ஒருதலைக் காதல்
பிரிவுகள் 6 · 6 / 11
சாத்தந்தைப்புலவர் அருகில் வந்து உச்சிமோந்து,
“சரித்திரத்தின் வைர எழுத்தாய் ஒளிவிடுவாய்” என்றார்!
பின்னர், சுற்றுமுற்றும் பார்த்த புலவர்;
“இன்னும் எங்கே காணவில்லை நற்கண்ணையை?” என்றார்!
ஆயிரத்தில் ஒருத்தியாக அரங்கின் கோடியிலே
அமர்ந்திருந்தாள் நற்கண்ணை, தன் தோழியுடன்!
“அவளை எதற்காகத் தேடுகின்றீர் புலவரய்யா?
அதைக் கொஞ்சம் சொல்லுங்கள் முதலில்” என்றாள்;
குவளை மலராம் நற்கண்ணைக்கு அன்னையென
வாய்த்திட்ட பெருந்தேவி!
“எதற்காகப் புலவர் அழைப்பார் என்று நாணிடுவேன்
குதர்க்கமாய் நீ எதுவும் கேட்டு குழப்பாதே” என்று,
பெருங்கோழிநாய்கன் குறுக்கிட்டுத் தடுத்து
பெருந்தேவி நாச்சியாரைக் கையமர்த்தி வாயடைக்கச்
செய்தான்!
“நற்கண்ணை, நல்ல தமிழ்க் கவியரசி என்பதால்
நற்கிள்ளி பெற்ற வெற்றியினைப் பாராட்டி
அற்புதமாய்ப் பாடல் ஒன்று வழங்கிடுவாள் என்றே, - அன்பு
தழைத்திட்ட உள்ளத்தால் - அவளை
அழைத்திட்டேன்” என்றார் புலவர்!
“வெட்கம் இன்னும் எதற்காகப் பெண்ணே!
கடகம் ஏந்திய காளையின் முன்னே,
கயல்விழியே; நீ நின்று புகழ்ப்பாட்டு உரைத்திட்டால்,
காலத்தை வென்று நிற்கும் புறப்பாட்டாய் அது,
அமையும் கண்ணே!
தயங்காமல் சென்றிடுக, அவை நடுவே! உன் பாடல் கேட்டு;
மயங்காமல் போகமாட்டான் உன் மனங்கவர்ந்தோன்” எனத்
துணிவுரை தந்த தோழியின் செவியில்
தோகை நற்கண்ணை உதிர்த்த சொற்கள் - அந்த
பொற்கொடி புகன்றதுபோல்
புறப்பாட்டாய் ஆனது உண்மை!
1) “கண்ணுக்கிடும் மை போன்ற கருத்த குறுந்தாடியுடன்
காலில் வீரக்கழல் அணிந்த இளங்காளையினைக் கண்டு
கைவளைகள் தானே கழன்று எனைக் காட்டிக்
கொடுக்குமென
கன்னியெனப் பெற்ற என் தாய்க்காக அஞ்சுகின்றேன்!
கடும்பகை வெல்லும் கிள்ளியின் தோள் தழுவற்கு
கனிமரம் கண்ட கிள்ளைபோல் தவிக்கின்றேன் - எனினும்,
கற்றறிந்தோர் குழுமியுள்ள அவையினை
எண்ணினால், இந்த
நற்கண்ணையினை நாணம் வந்து தடுக்குதடி!”
தோழி குறுக்கிட்டு,
“ஆதியிலே இருந்திருக்க வேண்டுமிந்த அறிவெல்லாம்
- இப்போது
பாதிப்பனை ஏறியபின் அஞ்சுவதால் என்ன பயன்?
மீதிமரம் ஏறினால்தான் நுங்கெடுத்துச் சுவைக்கலாம்!
பீடிகொண்டு இறங்காதே! பின்னர் பீத்து கொண்டு திரியாதே!”
தோழியின் சொற்கேட்டு நற்கண்ணைத்
துணிவுடனே எழுந்து வந்து - அவையோரைத்
தொழுது நின்றாள்!
ஆழியின் முத்துப் போல் தமிழ் எடுத்து
ஆமூர்த் தலைவனுக்கு வணக்கம் சொல்லி,
அறிஞர் பெருந்தகை சாத்தந்தையின்
அடிதொட்டு வாழ்த்துப் பெற்று,
அயலாரை வென்று வந்த உறையூர் இளவரசைக்
கயலாடும் விழியாலே கண்டு களித்து;
அவன் அஞ்சா நெஞ்சுக்கோர் எடுத்துக்காட்டு;
அவள், அவனை நினைத்தேங்கும் அகத்துறைப்பாட்டு;
வெற்றி விழா காண வந்தோர் வியந்து போற்ற
நெற்றியினைச் சுருக்கிக் கொண்டு, தாய் மட்டும்
விழித்துப் பார்க்கப் பாடுகின்றாள்!
2) வலிய தன் பாதத்தால் தாக்குண்ட விலங்குகள்
வலப்புறம் வீழ்வதல்லால் இடப்புறம் வீழ்ந்தறியா
வேங்கைப்புலியினையும் வேட்டையாடி
வெல்லுகின்ற ‘பாணி’ என்னும் மிருகங்கள்
குன்றனைய யானைகளைக் கொன்று அதன்
கொம்புகளை முறிக்கின்ற,
குளிர்ச்சோலையடர் மலைத்தொடர்களிடையே
கூர்வேல் ஒன்றை மட்டும் துணையாய்க் கொண்டு - எனது
போர்த்தலைவன் தனியனாய் வருவதற்கு அஞ்சிடான்!
அவனைப் பிரிந்திருக்கும் நானோ
அந்தப் பிரிவென்னும் நோயினால் அவதியுறுகின்றேன்!
பனித்துளி பொழியும் என் கண்களைத் தேற்றி
இனி ஆற்றுவதுதான் எவ்வாறு தோழி?”
நற்கண்ணை பாடி முடித்து நடுங்கினாள் தாயைப் பார்த்து!
“நானிருக்க பயமேன் நங்காய்!” என்றுரைத்தவாறு
பொற்புடைய புலவர்பிரான் அவையை நோக்கி;
“கற்புடைய இக்குல விளக்கை உங்கள் முன்னே
இளவரசன் நற்கிள்ளி பெற்ற வெற்றிக்குப் பரிசாக
வளமிகு பெருங்கோழிநாய்கன் வழங்குவதற்கு
முன்வந்துள்ளார்!
விருப்பம் பெண்ணுக்குண்டு நானறியேன்!
மறுப்பேதும் கூறாமல் ஒப்புக்கொண்டுள்ளார் தந்தை!
தாய்க்கு மட்டும் இது நடக்குமா என்ற தயக்கம்! அதனால்
தமிழ் மலரை கிள்ளியின் தடந்தோளில் சூட்டுதற்குத்
தடையாக யாருமில்லை” என்றார்!
“தடையுண்டு” எனத் தனல் மொழி பொழிந்தவாறு
படைகொண்டு வென்று வந்த நற்கிள்ளி அதிர்ந்தெழுந்தான்!
“போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்;
பூவிதழை அல்ல! அல்ல, அல்லவே, அல்ல!” என்றான்!
போய்விட்டான் அவையை விட்டு!
தாய்போட்ட கூச்சல் செவியைத் துளைத்திடுமுன்
உலகம் இரண்டு சுற்றியதால் நற்கண்ணை; இதயம்
உடைந்து நொறுங்கத் தரையில் சாய்ந்தாள்!
♦
★ “அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்கு, என்
தொடிகழித் திடுதல்யான் யாய் அஞ்சுவலே;
அடுதோள் முயங்கல் அவை நாணுவலே....”
(புறநானூறு : பாடல் : 83
பாடியவர் : நற்கண்ணையார்)
★ “இடம்படு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி,
வெண்கோடு புய்க்கும் தண்கமழ் சோலைப்
பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தித்
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனிவார் கண்ணேன் ஆகி, நோய் அட,
எமியேன் இருந்தலை யானும் ஆற்றேன்,
யாங்குச் செய்வோம் கொல் - தோழி!...”
(புறநானூறு : பாடல் : 252
பாடியவர் : நற்கண்ணையார்)
பொருள் விளக்கம் :
1) மை அணல் = மை போன்ற தாடி. தொடி = வளையல்.
கழித்திடுதல் = கைவிட்டுக் கழன்று விழுதல். யாய் = தாய்.
முயங்கல் = தழுவுதல்
2) வலம்படு = வலிமையுள்ள. வாள்வரி = புலி.
புகல்வந்து ஆளி = வெற்றி விருப்புடன் வந்த யாளி எனும்
ஒருவகை மிருகம். ஒற்றி = அறைந்து கொன்று.
♦ ♦ ♦
மெல்லக் கண்ணிமைகள் விரிந்து கருவிழிகள்
மலர்ந்தபோது; தன்
இல்லத்துக் கட்டிலிலே நற்கண்ணை; தானிருப்பதுணர்ந்தாள்!
மேகத்தின் குழலுக்குள் மறைந்திருக்கும் கதிரொளிபோல்
சோகத்தின் ஆழத்திலிருந்து கண்ணொளியைப் பாயவிட்டு,
தன்னருகே குனிந்து நின்ற பொற்கொடியை உற்று நோக்கி,
“தாய் தந்தை எங்குற்றார்?” எனக் கேட்டாள்!
“தலைவெடித்து விட்டதுபோல் ‘தாம்தூம்’ எனக் குதித்து,
தன்மானத்தை விலை கூறிவிட்டாரே என்று;
தந்தையைக் கடிந்துகொண்டு - இனித்
தாமதித்தல் இவ்வூரில் ஒருகணமும் கூடாதென்று,
பொங்குற்றே உன் தாயார் புறப்பட்டுப்
பூம்புகார் நோக்கிப் போய்விட்டாள்!
இங்குற்ற அவமானத்தால் தலைகுனிவு வந்ததென்று,
இடிந்து போயிருந்த தந்தை; உன் தாயைத் தொடர்ந்து
ஓடிந்து போன அவள் இதயத்தை ஒட்டவைக்கச்
சென்றுவிட்டார்”
பொற்கொடியாள் சொன்ன தகவல் கேட்டு நற்கண்ணை;
விற்புருவம் மேலுயர்த்தி, “வீணாக நான் மட்டும் ஏன்
வாழவேண்டு”மென்றாள்!
“உயிரினுமினிய தமிழ்மொழியை வாழவைக்க
உனைப்போன்றோர் ஓராயிரம் ஆண்டுவாழத்தான்வேண்டும்!”
என்ற குரல் கேட்டு ஏந்திழையாள் திடுக்கிட்டாள்!
அந்தக் குரலுக்குரியோன் நற்கிள்ளி என்றபோது;
எதிரே காணுகின்ற காட்சி மெய்தானா என்று -
எழில் விழிகள் இரண்டின் இமைக்கதவு படபடக்க;
“எந்த உலகில் இருக்கின்றேன் நான்?” என்று
சொந்தக் கண்களையே நம்பாமல் கேட்டுக்கொண்டாள்!
‘இந்த உலகில் இனி நமக்கென்ன வேலை’யென்று
இருவரையும் தனிவிடுத்துத் தோழி மெதுவாக நகர்ந்துவிட்டாள்
நற்கண்ணை நிலையோ இங்கு;
நாற்புறங்களில் எல்லாம் இசையரங்கு!
‘இரக்கம் பிறந்ததா என்னிது?’ என்று எழும்பிக் கேட்டன விழிகள்!
‘உருக்கம் சுரந்ததா என்பால்?’ என்று துடித்துத்
தவித்தன இதழ்கள்!
‘மகுடமொன்றைத் தலைக்கு அணியும் மன்னவன்
மகனே! - நான்
மகுடமிரண்டை மார்பகத்தில் தாங்கி நிற்பதும்;
முடிகூட மறத்திடல் ஏனோ?’ என்று
கொடிப்பிடையாள் கேட்கவில்லை! அஃது அவள்;
முறுவலிலே ஒளிந்திருந்த மெளன வினா!
நிலைகுலைந்து நிற்கின்றாள் நேரிழையாள் எனக் கண்டும்
அலைகடலின் கொந்தளிப்பை அடக்குதற்கு முனையாமல்;
“நான் வந்திருக்கும் நோக்கம் புரிந்ததா?” என்றான்!
அவள்:-
“தேன் இனிக்கும்! தேளின் நஞ்சு கடுக்கும்!
தேடி, இவையிரண்டில் எதை எனக்கு
அளிக்கப் போகின்றீர்?
வான் பார்த்து ஏங்குகின்ற உழவனுக்கு
வறண்ட காற்றுத்தான் வெகுமானமா? அன்றி
வளம் சேர்க்கும் மழையெனும் அமுதபானமா?
கூன்பிறை வளர்ந்தொரு முழுமதியாகுமா? - அன்றிக்
கும்பிருட்டே என் வாழ்க்கு வகுத்த விதியாகுமா?”
அவன்:-
“மாம்பழச்சாறு நிகர் தமிழைத்தான்
மங்கையுன்பால் நான் கேட்டு மகிழக்கூடும்!
மாம்பழ மேனியின்பால் எனக்கு நாட்டமில்லை! உன்
