உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

நமது விளக்கம்

பகுதி 13 · 13 / 15

இப்பொழுது வேண்டுமென்றே அண்ணாவை இழுக்கிறார்கள். அண்ணாவின் கொள்கையை மீறி விட்டீர்கள். ‘நீ யார்?’ என்றெல்லாம் டாக்டர் ஹாண்டே அவர்கள் கேட்டார்கள்.

நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இதே மாமன்றத்தில் 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி எங்கள் தலைவர் அண்ணா அவர்கள் ஐந்தாண்டுக்காலத்தில் தமிழகத்திலுள்ள அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் தமிழ்தான் பாடமொழியாக இருக்கும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

அந்தத் தீர்மானத்தை நாங்கள் அமல் படுத்துவதற்காகச் செயல் வடிவத்திற்குக் கொண்டு வரக்கூடிய நேரத்தில் எழுந்த கிளர்ச்சிகளை நீங்கள் யாரும் அறியாதவர்கள் அல்ல.

அதற்காக ‘லட்சுமணசாமி முதலியார் கமிட்டி’ போடப்பட்டது. அண்ணா அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்குப் புறம்பாகத் தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் தமிழே பாட மொழியாக இருக்கும் என்பதற்கு மாறாக—லட்சுமணசாமி முதலியார் சிபாரிசின் அடிப்படையிலே இன்றைய தினம் அரசுக் கல்லூரிகளில் கூட ஆங்கிலத்தைப் பாட மொழியாக விரும்புகிறவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிலையில் வசதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், அண்ணா அவர்கள் காலத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை என்ன செய்தீர்கள் என்று டாக்டர் ஹாண்டே அவர்கள் கேட்க வேண்டாமா?

கேட்கவில்லை, காரணம், அவருக்குச் சாதகமான விஷயம்.

அண்ணா அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள்; கால வேறுபாடு, கால மாறுபாடு, நாட்டு நிலைகளை உணர்ந்து அந்தந்தக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முடிவெடுத்து, அந்தத் தீர்மானத்தைக் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுதும்கூட மதுவிலக்கை ஒத்தி வைத்திருக்கிறோம் என்றுதான் சொல்கிறோம்.

சுதந்திராக் கட்சியின் சார்பிலும் சிலர் மதுவிலக்கை ரத்து செய்வதை வரவேற்கிறார்கள். சாதிக் அலி காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும் மேலவையிலே வரவேற்றிருக்கிறார். கீழவையில் எதிர்க்கிறார்கள். மேலவையில் திரு ஈசுவர மூர்த்தி அவர்கள் வரவேற்றுப் பேசியிருக்கிறார்.

கடைசியாக நம்முடைய திரு பொன்னப்ப நாடார் அவர்களும் என்ன பேசினார்கள்? மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்ற கருத்தைப் பேசிவிட்டுக் கடைசியாக “சட்டத்தைப் போடுங்கள். ஜாக்கிரதையாக இருங்கள்” என்று சேலத்தைச் சுட்டிக் காட்டி, ஒத்தி வைத்ததற்கு அவரும் அனுசரணையாகத்தான் வந்தார்........

**திரு. ஆர். பொன்னப்ப நாடார்:**—தலைவர்களே, நான் அனுசரணையாக இல்லை என்று தன்னிலை விளக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு இருக்க வேண்டு

மென்று பரிபூரணமாக நம்புகிறேன். அதற்குக் களங்கம் கற்பிக்க வேண்டுமென்று முதலமைச்சரவர்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

**முதல்வர்:**—களங்கம் கற்பிக்கவும் மாட்டேன். காட்டிக் கொடுக்கவும் மாட்டேன்.

**டாக்டர் ஹாண்டே:**—இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் அண்ணாவின் பாதையிலிருந்து மாறுவதேனென்பதுதான் எனது கேள்வி. இது தவிர மதுவிலக்கைத் தளர்த்துவதற்கு ஆதரவாக முதல்வர் அற்புதமான உரை ஆற்றியிருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மாறுதல் என்ன என்பதே என் கேள்வி.

அண்ணா வழி என்ன?

**முதல்வர்:**—அண்ணா வழி ஒரு நல்ல ஜனநாயக வழி. அதைப் பின்பற்றுபவர்கள் நாங்கள். ஜனநாயக வழிகளில் ஒரு காலத்திலே சொல்லப்பட்ட கருத்துக்கள் வேறொரு காலத்திலே பரிசீலிக்கப்படலாம். அண்ணா அவர்கள் திராவிட நாடு கொள்கையில் அழுத்தந் திருத்தமாக இருந்தார்கள். பிறகு நாட்டின் நிலை, இந்தியாவின் பாதுகாப்பு இவைகளைக் கருத்திலெடுத்து திராவிட நாடு கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்காகப் பொதுக் குழுவைக் கூட்டினார்கள்.

பொதுக்குழு ஆராய்ந்து, பரிசீலித்து, பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுவிட வேண்டுமென்று கூறியது. அண்ணா அவர்கள் ஜனநாயகத்திற்குத் தலை வணங்கி அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அதைத்தான் நாங்களும் கடைப்பிடித்து வந்தோம்; மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று பொதுக்குழு விரும்பியது பொதுக்குழு அமைச்சரவைக்கு இட்ட கட்டளைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

அண்ணா அவர்கள் ஜனநாயகத்திற்குத் தலைவணங்கினார்கள். நாங்களும் ஜனநாயகத்திற்குத் தலைவணங்குகிறோம். ஆகவே, இது அண்ணா வழி தானே தவிர, வேறல்ல.

**டாக்டர் எச். வி. ஹாண்டே:**—அண்ணாவிற்கு மதிப்பளிக்க வில்லை, பொதுக்குழுவிற்குத்தான் மதிப்பளித்திருக்கிறார்கள்,

**முதல்வர்:**—அண்ணா வணங்கிய பொதுக் குழுவிற்கு நாங்கள் தலைவணங்குகிறோம். நாங்கள் கல்வித் தோட்டத்திற்கு மாத்திரம் தலைவணங்குபவர்கள் அல்ல.

**டாக்டர் எச். வி. ஹாண்டே:**—அண்ணாவின் பெயரைச் சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்கள்.

(பல உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார்கள்.)

**பேரவைத் தலைவர்:**—அதை அவை நடவடிக்கைக் குறிப்பிலிருந்து எடுத்து விடலாம்.

**முதல்வர்:**—தயவுசெய்து வேண்டாம். அண்ணாவின் பெயரைச் சொல்லி நாங்கள் ஊரை ஏமாற்றுகிறோம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். நாங்கள் ஊரை ஏமாற்றுகிறோமா, இல்லையா என்பது ஊருக்குத் தெரியும். ஊறு வாயர்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை.

(‘ஷேம், ஷேம்’ என்ற குரல்கள்.)

**டாக்டர் எச். வி. ஹாண்டே:**—சொல்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

(பல உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டு எழுந்து நின்றார்கள்.)

**பேரவைத் தலைவர்:**—எல்லாரையும் அமருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுவதைச் சபைக் குறிப்பிலே இருக்கலாம் என்று முதலமைச்சரவர்கள் பெருந்தன்மையுடன் கூறியதால், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று டாக்டர் ஹாண்டே அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அவர் சொல்லியதை ‘என்ன யோக்கியதை’ என்று சொல்லியதைத் திரும்பப் பெற வேண்டும்.

**டாக்டர் எச். வி. ஹாண்டே:**—எதை வாபஸ் வாங்க வேண்டும்?

**பேரவைத் தலைவர்:**—‘என்ன யோக்கியதை இருக்கிறது’ என்று சொல்வதை இந்த மன்றத்தின் மரபுக்கு முரணான வார்த்தையை வாபஸ் வாங்க வேண்டும்.