உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

நமது விளக்கம்

பகுதி 14 · 14 / 15

**அமைச்சர் அன்பழகன்:**—கனம் : உறுப்பினர் அவர்கள் முதலில் அவைத் தலைவருக்குப் பணிய வேண்டும். அதன் பின்னரே, அவர் விளக்கம் எதுவும் தர விரும்பினால் அதைத் தனிப்பட்ட முறையிலே அவைத் தலைவரிடம் தெரிவிக்கலாம். அவைக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. அவர் தன் உணர்ச்சிகளை இங்கே பரிமாற வேண்டியதுமில்லை.

**டாக்டர் எச். வி. ஹாண்டே:**—‘என்ன யோக்கியதை இருக்கிறது’ என்று சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஆனால்............

யார் உணர்ச்சியையும் புண்படுத்தமாட்டோம் !

**முதல்வர்:**—நான் மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வது நல்லது அல்ல என்ற கருத்தை-உணர்ச்சியை எப்பொழுதும் புண்படுத்த விரும்பவில்லை.

டாக்டர் ஹாண்டே போன்றவர்கள் வேண்டுமானால் எங்கள் உணர்ச்சிகளைப் புண்படுத்த விரும்பலாம். ஆனால் நான் யாருடைய உணர்ச்சியையும் புண்படுத்த விரும்பவில்லை.

மதிப்பிற்குரிய திருப்பூர் மொய்தீன் அவர்கள் பேசினார்களே, அது திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க வேண்டுமென்று சொல்லப்பட்ட கருத்தா? அல்ல! தமிழரசுக் கழகத்தின் சார்பிலே சொல்லப்பட்டதும் முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க வேண்டுமென்று சொல்லப்பட்ட கருத்தா? பி.சோ. கட்சியினர் கூறிய கருத்து முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க வேண்டுமென்று சொல்லப்பட்ட கருத்தா? அல்ல!

அவர்களெல்லாம் உள்ளபடியே மதுவிலக்கில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவேதான் உணர்ச்சி பூர்வமாகப் பேசினார்கள். அந்த உணர்ச்சிகளுக்கு நான் என்றைக்கும் மதிப்பளிக்கத் தயாராக இருக்கிறேன்.

அதே நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதற்குத் தயாராகிக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு அண்ணாவின் வழியைப் பின்பற்றுகிறோம் என்று சொன்னால்—அண்ணாவின் வழி ஜனநாயக வழி; அந்த ஜனநாயக வழியைப் பின்பற்றுகிறோம். எந்தக் கருத்தையும் பொதுக் குழுவில் வைத்துப் பொதுக் குழுவின் கட்டளையை ஏற்றுக் கொள்வதுதான் அண்ணாவின் வழியாகும்.

அதே வழியைப் பின்பற்றித்தான் இந்தக் கொள்கையைப் பற்றிப் பொதுக் குழுவின் முன்னால் வைத்து ஆய்ந்து, பொதுக்குழுவின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே இது அண்ணாவின் வழியா, அண்ணாவின் வழியா என்று கேட்டால் இந்தியாவில் இருக்கிற காங்கிரஸ் முதலமைச்சர்கள் மதுவிலக்கை ரத்து செய்து விட்டதால் அவர்கள் எல்லாம் காந்திய வழியில் நம்பிக்கையற்றவர்கள் என்று அர்த்தம்?

மதுவிலக்கில் விதிவிலக்கு

அன்று திரு சி. சுப்பிரமணியம் அவர்கள் ‘சில பேருக்காவது மதுவிலக்கில் இருந்து விதிவிலக்கு செய்தாக வேண்டும். இராணுவ வீரர்களுக்கு மது கிடைக்கச் செய்யவேண்டும். இதில் எல்லாம் காந்தியைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு காலத்தில் காந்தியார் இராணுவமே வேண்டாமென்று சொன்னார்கள். இராணுவமே இல்லாமல் இந்தியா வாழ முடியுமா? ஆகவே, மது அருந்தும் உரிமைகள் இராணுவத்திற்கு அளித்தாக வேண்டும்’ என்று குல்ஹாபூரில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டிலே பேசினார்.

இவர்கள் எல்லாம் பழைய காங்கிரசாக இருந்தபோதுதான் மராட்டியத்திலே மதுவிலக்கு ரத்துச் செய்யப்பட்டது. மைசூரிலே மதுவிலக்கு ரத்துச் செய்யப்பட்டது. ஆந்திராவிலே மதுவிலக்கு ரத்துச் செய்யப்பட்டது. வேறு எந்த மாநிலத்தில் மதுவிலக்கு ரத்துச் செய்யப்படாமல் இருக்கிறது?

அவர்கள் எல்லாம் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் அவர்கள் காந்திய வழிக்குப் புறம்பாக, காந்திக்கு மரியாதை தரக்கூடாது என்று செய்தார்களா?

அண்ணா எங்களை விட்டுவிடமாட்டார்!

அந்த அளவிலே இந்த அரசை, இந்த அரசில் இருக்கும் அமைச்சர்களை, அண்ணாவால் தயாரிக்கப்பட்ட எங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி எங்கள் மீது குற்றஞ்சாட்ட விரும்புகிறார்கள். அதற்கும் எங்கள் அண்ணாவைப் பயன்படுத்தி எங்களை ஒழித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். எங்கள் அண்ணன் எங்களை அவ்வளவு சாதாரணமாக விட்டுவிடமாட்டார்.

அவலங்களை நிறுத்தத்தான் ......!

கடைசிப் பகுதியை அவலம் (டிராஜடி) என்றார்கள். மதுவிலக்கு அமலில் இருந்தபோது எவ்வளவு அவலங்கள் நடந்திருக்கின்றன?

இதே சென்னையில் 7-8-1967 அன்று வார்னிஷ் குடித்து 113 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 51 பேர் இறந்தார்கள்.

காஞ்சிபுரத்தில் 145 பேர் வார்னிஷ் சாப்பிட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 24 பேர் இறந்தார்கள்.

செங்கற்பட்டில் 151 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 14 பேர் இறந்தார்கள்.

வாலாஜாபாத்தில் 84 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 14 பேர் இறந்தார்கள்.

அந்த அவலங்களை நிறுத்தத்தான் இந்த ‘டிராஜடி’ என்றால், நான் இது ‘டிராஜடி’ என்பதை உள்ளபடியே ஏற்றுக் கொள்கிறேன்.

தோல்வியை ஒத்துக்கொள்கிறோம்.

மதுவிலக்கு தோல்வியுற்று விட்டது. அந்தச் சட்டம் இங்கே வெற்றிகரமாக நடைபெற முடியவில்லை என்பதை இதற்கு முன் இருந்த அமைச்சர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். நாங்கள் அதைத் தாராளமாக ஒத்துக் கொள்கிறோம்.

அண்ணா உயிரோடு இருந்த நேரத்திலே தென்னை மரத்திலிருந்து பதநீர் இறக்குவதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் அது பதநீராக இறக்கப்படாமல் கிட்டத்தட்ட கள்ளைப் போன்று இறக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட மதுவிலக்கை ரத்துச் செய்தது போன்றது தான் இது. இதை அனுபவத்தில் கண்டதால் நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் அந்த அனுமதியை ரத்துச் செய்து ஓர் உத்தரவு போட்டேன். உடனே அத்தனைபேரும் கோர்ட்டிற்குப் போனார்கள். அந்த உத்தரவை அமல் செய்ய முடியவில்லை.

இப்படிப்பட்ட நிலைமைகள் வளர வளரத்தான் வேறு வழியில்லாமல் இந்த முடிவிற்கு வந்திருக்கிறோமேயல்லாமல் மாண்புமிகு உறுப்பினரின் உணர்ச்சிக்கு நாங்கள் கட்டுப்படாதவர்கள் அல்ல. யாருடைய உணர்ச்சிகளையும் நாங்கள் மதிக்காதவர்கள் அல்ல.