தலைகேட்டான் தம்பி
பகுதி 2 · 2 / 5
யாரிருப்பார் என நினைத்த நினைப்பறுத்து
வாரிக் கொள் நான் வழங்குகின்ற செல்வத்தை!
மாரிக்குப் பெயர்தான் குமணனென்று மார்தட்டும் கொங்குமன்னா!
கோரிக்கை யொன்றுமக்கு என் குடும்பம் எனக் கேட்டார்!
அள்ளித் தந்தான்.
“நான் வாழ்வதற்குப் பொன் வேண்டும்.
அவன் வருகின்ற பாதையிலே வாழ்கின்றான் வெளிமான் என்று
தருகின்ற பொருள் வாங்க நடந்து சென்றேன்;
அந்தோ மன்னா? அவனிறந்து ஆண்டொன்று ஆனதாலே -
அவன் தம்பி இளவெளிமான் இருக்கின்றான் -
கொடை வழங்க மறுக்கின்றான்.
கொடிய பதில் உரைக்கின்றான்.
வளங் கொட்டும் முதிரமலை ஆள்கின்ற காவலனே!
தரங் கெட்ட இளவெளிமான் தருக் கடக்க
ஆனை ஒன்று தரவேண்டும் - அதனை அவன்றன்
காவல் மரத்தில் கட்டி வைத்துக் கடையனவன் தலைகுனியச் செய்ய வேண்டும்;
தருவீர்” என்றார்.
தந்துவிட்டான்.
வீர வெளிமானுக் கொரு தம்பி
இளவெளிமான் போல் வேந்தன் குமணனுக்கு முண்டு;
இளங்குமணன் அவன் பேர்.
அணிமணிகள் ஆனை சேனை அரண்மனைகள் அத்தனையும்;
கவிமணிகள் வாழ்வதற்கே தந்துவிட்டால்
துணி மணியும் இல்லாத ஆண்டி மடம் ஆகிவிடும் -அண்ணன் நமது நாடு -
இனியுமிதை அனுமதிக்க முடியாதண்ணா;
இப்போதே பிரித்துவிடு என் பாகம் என்றான்.
