ஒருதலைக் காதல்
பிரிவுகள் 9 · 9 / 11
தயக்கமுடன் தலையசைத்து அவரை நோக்கி;
‘‘மயக்கத்தில் கள்ளாதீர் என்னை - மானங்காக்க மாற்று
வழிதான் என்ன?’’ என்றான்.
‘‘மாவீரன் நற்கிள்ளியெனும் வெண்ணெயினைக்
கையில் வைத்துக் கொண்டு,
மானங்காக்கும் போர்முனையில் வெற்றியெனும்
நெய்க்குத்தான் அழுவாருண்டோ?
மறுப்பொன்றும் சொல்லாமல் மன்னா - இப்போதே
மகன் கிள்ளிக்கு அனுப்பிடுக ஓலை’’ என்றார் அமைச்சர்!
‘‘கிள்ளிக்கா? என்மகன் கிள்ளிக்கா? என்னை
எள்ளி நகையாடிவிட்டுப்போன நற்கிள்ளி;
அழைத்தால் வருவதற்கு ஒப்புவானோ? ஒப்பமாட்டான்!
அமைச்சரே! அந்த முயற்சி வீண்தான்!’’ என்றான் தித்தன்!
‘‘உங்கள் அழைப்புக்குக் காத்திருக்கவில்லையப்பா கிள்ளி!
உறையூரின் சிறப்புக்கு ஊனம் வராமலும்
உயிரினுஞ் சோழர்குல மானம் போகாமலும்
உடன்பிறப்பு ஐயைக்கோர் இழிவு நேராமலும் தடுத்திடவே
உங்கள் உத்தரவு இல்லாமலே நாட்டுக்குள் வந்துவிட்டேன்!
உடன் ஆணை வழங்கிடுங்கள் உங்கள் மகனுக்கு!
உறுப்பகையை ஓட்டோ விரட்டிவிட்டு வருகின்றேன்’’ - என்றபடி;
அந்திவானத்தில் அப்போது இறங்கிக் கொண்டிருந்த சூரியனின்
செந்தி முகத்துடன் நற்கிள்ளி; நாளவையில் நுழைந்திட்டான்!
‘மகனே!’ என்றோடி மார்புறத் தழுவிக் கொண்டான் தித்தன்!
மாவீரன் தோள்மீதும் உச்சிமீதும் முத்தமிட்டான்! அவனோ
மண்டியிட்டுத் தந்தையின் கால்வணங்கித் தொழுதபோது
சுண்டிவிட்ட நாணயம் போல் அவையோர் எழுந்து நின்றார்!
அமைச்சர்பிரான் கண்களிலே ஒளியுமிழ; ‘‘உறையூரை
ஆளப் பிறந்தவனே!’’ என அழைத்துக் கிள்ளியிடம்,
‘‘கட்டிக்கும், பாணனுக்கும் களத்திற்சென்று - நல்ல
வட்டியும் முதலுமாய்க் கொடுப்பதற்கு வந்துவிட்டாய்’’
என வாழ்த்துரைத்தார்!
‘‘பகை நாட்டான் பாணனை வெல்வதற்குப் படை எதற்கு?
புகை கிளப்பும் யாககுண்ட மந்திரங்கள் போதாதோ?
வேற்படை பல கொண்ட கட்டியினை வீழ்த்துதற்கு,
வீரர்கள்தான் எதற்காக?
வேள்வி செய்து விரட்டியடிக்க முடியாதோ?’’ என்று,
விளையாட்டாய்க் கண்சிமிட்டிக் கேட்ட கிள்ளியினை,
வெட்கத்தால் தலைதொங்கும் தித்தன், அணைத்தவாறு;
‘‘நடந்தவைகள் நடந்தவைகளாயிருக்கட்டும் மகனே! இனி
நடப்பவைகள் நல்லவைகளாயிருக்கட்டும்’’ மென்றான்!
அத்துடன் அவையில் உள்ள வீரர்களை நோக்கி;
‘‘ஆமூர் விட்டுக் கிள்ளி வந்துவிட்ட சேதியினை
அறிவியுங்கள் நாட்டுக்கு!
அதிர்ச்சியுற்று அஞ்சியோடப் போகின்றார் பகைவர்
என்று நமது
அத்தாணி மண்டபத்துப் பேரிகைகள் முழங்கட்டும்!’’
இவ்வாறு
தித்தன் வீரவேண்மான் ஆணை அதிர்ந்தவுடன்
அத்தாணி மண்டபத்துத் தோற்கருவிகள் அதிர்ந்தன!
உறையூர் அரண்மனையின் மதில்கள் அதிர்ந்தன!
உள்நாட்டுப் பாசறை முரசங்கள் அதிர்ந்தன!
ஆயத்தமாகிவிட்டான் போருக்குக் கிள்ளியெனினும்
ஐயையாம் தன் தங்கையினைக் காண்பதற்கு,
அவளிருக்கும் மாளிகைக்கு விரைந்து சென்றான்;
அங்கு நற்கண்ணை வந்துள்ள தகவல் அறியாமல்!
இதற்கிடையே
‘உறையூர் அரண்மனைக்கு உடனே அழைத்து வா;
சொன்னார்’ என்று
ஒரு வீரன் தேர் ஒன்றை தெருவாயில் ஓரத்தில்
நிறுத்திவிட்டு,
அந்தி சாய்ந்துவிட்ட காரணத்தால் அகல்விளக்கின் முன்னாலே
குந்திக்கொண்டு கவிதை எழுதுகின்ற காவற்பெண்டை,
அழைத்திட்டான்! அவசரமெனக் குறிப்பிட்டான்!
பரபரப்பில் எதற்காக என்றுகூடக் கேட்காமல்
பாட்டெழுதும் ஓலையினைச் சுருட்டிப் போட்டுவிட்டு
பூட்டொன்றை வீட்டுக்குக் காவலாய் மாட்டிவிட்டு
புறப்பட்டுத் தேரேறி அமர்ந்துகொண்டாள் காவற்பெண்டு!
உறையூர் அரண்மனைக்குப் போகாமல் - அந்தத்தேர்,
ஒரு காத தூரம் உறையூர் எல்லை தாண்டி ஓடியதால்,
தித்தன்தான் அழைத்திருப்பான் என்று நம்பி,
தேர் ஏறிச் சென்ற செவிலித்தாய் திடுக்கிட்டாள்!
எத்தர்களாம் கட்டியும் பாணனும் செய்திட்ட சூழ்ச்சியினால்
எதிரிகளின் பாசறைக்கு இழுத்து வரப்பட்டோம்
என்றுணர்ந்து,
எரிமலையாய் வெடித்தபடி, ‘‘இந்த இழிதகைச் செயலுக்கு,
எவன் வகுத்தான் வீரம் என்று ஓர் இலக்கணம்?’’
எனக்கேட்ட காவற்பெண்டை நெருங்கி;
‘‘பசுமந்தை கவர்ந்தபின்தான்; தாயே;
பகையெதிர்த்துப் போரிடுதல் இந்தப் பாணன் வழக்கம்!
உறையூர் அரண்மனையில் பசுவாக நீ இருந்து
உறவாக வளர்த்த மகன் ஓடிவிட்டான் நாட்டைவிட்டு!
ஒப்பில்லாப் பேரழகி ஐயை எனும் ஒப்பாரியும்
உன் மடியில் தவழ்ந்து வளர்ந்தவள்தானே!
அதனால் தான்;
காவற்பெண்டாம் இந்தக் காராம்பசுவைக்
கவர்ந்துள்ளோம் - உன்
கன்றனைய கட்டழகுப் பெட்டகமாம் ஐயை; இந்தக்
கட்டியெனும் மன்னவனை,
மணந்து கொள்ளச் செய்துவிடு! பின்னர்
மன்னித்து மறந்திடுவோம் உறையூர்மேல்
பகையுணர்வை’’ என்றான் பாணன்!
‘‘மண் வளைத்துப் பின்னர் நீங்கள்
பெண் வளைத்துப் போவதற்கு - உறையூர்வாழ்
மக்கள் எல்லாம் மரங்கள் அல்லர்! அதனாலே
மறந்திடுங்கள் ஐயைநல்லாளை அடைகின்ற
திட்டத்தை’’ என்றாள்!
3. ‘‘கொய்யாக் கனியாம் ஐயையினை மறப்பதெனில்
எளிதான காரியமோ?
கொத்துக் கொத்தாய்ப் பூத்த வேங்கை மரத்தின்
கவினுறு தாதுக்களைப் போன்ற அழகுத் தேமல்கள்
நிறைந்து
கருங்கண்களுடன் விளங்கும் கட்டழகா
மொட்டுக்களாய்க்
குன்றென நிமிர்ந்த கொங்கை கொண்டாள் என்று
கோதையொருத்தியைப் பரணர் வர்ணிப்பாரே; அவர்
பாணியில் சென்று நானும் ஐயை முகம்
நாணிடப் புகழ்ந்து பாடிடல் வேண்டும்’’
- என்ற கட்டி மன்னன் பேச்சுக் கேட்டு
காதுகளைப் பொத்திக் கொண்டாள் காவற்பெண்டு!
‘‘பகைவர்களே! நீங்கள் எனை இந்தப் பாசறையில்
கொன்றாலும் பரவாயில்லை;
பைந்தோகை ஐயையின் வாழ்வைப் பாழ்படுத்த
விடமாட்டேன் அறிவீர்’’ என்றாள்!
‘‘அதையுந்தான் பார்ப்போம்; அடே யாரங்கே?
அடையுங்கள் இவளை ஒரு குண்டில்’’ என்று;
ஆணையிட்டான் கட்டி மன்னன்.
1. ‘‘இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில்
குவையிமில் விடைய வேற்றா ஒய்யும்
கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்
விழவு அயர்ந்தன்ன கொழும்பில் தின்றி
எழா அப் பாணன்...’’
(அகநானூறு : பாடல் : 113
பாடியவர் : கல்லாடனார்)
2. ‘‘குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர்...’’
(குறுந்தொகை : பாடல் : 11
பாடியவர் : மாழுவனார்)
3. ‘‘நாகிள வேங்கையின்
கதிர்த்து ஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள்...’’
(புறநானூறு : பாடல் : 352
பாடியவர் : பரணர்)
பொருள் விளக்கம் :
இகந்தனவாயினும் = எல்லைகடந்த தூரமாயினும்.
பகைவர் ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பு = பகைகளைப்
பாதுகாத்து பகைவர் உறையும் உணவு மிகுதியான அரண்!
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் = திரண்ட திமில்
கொண்ட காளைகளுடன் கூடிய பகைவர்களின் பசுக்களைக்
கவர்ந்திடும்! சுருணை = பூண். கனிகாழ் = நெய்கனிந்த வேலின்
தண்டு. எழா அப் பாணன் = புறங்கொடாத பாணன்.
நாகிள வேங்கை = கொத்துக் கொத்தாய்ப் பூத்துள்ள இளவேங்கை
மரம். நுண்பல் சுணங்கு = நுண்ணிய பலவாகிய பூந்தாது.
♦ ♦ ♦
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயினும் சாலப்
பரிவு காட்டி வளர்த்த தாய் காவற்பெண்டு;
பகைவரது பாசறையின் கூண்டுக்குள்ளே
பறவைபோல் சிறகடித்துப் பகைப்பதை அறியாப்
பாசமகன் நற்கிள்ளி, ஐயையினைப் பார்ப்பதற்கு,
பொற்கூறை வேய்ந்துள்ள மாளிகைக்குள் நுழைந்தவுடன்
நற்கண்ணை அங்கிருக்கக் கண்டு அதிர்ந்து போய்
நின்றுவிட்டான்!
‘‘அண்ணா வருக!’’ என அழைத்திட்ட ஐயை நல்லாள்;
‘‘உன்னைக்
கண்ணாக உயிராகக் கருதுகின்ற கவியரசியினைக்
காண்க!’’ என்றாள்!
‘‘மன்னாளும் மகராசன் கட்டியென்பான் - மணப்
பெண்ணாக உனைக்கொள்ள முற்றுகையிட்டுள்ளான்! - மனம்
புண்ணாக உறையூர் மக்கள் எல்லாம் புறப்பட்டுப்
போருக்குக் கிளம்புகின்றார் - நற்கண்ணையினை;
நாளைக் காலைக்குள் போர்ப்
பண்ணாகப் படைவீரர்க்குப் பாட்டொன்று
எழுதச்சொல்!’’ என்றுரைத்த கிள்ளியின் கால்விழுந்து;
‘‘மண்ணாகப் போகட்டும் என் வாழ்வென்று
முடிவெடுத்து விட்டீரா? இதற்காகவோ
பெண்ணாக நான் பிறந்தேன்?’’ எனக் கேட்டுக் கண்ணீர்
உகுத்தாள் நற்கண்ணை!
‘‘தங்கையினைக் காண வந்தேன் - இங்கும்
மங்கையுந்தன் மையல் கதை கேட்கும் வேதனையா
எனக்கு வேண்டும்?
ஐயை! வருகின்றேன் நான்; நாளை
அதிகாலைப் போர்முனைக்குப் போகின்றேன்!
நற்கண்ணை நல்லதமிழ்க் கவியரசி - அவளுக்கு
பொற்கிழியொன்றைப் பரிசாக வழங்கி நீயே
வழியனுப்பி வைத்திடுக!’’
எனக்கூறி நகர்ந்தவனை எதிர்மறித்து;
