உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒருதலைக் காதல்/பிரிவுகள் 7
கவிதைகள்

ஒருதலைக் காதல்

பிரிவுகள் 7 · 7 / 11

மாத்தமிழ்த் திறன் போற்றும் மனமுண்டு எனக்கு!”

அவள்:-

“திறனைப் புகழ்ந்தமைக்கு மிக நன்றி; அந்தத்

திறனிருக்கும் ஆரணங்கின் காதலுக்குத் தீவைப்பது

நன்றா?”

அவன்:-

“இருதரப்பின் இதயப்பரிமாறலே காதலுக்கு

இலக்கணமாம்!

ஒருதரப்பின் ஆசைக்கும் அதுதான் இலக்கணமா?”

அவள்:-

“பார்க்கின்ற முல்லைக்குப் பரிவு காட்டாமல்

இடர்தந்து புறக்கணித்தல் பாபமன்றோ?”

அவன்:-

“பாரி மன்னன் தேர்; முல்லைக் கொடியொன்று

படரத்தான் பயன்பட்டதேயன்றி;

பரவிடும் மலரின் மணத்தை - அந்த

மரத்தேர் நுகர்ந்து மகிழ்ந்ததும் உண்டோ?

பாவை நீ என்பது படர்வதென்றால் - நான்

பாரியின் மரத்தேராய் இருந்தென்ன பயன்?”

அவள்:-

“நாடாளும் மன்னனின் மைந்தர்தானே -

காடாளும் மாமுனிவர் அல்லவே நீர்!”

அவன்:-

“மாமுனிகளும் மாதர் மடி வீழ்வதுண்டு -

மறைமுகமாய் மதனன் கலை பயில்வதுண்டு!

மன்னர்மகன் நான்; உண்மைதான்!

மண் வளைக்கக் கொண்ட ஆசை;

பெண்ணின் இடை வளைக்கக் கொண்டேனில்லை!”

அவள்:-

“வாளுறையுடன்தான் உறங்குவேன் எனும், தலைவ!

சூளுரையொன்றுரைப்பேன் அறிக!

வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன்! அன்றி

வீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன்!”

அவன்:-

“கார்கால இடியைப்போல் முழங்குகின்ற

கவிப்பாவாய்; நீ சொன்ன இரண்டுமே நடக்காது!

போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்

பூவிதழை அல்ல! அல்ல! இதுவும் உறுதி!

அஃதேபோல் அவ்வாளால் உனுயிரை

அழிக்கமாட்டேன் அதுவும் உறுதி!

வருகின்றேன்; என்னை மன்னித்து

வழியனுப்பி வைத்திடுக!”

இவ்வாறு கூறிவிட்டு,

விழியழகி நற்கண்ணை விடையளிப்பதற்குக் காத்திராமல்

விரைந்து வந்து வீட்டோரம் நின்றிருந்த தேர் ஏறி

அமர்ந்து கொண்டான்.

தொடர்ந்து வந்த துடியிடையாள் - தேரின்

தூண் ஒன்றைப் பற்றிக்கொண்டு - “உமைப்

படர்ந்து தழுவத் தாவுகின்ற - இளம்

பருவக்கொடிதான் வதங்குவதோ?” என்றழுதாள்!

“உறையூர்க்கு அவசரமாய்ப் போகின்றேன் இன்று!

ஓரிருகிழமைகள் திரும்புகின்றேன் இங்கு!

உன்னோடு உரையாட நேரமில்லை இப்போது;

உளம் திறந்து முழுமையாகப் பேசலாம் அப்போது!” என்றான்.

தட்டிக் கழிக்கின்றான் எனத் தெரிந்துகொண்டு - தேரில்

முட்டிக் கொண்டழுதவாறு நற்கண்ணை;

“தலைவனே! உமக்காகத் தவமிருக்கும் என்னுள்ளத்தில்

அலைபாய்ந்து ஒலிக்கின்ற பாடலைக் கேள்” என்றாள்;

- பாடினாள்!

★ “இறாமனின் உடல்போன்றுச் சொரசொரப்புக் கொண்ட

சுறாமீனின் முகத்தில் நீண்ட கொம்புகள் போல்

முட்கள் குத்தும் இலைகள் நிறை தாழை மரங்கள்

முதுயானைத் தந்தம்போல் அரும்பு முதிர்ந்து

மாண்களிலே பெண்ணினம்போல் தலைசாய்த்து

மணங்கமழச் செய்கின்ற மகிழ்ச்சி குவங்கும்

விழாக்களங்கள் அமைந்துள்ள கடற்பரப்பிலும்,

வெற்றிக்கொடி நாட்டுகின்ற வீரர்குலத்தலைவா!

மணிகள் அசைந்தாடும் உன் நெடுந்தேரை; உன்பால்

பணிபுரியும் தேர்ப்பாகன் விரைந்து செலுத்திட; நீயோ

ஒருசில நாள் கழித்து வருவேனென்று

ஒதுகின்றாய் எனக்கு!

உனைப்பிரிந்து ஒருநாளும் இனி

உயிர்வாழமாட்டாள் இவள் என உணர்க!”

நற்கண்ணையின் சோக இசையினூடே; வீட்டோரம்,

நகர்ந்து கொண்டிருந்த அந்தத்தேர்;

நற்கிள்ளி ஆணை கேட்டு நாலுகால் பாய்ச்சலில்

நடுவீதியிற் பறந்து மறைந்தது ஓர் நொடியில்!

புரவிகள் எழுப்பிய புழுதித்துகளைப்

பொருட்படுத்தாது பின்தொடர்ந்தவளைப்

பொற்கொடி வந்து தடுத்தும் பயனில்லை! அவளோ

புலம்பிடும் சிலம்புடன் ஓடுகின்றாள்!

★ “இறவுப்புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல்

சுறவுக்கோட்டன்ன முள்ளிலைத் தாழை

பெருங்களிற்று மருப்பி னன்ன அரும்பு முதிர்பு

நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி

விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப!

இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச்

செலீ இய சேறிஆயின்; இவளே

வருவை ஆகிய சிலநாள்

வாழா ளாதல்நற்கு அறிந்தனை சென்மே!”

(நற்றிணை: பாடல்: 19

பாடியவர்: நற்கண்ணையார்)

பொருள் விளக்கம்:

இறவு = இறாமீன். சுறவு = சுறாமீன். பிணர் = சொரசொரப்பு.

மருப்பு = யானைத்தந்தம். நன்மான்உழை = நல்ல பெண்மான்.

உரவுநீர் = கடல். செலீஇய சேறிஆயின் = செலுத்திடச் செல்வாயானால்.

♦ ♦ ♦

களத்தில் வீசிய கைவேல் எனவே

கடுக்கிப் பறந்தாள் நற்கண்ணை! அவ்வேல்

களிறுடல் புகுந்து வந்தாற்போல்

களைத்துச் சோர்ந்து பூமியில் உதிர்ந்தாள்!

கண் விழித்துப் பார்த்தபோது; புலவர்

காலடியில் தலையிருப்பதுணர்ந்தாள் - “மனப்

புண்ணாற்ற மருந்திடுவீர் என நினைத்தேன்;

தண்ணார்ப் பெருங்கடல் மூழ்கிட கலத்தை மீட்க,

எண்ணார் கிள்ளி என்பதை உணர்ந்தும்

மண்ணாற் செய்த பாண்டமாய் எமது மதிப்பை

அவை நடுவே போட்டுடைத்ததேனோ?” என்று

அழுதுகொண்டே அனல் கக்கும் சொல்லால் கேட்டாள்!

“அம்மா; நற்கண்ணை! அழுதென்னைக் கொல்லாதே!

அவைக் களத்தில் நான் அவசரமுற்றேன் எனினும்

உண்மையில் நடந்தது தெரியாது உனக்கு!

உறையூரான் மகன் உள்ளத்தை அறிவதற்கு,

போர்முனையின் ஓய்வற்ற பாசறையில், உனக்காக;

ஓர் இரவு அவனோடு மனந்திறந்து உரையாடினேன்.

‘முடியட்டும் போர்பிறகு பேசலாம் - நாளைப் பொழுது

விடியட்டும் வெற்றிச் செய்தியுடன்’ எனக்கூறி,

நற்கிள்ளி, புன்னகையைத் தவழவிட்டுப் போனவுடன்,

நம்பிவிட்டேன் நான் அவனை; நாணத்தால் நழுவிப்

போகின்றான் என்று!

தென்றலுக்குத் தடை விதிக்கும் சோலையுண்டா?

தேனருவித் தழுவதலை ஏற்காத மலையெது? - இந்தத்

தென்னவனும் கன்னியுன்னை மணப்பான் என்றே

மன்றலுக்கும் உன் தந்தையுடன் நாள் குறித்து

மண்டபத்தில் அறிவித்து மணநிறைவு கொண்டுவிட்டேன்;

மறுத்தான் கிள்ளியென்றவுடன் நான் மாண்டுவிட்டேன்!

இப்போது

உயிரற்ற உடல்தானம்மா உன்னோடு பேசுவது!

சாற்றற்ற சக்கைதானம்மா இந்தச் சாத்தந்தை!

கயிறற்ற பம்பரங்கள் சுழல்வதில்லை;

கவிகற்ற உன்னெஞ்சுக் கென்னிலை புரியுமம்மா!”

விழியாறு பெருகியோடித் தாடியின்

வெள்ளிமுடி வெண்முத்துக்களைத் தாங்கிநிற்க,

பழிவந்து சேர்ந்ததே எனப் பதைத்துப்போன புலவரிடம்;

மொழியிலே அமைதி குழைத்து நற்கண்ணை, பேசலுற்றாள்!

“வேண்டாம் புலவரே; வேதனைக்கு விடையளிப்பீர்.

சாத்தந்தை என்னும் சாகாத்தந்தை; தமிழுக்கு!

பொன்மணிக் குவியலும் வைர வைடூரிய முத்துக் குன்றமும்,

நன்மணிமாடக் கூடங்களும் கோட்டைக் கோபுரமும்,

தொழுதேத்திப் போற்றுகின்ற கொற்றக்குடை ஆட்சியும்,

தோத்திரத்தால் உயர்ந்துள்ளம் கொள்ளை கொள்ளும் காட்சியும்,

இன்றிருக்கும், நாளை இல்லாமற் போகக்கூடும்!

என்றுமிருக்கும் பணியன்றோ தமிழுக்குச் செய்கின்ற பணி!

எனவே

தமிழ் உள்ளளவும் வாழ்வீர் நீவீர் - இந்தத்

தரணி உள்ளளவும் தமிழும் வாழும்!” என்றாள் நற்கண்ணை!

“நல்லதம்மா; நான் இனி வாழும் காலமனைத்தும்

மெல்லத் தமிழ் சாகாமல் காப்பதற்கே செலவிடுவேன்!

வெல்லச் சொல் கவிபுனையும் பெண்பாவாய் - நீ மட்டும்,

செல்லத்தான் வேண்டுமோ கிள்ளியினைப் பின்தொடர்ந்து?”

இவ்வாறு கேள்வி கேட்ட புலவருக்கு

எவ்வாறு விடையளிப்பதென்று நாணி;

“உறையூர்க்கு என்ன வேலையாய்ச் சென்றுள்ளார்

கிள்ளி?” என்று

உடனடியாய்ப் பேச்சுதனை மாற்றிவிட்டாள்!

“தித்தனுக்கும் கிள்ளிக்குமிடையே - ஒரு

தத்துவப் போர் நடந்ததாலே

மகன் - தந்தை மனத்தாங்கல் விளைந்து - அதனால்

மாற்றார்க்கு இடம் கொடுத்துப் போனதம்மா!

1. வெண்சங்கம் முழங்கிடவும்

வெற்றி முரசு கொட்டிடவும்

வேல்விழி மங்கையர் ஏற்றும்

விளக்கொளி வரிசை காண்பதற்கும்

விரைந்து வரும் மாலைப்பொழுதுக்குரிய

வீர வேண்மான் வெளியன் தித்தன் - என்று,

முதுகூற்றனார் எனும் புலவர் - தமிழ்

மதுஊறும் கவிமலரால் புகழ்ந்தார் தித்தனை!

அம்மட்டோ?

2. சீரும் சிறப்பும் செழிப்புற நாடும்,

சிறிய கண்கொண்ட பெரிய யானைப்படையும் பெற்று,

போருக்கிளையா தித்தனின் ஆற்றல்

பூத்துக் குலுங்கிடும் உறையூர் - என்று;

ஏறுநடைப் புலவர் நக்கீரப் பெருமான்

ஏடு கொண்டெழுதியுள்ளார் தித்தன் பற்றி!

அவனுக்கோர் மகனுண்டு ஐயை என்பாள் - உன்

ஆருயிர்க் கிள்ளிக்கு அன்புத் தங்கை!