உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

நமது விளக்கம்

பகுதி 4 · 4 / 15

இதைப் பற்றி பொன்னப்ப நாடார் அவர்கள் “நல்ல திட்டம்; இதில் ஊழல் நடந்து விடக்கூடாது” என்று குறிப்பிட்டார்கள். எல்லாத் திட்டங்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது.

நாம் நிதி சேர்க்கிறோம்—பிச்சைக்காரர்களுக்கு! அதிலேயே சில பேர் தவறு செய்கிறார்கள் என்றால் அவர்கள் பிச்சைக்காரர்களுக்குத் துரோகம் செய்கின்ற கொடியவர்கள்; தீயவர்கள் என்கிற கணக்கிலே எடுத்துக் கொள்ள வேண்டுமே அல்லாமல் இதற்கெல்லாம் ஏன் “சீரியல் நம்பர்” போடவில்லை என்று கேட்பதிலே அர்த்தமில்லை.

கொடி நாள் என்று எத்தனையோ ஆண்டுக் காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் கொடி நாளில் கொடிகளுக்கு விலை இவ்வளவு என்று குறிப்பிடப்படுவதில்லை.

அந்தக் கொடிகள் பள்ளிகளில் சிறார்களிடத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு விற்கப்படுகின்றன. அப்படி விற்கப்படுகின்ற எந்தக் கொடிக்கும் சீரியல் நம்பர் போடப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆகவே, அச்சடிக்கப்பட்ட அட்டைகள் எவ்வளவு என்பதற்குக் கணக்கு உண்டு. வேறு யாரும் அச்சடிக்க முடியாதபடி அதிலே என்னுடைய கையெழுத்துப் பதிக்கப்பட்டிருக்கிறது.

உத்தமர் காந்தியடிகள் தொழு நோய்ப் பிச்சைக்காரர் ஒருவருக்குச் சிகிச்சையளிக்கின்ற படம் இன்னொரு புறத்திலே பொறிக்கப்பட்டிருக்கிறது. இவைகளைக் கணக்கிட்டு, ஒவ்வொரு இடத்திலும் தரப்பட்டு, இதன் மூலமாக இந்த நிதிக்கு இவ்வளவு தொகை வரவேண்டும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆகவே, இதிலே தவறு நடந்து விடாது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். தவறுகள் சுட்டிக்காட்டப்படுமேயானால் அரசு சார்பில் ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நான் தயாராயிருக்கிறேன்.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு என்ற திட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிச்சைக்காரர்களின் மேல் வைத்துள்ள அன்பின் காரணமாகவும், பற்றின் காரணமாகவும்—பற்றின் காரணமாக என்றால் அந்த வட்டாரத்திலே

உள்ளவர்களுக்கு அவர் மீது கோபம் பிறக்கும்—ஆகவே அவர்கள் பிச்சைக்காரர்கள் மேல் வைத்திருக்கிற அன்பின் காரணமாக—அவர்கள் முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளையெல்லாம்—நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவது போல—இதைப் பிச்சைக்காரர்கள் தினமாகக் கொண்டாடலாம் என்று சொன்னார்கள்.

ஐந்து ஆண்டுக் காலத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுப் பிச்சைக்காரர்களின் கூட்டமே தமிழ்நாட்டில் இல்லாதவாறு ஆக்க வேண்டுமென்று கருதுகிறேன்.

பண்டித நேரு அவர்கள் பிறந்த தின விழாவை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வழியிருக்கிறது. பண்டித நேரு மறைந்து பல ஆண்டுகளானாலும் குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கும்.

ஆனால் இந்தப் பிச்சைக்காரர்கள் பிரச்சினை சரிசெய்யப்பட்டு விட்டால் பிறகு பிச்சைக்காரர்கள் புனர்வாழ்வு தினத்தைக் கொண்டாட முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொண்டு வேறு ஒரு யோசனையைச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

குடிசை மாற்று வாரியம்.

நாம் இன்னும் பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சென்னை மாநகரத்தில் ரூ. 40 கோடியில் திட்டமிட்டு ஏழாண்டுக் காலத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு நல்ல வீடுகளைக் கட்டித் தருவதற்கு நாம் பெரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

இது பல்லாண்டுக் காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கிற ஒரு பயங்கரமான பிரச்சினை. அந்தப் பிரச்சினையை இந்த அரசு இன்றைய தினம் வெகு துணிவோடு ஏற்று, அதை நடத்திவைக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இந்த ஆண்டு மாத்திரம் 4 கோடி ரூபாய் அதற்காகச் செலவழிப்பது என்று திட்டமிட்டு அந்தப் பணி நடைபெற்று கொண்டு வருகிறது.

அதைப் போலவே தமிழ்நாட்டில் குடிநீர் வாரியம் ஒன்றின் மூலமாகப் பல கோடி ரூபாய் செலவில் பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் இன்னும் சில பல ஆண்டுகளில் எல்லாக் கிராமப்புறத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காகத் திட்டம் தீட்டி அந்தத் துறையிலும் வெகு வேகமாகப் பல முற்போக்குக் காரியங்களைச் செய்திருக்கிறோம்.

இவைகளையெல்லாம் எந்த அடிப்படையில் நாம் செய்து வருகிறோம் என்பதைத்தான் இந்த நிதிநிலை அறிக்கையைப் படிக்கிற நேரத்தில் எடுத்துக் காட்டினேன். ஏழை எளியவர்கள்—கிராமப்புறத்து மக்கள்—இது வரையில் தங்களையே சரிவர உணர்ந்து கொள்ள முடியாமல் எங்கோ அழுத்தப்பட்டு தள்ளப்பட்டுக் கிடந்த பிற்போக்கான நிலையில் உள்ள மக்கள், வாழ்வில் விடிவு ஏற்பட வேண்டுமென்பதற்காக இவ்வளவு முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கையிலே எடுத்துச் சொன்ன திட்டங்களால் மட்டும் நமது மாநிலத்தின் தேவைகள் பூர்த்தி அடைந்து விடுமா என்றால் இல்லை. இன்னும் ஏராளமான தேவைகள் இருக்கின்றன. அந்தத் தேவைகளையெல்லாம்—இங்கே பேசிய உறுப்பினர்கள்—தொகுதி வாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

மூவர் குழு.

இந்த நிதிநிலை அறிக்கை விவாதத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட இந்தப் பிரச்சினைகள் எல்லாம் மறுபடியும் நீங்கள் விரும்பினால் சட்டமன்ற நடவடிக்கைப் புத்தகத்திலிருந்து படித்துக் கொள்ளலாம் என்கிற நிலைமை இருந்து வந்திருக்கிறது. அவைகளில் சில மறந்தும் விடலாம்; கூடிய வரையில் இந்த நிலைமைக்கு இடம் தராத வகையில் தங்கள் தங்கள் தொகுதிகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டுகின்ற எந்தப் பிரச்சினையானாலும் அவைகளை ஆராயத் தலைமைச் செயலாளர், நிதித் துறைச் செயலாளர், வாரிய உறுப்பினர்

களில் ஒருவர், ஆக மூவர் கொண்ட குழு அமைக்கப்பெற்று, அந்தக் குழு. இங்கே பேசிய உறுப்பினர்களுடைய கருத்துக்களெல்லாம் ஆராய்ந்து ஒவ்வொரு துறையின் தலைவர், துறையின் உடைய செயலாளர்கள்—அலுவலர்கள் இவர்களோடு கலந்து ஆராய்ந்து, அமைச்சர் அவைக்கு அறிக்கைகளை அறிவித்து, அதிலே பெரும்பாலானவற்றை இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திலேயே நிறைவேற்ற வழி வகைகள் வகுக்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகத் தான்—நாம் எப்படியும் தவிர்த்து விடலாம் என்று எண்ணினால்கூட வரிகளின் மூலம் அவற்றிற்குத் தேவையான நிதிவாயில்களைப் பெருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

உறுப்பினர்களின் ஊதியம்.

இடையில் நம்முடைய நண்பர் ஆறுமுகசாமி அவர்கள் எழுப்பிய கோரிக்கைக்கு நான் பதில் அளித்தாக வேண்டும் என்று கருதுகிறேன். அவர்கள் சொன்னார்கள்—அப்பட்டமாகச் சொல்லாமல்—எங்களைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

எல்லா உறுப்பினர்களுக்கும் இந்த ஆசை இருப்பது தெரியாமல் இல்லை. அதில் யார் மணி கட்டுவது பூனைக்கு என்பதில் தான் ஒருவருக்கொருவர் போட்டியே தவிர, இதில் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் இருக்கிறது.

இதைப் போலவே ரூ. 150 இருந்த காலத்தில் ரூ. 250 ஆக உயர்த்தப்பட்டது. எல்லாக் கட்சியிலுள்ள உறுப்பினர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போலவே நம்முடைய நண்பர் ஆறுமுகசாமி அவர்களின் கோரிக்கையும் விரைவில் ஏற்றப்படும்.

எந்த அளவுக்குத் தொகை என்பதை நான் இப்போது கூற விரும்பவில்லை. ஏனென்றால் அதுபற்றிய மானிய விவாதம் வருகிற நேரத்தில் அதைப் பற்றி அந்த மானியத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிற அமைச்சர் வாயிலாக அது தெரிவிக்கப்படும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தேவைகள் நமக்கு நிறைய இருக்கின்றன. மற்ற உறுப்பினர்களுக்கும் தேவைகள் இருக்கின்றன. அதையும் நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் நிறைவு செய்யப்பட வேண்டிய தேவைகள் ஏராளம் இருக்கின்றன. அதையும் நான் உணர்கிறேன்.

அதற்காகத் தான் நிதி வாயில்களைப் பெருக்குவதற்கு வேறு எந்த வழியும் இல்லாத காரணத்தால் வரிகளை நாம் தேடிப் போக வேண்டியிருக்கிறது.

கழக அரசின் வரிக்கொள்கை