நமது விளக்கம்
பகுதி 12 · 12 / 15
இது 1957-ஆம் ஆண்டின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
“காங்கிரசின் மதுவிலக்குக் கொள்கை பேணப்பட வேண்டும்; ஊக்குவிக்கப்பட வேண்டும்!”—
இது 1962-ஆம் ஆண்டின் காங்கிரஸ் அறிக்கை.
மதுவிலக்கும், மராட்டிய மாநிலமும்.
1962-ஆம் ஆண்டு காங்கிரஸ் அறிக்கைக்குப் பிறகு மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் அவர்கள் சட்ட சபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். 1963-ல் அதாவது ‘தேக்சந்த் கமிட்டி’ நிறுவப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, மதுவிலக்குக் கொள்கையை மராட்டியம் தளர்த்தத் தொடங்கியது. அப்போது மாநில முதலமைச்சர் பேசுகையில் குறிப்பிடப்பட்டதாவது;
மராட்டிய முதலவர் 1963 டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தது இது:
3·5 சதவிகிதத்துக்கு மேற்படாத போதைப் பொருள் உள்ள குடிவகைகள் தாராளமாகக் கிடைக்கும்.
3·5 சதவிகிதத்துக்கு மேற்படாத போதைப் பொருள் உள்ள கள் தாராளமாகக் கிடைக்கும் என்கிற அளவுக்கு மராட்டிய மாநிலத்தில் மது விலக்கு தளர்த்தப்பட்டது.
மராட்டிய முதலவர் மேலும் கூறியதாவது:
“கடந்த 14 ஆண்டுகளாக மதுவிலக்கை அமல் படுத்தியதில் ஏற்பட்ட அனுபவத்தினால் மேலும் யதார்த்தமான ஒரு கண்ணோட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. மதுவிலக்குக்கு எதிரான பெரும் அம்சம், குடிப்பவர்கள் அல்ல—அவர்கள் பழக்கத்துக்கு இரையானவர்கள். ஆனால் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர்—கடத்தல்காரர்—விற்பனையாளர்கள் இவர்கள்தான் மதுவிலக்குக் கொள்கையின் எதிரிகள்” என்று பேசி, 63-ஆம் ஆண்டு மதுவிலக்குக் கொள்கை மராட்டியத்தில் தளர்த்தப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரசின் கருத்து.
1968-ஆம் ஆண்டு குனஹா நகரில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் தேசம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல் செய்ய ஏழு ஆண்டுக் காலம் அவகாசம் தரவேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது திரு. நிஜலிங்கப்பா அவர்கள்தான் தலைவராக இருந்தார். திரு. சி. சுப்பிரமணியம் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக இருந்தார். திருமதி சுசீலா நய்யார் போன்ற காந்தியடிகளைப் பின்பற்றிய வீராங்கனைகளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் கொண்டுவந்த தீர்மானம் 1968-ல் இருந்து இன்னும் 7 ஆண்டுக் காலத்தில் இந்தியா முழுமையிலும் மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள், மதுவிலக்குப் பிரச்சினையை உணர்ச்சிப்பூர்வமாக அணுகக்கூடாது என்றும், நடைமுறையில் அமல் செய்யும் வகையில் அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் தமிழ் நாட்டிலே உள்ள ஒரு பத்திரிகை எழுதிய தலையங்கத்தைத் தலைவரின் அனுமதியோடு படித்துக் காட்டுகிறேன்.
இந்த நாளிதழ் அன்று என்ன எழுதியது?
“புனாவில் நடைபெறும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்திலும், அதற்கு முன்னால் நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டத்திலும் மதுவிலக்கு பற்றிக்
காரசாரமான விவாதங்கள் நடைபெற்றிருப்பதில் வியப்பில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில் மதுவிலக்கினை ஒரு அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். நமது அரசியல் சட்டமும் கட்டளைக் கொள்கைகள் பகுதியில் அதைத் தெளிவாக வற்புறுத்தியுள்ளது.
ஒன்றைக் கொள்கையளவில் ஒப்புக் கொள்வது வேறு; அதை நடைமுறையில் அமல் செய்வது பற்றி அபிப்பிராய பேதங்கள் எழுவது வேறு.
பூரண மதுவிலக்குக் கொள்கையினை எப்போது அமல் செய்வது, எப்படி அமல் செய்வது என்பதைப் பற்றிக் காங்கிரஸ் மேலிடத்தில் நிலவிடும் கருத்து வேற்றுமையினை யாரும் பெரிதுபடுத்தத் தேவையில்லை.
மதுவிலக்கு என்பது வெறும் ஒழுக்கக் கோட்பாடு மட்டுமல்ல. அதற்குப் பின்னே பொருளாதார விளைவுகளும் உண்டு. எனவே, மதுவிலக்கினை அமல் செய்யும் விஷயத்தில் பல்வேறு ராஜ்ய முதலவர்களும் காட்டியுள்ள தயக்கத்தினை அலட்சியப்படுத்தவோ அல்லது மதுவிலக்கு விஷயத்தில் அவர்கள் தேவையான ஆர்வம் காட்டத் தவறிவிட்டார்கள் என்று விமர்சிப்பதோ அவர்களுக்கு நியாயம் வழங்கியது ஆகாது.
பூரண மதுவிலக்கோ அல்லது பகுதி மதுவிலக்கோ அமலாகும் ராஜ்யங்களிலேகூட அது முழு வெற்றியடைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. உதாரணமாகப் பூரண மதுவிலக்கு நடைமுறையிலிருக்கும் தமிழகத்தில் மது இறக்குவதும், விற்பதும் சட்டப்படி தடைப்படுத்தப்பட்ட காரியங்கள் ஆனாலும், ஆங்காங்கே பரவலான குடிசைத் தொழிலாக அது அமோகமாக நடைபெற்று வருவதைச் சட்டம் கண்ணை மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இப்படி ஒரு சட்டத்தையும் போட்டு, அது மீறப்படுவதைக் கையாலாகாத்தனத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை விட அப்படியொரு சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதே விவேகமான செயலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவிர மதுவின் தீமையையும் ஒழிக்க முடியாமல் அதனால் கிடைக்கும் வருமானத்தையும் இழப்பது, ஒழுக்கம், நிதி ஆகிய இரண்டு முனைகளிலும் பெரு நஷ்டம் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
கெளரவப் பிரச்சினையாகக் கருதிச் சில பல திட்டங்களை மேற்கொள்ளுவதை விட சமுதாயநலனுக்காகச் சாத்தியக் கூறுகளை மனத்தில் கொண்டு திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் வரவேற்கக் கூடியதாகும்.
மதுவிலக்கு கூடாது என்பதல்ல நமது வாதம், ஒழுங்காக அமல் செய்ய முடியவில்லையானால், நிதிநிலை வசதி கருதி அதைக் கைவிடுவதுகூடத் தவறு அல்ல என்பதே நமது நிலை.”
இது ‘நவசக்தி’யின் தலையங்கம். 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதியன்று ‘நவசக்தி’ பத்திரிகையில் எழுதியுள்ள தலையங்கம்.
ஆனால் இன்றைக்கு வேறே எழுதுவார்கள். எனினும் அன்றைக்குக் கைவிட்டுவிடுவது சாலப்பொருத்தம் என்றும், மாநில முதலவர்களே பலர் அலட்சியப்படுத்தும் காரணத்தாலும், ஆர்வம் காட்டவில்லை என்பதாலும் அவர்கள் மீது குற்றம் கூறக் கூடாது என்றும் அன்றைக்கு நவசக்தி பத்திரிகை எழுதியிருப்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
அன்று அண்ணாவுக்கு மாசு தேடியோர் இன்று அண்ணாவைப் பற்றிப் பேசுகிறார்கள்.
அண்ணாவைப் பற்றிச் சொன்னார்கள். அண்ணா வழியிலே வந்தவர்கள், அண்ணாவின் வழியில் முழுக்க முழுக்கப் பின் செல்லுபவர்கள், அதை மீறிப்போகலாமா என்றெல்லாம் கேட்டார்கள்.
அண்ணாவின் ஆன்மா கண்ணீர் விடும். அண்ணாவின் ஆன்மா சபிக்கும் என்று காங்கிரஸ் உறுப்பினர்களும் பேசினார்கள். நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அண்ணா அவர்கள் தீவிரமாக மதுவிலக்கை அமல் படுத்துவதாகச் சொன்ன போது குனஹா நகர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், சட்டமன்றத்தின் முன்னாள் கொறடா என்ன பேசினார் தெரியுமா?
“குற்றம் செய்பவர்கள் கைது செய்யப்படக்கூடாது, அல்லது கோர்ட் முன் தாக்கல் செய்யப்படக்கூடாது என்று தமிழக முதன் மந்திரி உத்தரவிட்டுள்ளதாக” அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் குற்றஞ் சாட்டினார்.
மதுவிலக்குக் குற்றம் செய்பவர்கள் கைது செய்யப்படக் கூடாது அல்லது கோர்ட் முன் தாக்கல் செய்யப்படக்கூடாது என்று தமிழக முதன் மந்திரி (அப்பொழுது அண்ணா முதலமைச்சர்) உத்தரவிட்டுள்ளதாகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சொன்னார். அண்ணா தீவிரமாக மதுவிலக்கை அமல்படுத்துவதாகச் சொல்வதற்காக அவருக்குப் பரிசாக அந்தப் பேச்சு அமைந்திருந்தது!
