நமது விளக்கம்
பகுதி 7 · 7 / 15
மாநில சுயாட்சிபெற வேண்டும் என்கிற கருத்தைப் பற்றி மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ‘கல்கி’ ஏட்டில் ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.
தலைவர் அவர்களுடைய அனுமதியுடன் அதை நான் படித்துக் காட்ட விரும்புகிறேன்.
ராஜாஜியும், பக்தவத்சலமும் !
“சார்லஸ் லாம்ப்” என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் கூறுகிற ஒரு வேடிக்கைக் கதை! ஆதிகாலத்தில் சீனத்தில் ஒரு வீடு பற்றி எரிந்தபோது அதிலிருந்த ஒரு பன்றியும் வெந்து மாண்டது. அந்தப் பிராணியைத் தொட்டவன் சூடு பொறுக்கமாட்டாமல் விரலை வாயில் வைத்துக் கொண்டான். வெந்த பன்றி மாமிசம் மிகச் சுவையாக இருப்பதாகக் கண்டான்.
உடனே பக்கத்திலிருந்தவர்கள் தங்களது வீடுகள் எல்லாம் கொளுத்தி, அங்கிருந்த பன்றிகள் வேக வைத்து ருசி பார்த்தார்கள். இப்படியாகத்தானே ஊனச் சமைத்து உண்ணும் பழக்கம் ஏற்பட்டது. இந்த வேடிக்கைக் கதையை நினைவூட்டும் முறையில் சில முதல் மந்திரிகள் நடந்து கொள்கிறார்கள். அதாவது மத்திய சர்க்காருக்கு எதிராக ராஜ்ய சர்க்கார் அதிகச் சுயாதீன உரிமை பெற வேண்டும் என்ற தங்களது கருத்துக்குக் கிழக்கு வங்கத்தின் கோரிக்கை வலுவூட்டுவதால், பங்களா தேசக் கொந்தளிப்பை இந்த முதல் மந்திரிகள் வரவேற்கிறார்கள்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.
பன்றிக் கறியைத் தொட்டுச் சுவைத்துப் பார்ப்பதற்காக வீட்டைக் கொளுத்தியவர்கள் குற்றப் பட்டியலில், நேற்றைய தினம் கூடிய தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியையும் ராஜாஜி அவர்கள் கூறியபடிச் சேர்த்து விட்டிருப்பதற்காக நான் வருந்துகிறேன்.
பன்றிக் கறியை முதலில் சுவைத்தவர்.
ஒரு பன்றிக் கறியை முதலில் தொட்டுப்பார்த்து, அது சுவைக்கிறது என்று சொன்னவர் யார் என்று பார்த்தால்—
“சமஷ்டி அமைப்பு உருவாவதைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாகவேண்டும். நாம் வகுத்த இந்திய அரசியலமைப்பு இதைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
ஆயினும் 1947-க்குப் பிந்திய இந்திய அரசியல் சரித்திரமோ, அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் குவிக்கும் சபலம் எப்படி இடையூறு செய்து வந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. பிரதேசங்களின் முக்கியத்துவத்தைப் படிப்படியாகக் குறைத்து அதிகாரங்களை மேலும் மேலும் மத்திய அரசாங்கத்திடம் குவிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது”—இதைச் சொன்னவர் ராஜாஜி அவர்கள்.
ஆக, பன்றிக் கறி சுவைக்கிறது என்று முதலில் எடுத்துக் காட்டியவர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள். “நமது ஜனநாயகம்” என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“பிரதேச ஆட்சியைப் பலவீனப்படுத்தும் போக்கு” என்ற தலைப்பில் அந்தப் புத்தகத்தின் 53-ஆம் பக்கத்தில் எழுதியுள்ளதைத் தான் நான் இங்கே குறிப்பிட்டேன்.
58-ல் ஆதரிப்பது ; 71-ல் எதிர்ப்பது—வேடிக்கை !
**டாக்டர் எச். வி. ஹாண்டே:** இதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. மாநிலத்துக்கு அதிக நிதி அதிகாரம் வேண்டும் என்று அப்போது ராஜாஜி கேட்டார். ஆனால் எதற்கெடுத்தாலும் மத்திய அரசோடு போரிடுவதைத் தான் ராஜாஜி எதிர்க்கிறார். இது மற்ற மாநிலங்களுக்குப் பரவினால் அது நல்லதல்ல.
**முதல்வர்:** இந்தப் புத்தகம் 68-ல் வெளியிடப்பட்டது. 68-லேயே காலம் பக்குவமாகக் கனிந்திருக்கிறது. ஆனால் 71-ல் காலம் பக்குவப்படவில்லை என்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.
நாங்களும் மத்திய அரசு பலவீனப்பட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் எங்களை விட ஒரு படி மேலாகச் சென்று கிழக்குப் பாகிஸ்தானுடைய விடுதலைப் போரை ஆதரித்துப் பாகிஸ்தானிலிருந்து விடுபட்டுத் துண்டாகப் பிரியவேண்டும் என்பதைக்கூட ஆதரித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இங்கே நாம் கேட்கும் மாநில சுயாட்சி, அதிகார அளவில் அல்லாமல், தனியாகத் துண்டித்துக் கொண்டு போக வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இல்லை என்பதை நினைவு படுத்துகிறேன். மத்திய அரசுடன் நமக்கு இருக்கும் உறவுகள், நட்புகளில் நமக்கு ஏற்படும் சங்கடங்கள்
தில் விளக்கமாகக் கூறி அது பற்றி எழுந்த ஐயப்பாடுகளுக்கெல்லாம் நான் அந்த நேரத்திலே மிக விளக்கமான பதில் கூறியிருக்கிறேன். ஆகவே அதைப்பற்றி மீண்டும் ஒரு முறை விரிவாகச் சொல்லுவது அவசியமில்லை என்று கருதுகிறேன்.
போராடிப் பெற்றவை.
மத்திய அரசோடு நாம் போராடவேயில்லை; போராடி எதையும் பெறவேயில்லை என்று யாரும் கூறிவிட முடியாது. இன்றைக்குக் கூட ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை நான் சொல்ல முடியும்.
மத்திய அரசுடைய அனுமதி பெற்று, மத்திய அரசு உதவியுடன் திருத்துறைப்பூண்டி, குத்தாலம், முத்தூர், வாடகுடி, காட்டுமன்னார்கோயில், பட்டுக்கோட்டை ஆகிய 6 இடங்களில் வேளாண்மை விற்பனைக் கூடம் அமைக்கவும், அவற்றோடு இணைந்து 56 கிராமச் சாலைகள் ஏற்படுத்தவும், ஒருங்கிணைந்த திட்டத்தைத் தொடங்க ஒன்றரைக் கோடி ரூபாயை மத்திய அரசு இரண்டு நாள் முன்பு நமக்கு அனுமதித்திருப்பதை நான் இங்கே மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, நாம், தேவைப்படும் நேரத்தில் எல்லாம், பிடிவாதமாக மத்திய அரசோடு வாதாடிப் போராடி நம்முடைய மாநிலத்துக்கு உரியவைகளைப் பெறுவதிலே என்றைக்கும் சளைத்துவிடவில்லை.
சுதந்திராக் கட்சியின் உண்மைத் தோற்றம் !
ஆனால், எதற்கெடுத்தாலும் “மாநில சுயாட்சி மாநில சுயாட்சி” என்று அதையே சொல்லி நீங்கள் மக்களிடத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறீர்கள்—கல்வி அனுமதியா, மருத்துவச்சாலை அனுமதியா, மருத்துவச் சாலைக்கு 2—3 புதிய படுக்கைகள் வேண்டுமா—இந்தக் கோரிக்கைகளுக்கெல்லாம் கூட நீங்கள் மாநில சுயாட்சியைக் காட்டித் தப்பித்துக் கொள்கிறீர்கள்” என்ற குற்றச்சாட்டை டாக்டர் ஹாண்டே அவர்கள் எடுத்துச் சொன்னார்.
ஒருவேளை அவர்கள், மாநில சுயாட்சியை வரவேற்கக் கூடும். ஆனால் அதே நேரத்தில் எதற்கெடுத்தாலும் மாநில சுயாட்சியைக் காட்டுகிறோம் என்று எங்கள் மீது குற்றம் சாட்டவும் கூடும்.
ராஜமன்னார் குழு அறிக்கை மீது பேசுகிற நேரத்தில் தான் மத்திய மாநில அரசு உறவு பற்றிச் சுதந்திராக் கட்சியின் உண்மைத் தோற்றத்தை டாக்டர் ஹாண்டே மூலம் நாம் பார்க்க முடியும்.
டாக்டர் ஹாண்டே அவர்களுக்கு ராஜமன்னார் அறிக்கையை இங்கே எடுத்துக் கொடுத்தவர் திரு. பொன்னப்ப நாடார். அதை எடுத்துக் கொடுத்து உதவி புரிந்தார். அவர் ராஜமன்னார் குழு அறிக்கை மீது பின்னல் போடுகிறேன் என்று பின்னலைப் போட்டார். இன்று பிரமாதமான விமரிசனம் செய்கிறார் என்று நினைத்து வந்த எனக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
