தென்னவன் காதை
பகுதி 4 · 4 / 10
இராவணனின் தங்கச்சி!
★
சூதறியாச் சோதரியை சூர்ப்பநகை ஆக்கிவிட்ட
காதெரியும் செய்தி கேட்டான்—
கண்ணிலே புண் பெற்றதுபோல் காட்சிதந்தான்.
கடலாளும் புவி வேந்தன் முத்துநகை
அண்ணனன்றோ?
படர் உறவு இல்லாவிடில்தான் என்ன?
இலங்கைக்கு அவளோர் பிரஜையன்றோ?
எழுந்து விட்டான் பழிவாங்க—காலை
இளம்பரிதி போல் கண்களிலே சிவப்பு தேக்கி...
வேந்தன் வரும் செய்தி கேட்டு விழியழகி
சீதாதேவி,
பாந்தமுள்ள மானொன்று வேண்டுமென்று பர்த்
தாவை விரட்டி விட்டாள்!
“அண்ணனில்லா நேரத்தில் அண்ணிக்கு வலை
வீசும் நினைப்போ தம்பீ?
முன்னவன் பின் ஓடு நீயும்—எனத் துரத்தித்,
தென்னவன் வருகைக்குக் காத்திருந்தாள்.
தீ பறக்கும் கண்ணுடனே தேர்போல வரும் வீரன்
தேன்மொழி கொட்டிச் சீதை தெருவாசல்
வருதல் கண்டான்
‘மூத்தவனும் இளையவனும் ஓடிவிட்டார்—எனக்கு
ஏற்றவன் நீ வந்து விட்டாய்—என்னை உனக்குத்
தந்துவிட்டேன் எனத் தழுவினாள்,
இராவணனின் தடந் தோளில்,
படர் முல்லை போலப் பைந்தொடி சீதாதேவி!
