தென்னவன் காதை
பகுதி 5 · 5 / 10
என்னுயிர்த் தங்கைக்கு இடையூறு விளைத்த
வனின் மனைவி நீ!
உன்னுடலைக் காக்கைக்கும், கழுகிற்கும்,
காமங் கொள் கரடிக்கும் அளிப்பதல்லால்—
கரம் படவும் விடமாட்டேன், கப்பலிலே
ஏறென்றான்.
மானத்தைக் கப்பலிலே ஏற்றிவிட்ட மரபினிலே வந்தவனின் துணைவி, என் உடல், தானத்தை ஏற்றிடுக என உரைத்தபடி- உரம் பெற்ற அவன் மார்பில் சாய்ந்திடவே வரம் பெறுவேன் என நினைத்து - எப்படியும், கலம் ஏறி நின்றாள், பீடுநடைச் சிங்கம்பின், ஒரு பெண் நரி போல்!
★
"சிறையெடுத்துப் போன சீதா தேவிதனை - சிங்கா தனத்திலேற்றிப் பட்டத்து ராணியாக்கிடு வான், சீதைக்கோர் செல்வனுதித்தால் இலங்கைச் செங் கோலில் அவனுக்கும் பங்கு, பன நுங்கு போலப் பார்ப்பனர்க்கோர் தேசம் - பாடுபடாமல் வருவதென்றால் பதினாயிரம் சீதை போனால்தானென்ன மோசம்!"
இப்படி ஆரியர்கள் நினைத்தபடி நடக்காமல், - செப்படி வித்தைக்காரி சீதைக்கு சிறைச்சாலை ஏற்பாடு செய்துவிட்டான் இலங்கைக் கோமான்! - வேதமென்றும், வேள்வியென்றும், விளம்புகின்ற கூட்டந் தன்னை... விறகொடித்து வருதல் போல் விலா எலும்பொடித்து வருக என்றான்!
வெற்றி வேந்தனுக்கோர் தம்பி வீடணன். வேங்கை மரத்துப் புல்லுருவி, அண்ணனைச் சாய்த்து விட்டு அரசாளக் காத்தி ருப்போன், அனுமன் எனும் ஐந்தாம்படை யொன்றின் கையினிலே அக்கினிக்கோல் எடுத்துத் தந்து, அழித்திடுக இலங்கைமா நகரையென்றான் ....
தென்னிலங்கைச் சீமையெங்கும் தீக்காடு பிணக்காடு! குணக்கேடன் வீடணனின் ஒத்துழைப்பால் - குலம் வளர வழி கண்டார், குள்ளநரி ஆரியர்கள்!
தமையனாம் வாலியெனும் தமிழ் வீரன் தன்னைத் தர்ப்பைகளின் சூழ்ச்சியினால் கொன்றுவிட்ட கொடியன்.
சுயமரியாதையை விலை கேட்கும் சுக்ரீவன்
என்போன் -
கண் சுழற்றும் ஆரியரின் காலடியில் வீழ்ந்தான்.
★
தம்பியிடம் நம்பிக்கை வைத்திருந்த தங்கம்,
தரணியெலாம் நடுநடுங்க ஆண்டுவந்த சிங்கம்,
கடல் அலைமேல் எதிரிகளின் படைகள் வரக்கண்டு,
உடன் பிறப்பே, விபீஷணா ! உடன் கிளம்பு
என்றான்!
படமெடுக்கும் பாம்போடு விளையாட்டு வேண்டாம் -
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கிடுவாய்
அண்ணா உடன் சென்று சரணடைவோம் வந்திடுக
என்றே,மதுக்
குடங்காட்டும் ஆரியருக்குப் புகழ்பாடி நின்றான்-
