உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒருதலைக் காதல்/பிரிவுகள் 5
கவிதைகள்

ஒருதலைக் காதல்

பிரிவுகள் 5 · 5 / 11

ஓடுகின்ற கோயில் தேர்களுக்குப்

போடுகின்ற முட்டுக்கட்டையெல்லாம் - தேரை

ஓடாமல் செய்வதற்கா? இல்லை, இல்லை! தெருவில்

ஒழுங்காகச் செல்வதற்கே!

பாய்ந்தோடும் குதிரையின் கடிவாளம் இழுத்தலும் தளர்த்தலும்,

ஓய்ந்து ஓரிடம் வீழ்ந்து கிடப்பதற்கோ?

ஆய்ந்துபார் ஆரணங்கே!

காய்ந்து சினந்து கடிந்துகொண்டாலும் அன்னை,

தேய்ந்திடுநிலவாய் நின்காதல் ஆகாதிருக்கவே

எச்சரிக்கின்றாள் உன்னை!

வளர்பிறையாய் உம் காதல் வளர்ந்து

குளிர்நிலவாய் அமுதமழை பொழிந்தால்

குலமகளே! உமை வாழ்த்தாமல்

உன் தாயின் மனமென்ன;

நிலமகழ்ந்து எடுத்திட்ட

இரும்பாகப் போமோ?

கருவுற்ற காலத்தில் அவள் நாவினைக்

கசப்பாக்கித் தொல்லை தந்தபோது

திருவுற்ற அந்தத் தாய்

புளிப்பாலே கசப்பு போக்கி - உன்

புன்னகை காணத் தவமிருந்தாள்!

ஆலின் இலைபோன்ற அவள் அழகு வயிற்றை - ஒரு சாலின்

வடிவாக்கி நீ அலங்கோலம் தந்தபோதும்,

உன் கோலம் காண்பதற்கே - அவள்

உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்!

மணிவயிற்றுக்குள்ளிருந்து நீ

மாறி மாறி உதைத்தபோதும்,

வலிபொறுத்துக் கொண்டபடி

அணியென்ன பூட்டலாம் அந்தக் காலுக்கென்று

ஆயிரம் சிந்தனை செய்திருந்தாள்!

ஊதையில் துரும்பெனத் தாயுடல் அலைக்கழித்து

உலகில் நீ பிறந்துருண்டு அழுதபோது - இன்ப

போதையில் துன்பமெலாம் மறந்திருந்தாள்! இன்றவள், உன்

பாதையில் பாடம் சொல்லல் ஒரு பாபமா?

பூவைத்துப் பொட்டிட்டு முத்தமாரி பெய்தபோது - நீ,

பூவையாய் ஆவது எப்போதென்று ஆண்டெண்ணிக்

கிடந்த அன்னை;

கோவையாய்ச் சிவந்த உன் இதழைக் கிளியொன்று

கொத்துமென்று தெரியாத பேதையா என்ன?

ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தடைகூறவில்லை அன்னை!

ஆழம் தெரிந்து இறங்கென்று கூறுகின்றாள் அவ்வளவே!

அதற்குள் நீ அவன் வருமட்டும் வழிபார்த்துக் காத்திருந்து

அல்லும் பகலும் உறக்கமின்றி வாடிவதங்கி,

உடலைக் கெடுத்துக் கொள்கின்றேன் என்றால்;

உனை உயிராக நினைக்கின்ற பெற்றோர்கள் ஒப்புவரோ?

உன் தோழி கெஞ்சுகின்றேன்; உடனே கேள்!

உறங்கி எழு! உற்சாகமாய் இரு!

உறையூர் எங்கும் ஓடிவிடாது - உன்

அறையூரில் அடங்கத்தான் போகிறது!” என்றுரைத்துச்

சிரித்தாள் தோழி!

“உறங்காமல் இருக்கவில்லை நான்!

உறங்கித்தான் விழித்துக் கொண்டேன் - சற்று

சிணுங்காமல் கேள் என் கதையை!

கண்மூடித் துயில் கொள்ளும் நேரம்,

கனவில் என்னை நெருடுவதும் அவன் நினைவே!”

♦

★ “ஊர்நடுவே உயர்ந்து நிற்கும் மாமரத்தில்

முட்களைப் போல் பற்கள் கொண்ட வெளவால்

ஊஞ்சலாடி ஒரு கிளையில் தலைகீழாய்த் தூங்கி

அழிசியெனும் ஆர்க்காட்டுச் சோழவேந்தனது

அடர்த்திமிகு காட்டகத்து நெல்லிக்கனியின்

இளம்புளிப்புச் சுவையை நுகர்வதாக,

இனிய கனவொன்று கண்டது போல்;

கன்னியென்னையும் கனவொன்று

மெய்மறக்கச் செய்ததடி!

காலமெல்லாம் அக்கனவில் திளைத்திருந்தால்

காதலரிருவர் கட்டுண்டு மகிழ்ந்திருப்போம்!

கண்கள் செய்த தவறாலே விழித்துக் கொண்டேன்;

கலைந்ததடி இன்பமெலாம் கதிர்பட்ட பனிபோலே!”

♦

இவ்வாறு,

பொற்கொடிக்குத் தான் கண்ட கனவை

நற்கண்ணை எடுத்துரைத்துத் துவண்டபோது,

போர்முரசின் வெற்றிஒலி - விண்ணைப்

பொடிசெய்யும் விதத்தினிலே எழுந்ததுகாண்

“வெற்றி யாருக்கு? யாருக்கு?” என்று நற்கண்ணை

வீதிக்குப் பறந்து வந்தாள்!

★ “உள்ஊர் மாஅத்த முள்‌எயிற்று வாவல்

ஓங்கல் அம்சினைத் தூங்குதுயில் பொழுதின்

வெல்போர்ச் சோழர் அழிசிஅம் பெருங்காட்டு

நெல்லிஅம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு

அதுகழிந்தன்றே தோழி ....”

(நற்றிணை : பாடல் 87

பாடியவர் : நற்கண்ணையார்)

பொருள் விளக்கம் :

முள்எயிற்றுவாவல் = முள்போன்ற பற்களையுடைய வெள

வால். மாஅத்த ஓங்கல் அம்சினை = மாமரத்தின் உயர்ந்த அழ

கிய கிளை. தூங்குதுயில் = தொங்கிக் கொண்டு உறங்குதல்.

♦ ♦ ♦

உறுபகையின் நெடுவாலை ஒட்ட அறுத்து,

இருகிழமை நடந்த போரில் வெற்றிகுவித்து

முக்காவல் நாட்டு மண்ணின் முரசதிர,

எக்காள முழக்கம் எட்டுத்திசை ஒலிக்க,

வருகின்றான் தித்தன் மகன் என்று வாழ்த்தி

தருகின்றார் வரவேற்பு ஆமூர் மக்கள்!

மணலில்லை வீதிகளில்; மலர்களேதான்!

முகிலில்லை விண்வெளியில்; கொடிகளேதான்!

வீட்டுக்குள் இருந்திட்ட மாந்தரெல்லாம்

நாட்டுக்கு வெற்றி தேடித்தந்தவனைக் காண்பதற்கு,

காட்டுக்குள் பெய்திட்ட மழைநீராய் ஓடிவந்தார்!

கூட்டுக்குள் கிடக்குமோ நற்கண்ணைக் கிளி மட்டும்?

“வெற்றி யாருக்கு?” என விரைந்தோடி வந்தவளை,

“வேறு யாருக்குக் கிட்டும்?” எனத் தழுவிக் கொண்டு,

சுற்றிச் சுழன்றாடுகின்றாள் பொற்கொடியாள்! அந்தச்

சுந்தரியோ மகிழ்ச்சியெனும் சுமைதாங்க முடியாமல்

தள்ளாடுகின்றாள்!

பேரிகையின் ஒலிக்கேற்பப் பீடுநடை போட்டு

பெருமிதமாய் நிமிர்ந்துவரும் வெண்புரவிமீது

தூரிகை கொண்டெழுதா வீர ஓவியமாய்ப்

பெருநற்கிள்ளி அமர்ந்திருந்தான்!

களம் புகுந்து ஓய்வின்றிப் போர்புரிந்த காரணத்தால்

முகம், மழிக்க நேரமில்லை போலும் - அதனாலே

கருநிறமுடி கொஞ்சம் நாற்றுவிட்டுக்

குறுந்தாடி போலத் தோற்றமளித்திடினும் - அதுவும்

நற்கண்ணை நயனங்களில் புதிய போதையூட்டி

நாடி நரம்பெலாம் காதல் இசை மீட்டியது!

ஆமூர் வீதிகளின் இருமருங்கும் வாயிலோரம்

ஆடவர் பெண்டிர் அகலவிழித் திறந்துகொண்டு

கச்சைகட்டிக் களம் சென்ற தம் வீட்டுச் செல்வங்களில்

மிச்சம்மீதி, யார் வருவாரென எதிர்பார்த்து நின்றிருந்தார்!

வாள் ஓங்கிப் பிடித்தவாறு வரும் வீரன் - தாய்தந்தை

தாள் வணங்கித் தன்னுயிர்ப் பேடைதனைத் தழுவிக்

கொள்வான்!

மற்றோர் போர்வீரன் களத்தில் மறைந்த செய்தியினை

மாலையொன்றை வாளுக்கிட்டுத் தந்து,

மறைமுகமாய் வீட்டார்க்கு உரைப்பர்;

மகனையிழந்த தாய்தந்தை ஆயினும்

மங்கலமிழந்த மனைவியே ஆயினும்

மனப்புயல் அடக்கிக்கொண்டு

மண்புகழ் ஓங்கிற்றென்பார் - அவர்

கண்மட்டும் சோகம் காட்டும் - நெஞ்சம்

புண்பட்டுப் போவான் கிள்ளி!

ஓரிடத்தில்,

தந்தை தனக்கென ஒடித்துவந்த யானையின்

தந்தங்கள் கண்டு மழலைகள் குதிக்கும்!

பிறிதோரிடத்தில்,

“தந்தை ஏன் வரவில்லை அம்மா?” என்று

தளிர்நடைப் பிள்ளைகள் கொதிக்கும்!

குதிரை மீதமர்ந்தவாறு கிள்ளி அவற்றை

குமுறுகின்ற உள்ளமுடன் பார்ப்பான் - “நாட்டைக்

கொலைக்காடாய் ஆக்குகின்ற போர் ஒன்று

தேவைதானா?” என்று

குற்றத்தால் குறுகுறுக்கும் நெஞ்சத்தைக் கேட்பான்!

“மாற்றார்; அமைதியெனும் கொள்கையினைக்

கோழைத்தனமெனக் கூறும்வரை

மாற்றமுடியுமோ மானமிகு வீரர்களின் போர்க்குணத்தை?

போர்வாளைப் பகையாளி ஓங்கும்போது - நாம்மட்டும்

பூப்பறித்துக் கொண்டிருந்தால்;

வீரமெனும் சுடுநெருப்பு;

ஈரம்பட்ட கரிதானே?”

உறுத்துதலால் உருகிவிட்ட கிள்ளியின் நெஞ்சில்

உடனடிக் கேள்விகளாய் இவை பிறக்கும்!

“நிறுத்தலாமே போரை” என்ற நியாயவாதம்

நில்லாமலே ஓர் நொடியில் பறக்கும்!

“போர்வாளைத்தான் காதலிக்கின்றேன் - எனையீன்ற தமிழ்ப்

பூமியைத்தான் நேசிக்கின்றேன் - எதிரியின்

கூர்வாள் ஒன்று என் மார்பைக் கீறிக்

கொட்டுகின்ற ரத்தம்தான் மணம் வீசுகின்ற சந்தனமாம்!

வீரர்களைக் களத்தில் இறக்கிவிட்டு

வேடிக்கை பார்க்கும் வீணனல்ல!

வெங்கொடுமைச் சாக்காட்டுப் போர்க்களத்தை நான்

விளையாடும் பூக்காடாய் ஆக்கிக் கொண்டேன்!

சிங்கமெனச் செருமுனையில் சீறுகின்ற படையிலோர்

அங்கம் நான்! அவர்களில் ஒருவன் நான்!

களம்பட்டு மாண்ட வீரர்களைத் தொழுதிடுவேன் - அந்தக்

கடமை வீரர் வகுத்தவழிதான் எனக்குமென்று,

பகைவர் உடல் வாளால் உழுதிடுவேன்!”

இவ்வாறு,

உள்ளத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு

வெள்ளம் போல் திரண்டமக்கள் வாழ்த்தொலிக்குக்

கையசைத்து

முக்காவல் நாடுபெற்ற வெற்றியினைக் கொண்டாடும்

முத்துமண்டபத்துள் நுழைந்திட்டான்!

ஆமூர்த்தலைவன் அவனை ஆரத்தழுவி வரவேற்று,

“அஞ்சா நெஞ்சினனே! நீ பொற்காலம் படைப்பாய்ச்

சோழநாட்டில்!” என்றான்.