நமது விளக்கம்
பகுதி 6 · 6 / 15
நலம் வாய்ந்த அரசு.
திட்டச் செலவுகள் குறைத்துக் கொள்ளப்படுமானால், இந்த நாட்டில் நாம் ஏழை எளிய மக்களுக்கு அளித்திருக்கிற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது ஒரு நலம் வாய்ந்த அரசை நாம் உருவாக்க முடியாது.
மத்திய அரசு 70, 80 கோடி ரூபாய் இந்த ஆண்டுத் திட்டச் செலவிற்காகத் தந்திருந்தாலும் 100 கோடியிலிருந்து 105 கோடி வரையில் நாம் செலவிடுவதென்று அதற்கான முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம்.
இந்தத் திட்டங்கள் எங்கிருந்து திட்டப்பட வேண்டும்? பொதுவாகத் திட்டங்கள் மேலேயிருந்து தீட்டி, அவர்கள் இங்கே அனுப்பி வைத்து, நம்முடைய திட்டங்கள் செயல்படுவது ஒரு சரியான நல்ல சூழ்நிலையை நம்முடைய மாநிலத்தில் உருவாக்குவதற்கு ஏற்புடையதாக இல்லை என்ற காரணத்தால்தான் மாநில அளவில் ஒரு திட்டக் குழுவை நாம் உருவாக்கியிருக்கிறோம்.
நான் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இந்த மன்றத்திலே வைத்த நேரத்தில் அதைப் பற்றி விளக்கியிருக்கிறேன். இப்போது திட்டக் குழு அமைக்கப்பட்டு அது தன் பணியைச் சிறந்த முறையில் ஆற்றத் தொடங்கியிருக்கிறது.
இந்தத் திட்டக் குழு மாநில அளவில் உருவாக்கப்பட்ட நேரத்தில் பத்திரிகைகளில் எல்லாம்—திட்டக் குழு பற்றி ஏதோ மத்தியத் திட்டக் குழுவிற்கு எதிராக மாநிலத்தில் திட்டக் குழு உருவாகிறது என்றெல்லாம் கணிக்கப்பட்டது.
இன்றைக்கு நம்முடைய மாநிலத்தில் உருவாகியிருக்கிற திட்டக் குழுவைப் போல மற்ற மாநிலங்களிலும் திட்டக் குழு அமைக்க வேண்டுமென்று முனைப்பு எல்லா மாநிலங்களிலும் ஏற்பட்டிருப்பதைக் காண மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நம் மாநிலத்திற்கெனப் பத்தாண்டுகளில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றிடுவோம்? பத்தாண்டுகளில் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்? கல்வித் தரம் எப்படி இருக்கும்? நம்முடைய பொருளாதார வளங்கள் எப்படி இருக்க வேண்டும்? நம் வளர்ச்சித் துறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? இவற்றையெல்லாம் ஆராய்ந்து சரியான முறையில் மாநிலத்திற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்கான நிதி வாயில்களை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டுமென்பதற்காகத்தான் இந்த மாநிலத் திட்டக் குழு இன்றையதினம் அமைக்கப்பட்டுத் தன் பணியை ஆற்றத் தொடங்கியிருக்கிறது.
மாநிலத் திட்டக் குழு பற்றி இங்கே பேசப்பட்டது. திட்டக் குழுவின் பணிகள் என்ன என்று வரையறுக்கப்படவில்லை என்று திரு. தங்கமணி அவர்கள் கூறினார்கள். ஏற்கனவே திட்டக் குழுவின் பணிகள் பற்றிய பட்டியல் அறிவிக்கப்பட்டு அது இதழ்களில் வந்துள்ளது. அதை உறுப்பினர்களுக்கும் வழங்கச் செய்வேன்.
நமது மாநிலத் திட்டக் குழுவைப் பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
மாநிலத் திட்டக் குழு அமைக்கப்பட்ட நேரத்தில் இதை ஒரு அதிர்ச்சியுடன் மற்ற மாநிலங்கள் பார்த்தன. இன்றைக்கு ஒவ்வொரு மாநிலமும் திட்டக் குழு அமைக்க முன்வருகிற காட்சியைப் பார்க்கிறோம். திட்டக் குழு அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களும் இதை வரவேற்றுப் பேசியிருப்பது ஒரு நல்ல அம்சம் ஆகும்.
நமது திரு. சுப்பிரமணியம் அவர்கள் மத்தியில் அமைச்சராக இருந்தபோதுதான் நாணய மதிப்புக் குறைக்கப்பட்டது என்று திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்கள். அவர்கள் திரு. சி. சுப்பிரமணியத்தைக் குறிப்பிட்டார்களே தவிர, திரு. அசோக் மேத்தாவும் அதற்
குக் காரணம் என்பதைக் குறிப்பிடவில்லை. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பது திரு. பொன்னப்ப நாடார் அவர்களுக்குத் தெரியும்; அவர் பக்கத்தில்தான் இருக்கிறார். அது தவிர பெருமதிப்பிற்குரிய தலைவர் காமராஜ் அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான் இந்த நாணய மதிப்புக் குறைப்புச் செய்யப்பட்டது.
இது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பது அல்ல! அப்போதெல்லாம் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குகிற அளவில் இந்த மாமன்றத்தில் இருந்தார்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள். ஆனால் எங்களுடைய ‘அதிர்ஷ்டம்’ இப்போது மத்திய அரசைக் குற்றம் சாட்டும் அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பூரிப்பு அடைகிறேன்; புளகாங்கிதம் அடைகிறேன்.
நிர்வாகச் சீர்திருத்தக் குழு.
அதேபோல் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று நாம் எண்ணுகிறோம். நம்முடைய திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் கூட, கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் எடுத்துச் சொன்னார்கள்.
சிறு சிறு அலுவலகங்களில் கூட நிர்வாகம் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்று, ஒரே விஷயத்தைப் பற்றிய 11 கேள்விகளை எடுத்துக் காட்டினார்கள். இங்கே இன்னும் பல விஷயங்களை உள்ளடக்கியதான நிர்வாகச் சீர்திருத்தத்தை நாம் செய்தாக வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைய நிர்வாகம் போற்றுகிற அளவில் இருந்தாலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.
நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் வேலை இந்த நாட்டில் உள்ள பாமர மனிதன் மலிவாகவும், சுலபமாகவும், விரைவாகவும் தனது தேவையின் பலனை அடைய வேண்டுமென்ற அடிப்படைக் கருத்தோடு; இந்தக் குழு நிலைமைகளை ஆராய்ந்து, அறிக்கை தரவேண்டுமென்று கேட்டுக்கப்பட்டிருக்கிறது.
இதையொட்டி நம்முடைய மாநிலம் என்னதான் நிர்வாகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தாலும், திட்டம் தீட்டினாலும், சமதர்மக் கண்ணோடு பிரச்சினைகளை நோக்கினாலும், அவற்றையெல்லாம் அமலாக்குவதற்கு வேண்டிய அளவுக்கு அதிகாரத்தைப் பெற்றாக வேண்டுமென்பது இன்றைய ஆளும் கட்சியாக இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நெடுநாள் கோரிக்கையாகும்.
மத்திய மாநில ஆய்வுக் குழு.
அந்த நெடுநாள் கோரிக்கைக்கு ஏற்ப ‘ராஜமன்னார்’ குழு அமைக்கப்பட்டு 1969 செப்டம்பர் திங்களில் அந்தக் குழு பணியைத் தொடங்கி அந்த அறிக்கை மன்றத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய-மாநில உறவுகளைப் பற்றிய ராஜமன்னார் அவர்களுடைய அறிக்கையை அநேகமாக அனைவரும் இங்கே வரவேற்றும் பேசியிருக்கிறார்கள்.
ஹாண்டே அவர்கள் இதிலே ஏதோ பெரிய அபிப்பிராயம் சொல்லப்போவதாகச் சொல்லிவிட்டு, ஏதும் சொல்லவில்லை. ஒருவேளை ‘ராஜமன்னார் குழு’ அறிக்கை விவாதத்துக்கு வரும் நேரத்தில் அதைப் பற்றிப் பேசுவார் என்று நான் கருதுகிறேன்.
நாம், மாநிலத்துக்குச் சுயாட்சியும், மாநிலத்துக்கு அதிக அதிகாரங்களும் வேண்டும் என்று கேட்கிற நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது உள்ளபடியே வரவேற்கத் தக்கது.
**திருமதி டி. என். அனந்தநாயகி:** என்னவோ இன்றைக்குக் கூடத் தீர்மானம் போட்டோம் என்பது சரியல்ல. 1967-லேயே எங்கள் கட்சித் தலைவர் காமராஜர் அவர்களால் இது கூறப்பட்டிருக்கிறது. பல மாநாடுகளிலும் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது. அகில இந்திய ரீதியில் இந்தத் தீர்மானம் போடப்பட்டது.
**முதல்வர்:** அதை யார் சொன்னாலும் சரி, போடப்பட்ட நேரம்தான் முக்கியம். யார் முன்னாலே சொன்னார்கள் என்பதல்ல. ஆனால் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் பெற வேண்டும்.
மூதறிஞர் ராஜாஜி கருத்து.
