நமது விளக்கம்
பகுதி 5 · 5 / 15
அப்படி வரிகளைத் தேடிப் போகிற நேரத்தில் கூடுமான வரையில் தாங்கக் கூடியவர்களைத் தொடக் கூடியதாகவும், தாங்க இயலாதவர்களுக்குப் பாதகம் ஏற்படுத்தாத வகையிலும் அந்த வரிகள் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதுதான் கழக அரசினுடைய வரிக் கொள்கையாகும்.
அதற்கேற்பத்தான் விற்பனை வரியை மூன்று சதவீதத்திலிருந்து மூன்றரை சதவீதமாக உயர்த்தியிருக்கிறோம். அதிலும் சட்டமன்றத்தில் நேற்றைக்கு முன் தினம் பல சலுகைகள் அளிக்கப்பட்டு மொத்த ‘வணிக வரம்பு’ ரூ. 15 ஆயிரம் என்று இருந்ததை ரூ. 25 ஆயிரம் என்கிற அளவுக்கு உயர்த்தியிருக்கிறோம். அதைப் போலவே ‘கம்பவுண்டிங்’ ரூ. 75 ஆயிரம் என்று இருந்ததை ஒரு லட்சம் என்கிற அளவுக்கு உயர்த்தியிருக்கிறோம்.
பல பெரிய நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஒரு சிறிய பளுவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த வரியை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
விற்பனை வரி, மேல்வரிப் பிரச்சினையிலும் பொதுமக்களுக்கு அதிகமாகக் கஷ்டங்கள் ஏற்படப்போவதில்லை. ஏதோ பத்திரிகைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வணிகர்கள் கொந்தளிப்பு, வியாபாரிகள் புரட்சி என்ற செய்திகள் இரண்டொரு நாள் வரும். ஆனால், இது உண்மையிலேயே வியாபாரிகளைப் பெரிதும் பாதிக்கக் கூடிய வரியல்ல என்பதை நாம் மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
விற்பனை வரி, மேல்வரி பற்றியும் மன்ற உறுப்பினர்கள் கருத்தறிவித்தார்கள். வேறு சில உறுப்பினர்கள் இது சென்னைக்கு மட்டுமிருக்கின்ற காரணத்தால் இதைப் பயன்படுத்திக் கொண்டு சென்னையின் புறநகரப் பகுதிகளிலே இருக்கின்றவர்கள் இதை ஏமாற்றித் தப்பித்துக் கொள்ளக் கூடும் என்றெல்லாம் கூறினார்கள். ஆகவே, அதைப் பற்றியும் யோசித்துப் பார்த்தோம். சென்னைக்கு மட்டும்தான் இந்த வரியா? கோவை, சேலம், மதுரை, திருச்சி போன்ற நகரப் பகுதிகளுக்கு இந்த வரி கிடையாதா என்றெல்லாம் உறுப்பினர்கள் கேட்டார்கள்.
ஆகவே சென்னையினுடைய புறநகரப் பகுதிகளுக்கும் கோவை-சேலம்-திருச்சி-மதுரை போன்ற நகரங்களையும் அதன் புறநகரப் பகுதிகளையும் இணைத்து இதே விற்பனை வரியை (சர் சார்ஜ்) விதிக்கலாமென்றும் உறுப்பினர்களின் கோரிக்கை இணங்க 10 சதவீதம் என்றிருக்கும் மேல் வரியை 5 சதவிகிதமாகக் குறைத்து விதிக்கலாமென்றும் கருதுகிறோம்.
நகரங்களில் நிலவரி.
சென்னை நகரிலும், மற்ற நகரங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் ஒரு ‘கிரவுண்ட்’ வரை உள்ளவர்களுக்கு நகர்ப்புற நிலவரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மனைவரியின் மூலமாகச் சென்னை நகரிலும் பிற இடங்களிலும் ஒரு ‘கிரவுண்ட்’ வைத்திருக்கிற பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வரிவிலக்குச் செய்யப்பட்டதன் மூலமாக அதன் மூலம் ஒரு சமதர்ம நோக்கோடு அவர்களெல்லாம் இந்த வரியிலிருந்து விடுபடக் கூடிய சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது.
வேளாண்மை வரி பற்றி, இந்த மன்றத்தில் நிதி நிலை அறிக்கை வைக்கப்பட்டதும் நிருபர்களிடத்திலே கருத்துத் தெரிவிக்கையில் (கம்.) உறுப்பினர் திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள், கிராமங்களிலே அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்களை வரிகள் தொடவில்லை என்று சொன்னார்கள்.
வேளாண்மை மூலம் அதிக ஆதாயம் பெறக்கூடியவர்களை மட்டுமே பாதிக்கின்ற அளவுக்குச் சில மாறுதல் சம்பந்தப்பட்ட மசோதா இந்த மன்றத்திலே வரவிருக்கின்றது.
இந்த வரிகளை எல்லாம் குறிப்பிட்ட டாக்டர் ஹாண்டே அவர்கள், ஒரு கையால் கொடுத்துவிட்டு இன்னொரு கையால் திரும்பி வாங்கிக்கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
மாநிலத்தின் மொத்த வருமானம்.
இந்த மாநிலத்தினுடைய மொத்த வருமானம் 2,400 கோடி ரூபாய். இந்த 2,400 கோடி ரூபாயில் அரசு ஊழியர்கள் ஊதியமாகப் பெறுகின்ற தொகை 100 கோடி ரூபாய். இது இந்த மாநில வருமானத்தில் 24-ல் ஒரு பங்காகும்.
இப்போது கூடுதலாக எழுப்புகின்ற வரிகள் மூலம்—நிதி வாயில்கள் மூலம்—கிடைக்கின்ற தொகை 25 கோடி ரூபாய் என்றால் அதில் ஒரு பங்கைத் தான்; அதில் ஒரு கோடி ரூபாய்க்கான வரிப் பளுவைத்தான் அரசு ஊழியர்கள் ஏற்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் அவர்களுக்காக
இரண்டாவது ஊதியக் குழு சிபாரிசுப்படி 25 கோடி ரூபாய் ஊதிய உயர்வு தந்திருக்கிறோம். அதனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
“அரியானா பற்றி நான் அறியேன் ?”
தமிழ்நாட்டிலே குறிப்பிட்ட காலத்திற்குள் 72-ம் ஆண்டு முடிவதற்குள்ளாகத் தமிழ் நாட்டிலே எங்கு பார்த்தாலும் மின்ஒளி இல்லாத கிராமமே இருக்கக் கூடாது என்று கூறைத்து அந்தத் திட்டத்தை நிறைவு படுத்துகிறோம்.
“இதுவரை தமிழ்நாடு முதல் இடம் வகித்து வந்தது. ஆனால் இப்போது அந்த வகையில் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. அரியானா முதல் இடத்திற்கு வந்துவிட்டது” என்று திருமதி அனந்தநாயகி அவர்கள் பேசும்போது சொன்னார்கள்.
அது முதல் இடத்தில் இருக்கிறதா என்பதை வடக்கே உள்ளவர்கள்—பத்திரிகைகள்—வெகுவாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இன்னொரு மாநிலத்தின் பிரச்சினைகளில் தலையிடுவது நல்லதல்ல. அந்த சர்ச்சையில் நான் இறங்கவும் இல்லை.
அரியானா முதலிடம் பெற்றது என்றால் அது தமிழ்நாட்டின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு; தமிழக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு! வட ஆற்காடு, தென்னாற்காடு, செங்கற்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்கள் சேர்ந்த தொகை மட்டும்தான் அரியானா!
மூன்றாண்டுகளிலே மூலைமுடுக்குகளிலெல்லாம் மின் ஒளி.
நாம் எல்லாக் கிராமங்களுக்கும் உண்மையிலேயே விளக்குப் போடத் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். இன்னும் 2, 3 ஆண்டுகளில் ஒளி வசதி இல்லாத கிராமமே இல்லை என்ற நிலைக்கு ஏற்பாடுகள் செய்வோம் என்று கூறைத்து அதன் காரணமாக உங்கள் பாராட்டுதலைப் பெறும் நிலைக்கு ஆளாவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநிலத் திட்டக் குழு.
இந்த ஆண்டு நம்முடைய மாநிலத்தின் திட்டத்திற்குத் தேவையானதென்று எண்ணுகிற தொகை 100 கோடியிலிருந்து 105 கோடியாகும். மத்திய அரசு இந்த ஆண்டுத் திட்டத்திற்காக ஒதுக்கியிருக்கிற தொகை ரூ. 70 கோடியிலிருந்து 80 கோடி வரையில்தான் ஆகும்.
மது விலக்குப் பிரச்சினை பற்றிப் பேசிய நேரத்தில் எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள், கூறியதைப் போலத் திட்டச் செலவைக் குறைத்துக்கொள்வதா? அது இயலாத காரியம்!
