நமது விளக்கம்
பகுதி 3 · 3 / 15
**முதல்வர்:** வருமானம் இருந்தால் வரி செலுத்துவார்கள். வருமானம் இல்லாமல் இருக்கிறதால் வருமான வரி செலுத்த முடியாது. ஆனால் மற்ற வரிகள் எல்லாம் செலுத்தப்படுகின்றன.
ஆகவே வட்டிக்காக அரசுக்குக் கொடுக்கப்பட்ட தொகை போக ஏற்படுகிற நட்டம்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதல்லாமல், வட்டியும் கொடுக்காமல் நட்டம் ஏற்பட்டிருப்பதாகக் கருதுவது சரியல்ல.
நிர்வாகத்தில் உள்ள கேடு பாடுகள் எவை எவை, எந்த எந்தக் காரணத்தால் இந்தச் சீர்குலைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்திடவும், ஆராய்ந்திடவும் இப்போது பரீட்சார்த்தமாக, சில ‘டிப்போக்களில்’ ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
அவை மிக வேகமாக விரைவு படுத்தப்பட்டுத் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை சீர்படுவதற்கு எங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்வோம்.
வேலை வாய்ப்பு வசதிகள்.
வேலை வாய்ப்பிற்காக வழி செய்திருக்கிறோம் என்பதையும் இம்மாமன்றத்தின் உறுப்பினர்களாகிய நீங்கள் வரவேற்கிறீர்கள்.
காவல் துறைக்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் 1,000 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இன்ஜினியர்கள் 3,000 பேருக்குச் சிறு தொழில் துவங்கக் கடனுதவி செய்யப்படும். பட்டதாரி மாணவர்கள் 2,000 பேருக்கு ‘இளைஞர்கள் அணி’ மூலமாக வேலைவாய்ப்புத் தரப்படும். கிராமப்புறங்களிலே, 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்க மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்குக் கிடைக்கும் தொகை—போதாதென்று வாதாடி வருகிறோம்.
முடிவு தெரியும் வரையிலே காத்திராமல் நம் மாநில அரசின் மூலமாக மேலும் 15 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பளிக்கிறோம். ஆக 30 ஆயிரம் பேருக்குக் கிராமப்புறங்களிலே வேலை வாய்ப்புத் தருகிறோம். இவையன்றி, 150 மருத்துவர்களுக்கும், 200 செவிலியர்களுக்கும் வேலை வாய்ப்புத் தருகிறோம். இது போன்ற சூழ்நிலைகள் எல்லாம் இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கின்றன.
தகுதி திறமை உள்ளவர்களுக்கே தேர்வு.
இதிலே கட்சிக் கண்ணோட்டம் இருக்கக் கூடாதென்று எதிர்க்கட்சித் தரப்பிலே இருக்கின்றவர்களும் தோழமைக் கட்சியிலே உள்ளவர்களும் எடுத்துரைத்ததை நாங்கள் மறந்துவிட மாட்டோம். இதற்கெல்லாம் தகுதியானவர்கள்—இதற்கு ஆற்றல் படைத்தவர்கள் ஆகியவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்களே தவிர இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர் இவரை அறிவார்; எனவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற அளவிலே—தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்.
கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தகுதி, திறமை யாருக்கிருந்தாலும்—அவர்கள் அதுவரை எந்தக் கட்சியிலே இருந்தாலும்—அவர்கள் உள்ளத்திலே எந்தக் கட்சி உணர்வு இருந்தாலும்—அவைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்—திறமைசாலிகள் தான்—இந்த அரசினுடைய கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றக் கூடிய ஆற்றலுள்ளவர்கள் தான்—தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; இது உறுதி!
மிக முக்கியமான வேலை வாய்ப்பு, வேலையில்லாத திண்டாட்டம், இந்திய பூபாகம் முழுவதும் இன்றைய தினம் இது பரவிக் கிடக்கிறது என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே பேசுகிற நேரத்திலே “வேலை வாய்ப்புக்கு இந்த அரசு தீட்டியிருக்கிற திட்டங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் யானைப் பசிக்கு இது சோளப் பொரியாகப் பயன்படும். எனவே இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்”மென்று நல்ல எண்ணத்தின் அடிப்படையிலே நல்ல சிந்தனையோடு குறிப்பிட்டார்கள்.
இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதைப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துகிற நண்பர்கள் இதைக் காரணமாகக் கண்டுபிடித்து திரு ராஜாராம் நாயுடு வேலை வாய்ப்புத் திட்டத்தை யானைப் பசிக்கு சோளப் பொரி என்று பேசினார்கள் என்கிற அளவிலே பத்திரிகையில் போடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த அளவிற்கு இந்தத் திட்டம் பயன்படும் என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் இந்த அரசு இந்த நிலையை உணர்ந்திருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொண்டார்; அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் ஒதுக்கியது எவ்வளவு ?
இந்த அளவுதான் இந்த அரசால் முடிகிறது. மாநிலத்திலே நமக்கு இருக்கிற நிதி வாயில்களைக் கொண்டு,—நம்முடைய வருவாயைக் கொண்டு நமக்கு இருக்கிற அதிகாரங்களைக் கொண்டு—இதனைத்தான் நம்மாலே செய்ய முடிகிறது.
அவர்கள் சுட்டிக் காட்டியது போக 50 கோடி ரூபாயை இந்தியா முழுவதற்கும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு இந்தியப் பேரரசு ஒதுக்கியது. இதைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளாத நம்முடைய தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர்கள் ஏதோ தமிழ் நாட்டிற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கருதி அதைப் பற்றி விமர்சித்தார்கள்.
இந்த 50 கோடி ரூபாயிலே இவர்கள் யார் யாருக்கு எவ்வளவு பங்கு போட்டுக் கொள்ளப் போகிறார்களோ என்றார்கள். அதற்குள் ஓர் ஆதங்கம் அவர்களுக்கு ஏற்பட்டது. உண்மையில் 50 கோடி ரூபாய் என்பது இந்தியா முழுவதற்கும் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. இப்படி ஒதுக்கப்பட்ட நேரத்திலே அவர்கள் மிகுந்த தந்திரத்தோடு மாவட்டத்திற்கு 15 ஆயிரம் பேர்களுக்கு என்று அல்ல, ஒரு மாநிலத்திற்கு 15 ஆயிரம் பேர்களுக்கு வேலை என்கிற அந்த அளவிலே வகுக்காமல், அல்லது கோட்டத்திற்கு, ஒரு பிளாக்கிற்கு இவ்வளவு பேருக்கு என்கிற அந்த அளவிலே வகுக்காமல், மாவட்டத்திற்கு ஆயிரம் பேர்களுக்கு வேலை என்று யாரோ மத்திய சர்க்காரிலே இருக்கிற ஒரு கெட்டிக்காரர் இந்தத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார்.
நம்முடைய தமிழகத்தைப் பொறுத்த வரையில் மாவட்டங்கள் எண்ணிக்கையிலே குறைவு, பரப்பளவிலே பெரிது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போல வடபுலத்திலே இருக்கிற மாநிலங்களில் மாவட்டங்கள் எண்ணிக்கையிலே அதிகம். பரப்பளவிலே குறைவானவை. சில இடங்களில் உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில் 54 மாவட்டங்கள். மராட்டியம் போன்ற இடங்களில் 26-க்கு மேற்பட்ட மாவட்டங்கள்; 34-க்கு மேற்பட்ட மாவட்டங்கள் இருக்கின்றன.
அவ்வாறு மாவட்ட அளவிலே கணக்கிட்ட நேரத்தில் நமக்கு வர வேண்டிய தொகை நமக்கு வராமல் போய் விட்டது. ஆகவேதான் ஒரு கோடியே சொச்சம் என்கிற அளவிற்குத்தான் கிராமப்புற வேலைவாய்ப்புக்கு நமக்குப் பணம் ஒதுக்கப்பட்டது. அதிலே 15 ஆயிரம் கிராமப்புறத்து மக்களுக்குத்தான் மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் ஊதியம் தரலாம் என்கிற அடிப்படையில் வேலைவாய்ப்பு நம்மாலே உருவாக்க முடிந்தது. அதிலே ஒரு மாவட்டத்திலே 10 பிளாக்கிற்குத்தான் கொடுக்க முடியும் என்கிற குழப்பம் உருவாயிற்று.
ஆகவே மேலும் ஒரு கோடி ரூபாய் நமது மாநில அரசின் சார்பிலே செலவு செய்வது என்று தீர்மானித்து மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பிளாக்குகள், 20 பிளாக்குகள் என்கிற அளவிலே நிர்ணயித்து 15 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்கிற அளவிற்கு இன்னொன்றை நாம் உருவாக்கியிருக்கிறோம்.
அவர்கள் சொன்னார்கள் அப்படி வேலைவாய்ப்புத் தருகிற நேரத்திலே முற்றிலும் வேலை வாய்ப்பு அற்ற குடும்பங்களுக்குத்தான் இதைத் தரவேண்டும்—முதல் சலுகை, முன் உரிமை தர வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்றாலும் இதற்கு முன்பே அதிகாரிக்கு, அந்தக் குழுக்களுக்கு, நாங்கள் தந்திருக்கிற ஆணையின்படி இதை அவர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம். வேலையில்லாமல், யாரும் வேலைவாய்ப்பு இல்லாமல், இருக்கிற குடும்பத்தில் இருக்கக் கூடியவர்கள் முன் உரிமை தரவேண்டுமென்று எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையே நாங்கள் முன்பே அதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டோம் என்பதை நான் இங்கே தெரிவிப்பது என்னுடைய கடமை என்று கருதுகிறேன்.
காவல்துறையில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துத் தேறியவர்கள் இரண்டாயிரம் பேர்களுக்குப் பதவி ஒதுக்கம் செய்யப்பட்டு அதிலே ஆயிரம் பேர்களை நேரிடையாக வேலைக்கு எடுத்துக் கொள்கிற ஒரு வேலை வாய்ப்புத் திட்டத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். தொழில் கல்வி பயின்றவர்களுக்கு 30 ஆயிரம் பேர்களுக்கு அவர்கள் சிறுதொழில்களை உருவாக்கிக் கொள்ளுவதற்குக் கடன் வசதி அளிக்க இந்த அரசு திட்டம் தீட்டியிருக்கிறது. பட்டதாரி மாணவர்களைக் கொண்டு இளைஞர் அணி என்ற ஒன்றைத் தயாரித்து நல்ல சமூக சேவை செய்வதற்குக் கிராமப்புறங்களில் நல்ல பணிகளைச் செய்வதற்கும், தீய பழக்க வழக்கங்களிலிருந்து கிராமப்புற மக்கள் விடுவிப்பதற்கும் பட்டதாரிகள் நிறைந்துள்ள இளைஞர் அணியைப் பயன்படுத்த வேண்டுமென்றும், இரண்டாயிரம் இளைஞர்களை அந்த அணியில் திரட்டுவதற்கும் அவர்களுக்குப் பொறுப்புத் தரவேண்டும் அவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 175 கொடுக்க வேண்டும் என்றும் இந்த வரவு செலவுத் திட்டத்திலே வகை செய்
யப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களில் 6,500 பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. அதில் சில குறைபாடுகள் சொல்லப்பட்டன என்றாலும் அது கிடைத்தால் போதும் என்கிற அளவிற்கு இன்றைய தினம் வேலைவாய்ப்பு அற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதை நாம் மறந்து விடுவதற்கில்லை. மாண்புமிகு உறுப்பினர் முத்துசாமி அவர்கள் என்று கருதுகிறேன்—தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் முழுச் சம்பளம் வாங்கிக் கொண்டதாகக் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பாதிச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்.
அந்த அளவிற்கு வேலை வாய்ப்புப் போதுமென்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
தொழில் பயிற்சி மூலம் அவர்களுக்கு இந்த அரசின் சார்பில் தரப்படுகிற இந்த உதவியை அவர்கள் புறக்கணித்து விடமாட்டார்கள், ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன். அதே போல 2,400 பொறியாளர்களுக்கு நாம் வேலை வாய்ப்பு அளித்திருக்கிறோம்.
பின்தங்கிய அரிசன மக்களுக்கும் ஏராளமான சலுகைகளை வழங்கியிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதுபோல ஏற்கனவே ஆரம்பித்த திட்டம் என்று அவர்கள் எடுத்துக்காட்டினாலும், அது விரிவுபடுத்தப் படுகிறது. சலவைத் தொழிலாளர்களுக்கும், முடிதிருத்துவோருக்கும் ஆயிரம் பேர்களுக்கு அவர்கள் தொழில் கருவிகள் வாங்குவதற்கு உதவி செய்வதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்திலே நாம் திட்டம் வகுத்திருக்கிறோம்.
இவை அவ்வளவையும் சொல்லிவிட்டு, இவைகள் போதாது என்று கூறிவிட்டு, ஆனால் வரிகள் போடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற காரணத்தினால் இப்படிச் சொன்னார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். ஒரு காலத்தில் இந்தப் பக்கத்தில் இருந்தவர்; எதிர்க்கட்சியினர் வரிகள் போட்டதைக் கண்டித்துக் கேள்விக்கணைகளைத் தொடுத்த நேரத்தில் பதில் அளித்தவர்.
ஆகவே கேள்வி கேட்கிறவர்கள், பதில் சொல்கிறவர்கள் மாறி, மாறி வருகிற நிலைகள் ஜனநாயகத்திலே வியப்புக்குரியதல்ல. ஆகவேதான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற காரணத்தினால் இவ்வளவையும் சொல்லிவிட்டு, யானைப் பசிக்குச் சோளப்பொரியைப் போட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, இன்னும் பல திட்டங்கள்
இங்கே நிறைவேற்றப்பட வேண்டுமென்று எல்லாத் திட்டங்களையும் வகுத்துக் கொண்டு விட்டு, ஆனாலும் வரிகள் போடலாமா என்ற ஒரு கேள்வியை இங்கே கேட்டிருக்கிறார்கள்.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்.
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ஒரு திட்டத்தை இந்த அரசு தயாரித்து, அதற்காக நிதியினைத் திரட்டி வருகிறோம்.
