நமது விளக்கம்
பகுதி 2 · 2 / 15
“இவ்வளவு நல்ல காரியங்களைச் செய்வதற்கு விற்பனை வரியிலே அரை சதவீதம் உயர்த்தினால்தான் என்ன” என்று அவர்கள் கேட்ட நேரத்தில், எனக்கு மிகத் தெம்பாக இருந்தது.
இவ்வளவு தூரம் பழுத்த அனுபவம் வாய்ந்த ஒரு நல்லவருடைய—வல்லவருடைய ஆதரவு இந்த அரசுக்கு இந்த வரி விதிப்பிலே கிடைத்து விட்டது என்பதிலே எனக்கு நிறைய மகிழ்ச்சி!
ஆனால், மணலி பேசிய பிறகு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியினர் தமக்கு இடையே நடத்திய இரகசியக் கூட்டத்திலே என்ன முடிவு எடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் நேற்றைய தினம் இந்த வரியை எதிர்த்துப் பேசியதோடு இன்றைக்கும் அதன் தொடர்பாகப் பேசியிருக்கிறார்கள்.
இந்த நிதிநிலை அறிக்கையின் மீது நமது நண்பர் பிரஜா சோஷலிஸ்ட் கட்சிச் சார்பில் பேசிய திரு. ஆறுமுகசாமி அவர்கள் “பல முழுமையான சோஷலிச நடவடிக்கைகளைக்—
கொண்டது” என்று குறிப்பிட்டார்கள். நான் இங்கே விவாதத்திற்குப் பதிலளிக்கிற நேரத்தில் அவர் சொன்னதையே எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
அந்த இலட்சியத்தைக் கொண்டுவரவேண்டுமென்ற முனைப்போடு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நல்லெண்ணம் கொண்டவர்கள், ஆர்வம் கொண்டவர்கள் எவரும் மறுக்க முடியாது என்று நம்புகிறேன்.
ஏழைகள் ஏற்றம்பெற . . . . . .
அதற்கேற்ற வகையிலே தான் இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு அம்சங்கள், ஏழை எளிய மக்களைத் தொழிலாளத் தோழர்களை, பாமர மக்களைப், பாட்டாளி மக்களைத் தொடக்கூடிய பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. விவசாயத் தொழிலாளர்களை, அவர்கள் குடியிருக்கிற மனைகளிலிருந்து எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்கிற கொடுமை நீண்ட பல ஆண்டுகளாக நிலவுகிறது.
அந்தக் கொடுமையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு விவசாயத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படாமலிருக்க வேண்டும் என்பதற்காகத் திட்டம் தீட்டியுள்ளோம். அவர்கள் வெளியேற்றப்படாமலிருப்பது மாத்திரமல்ல, அவர்கள் குடியிருக்கின்ற மனைகள் அவர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற முடிவினை ஏற்றிருக்கின்றது எமது அரசு.
மாநில முழுவதிலும் இந்த நிலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு முதற் கட்டமாகத் தஞ்சைத் தரணியில் இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருக்கின்ற மனைகள் அவர்களுக்கே சொந்தமாக்குகின்ற அளவிற்கு ஒரு திட்டத்தை நான் இன்றைக்கு வகுத்து, இந்த நிதிநிலை அறிக்கையிலே அரசின் சார்பிலே வெளியிட்டிருக்கிறோம்.
இன்று இலட்சக்கணக்கான நிலமற்ற ஏழை விவசாயிகள் நிலப்பட்டா, மனைப்பட்டா இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிலப்பட்டா, மனைப்பட்டாவை இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது என்று நானும் பல முறை அறிவித்ததற்கிணங்கக் காடுகள் என்ற பெயரால், ஆனால் உண்மையில் காடுகளாக இல்லாமல் இருக்கிற நிலங்களைக்கூட நிலமற்ற விவசாயிகளுக்குத் தந்திட வேண்டும் என்கிற அடிப்படையை அமைத்து அந்தத் துறையினுடைய அமைச்சர் மாநிலத்திலே பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆராய்ந்து பார்த்து வந்து, அந்த நிலையிலே இன்றைக்குக் காட்டு நிலங்களில் 50 ஆயிரம் ஏக்கரா வரையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஒப்படை செய்து கொடுப்பது என்ற முடிவினை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் கேரளாவைப் பின்பற்ற வேண்டுமென்று திரு கே. டி. கே. தங்கமணி அவர்கள் கூறினார்கள்.
ஏழைகள் வாழ்வில் புதுமைகள், புரட்சிகள் !
கேரளத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி முதன் முதலாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த ஆண்டு 1957. அந்த ஆண்டிலேயிருந்து 1971-ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட ஒரு பதின்மூன்று, பதினான்காண்டுக் காலம்—அவர்கள் தொடர்ந்து ஆட்சிப் பீடத்திலே இல்லாவிட்டாலும்—அந்தக் கொள்கைகள் கேரள மாநிலத்தில் பரவலாக்கப்பட்டு, அதற்கு ஏற்றவண்ணம் அந்த மண் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது!
ஆனால் கேரளாவிற்குக் கிஞ்சிற்றும் சளைக்காத அளவுக்குப் புதுமைகளையும், அமைதியான புரட்சிகளையும், ஏழை எளியோர் வாழ்க்கையிலே செய்திட வேண்டும்; ஏழைகள் நிமிர்ந்து நடக்கவும் அவர்கள் முகத்திலே புன்னகை காணவும் வழி பிறக்கவேண்டுமென்று எண்ணிச் செயலாற்றுகின்ற இந்த அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று எத்தனை ஆண்டுகாலமாகிறது என்பதனையும், இடையிலே எவ்வளவு சோகப்புயல்களை எல்லாம் ஆளும் கட்சி தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதனையும் உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவார்கள்.
பேருந்துகள் தேசிய மயம்.
பயணிகள் பேருந்துகள் தேசிய மயமாக்கியிருப்பதை நீங்கள் வரவேற்றிருக்கிறீர்கள்; அவைகளுக்கு உச்சவரம்பு கட்டப்பட்டிருப்பதையும் வரவேற்றிருக்கிறீர்கள்.
பயணிகள் பேருந்துகளைத் தேசியமயமாக்கியது பற்றி—நாட்டுடைமை ஆக்கியது பற்றி, எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் முற்போக்கு எண்ணம் படைத்த வேறு உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள்.
நண்பர்கள் சுவாமிநாதன் போன்றவர்கள், நம்முடைய சுதந்திராக் கட்சித் தலைவர் திரு கணேசன் போன்றவர்கள் எல்லாம், “நீங்கள் இப்போது நடத்துகிற பேருந்து நிர்வாகத்தையே ஒழுங்காக நடத்த முடியவில்லை. இதையும் எடுத்துக் கொண்டு எப்படி நடத்தப் போகிறீர்கள்?”
என்று கேட்டார்கள்.
இப்படிக் கேட்டவர்களில் இரு சாரார் உண்டு: பொது உடைமை தேவை என்று கேட்டவர்களும் உண்டு; நீங்கள் நடத்த முடியாது—ஆகவே இந்தக் கொள்கை தேவையில்லை என்ற அடிப்படையில் கேட்டவர்களும் உண்டு.
அவர்கள் யார் யார் என்று பகுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை. நான் அன்றைக்கே விளக்கம் அளித்தேன். சென்னை நகரில் ஓடுகிற பேருந்துகள் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. வெளியூர்களில் ஓடிக்கொண்டிருக்கிற—பல ஊர்களை இணைத்துக் கொண்டு ஓடுகிற பயணிகள் பேருந்துகள் மூலமாக நமக்கு லாபம் தான் கிடைக்கிறது. இங்கே ஏற்படுகிற நட்டத்தை ஓரளவு சரிக்கட்டுகிற அளவுக்கு வெளியூர்களில் ஓடிக் கொண்டிருக்கிற பஸ்களின் மூலம் நமக்கு லாபம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இப்போது நாம் நாட்டுடைமையாக்குகிற பஸ்கள் எல்லாம் வெளியிலே ஓடிக்கொண்டிருக்கிற பஸ்கள் என்கிற காரணத்தால் அவைகளையும் நாம் தனித்தனி நிர்வாகமாக நடத்த வேண்டியதில்லை என்ற காரணத்தால் நட்டம் ஏற்பட வழியில்லை.
நிர்வாகத்தில் இருக்கிற குறைபாடுகள் பற்றி நீங்கள் எடுத்துச் சொன்னதை நான் அப்படியே மறுக்கிறேன் என்று தவறாகக் கருத வேண்டாம். அந்த நிர்வாகத்தை மேலும் சீர்திருத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. அதற்கான காரியங்களில் ஈடுபட்டிருக்கிறோம்.
நண்பர் சுவாமிநாதன் பேசுகிற நேரத்தில் அரசுக்குச் செலுத்த வேண்டிய வட்டி கூடக் கொடுக்காமல் கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் உங்களுக்கு நட்டம் ஏற்படுகிறது. அரசுக்குக் கொடுக்க வேண்டிய வட்டியும் சேர்த்தால் ரூபாய் இரண்டரைக் கோடி அளவுக்கு நட்டம் ஏற்படுகிறது என்று சொன்னார்கள்.
நட்டம்; ஒரு விளக்கம் !
நான் அவர்களுக்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அரசுக்குக் கொடுக்கப்பட வேண்டிய வட்டிக்காகக் கொடுக்க வேண்டிய வட்டித் தொகையைக் கொடுத்த பிறகுதான், இந்த நட்டமே தவிர வேறு அல்ல.
**திரு கே. ராஜாராம்:** ஆனால் அரசுக்கு இந்தப் போக்குவரத்துத் துறை வருமான வரி செலுத்துவது இல்லை. தனியார் ஓட்டுகிற பஸ் கம்பெனிகள் வருமான வரி செலுத்துகிறார்கள். இதை அரசு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
