உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

நமது விளக்கம்

பகுதி 15 · 15 / 15

கள்ளைப் பற்றிக் கம்பராமாயணம் !

சுதந்திராக் கட்சியின் சார்பில் நம்முடைய பெரியவர் சா. கணேசன் வெகு உருக்கமாகப் பேசினார். வள்ளுவர் பிறந்த நாட்டிலே குடி இருக்கலாமா என்று கேட்டார்கள். வள்ளுவர் பிறந்த நாட்டிலேதான் கம்பர் இராமாயணம் எழுதியிருக்கிறார்.

கம்ப இராமாயணத்திலே கம்பர், மாதர்களும் குடித்தார்கள் என்று எழுதியிருக்கிறார். வள்ளுவர் பிறந்து குறள் எழுதியதற்குப் பிறகு தான் கம்பர் இந்த நாட்டிலே பிறந்து இராமாயணத்தை எழுதியிருக்கிறார்.

குறளைப் படித்து அறிந்த கம்பர் எத்தனையோ இடங்களில் இராமாயணத்தில், மக்கள் கள்ளைக் குடித்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதையும் இலங்கையிலே இருந்த அரசர்கள் தான் மது அருந்தினார்கள்; மற்றவர்கள் அல்ல என்று வாதிக்கக்கூடும். மிதிலாபுரியிலும் குடித்தார்கள். கம்பர் பாடுகிறார்:—

என்று கம்பர் பாடியிருக்கிறார். எனக்குப் பார்த்துத்தான் படிக்கத்தெரியும்.

தமிழ்நாட்டிலேதான் கம்பர் அயோத்தியை கண்டார்; மிதிலையையும் கண்டார் என்று சொல்கிறார்கள். கம்பர் ராமனை மாத்திரம் விடுதலை செய்துவிட்டார். வால்மீகி ராமனை குடியிலிருந்து விடுதலை செய்தார். அயோத்தியாபுரி, மிதிலையை விடுதலை செய்யவில்லை.

தசரதன் மிதிலைக்குப் புறப்பட்ட பொழுது, வழியில் சந்தித்த பலர் “மதுக் கொண்டு மாந்தர் மடவாரில் ஓதை” என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

தசரதனுடன் சென்ற அயோத்திச் சேனைகள் கள்ளுண்டு, இன்பம் அனுபவித்து மகிழ்ந்தனர் என்று உண்டாட்டுப் படலம் கூறுகிறது. வள்ளுவர் எப்படியோ அதேபோல ஆற்றலுள்ள கம்பர் பார்த்தார்; அந்த நிலையை எடுத்துச் சொன்னார்.

கம்பரே சொல்கிறார். ஆகவே கொள்கை ரீதியில் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறவில்லை. ஆனால் நிலைமைகளை எடுத்துச் சொல்கிறேன். இந்தியாவில் மட்டுமல்ல அனைத்து உலகிலுமே தீமையை உணர்ந்து முயன்று பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை.

இங்கிலாந்தில் உள்ளபடி இங்கும் செய்யலாமே !

சுதந்திராக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகப் போற்றப் படுகிறவரும் சிறந்த மேதையுமான பேராசிரியர் எம். ரத்தின சாமி எம். பி. அவர்கள் ஒரு கட்டுரையை எழுதி, அதை நம்முடைய சுகாதார அமைச்சருக்கும், தொழில் அமைச்சருக்கும், சட்ட அமைச்சருக்கும், அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கட்டுரையில் அவர் என்ன குறிப்பிட்டிருக்கிறார்? “நம் நாட்டுக் கள்ளுக்கடை அசுத்தம் மலிந்தது. வசதி

குறைந்தது. அதற்கு மாறாக இங்கிலாந்திலுள்ள மதுக் கடைகளில் மேஜை, பெஞ்சு போன்ற வசதிகள் உண்டு. சுவையுள்ள சிற்றுண்டியும் அங்குக் கிடைக்கும். குடித்து விட்டு மட்டும் வெளியே வருபவனால் ஆபத்துகள் விளையலாம். ஆனால் குடியோடு, சிற்றுண்டி சாப்பிட்டு, நல்ல சூழ்நிலையிலிருந்து வீட்டுக்கு வெளிவருபவனால் ஆபத்துக் கிடையாதாம். அது மட்டுமே மாற்றம். இங்கிலாந்தில் உள்ளதை ‘மதுக்கடை’ என்று சொல்லுவதற்குப் பதில் ‘காலம் போக்கும் விடுதி’ என்று அழைப்பதே பொருந்தும்.

அரசு நிதி வசூலிப்பதில் மட்டும் கண்ணோட்டம் செலுத்தாமல் மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்” என்று கூறிவிட்டு “மதுவிலக்கை ரத்துச் செய்தாலும் செய்யாவிட்டாலும் குடிப்பவன் குடித்துக் கொண்டேதான் இருக்கிறான். நல்ல சரக்குக் கிடைக்கா விட்டால் கண்டதையெல்லாம் குடிக்கிறான். அவதியுறுகிறான். திரு. ராஜகோபாலாச்சாரியார் கள்ளுக்கடையைத் திறந்தால் மனைவியை அடிக்கும் குற்றம் பெருகும் என்கிறார்.

குடிக்காதவன் மட்டும் மனைவியை அடிக்காமலா இருக்கிறான்? பெருவாரியான குடியர்கள் மனைவியை அடிப்பதில்லை. ஆம். சட்டம் என்பது இந்தப் பெருவாரியான எண்ணிக்கையினரது நலனுக்காக அமைதல் வேண்டும்.” என்றும் பேராசிரியர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இன்னும் காங்கிரஸ் கட்சி தரப்பில் எந்த அடிப்படையில் பேசினார்கள்! ஏதோ தொலையட்டும் மதுவிலக்கை வரவேற்கிறேன் என்று நண்பர் ஈஸ்வரமூர்த்தி எடுத்துச் சொன்னார் என்றால், இருக்கும் நிலைகளை ஆராய்ந்து பார்த்துச் செய்கிறோமேயல்லாமல் வேறு அல்ல. ஏதோ மதுவிலக்குக் கொள்கையில் எங்களுக்குப் பற்றுப்போய்விட்டது என்று தயவு செய்து யாரும் கருத வேண்டாம். நாம் நியமித்த காவல்துறை கமிஷன், நாம் ஆராயச் சொல்லாவிட்டாலும் கூட ஒழுக்கங்கள் எப்படியெல்லாம் குறைகின்றன என்பதற்குச் சில சான்றுகளைச் சொல்லி அந்த அறிக்கையில் மதுவிலக்குப் பற்றியும் சில குறிப்புகள் எழுதியுள்ளனர்.

அப்போது காவல் துறைக் கமிஷன் உறுப்பினராக இருந்த சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் மாத்திரம் மாறு பட்ட குறிப்பை எழுதியுள்ளார். மற்றவர்கள் எல்லாம் இருக்கும் நிலைகளைப் படம்பிடித்துக் காட்டி எழுதியிருக்கிறார்கள். ஆகவே அவைகளை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது என்று உங்களை மிகுந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைக்கு 1967-ஆம் ஆண்டிலிருந்து மதுவிலக்குக் குற்றத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டவர்கள் தொகை நமக்குத் தெரிகிறது. இந்த ஆண்டு மாத்திரம் இந்தக்

குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர். இன்றைக்குச் சிறையில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 2,000 பேர். அதில் 164 பேர் பெண்களும் இருக்கிறார்கள். (கம்ப ராமாயணத்தைப் பின்பற்றியவர்கள்.)

பெர்மிட்டுகள் பெற்றவர்களில் பெண்களும் இருக்கிறார்கள். ஏறக்குறைய 150 பெண்கள் பெர்மிட் பெற்றிருக்கிறார்கள். மதுவைக் குடிக்கிற நேரத்தில் வாய்க் கமழுகிற மணத்தை நான் அறியாதவன் அல்ல. எல்லோரையும் சொல்லவில்லை. சிலரிடையே அந்த மணம் கமழ்வதைக் காணாதவன் அல்ல. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை. கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார்கள் என்றால் அதில் கைது செய்யப்படாமல் தப்பியவர்கள் எத்தனை பேர்?

ஒரு வழக்கில் 10 பேர் என்றாலும், போலீஸ் இலாகாக் கணக்குப்படி 27 லட்சம் பேர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரிஷ்டம் சாப்பிட்டோ, கள்ளச் சாராயம் காய்ச்சியோ, வேறு போதைப் பொருள்கள் சாப்பிட்டோ லட்சம் பேர் அந்தக் குற்றத்தைச் செய்கிறார்கள். அவர்கள் கள்ளால் வர வேண்டிய வருமானம் நமக்கு வரவில்லை. யார் யாருக்கோ போய் விடுகிறது.

வேதனையான முடிவு.

ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் என்று கணக்கிட்டால் மாதம் ஒன்றுக்கு ஒன்றேகால் கோடி அல்லது ஒன்றேமுக்கால் கோடி! ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ரூ. 20 கோடி வருமானம். இந்த வருமானம் எங்கே போகிறது? எங்கேயோ போகிற வருமானம் அரசுக்கு வரட்டும் என்ற முடிவே தவிர அவர்களைத் திருத்த முடியவில்லை.

இங்கு குன்றக்குடி அடிகளார் அவர்களும், திரு எம். சங்கரலிங்கம் அவர்களும் பேசும்பொழுது குறிப்பிட்டார்கள். மதுவைச் சாப்பிட வேண்டாம் என்று அறிவுரை செய்ய வேண்டும், மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று.

நண்பர் ஆறுமுகசாமி குறிப்பிட்டது போல், பல ஆண்டுகள் மதுவிலக்குப் பிரச்சாரம் சரிவர நடைபெறாமல் இந்த அளவில் தீமைகள் ஏற்பட்டன. ஆகவே மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டாலும் அதன் விளைவு, தீமைகள், அதிகக் குடியால் ஏற்படக் கூடிய தீமைகள் இவைகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில் இந்த அரசு முனைந்து நிற்கும். அதற்

காக முனைந்து நிற்பவர்களுக்கு நிச்சயமாக ஆக்கம் அளிக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உறுப்பினர்களின்—தோழமைக் கட்சி நண்பர்களின்—உணர்ச்சியை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். அவர்களில் சிலபேர் என்னைக் கெஞ்சிக் கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மன்றடிக் கேட்பதாகக்கூடச் சொன்னார்கள். அவர்களே எல்லாம்விட நான் வயதில் சிறியவன். அப்படி மன்றடிக் கேட்டதை, கெஞ்சிக் கேட்டதைத் தயவுசெய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆகவே மிக உணர்ச்சியுடன் பேசியவர்களைக் கேட்டுக்கிறேன். இது உங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, உங்களுக்கிருக்கிற நெஞ்சை உதறித்தள்ளிவிட்டு, வேண்டுகோளை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டு, நீங்கள் யார் சொல்ல, நான் யார் கேட்க, என்கிற அகந்தையோடு அல்ல, மிகுந்த வருத்தத்தோடு, மிகுந்த வேதனையோடு, இருக்கிற நிலைமைகளை எண்ணி இந்த முடிவைத் தவிர வழி இல்லை என்ற காரணத்தால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம்.

அதுவும் ஒத்தி வைத்திருக்கிறோம்.

ஆகவே, அனைவரும் சேர்ந்து இந்திய அரசைக் கட்டாயப் படுத்தவும், இந்தியா முழுமைக்கும் நீங்கள் மதுவிலக்குத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு 1956-ல் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்களே அதை அமல்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்ளவும், அது இந்தியாவில் அமலாக்கப்படுகின்றவரையில் ஒத்தி வைப்பது தவிர வேறு வழியில்லை என்று சொல்லி, இந்த ஒரு விஷயத்தில் உங்கள் வேண்டுகோளை ஏற்க முடியாமல் இருப்பதற்கு மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இந்த நிதிநிலை அறிக்கையின் பேரில் பல கருத்துக்களை எடுத்துக் கூறிய உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து, இடையில் சூடு ஏற்பட்டாலும் அந்தச் சூட்டைத் தமிழ்ப் பண்பின் காரணமாக நிச்சயமாக மறந்துவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, உங்களுக்கெல்லாம் நன்றி கூறி அமர்கிறேன். வணக்கம்.