உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

நமது விளக்கம்

பகுதி 11 · 11 / 15

விலக்கை அமல்நடத்த வேண்டியவர்கள் லஞ்சப் பேராளர்கள் என்று கூறப்பட்டு 1938-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 20-ஆம் தேதி மதுவிலக்குச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

பின்லாந்து நாட்டில் 1907-ஆம் ஆண்டு மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டு 1931-ஆம் ஆண்டு அந்தச் சட்டத்தின் பயனை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. குடிவெறி அதிகமாகி இருப்பதாகவும், குற்றம் புரிவோர் தொகை அதிகமாகி விட்டதாகவும் அந்தக் குழு கூறியது. அந்த முடிவின்படி 1932-ல் அந்த நாட்டில் மதுவிலக்குச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

நார்வே, 1919-ல் மதுவிலக்கைக் கொண்டு வந்தது. அது 1927-ல் ரத்துச் செய்யப்பட்டது.

நியூ பவுண்ட்லாந்து, 1915-ல் மதுவிலக்கை அமல் செய்தது. 1924-ல் அதை ரத்துச் செய்தது.

துருக்கி 1920-ல் மதுவிலக்கை அமல்படுத்தியது. 1924-ல் அதை ரத்துச் செய்தது மாத்திரமல்ல; 1926-ல் அரசாங்கமே அந்த வியாபாரத்தை மேற்கொண்டது.

நான் முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகமானாலும், காங்கிரசானாலும், கம்யூனிஸ்டானாலும், முஸ்லீம் லீக்கானாலும், பி.எஸ்.பி. கட்சியானாலும், தமிழரசுக் கழகம் ஆனாலும், சுதந்திரவானாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் தமிழக அரசைப் பொறுத்த வரையில் மதுவிலக்கு, கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட வேண்டிய ஒன்று என்பதை நாம் யாரும் மறுக்கவில்லை.

அதில் இருவேறு கருத்துக்களுக்கு இடம் இல்லை. ஆனால் அதைச் சட்டபூர்வமாக அமல்படுத்திவிட முடிந்ததா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மத அடிப்படையில் மதுவிலக்கு ....

அன்றே சொன்னேன். முஸ்லீம் மத அடிப்படையில் மதுவிலக்குக் கொள்கையைப் பொன்னேபோல் போற்ற வேண்டிய துருக்கி, சிரியா, ஈராக், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா ஆகிய முஸ்லீம் நாடுகளில் சட்டபூர்வமாக மதுவிலக்கை அமல்படுத்த முடியவில்லை. அங்கெல்லாம் சட்டம் இல்லை என்பதற்காக நாட்டு மக்கள் அத்தனைபேரும் குடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று வாதிடவில்லை. அங்கேயும் தங்களது மத

மார்க்கத்திற்கு விரோதமான வகையில் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உண்மையில் ஆதரவு இல்லை.

**திரு. கே. எஸ். அப்துல் வஹாப்:**—அரேபிய தேசத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது என்பதைக் கூற விரும்புகிறேன்.

**முதல்வர்:**—அரேபிய தேசத்தில் மட்டுமிருந்தால் போதாது என்பது என் வாதம்.

இங்கும் சட்டம் தளர்த்தப்படுவதன் மூலம் இந்தியப் பேரரசு இந்தியப் பூராக முழுமைக்கும் மதுவிலக்கை அமல்படுத்த முன்வருகிற நாள் வரை நாம் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்வது என்பது கூட இல்லை—அதற்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் தமிழ் நாட்டில் இருக்கிற அத்தனை பேரும் குடிகாரர்களாக மாறிவிடுவார்கள் என்று நாம் கூறிட முடியாது. அந்தக் கருத்தைத்தான் முஸ்லீம் லீக் உறுப்பினர் மொய்தீன் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

மதுவிலக்கைப் பற்றி ஆராய்வதற்காக நீதிபதி தேக்சந்த் என்பவர் தலைமையில் மத்திய திட்டக் குழு ஒரு கமிட்டியை 1963-ல் நிறுவியது. இந்தக் கமிட்டி ஏன் நிறுவப்பட்டது என்றால் 1956-ல் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் பிரிக்க முடியாத அம்சமாக மதுவிலக்கு கருதப்படவேண்டும் என்று இந்த அவை கருதுகிறது. எனவே நாடு முழுவதும் தீவிரமாகவும் திறமையாகவும் மதுவிலக்கை அமல்படுத்தத் தேவையான நடைமுறைகளை வகுக்குமாறு திட்டக் குழுவுக்கு இந்த அவை பரிந்துரை செய்கிறது”.

மத்திய அரசால் செயல்படுத்த முடிந்ததா?

1963-ஆம் ஆண்டிலே இந்தக் குழு அமைக்கப்பட்டு, நாடு முழுவதிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளை இக்குழு நடத்தியது. 1963-லே ஓர் அறிக்கையைக் கொடுத்தது; அந்தக் கமிட்டியார் என்ன என்ன சிபாரிசுகளைச் செய்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் முக்கியமான சிபாரிசு காது மருந்துகளில் ஆல்கஹால் இருக்கிறது. ஒரு மாநிலத்தில் மாத்திரம் ஆயிரக் கணக்கான பவுண்டுகள் அந்த மருந்து செலவாவதாகத் தெரிகிறது.

ஒரு சில மாநிலங்களில் அதிக விற்பனையாகிறது. ஆகவே, இதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று சிபாரிசு செய்தது; அடுத்து அளவுக்கு மீறிய ஆல்கஹால் உள்ள ‘டிஞ்சர்’ உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் கமிட்டி சிபாரிசு செய்தது. இவையெல்லாம் மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை.

மருந்துகள் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யவேண்டும் என்று ‘தேக்சந்த் கமிட்டி’ கூறியது. அதையும் மத்திய அரசு காது கொடுத்துக் கேட்கவில்லை. அஸ்வா, அரிஷ்டம் ஆகிய மருந்துகள் முறைப்படி தயாரிக்கப்பட்டால் அதில் 10 முதல் 12 பர்சென்ட் ‘ஆல்கஹால்’ தான் இருக்க முடியும். ஆனால் 80 முதல் 90 பர்சென்ட் வரை ஆல்கஹால் உள்ள அரிஷ்டங்கள், அஸ்வா போன்ற மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. இதற்கு ‘டிரக்ஸ் ஆக்ட்’ திருத்தப்பட வேண்டும், என்று ‘தேக்சந்த் கமிட்டி’ கூறியது.

அது செய்யப்படவில்லை.

கள் குடிக்கக் கட்டுப்பாடுகள்.

அடுத்து, ‘கள்ளச் சாராயத்தைவிடக் கள் ஆபத்து குறைந்தது’ என்று அந்தக் கமிட்டி கூறியது. சில பாதுகாப்புகளுடன் கள்ளை அனுமதிக்கலாம் என்றும் அது கூறியது. கமிட்டியின் குறிக்கோள் மதுவிலக்குதான். ஆனால் இடையில் சில சிபாரிசுகளைக் கூறியது. அவை 5 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள கள்ளை அனுமதிக்கலாம். கள் புளித்து விடாமல் இருக்கக் குளிர்பதனச் சாதனங்களைப் பயன்படுத்தலாம். விற்பனையாகும் இடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும்.

வீட்டிற்கு எடுத்துச் சென்று குடிக்கத் தடை விதிக்க வேண்டும். கள் மீதுள்ள ‘தீர்வை’ குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் கள்ளச் சாராயத்தை நாடிப் போகமாட்டார்கள், எனப் பல சிபாரிசுகளை அந்தக் கமிட்டி செய்தது.

சட்ட அமலும் சாராய விற்பனையும்.

நாடு முழுவதிலும் உள்ள கள்ளச் சாராயத்தின் விற்பனைக் கணக்குகளே அந்தக் கமிட்டி குறிப்பிட்டிருக்கிறது. 1963-64-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் கள்ளச் சாராய விற்பனை 52 கோடி ரூபாய். அதில் மது அருந்துகிற மாநிலங்களில் விற்பனை 9 கோடி ரூபாய். மதுவிலக்குச் சட்டம் அமலில் இருக்கின்ற மாநிலங்களில் கள்ளச் சாராய விற்பனை 43 கோடி ரூபாய். மொத்தம் 52 கோடியில் மது அருந்துகிற மாநிலங்களில் 9 கோடி ரூபாய்; மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் 43 கோடி ரூபாய் விற்பனையாகிறது.

இதில் கள்ளச் சாராயம் மாத்திரமே சேர்க்கப்பட்டிருக்கிறது. இதர மது வகையறாக்கள் சேர்க்கப்படவில்லை. இது அரசாங்கத்திற்கு வராமல் போகிற பணம் என்பதையும் அந்தக் குழு சுட்டிக் காட்டியிருக்கிறது.

மதுவிலக்கும், மக்கள்தொகை பெருக்கமும்.

அடுத்து ‘வெட் ஏரியா’வில் மதுவிலக்கிற்கு முன்பு 100 யூனிட்டுகளாக இருக்குமானால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 20 சதவிகித மக்கள் தொகை அதிகரிப்பதற்கும் இதர நிலைகளுக்கும் பிறகு, அது 130 யூனிட்டாக உயர்ந்திருக்கிறது. ‘டிரை ஏரியா’வில் 100 யூனிட்டாக இருந்து பத்தாண்டுகளுக்குப் பின்பு 90 யூனிட்டாகக் குறைந்திருக்கிறது என்பதையும், இது எல்லாம் கள்ள மது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது எனவும் தேக்சந்த் குழு கூறியுள்ளது.

நாடெங்கும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தந்த விவரங்கள்தான் நான் குறிப்பிட்டவை.

மதுவிலக்கும், காங்கிரஸ் கட்சியும்.

1957-ஆம் ஆண்டும், 1962-ஆம் ஆண்டும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது என்ன அறிக்கைகளை வெளியிட்டார்கள் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

“மதுவிலக்கு நீண்ட காலமாகவே காங்கிரசின் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது; அது நாட்டின் சில பகுதிகளில் அமுலாக்கப்பட்டிருக்கிறது. அதை நாட்டின் மற்றப் பகுதிகளிலும் அமல்படுத்தவும் முற்போக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.”