உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

நமது விளக்கம்

பகுதி 1 · 1 / 15

நமது விளக்கம்

**தலைவர் அவர்களே!**

இந்த மன்றத்தின் முன்னால் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது மாமன்றத்து உறுப்பினர்கள் தங்களுடைய விழுமிய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். நிதிநிலை அறிக்கை பற்றி எதிர்ப்பான கருத்துக்களையும், ஆதரவான கருத்துக்களையும் தெரிவித்தமைக்காக,—அந்தக் கருத்துக்கள் ஏதாவது ஒரு வகையில் இந்த அரசின் காரியங்களுக்குப் பயன்படும் என்ற ஒரு நிலையில் நான் நன்றி கூறி வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எடுத்துக் காட்டப்பட்டுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் இந்தப் பொது விவாதத்திலேயே நான் பதிலளித்து விடுவது என்பது இயலாத காரியம். உறுப்பினர்களுடைய உரைகளுக்கும் நான் தனித்தனியாகப் பதிலளிப்பதற்கு நேரம் இல்லை. இவற்றை அனுசரித்துத்தான், சென்ற ஆண்டிலிருந்து ஒரு புதிய முறையை நாம் வகுத்துக்கொண்டு பல்வேறு துறைகளிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு சட்ட மன்றத்திலேயும், பேரவையிலேயும் எந்தெந்த மானியங்கள் விவாதிக்கப்படுகின்றனவோ அவைகளைப்பற்றிய மொத்தக் கருத்துக்களை அங்கே விவாதிக்க வழிவகைகள் கண்டு, அவை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தகைய துறைகளைப் பற்றி இங்கே விவாதிக்கப்படுகின்ற நேரத்தில் தொடர்புடைய அமைச்சர் பெருமக்களும் அதற்கு நல்ல விளக்கங்களைத் தருவார்கள் என்று நம்புகிறேன்.

விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய உறுப்பினர்கள் பலர், இந்த நிதிநிலை அறிக்கை உண்மையிலேயே தங்களது உள்ளத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று அவர்களது மனச்சாட்சியே கூறினாலும் இந்த மன்றத்திலே அவர்கள் எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்திருக்கின்ற காரணத்தினால் எதிர்க்க வேண்டிய அவசியத்திற்கு ஆளானார்கள் என்பதையும் நான் மறந்து விடவில்லை.

“இதிலே புரட்சி எதுவுமே இல்லை, புதுமை எதுவுமே இல்லை!” என்று பத்திரிகைச் செய்திக்குத் தலைப்புக் கொடுத்து விட்டு நமது மாண்புமிகு பொன்னப்ப நாடார் அவர்கள் தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார்.

இதிலே புரட்சியும் புதுமையும் இருக்கின்றதா இல்லையா என்பதை இந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற திட்டங்கள்—நடைமுறைக்கு வருகின்ற நேரத்தில்தான் தெரியுமே அல்லாமல்—நான் நிதி நிலை அறிக்கையைப் படித்து முடித்ததும்—உடனடியாக இந்த மாமன்றம் தலைகீழாகச் சுழன்று ஒரு பெரிய புரட்சிகரமாக மாறும் என்று நானும் எண்ணவில்லை; மாண்புமிகு பொன்னப்ப நாடார் அவர்களும் எண்ணியிருக்க மாட்டார்கள்—என்றே நான் கருதுகின்றேன்.

குளோரோஃபாம் கொடுக்கப்பட்டவர்கள் நிலை

பல உறுப்பினர்கள் இந்த நிதிநிலை அறிக்கையைப் பற்றிப் புகழ்கின்ற நேரத்தில் நம்முடைய டாக்டர் ஹாண்டே அவர்கள் குறிப்பிட்டார்கள். “இதிலே புகழ்வதற்கு என்ன இருக்கிறது? மயக்க மருந்து உட்கொண்டவர்கள், அதாவது ‘குளோரோஃபாம் கொடுக்கப்பட்டவர்களைத் தவிர மற்ற யாரும் புகழ முடியாது’” என்று சொன்னார்கள்.

‘குளோரோஃபாம்’ கொடுக்கப்பட்டவர்கள் பேசவே முடியாது; நல்ல டாக்டர்களுக்கு இது தெரியும்!

ஆனால் என்ன காரணத்தினாலோ டாக்டர் ஹாண்டே அவர்கள் பட்ஜெட்டைப் பற்றிப் புகழ்பவர்கள் எல்லாம் ‘குளோரோஃபாம்’ மயக்கத்திலே இருப்பவர்கள் என்று குறிப்பிட்டார்கள்.

வரிகள் பற்றி இரண்டு கருத்துக்கள்.

இது பொருளாதாரம் தெரியாமல் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்று டாக்டர் ஹாண்டே குற்றம் சாட்டினார். வரிகள் போடுவதால் விலைவாசி உயரும் என்கிற கருத்தும், உயராது என்கிற ஒரு கருத்தும் மேதைகளால் சொல்லப்பட்டிருக்கிறது. “கின்ஸ்மாஸ்க்ரேஸ்” போன்ற பொருளாதார மேதைகள் வரிகள் போடுவதால் மக்களிடத்திலுள்ள பணத்தைக் குறைப்பதன் மூலம் விலைவாசி குறையும் என்ற தத்துவத்திற்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஏழை-எளியோருக்கு நல்வாழ்வளிப்பதே எங்களுக்குத் தெரிந்த பொருளாதாரம்.

டாக்டர் ஹாண்டே அவர்கள் சொல்வதுபோல நான் பெரிய பொருளாதார மேதையல்ல; நான் அந்த மேதா விலாச அடிப்படையிலே இந்த அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறேன் என்று நான் வாய்ப்பறை அடித்துக் கொள்ளவும் தயாராயில்லை!

நானும், எனது கட்சியும் கொண்டிருக்கிற பொருளாதாரம் எல்லாம் இந்த நாட்டிலே இருக்கின்ற ஏழை எளிய சாதாரண நடுத்தரப் பாட்டாளி மக்கள்—தொழிலாளி மக்கள் நல்வாழ்வைப் பெறவேண்டும்; அதற்கு ஏற்ற வகையிலே என்னென்ன திட்டங்கள் தீட்ட வேண்டும் என்கிற அடிப்படையிலே எதை யோசிக்கிறோமோ அதைத்தான் நாங்கள் கொண்டுள்ள அல்லது நாங்கள் சிறப்பாகப் போற்றுகின்ற பொருளாதாரமாகக் கருதிக் கொண்டிருக்கின்றோம்.

நல் அரசின் இலக்கணத்திற்கொப்ப நமது நிதிநிலை அறிக்கை

மத்திய அரசு இன்றைக்கு இந்த மாநில அரசிற்கு இட்டிருக்கின்ற கட்டளையின்படி ஆண்டு ஒன்றுக்குத் திட்டத்தின் வாயிலாக 70 அல்லது 80 கோடி ரூபாய்தான் செலவிடலாமென்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசைப் பொறுத்த வரையில் அந்த 70 கோடி ரூபாய் அல்லது 80 கோடி ரூபாய் என்ற வரையறையில் திட்டங்கள் வரையறுப்பது முடியாது என்ற காரணத்திற்காக, நமது ஓராண்டுத் திட்டத்தை 100 கோடியிலிருந்து 105 கோடி ரூபாய் வரையில் உயர்த்தி, அதற்காக நிதிவகைகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்கிற நல்ல அரசினுடைய இலக்கணத்துக்கு உட்பட்டு, வழிவகைகள் எல்லாம் ஆராய்ந்து இந்த அறிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.

மூலதனக் கணக்கும்—முதலீடு செய்வதும்.

ரெவின்யூ கணக்கை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் வரிகளைக் குறைக்கலாமென்று நண்பர் மாரிமுத்து ஒரு கருத்தைச் சொன்னார்கள். மூலதனக் கணக்கையும் ஒன்றுகச் சேர்த்துப் பார்த்துத்தான் மொத்த வருமானம் எவ்வளவு, மொத்தச் செலவு எவ்வளவு என்பதையும் சேர்த்து ஊதிய உயர்வை எப்படி சரிக்கட்டுவது என்று ஆராய்ந்து மூலதனக் கணக்கிலே தொழில் வளர்ச்சிக் கென்று நாம் முதலீடுகள் செய்ய வேண்டியிருக்கிறது.

மக்கள் வசதிக்குத் தான் நிதிநிலை அறிக்கையே தவிர அரசுக்கு ஆதாயம் தேடுவதற்கல்ல!

கட்டடங்கள், பொதுத் துறை என்ற தலைப்பிலே பல்வேறு கட்டடங்கள் அரசுக்கு ஆதாயம் கிடைக்காத வகையிலேயும் பல்வேறு வசதிகள் இயற்ற வேண்டிய நிலையிலே இருக்கிறோம் நாம்.

இவைகளெல்லாம் மக்களுடைய வசதிக்காகத் தானே தவிர அரசுக்கு ஆதாயம் வரவேண்டுமென்ற நோக்கத்தில் நாம் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவில்லை.

எனவே இந்த மூலதனம் என்ற அம்சத்திலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளவோ, ஒளிந்து கொள்ளவோ முடியாத நிலையிலிருக்கிறோம். இது போன்ற மூலதனச் செலவுகளுக்கு வருவாய்க் கணக்கிலேதான் நிகர மிச்சத்தை நாம் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இதை நண்பர் மாரிமுத்து அவர்களுடைய சந்தேகத்திற்கு விளக்கமாகத் தெரிவிக்கிறேன்.

அந்த மிச்சம் போதாத காரணத்தினாலேதான் மொத்தமாக எல்லாக் கணக்கிலேயும் விழுகின்ற துண்டு எவ்வளவு என்று நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

வரவு-செலவுத் திட்டத்திலுள்ள வரவேற்கப்படும் திட்டங்கள்.

இந்த வரவு-செலவுத் திட்டத்தில் உறுப்பினர்கள் வரவேற்கும் திட்டங்கள் ஏராளம். ஆனால் தோழமைக் கட்சியிலேயுள்ள சில பேர் கூட, குறிப்பாக திரு. மணலி கந்தசாமி அவர்களைப் போன்ற ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் மக்கள் நல்வாழ்வுக்காகப் போடப்பட்டிருக்கும் திட்டங்களைப் பாராட்டாமலிருப்பது, என்னைப் பொறுத்தவரை ஒரு மனக் குறைதான்!

ஒருவேளை முதல்வர் தஞ்சாவூர்க்காரர் என்பதால் திரு. மணலி கந்தசாமி அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையைப் பாராட்டியிருக்கக் கூடும்.