தலைகேட்டான் தம்பி
பகுதி 1 · 1 / 5
கரும் பெடுத்துத் தமிழ் பிழிந்து - மலரில்
சுரும் பெடுத்து வருகின்ற தேன் கலந்து
அரும் பெடுத்துச் சிரிக்கின்ற மகளிர் கூட்டம்
“எறும் பெடுத்துச் செல்கின்ற உணவு கூட
எம் மன்னன் குமண வள்ளல் தந்த” தென்று
எழுச்சி நடை போடுகின்ற கொங்கு நாடு.
*
தமிழ் பாடும் புலவரெல்லாம் குமணன்
புகழ் பாடி வந்திடுவார்-
இமிழ் கடலின் அலைபோலச் சொல் முழங்கும்
அமிழ்த மெனும் தமிழ் மொழியின் பண் முழங்கும்
கமழ்கின்ற கவிதை மலர்த் தோட்டம் - அன்பு
தவழ்கின்ற நெஞ்சத்தின் கூட்டம்.
முத்திரைத் தமிழால் கவிதை யாத்திடும் புலவர் - பெருஞ்
சித்திரனார் என்றொருவர் - பேரறிஞர்!
பத்தரை மாற்றுத் தங்கம் போல் பத்தினி-
புத்திரச் செல்வம் புலவரை யீன்ற வயிறு - அவர்
இத்தரையில் கண்ட சுகம் வறுமையே என்று
மெத்த இளைத்திட்டார் - நித்த நித்தம் பட்டினியால்!
பூப்போல வாடி வதங்கிடுவாள் துணைவி
புழுப்போலச் சுருண்டு படுத்திடுவாள் அன்னை
பூனைபோலப் பானை உருட்டிடுவான் பசியாலே பிள்ளை!
கைபிசைந்து நின்றிருந்த கவிஞருக்குக்
கொடையாலே கைசிவந்த குமண வள்ளல் நினைவுவரக் கிளம்பி விட்டார்.
*
பாரிக்கும் காரிக்கும் பின்னர்க் கொடை வழங்க
