நமது விளக்கம்
பகுதி 8 · 8 / 15
வால் மாத்திரம் பாக்கி !
ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவன் பாடத்தைக் கவனிக்காமல் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். சுவரில் ஒரு சிறிய வளை. அதில் ஓர் எலி நுழைந்து கொண்டிருந்தது. ஆசிரியர் “நான் சொன்னதெல்லாம் நுழைந்ததா?”
என்று கேட்டார். “வால் மாத்திரம் பாக்கி” என்று அவன் சொன்னான்.
அதைப்போல் ராஜமன்னார் அறிக்கையிலே அவர்கள் எவ்வளவற்றையும் விட்டு விட்டு, முதல் பக்கத்திலே வெளியிடப்பட்டுள்ள முதலமைச்சருடைய படத்தை மாத்திரம் சாட்டி, இது தேவையா? ‘பர்சனலிடி கல்ட்’ வளருகிறது? என்று குற்றம் சாட்டி, இது ஏதோ ஆளும் கட்சியில் உள்ளவர்களே கூட அந்த உணர்ச்சியில் இருக்கிறார்கள் என்பதுபோல் எல்லாம், இங்கேயும் ஏதாவது நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு அவர்கள் பேசினார்கள்.
‘பர்சனலிடி கல்ட்’ தி. மு. க. வில் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை ‘பர்சனாலிட்டி கல்ட்’ இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர், இவரை விட அவர் பெரியவர், அவரைவிட இவர் பெரியவர் என்று பார்க்கும் உணர்ச்சியை வளர்த்துக்கொண்டதே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்திலே
இருக்கிற தலைவரிலேயிருந்து தொண்டர்கள் வரை நாங்கள் ஒரே குடும்பம் என்று எண்ணி, அண்ணன்-தம்பிகளாகப் பழகி வருகிறவர்கள். ஆகவே இங்கே தனியார் தோத்திரம், தனியார் துதி என்பதற்கெல்லாம் எள்ளளவும் இடமில்லை என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் என்னுடைய அருமை நண்பர் வீராசாமி அவர்கள் மிகுந்த சிரமப்பட்டுப் புத்தகங்களைக் கொண்டு வந்து காட்டி, அதிலே காமராஜர் படம் இல்லையா? நேரு படம் இல்லையா? என்று கேட்டார்கள்.
டாக்டர் ஹாண்டே விரும்பியது அது அல்ல. டாக்டர் ஹாண்டே பேசும்போது இப்படிச் சொன்னார்—நேரு, காமராஜர் படம் போடப்பட்டது; அதையும் தான் எதிர்த்திருக்கிறோம்; ஆகவே எதிர்க்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே அவர் விரும்புகிற படத்தைக் காட்ட விரும்புகிறேன்.
முதலமைச்சராக இருந்தபோது ... ... ... ...
“மெட்ராஸ் இன்பர்மேஷன்” என்ற நமது சர்க்கார் பத்திரிகையில், 1952-ஆம் ஆண்டு ராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது வெளிவந்த படம் இது. பர்சனலிடி கல்டா? இல்லையா? எளியேனுக்குத் தெரியாது.
(அவையில் மேற்படி படத்தை எடுத்துக்காட்டினார் முதல்வர்).
அது மாத்திரம் இல்லை. புதியதாக மாநில கவர்னர் வருகிறார்; அந்த நேரத்தில் கவர்னர் படத்தை முதலில் போட்டுவிட்டு அடுத்துப் போடப்பட்ட படம் ராஜாஜியின் படம்தான். இது ‘பர்சனலிடி கல்டா’ இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
கலைமகள், கல்கி போன்ற பத்திரிகைகளில், அதிலும் முக்கியமாக அவருக்குத் தொடர்புடைய, கல்கியில் அவர் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றுக் கொண்ட போது “அரியாசனத்தில் ஜனக மகாராஜர்”, “ஜனக ராஜரிஷி” என்பதாக எல்லாம் வருணிக்கப்பட்டது.
ராஜாஜியைக் கடவுளாக்கிய கதை !
அதுமாத்திரம் அல்ல. 1952-ஆம் ஆண்டு இந்த மன்றத்திலே ஒரு நம்பிக்கைத் தீர்மானம் ராஜாஜி அவர்களால் கொண்டுவரப்பட்டபோது, நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது எதிர்த்தரப்பில் இருந்து திரு. அந்தோணிப்பிள்ளை பேச்சை எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்:—
“இந்தத் தீர்மானத்தின் நோக்கம் என்ன? இந்த அமைச்சரவை, இதற்கு முன்பிருந்த அமைச்சரவைகளைப் போல் சாமானியர்களே—மதிப்பு ஏதுமற்றவர்களைக் கொண்டதல்ல; இந்த அமைச்சரவை அற்புதமானது, தலைசிறந்த ராஜதந்திரியின் தலைமையில் இயங்குவது என்பதை நிரூபிப்பதுதான் இந்தத் தீர்மானத்தின் நோக்கம்.
இப்போது காங்கிரசின் போக்கு என்னவென்றால், ஒரு தலைமை வழிபாட்டைத் துவக்குவதுதான். கடந்த தேர்தலிலும் இதைக் கண்டோம். காங்கிரஸ் ஐந்தாண்டுத் திட்டத்தின் மீதா ஓட்டுக் கேட்டது? கழுதையானாலும் குதிரையானாலும் காங்கிரஸ் வேட்பாளருக்குப் போடும் ஓட்டு—பெரும் தலைவரான நேருவிற்குப் போடும் ஓட்டு என்று கூறப்பட்டது. ஆனால் இந்தத் தலைமை வழிபாட்டுத் தத்துவம் தென்னாட்டில் எடுபடவில்லை. ஆகவே, ஒரு தென்னாட்டு ரட்சகரைத் தேட வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு ஏற்பட்டது.
இந்தப் புதிய பூஜா முறையை ராஜாஜியே வளர்த்து விட்டார். தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவி—கடவுளின் முழு அதிகாரம் பெற்ற தூதுவர் என்றே தம்மைப் பற்றி ராஜாஜி கூறிக்கொண்டார்.
“நானே கடவுள்.”
இன்னும் சிறிது காலம் கழித்தால் ராஜாஜி ‘நானே கடவுள்’ என்று கூறிக்கொண்டால் கூட நான் வியப்படைய மாட்டேன். மழைக்காகப் பிரார்த்தியுங்கள் என்று ராஜாஜி கூறி—மழையும் பெய்து விடவே—சில காங்கிரசார் ராஜாஜியால்தான் மழை பெய்தது. ஆகவே அவர் கடவுள் என்றுகூடக் கூறத் துவங்கி விட்டனர்.
செயற்கை மழைக்கு ஆராய்ச்சி ஏன் ?
இது உண்மையானால், செயற்கை மழை வரவழிக்க ஆராய்ச்சி நடத்த, மக்கள் பணத்தைச் செலவு செய்யாதீர் என்று மத்திய அரசுக்கு விசேடத் தீர்மானம் நிறைவேற்றலாம். எங்கேனும் வறட்சித் துயர் ஏற்பட்டிருந்தால், அங்கே ராஜாஜியை முதலமைச்சராக அனுப்பினால் போதும்” என்பதாகத் திரு. அந்தோணிப்பிள்ளை அவர்களால் ‘பர்சனலிடி கல்ட்’ கூட அல்ல, கடவுளாகவே ராஜாஜி தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிற நிலையிலே அன்றைக்கு ராஜாஜி வளர்க்கப்பட்டார்.
செய்தி ஏடுகள் முதல் சினிமாப் படம்வரை.
அது மாத்திரம் அல்ல—ஏ.வி.எம். தயாரித்த சினிமாப் படத்தில் ராஜாஜி ஏர் உழுவது போலக் காண்பிக்கப்பட்டது. பரம்பரை பரம்பரையாக ஏர் உழுது களைத்துப் போனவர் அல்லவா?
அது மாத்திரம் அல்ல, பல ஆங்கில ஏடுகளில் இன்னும் பூணூலைக் காதிலே மாட்டிக்கொண்டு அவரே துண்டு துவைப்பது போல் படம் போட்டுக் காட்டப்பட்டது.
சுதந்திராக் கட்சியில் ராஜாஜிக்குப் பிறகு யார் ?
‘பர்சனலிடி கல்ட்’ என்ற அந்தக் குற்றத்தை எங்கள் மீதும் எங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் சுமத்திய நேரத்தில் நான் எண்ணிக்கொண்டேன். ராஜாஜி உயிரோடு இருக்கும் போதுதான் ‘ராஜாஜி ஹால்’ என்று பெயரிடப்பட்டது.
ராஜாஜி உயிரோடு இருக்கும்போதுதான் இந்த மாமன்றத்தில் அவரது பெரிய படம் திறந்து வைக்கப்பட்டது என்பதை எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சுதந்திராக் கட்சியினரைப் பொறுத்த வரையில் தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில், ராஜாஜி இல்லாவிட்டால் அதற்குப் பிறகு யார்! அது ‘பர்சனலிடி கல்ட்’ அல்லவா? அந்த முறையில் ‘பர்சனலிடி கல்ட்’டை வளர்த்துவிட்டார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் கருணாநிதி இல்லாவிட்டால், அதைஅடுத்துப் பலபேர் இருக்கிறார்கள் என்பதை நான் இங்கே எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
**டாக்டர் ஹாண்டே:** முதல்வரே தனி நபர் துதியை ஊக்கப்படுத்துகிறார் என்பதே எனது குற்றச்சாட்டு. முன்பு இந்த அவையில் சீமைச்சாமி பேசும்போது தலையா, வாலா என்று முதல்வர் கேட்டார். இந்த மனப்பான்மை மாறி ஜனநாயகவாதியாக ஆகவேண்டும் என்று சொன்னேன்.
