர்கள், காலதாமதம் செய்யாமல் இருக்கட்டுமே! காலதாமதமாவதைத் தவிர்க்கட்டுமே!
இவர்கள் ஹேமாவதியில், கபினியில், ஹரங்கியில், பேரணைகள் கட்டும் திட்டத்தைத் தடுக்க முற்படாவிட்டால், நாளைக்குத் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜராஜசோழன் சிலையை வைக்கக் கூடாது என்று சொல்கிறீர்களே, அதே இடத்தில் நாம் இராஜராஜ சோழனுடைய சிலையை வைக்க முடியாது என்று கருதுகிறீர்களா?
அவர்களுடைய பொறுப்பிலிருக்கிற தீவுத் திடலில், அவர்கள் அனுமதி பெறாமலேயே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்க முடியாது என்று கருதுகிறீர்களா? அப்படி அறிவித்துக் கூட்டம் நடத்தினால், நமது போலீசாரை மத்திய அரசின் போலீசார் வந்து விரட்டிவிடுவார்களா? எனக்குப் புரியவில்லை.
இங்கும் ‘இருண்டு’ போகவேண்டுமா ?
நாம் பண்போடு நடந்து கொள்கிறோம். அடக்கத்தோடு நடந்துகொள்கிறோம். அமைதியுடன் நடந்துகொள்கிறோம். பொறுப்போடு நடந்துகொள்கிறோம்! அவைகள் எல்லாம் இழந்து விட்டு, மைசூரைப் போல நடந்து கொள்வதற்கு இங்கேயும் தயாராக இருக்கிறார்கள் என்பதைத்தான் மத்திய அரசுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு நினைவில்லை. அது அஸ்ஸாமோ அல்லது மேற்கு வங்கமோ என்று—இரண்டிலொன்று என்று கருதுகிறேன்
அவர்களுடைய கோரிக்கை நிறைவேறாத காரணத்தால் ஓராண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர நாளினைக் கொண்டாட முடியாது என்று அறிவித்தார்கள்.
அதேபோல, இன்றைய தினம், மைசூரில் எடுக்கப்படுகின்ற கபினி அணையால், ஹரங்கி அணையால், காவிரி வறண்டு போய், தமிழகம் பத்தாண்டுக் காலத்திற்குள் வறண்டு விடுமானால், அப்படி இருண்டுபோகின்ற தமிழகத்தை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்பதைக் காட்டுவதற்காக இந்த ஆண்டு சுதந்திர நாள் இருண்டு போய் விட்டதும் என்று கூறுவதற்கு நம்மாலும் முடியும்!
இவைகளெல்லாம் ஏற்படாதவாறு மத்திய அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் நான் நம்புகிறேன் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வருமென்று.
8-ஆம் தேதியன்று பேரவையிலும், 9-ஆம் தேதியன்று மேலவையிலும் காவிரி நதி நீர்த் திட்டம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பு சாதகமான பதில் அங்கேயிருந்து கிடைக்குமென்று நான் கருதுகிறேன். நான் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இதைப் பற்றியெல்லாம் 7-ஆம் தேதி எல்லாக் கட்சித் தலைவர்களோடும் கலந்து அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவிருக்கிறேன்.
மதுவிலக்குக் கொள்கை.
அடுத்தபடியாக இந்த மாமன்றத்தில் பேசப்பட்ட முக்கியமானது மதுவிலக்குக் கொள்கை பற்றியது. மதுவிலக்குக் கொள்கை இங்கே இருக்கிற நம்மால் மாத்திரம் அல்ல—உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளிலும்—பல்வேறு நாட்டு மக்களாலும், பல்வேறு நாட்டு அரசுகளாலும் சட்ட பூர்வமாக அமல்படுத்தத் திட்டமிட்டுத் தோற்றுப்போய் இருக்கிறது. இதை வரலாற்றுச் சான்றுகள் நிறையக் காட்டுகின்றன.
மற்ற நாடுகளில் மதுவிலக்கு.
அமெரிக்க நாட்டில் 1919-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 16-ஆம் நாள் அரசியல் சட்டத்தையே திருத்தி மதுவிலக்குச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார்கள். பதினொரு ஆண்டு காலம் அமல்படுத்தப்பட்டதில் கடைசியாகக் குற்றங்கள் அதிகமாயின. கள்ள மதுவைத் தடுக்க முடியவில்லை. கள்ளக் கடத்தல் அதிகமாயிற்று. மது
