ஒருதலைக் காதல்
பிரிவுகள் 8 · 8 / 11
அந்த ஐயையினை முன்னிறுத்தி
அவள் தந்தை தித்தன் என்று
பரணராம் பெரும் பாவாணர்,
பாராட்டிப் பாட்டெழுதியுள்ளார் எனில் - அந்தப்
பாவையின் பெருமையைப்
பகர்வதும் எளிதோ?
அதனையும் கேள்!
3. கலகலவெனப் பரல்கள் உருண்டோலிக்கும்
காற்சிலம்பணிந்து ஆம்பல்மலர் மாலையுடன்
அரமிட்டறுத்த பொன்வளையல்கள் பொலிவுற்று
அழகிய முன்கை இரண்டும் அசைந்திட,
முத்துப் பவளமொடு அணிகலன் பூண்டு
மூங்கில் எனவே தோள்கள் பூரிப்புக் கொண்டு
கற்பெனும் பொற்புடைக் கன்னியாம்
கவின்மிகு ஐயையின் தந்தை;
மழையெனக் கொடை வழங்கும்
மாவெண் தித்தன் எனும் மன்னன்!
பரணர் புகழ்ந்த அந்தப் பாவையை மணந்திட
பற்பல வேந்தர்கள் பகற்கனா கண்டனர்!
நற்கிள்ளிக்கும் அவன் தந்தைக்கும்
நல்லுறவு இல்லையென்று கேள்வியுற்று
நல்ல சமயம் இதுதான் என்றும் - இதனை
நழுவ விடுதல் கூடாதென்றும்,
பவானியாற்றுப் பகுதி ஆண்ட சேர தலைவன்
பல்வேற்கட்டி எனும் பெயருடையான்;
தித்தன் மகனாம் தித்திப்பு மாங்கனியை மணப்பதற்கு
முத்திரை ஓலையொன்றுடன் தூதனை அனுப்பிவைத்தான்.
4. ஓலையில் உள்ள குறிப்பில்; உறையூர்க்கிணையான
ஒப்பிலா ஒளிபொழியும் நவமணிகள் பலவற்றை உமக்குக்
கொடுத்தபின், கொள்கிறேன் உமது பெண்ணையென்று,
எழுத்தின்மூலம் உரைத்தது கண்டு,
எது கொடுப்பினும் கொள்ளமாட்டேன்
என் மகளைக் கட்டியெனும் மன்னனிடம் தள்ளமாட்டேன்.
‘இதுதான் முடிவென்று உன் தலைவனிடம்
இன்றே சென்று அறிவித்திடுக!’ என்றான், தித்தன்.
சோழன் உரைத்த சொல்கேட்டுக்
கோபம் தலைக்கேறிக் கட்டியமன்னன்,
பாணன் என்னும் பலமுடை வீரனுடன்
படையெடுத்து வருகின்றான் உறையூர்மீது!
காதில் இச்செய்தி விழுந்ததுதான் தாமதம்;
காட்டில் உள்ள புலிகள் எல்லாம் ஒருருவம் கொண்டதுபோல்,
கட்டி, பாணன் இருவருமே எல்லையை மிதிக்காமல்
எட்டி உதைத்துத் திரும்புவதாய்ச் சூளுரைத்து
உறையூர் நோக்கி இளவல் நற்கிள்ளி - போர்ப்
பறை முழக்கிப் போயுள்ளான்” என்றுரைத்தார் சாத்தந்தை!
“தேடிநானும் செல்கின்றேன் என் தெய்வத்தை”யென்று,
ஆடிக்காற்றில் பறக்கின்ற அன்னத்தின் தூவிபோல்
அங்கிருந்து மறைந்து போனாள்!
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஆமூர்தாண்டி
பூவிரியும் சோலை உறையூர் புறநகரில் நுழைந்தபோது
நற்கண்ணை, விழியிரண்டும் வியப்பால் துள்ளியாட,
5. சிற்றில் முகப்பொன்றில் செந்தமிழ்ச் செவிலி
காவற்பெண்டாம் கவியரசி நிற்பது கண்டாள்!
ஆவல் ததும்பிட அவளிடம் ஓடி,
ஆங்கோர் தூணைப் பற்றியவாறு
அன்னாய்! உன் மகன் எங்கே? என்றாள்!
தமிழை மட்டுமல்ல; தன் மகனையும் காதலிக்கும்
தங்கநிலா நற்கண்ணை என்பதறிந்த காவற்பெண்டு;
என்மகன் எங்கு சென்றான் என நானறியேன்!
எனினும் அவன் எங்கோ ஒரு போர்முனைக்கே
போயிருப்பான்!
புலிபோன இடம் குறிப்பாகத் தெரியாவிடினும்;
புலி தங்கியிருந்த மலைக்குகையினைப் போலப்
புதல்வனை ஈன்றெடுத்துக் களத்தில்
முதல்வனாய் அனுப்பிய வயிறு இதுதானம்மா!
இவ்வண்ணம் காவற்பெண்டுரைத்த பதில் கேட்டுச்
செவ்வண்ணப் போர்க்களம் நோக்கி நற்கண்ணை
புறப்பட்டபோது;
தடுத்து நிறுத்திய அந்தத் தாய் - தன் மனையில்
தங்கிவிட்டுப் போகுமாறு பணித்திட்டாள்! அவளும்
தட்டவில்லை!
“உணவருந்தி, ஓய்வு பெற்று, உறங்கிடுக; நாளை
உதயத்துக்குப் பின்னால் ஓலையொன்று தந்து
உன்னை ஐயையிடம் அனுப்பி வைக்கின்றேன்!
உடன்பிறந்தாள் பேச்சைக் கிள்ளி மறத்தாலும்;
நற்கண்ணை - நற்கிள்ளி திருமணம் நடப்பதற்கு
நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்!
ஐயை மாளிகைக்குக் கிள்ளியும் வரக்கூடும்.
அதற்குள் நீ அவன் பிரிவை ஆற்றாமல்,
கையை மேலும் இளைக்கவிட்டுக்
கழல விடாதே வளையல்களை!” என்று
காவற்பெண்டு செய்த கேலியினால் நாணமுற்று,
கைவளையல்களை முழங்கவரை ஏற்றிக்கொண்டாள்!
1. “வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப...”
(நற்றிணை : பாடல் : 58
பாடியவர் : முதுகூற்றனார்)
2. “சீர் சான்ற விழுச் சிறப்பின்,
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தை....”
(புறநானூறு : பாடல் : 395
பாடியவர் : நக்கீரர்)
3. “அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை,
அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை,
இழையணி பணைத்தோள், ஐயை தந்தை,
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்...”
(அகநானூறு : பாடல் : 6
பாடியவர் : பரணர்)
4. “மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
கொடுப்பவும் கொள்ளா நெடுந்தகையவனே....”
(புறநானூறு : பாடல் : 352
பாடியவர் : பரணர்)
5. சிற்றில் நற்றாண்பற்றி, நின்மகன்
யாண்டுளனோ? என வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஒரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!”
(புறநானூறு : பாடல் : 86
பாடியவர் : காவற்பெண்டு)
பொருள் விளக்கம் :
வெண்கோடு = வெள்ளிய சங்கு. செல்லாநல்லிசை = கெடாத
நற்புகழ். அரிபெய் = பரல்கள் இடப்பட்ட.
தொடலை = தொடுக்கப்பட்ட மாலை. அரம்போழ் = அரமிட்டு
அறுத்த. பணை = மூங்கில். மாவண் = சிறந்த கொடைத்தன்மை
கொண்ட. வெண்ணெல்வேலி = நெல்விளையும் வயல்களை
வேலியாகப் பெற்ற. நன்கலம் = அணிகலன். கல் அளை =
மலைக்குகை.
♦ ♦ ♦
உறையூர்த் தித்தனது அத்தாணி மண்டபத்தில்
உறைவிட்டெழுந்த வாட்களுடன் தளபதிகள் நின்றிருந்தார்.
வீரவேண்மான் வெளியன் தித்தன்;
வீரர்களின் அணிவகுப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்றும்
வெகுண்டுவரும் கட்டி, பாணன் இருவருக்கும்
தகுந்தபடி பாடம் கற்பிக்கத் தவறக்கூடாதென்றும்
மரக்கிளையில் தொங்குகின்ற மலைப்பாம்பு
வனவிலங்குகளைச் சுற்றிவளைத்துச் சிக்கவைத்து
எலும்புகளைத் கணுக்கணுவாய் முறித்தெடுத்து
இறுதியிலே இரையாகிக் கொள்வதுபோல்
பகைப்புலத்தைப் பலமுனையில் சூழ்ந்தெதிர்த்துப்
பாணன், கட்டி இருவரது பல் பிடுங்க வேண்டுமென்றும்,
கூர்முனை வாள் ஒன்றை விரல்களால் தடவிக்கொண்டே
போர்முறைகள் வகுத்தளித்துக் கொண்டிருந்தான்!
அப்போது அமைச்சார், பணிவாகத் தலைகுனிந்து
அரசன் தித்தனிடம்; “மன்னவனே!
மாற்றார் வலிமையினைக் குறைவாக மதிக்க வேண்டாம்.
மற்போரில் திறமுடைய பாணன் என்பான்
கங்கநாட்டுத் தலைவன் பல்வேற்கட்டிக்குச்
சிங்கம்போல் துணையாக வருகின்றான்!” என்றார்.
“உறையூரின் வளத்திற்கு ஒப்பான
உரைசால் அணிகலன்கள் தருகின்றேன்;
உன் மகளை எனக்கலித்திடுக, என்று
என்ன மமதையிருந்தால் கட்டி மன்னன் கேட்டிருப்பான்?
இறப்பெனும் முடிவு எல்லோர்க்கும் உண்டெனும்போது - அது
இளமையில் வந்தால் என்ன; முதுமையில் வந்தால் என்ன!
எப்போது வந்தாலும் என் கொள்கை; உடலில்
தப்பாது ஓடுகின்ற உயிரோடு மானமும்
உடன்கட்டை ஏறுதல் கூடாது என்பதுதான்!”
தித்தன், இவ்வாறு தீப்பிழம்புச் சொற்களாலே
விடைபகர்ந்த பின்னும்,
அத்தாணி மண்டபத்தில் அமைச்சர்பிரான்; இதுகுறித்து
இத்தோடு விட்டுவிடலாம் என்றிராமல்; மன்னனிடம்
“பத்தோடு பதினொன்றாக என் கருத்தை ஒதுக்கிவிடாமல்,
பாணன் துணை, பல்வேற்கட்டிக்கு வாய்த்துள்ளதை
பகுத்தாய்ந்து பார்த்து முடிவெடுத்தல் நலம்,” என்றார்.
“பாணனின் ஆற்றல் பற்றி கல்லாடனார் என்னும் கவிஞர்,
பாட்டொன்றில் கூறுகின்றார்; பார்வேந்தே கேட்டிடுக!
1. எல்லை கடந்த தொலைவில் உள்ள எதிரிகளின்
அரண் அழித்து
ஏறுகளுடன் பசுக்களையும் கவர்ந்து வரும் திறன்
பெற்றுத் திகழ்ந்து
நெய் தடவிய கரிய பூண் அமைந்த நெடுவேல்
கையிலேந்தி
நேர்நின்று பகைவரை எதிர்த்து வெல்லும்
புறங்கொடாத புலிப்போத்து
என்று, பாணன் வீரத்தை கல்லாடனார் வியந்துரைப்பார்!
2. பல்வேறு வேற்படைகளைக் கொண்டு பகையெதிர்க்கும்
மாவீரன் கங்கநாட்டுக் கட்டியென்று
மாழுவனார் புகழ்ந்துரைப்பார்! இவ்வாறு
பாடல் பெற்ற வீரர் இவர் - உறையூர்மீது
படையெடுத்து வருகின்றார் என்ற உண்மை
மன்னர்பிரான் மறத்தல் தீது!’’ என்றார்.
ஆழ்ந்து சிந்தித்தே அறிவுரை வழங்கும் அமைச்சர் கருத்தை,
ஆத்திரத்தில் புறந்தள்ளிப் போட்டுவிடாமல் - அரசன்,
