ஒருதலைக் காதல்
பிரிவுகள் 10 · 10 / 11
‘‘தன வணிகன் பெற்றெடுத்த மகள்தான் நான்!
தந்திடுவீர் பரிசென்று தமிழ் எழுதிப்பிழைக்க வரவில்லை!
முந்தி நான் அறிவித்த சூளுரையை
முடிமன்னன் மகனே! உமக்கு மீண்டும் நான்
நினைவூட்டுகின்றேன்!
வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன் - அன்றி
வீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன்
இஃதுறுதி என அறிக!’’ என்றாள்!
‘‘இரண்டுமே நடக்காதென்று அறுதியிட்டு
இன்னும் ஒருமுறை கூறுகின்றேன்!’’ என
இன்னாச்சொல் இறைத்துவிட்டுச் சென்றுவிட்டான் கிள்ளி!
புயலில் ஆடாத கொடி பார்த்ததுண்டோ;
பொய்யில்லை இதோ இரு கொடிகள்,
புயல்காற்றில் அசைவற்றுப் போயின காண்!
1. தித்தனிட்ட கட்டளைப்படி நாளவையின் முரச ஒலி;
திக்கெட்டும் பரபரப்பாய்ப் பரவிடவே,
திகைத்துப்போய் நடுங்கினார்கள் பாணன், கட்டி!
கிள்ளியில்லா நேரத்தில் உறையூரை வென்று
துள்ளி விளையாடவந்த பகைவர்கள்;
முள்ளில் இட்ட ஆடையினை எடுத்தாற் போதுமென்று
‘‘கள்ளியாம் ஐயை எனும் கருங்குரங்குப் பெண்
யாருக்கு வேண்டும்’’ மென்று கூறிவிட்டுப்
போருக்கு வராமலே கடையைக் கட்டி
புளிக்குமிந்தப் பழமென்று கூறி,
இளிக்கும் நரியைப் போல் ஓடிவிட்டார்!
களம் புகுந்தால் புறமுதுகு காட்டவேண்டும் - பின்
உளம் நெகிழ்ந்து கூனிக்குறுக வேண்டும்!
‘‘காவற்பெண்டு மட்டும் நமது காவலிலே இருக்கட்டும்;
காலாள், புரவி, களிறு, தேர்ப்படை நான்கும்
திரும்பட்டு’’ மென்ற
கட்டி, பாணனது ஆணைகேட்டுச்
‘சட்டி சுட்டதடா - கைவிட்டதடா’ என்றெண்ணி
நண்டுக்குஞ்சுகள் வளைநோக்கி விரைவது போல்
நாடு திரும்பியதும் நலமாக நாற்படையும்!
இந்த
நற்செய்தி உறையூர் மாளிகைக்கு எட்டியதும்,
நற்கண்ணையினைத் தழுவிக்கொண்டு ஐயை நல்லாள்;
‘‘படையெடுத்து வந்த நச்சுப் பாம்பிரண்டும்
பாய்ந்து வரும் கிரியாம் நமது கிள்ளிக்குமுன்
நிற்க முடியாமல் நெளிந்தோடி விட்ட
நிகழ்ச்சியினைப் பாட்டொன்றாய்த் தீட்டுக!’’ என்றாள்.
‘‘செத்துப்பேன் இந்நேரம் உன் அண்ணன் கையால்!
செவிலித்தாய் காவற்பெண்டு வரட்டுமென்றிருக்கிறேன்!
‘நானே முன்னின்று நடத்திவைக்கின்றேன்
திருமணத்தை’ என்றார்; அதை
நம்பிக்கொண்டு நானுமின்னும் இருக்கின்றேன் உயிரோடு!
எண்ணியவாறு இனிதாய் என்காதல் நிறைவேறி உன்
அண்ணியாகும் பேறு நான் பெற்றுவிட்டால்
வெண்ணிலவு, தென்றல், தீம்பாகு, தேன்மழையென்ன
எண்ணற்ற கவிதைகளை எழுதிக் குவித்திடுவேன்’’ என்றாள்!
அப்போது
தோழியொருத்தி பெருமூச்ச வாங்க ஓடிவந்து பெருங்
கோழிநாய்கன் மகள் உயிர் மூச்சுப் பறிக்கின்ற சேதி சொன்னாள்!
‘‘கட்டி, பாணன் எனும் கயவர் இருவரும் - நமது
காவற்பெண்டைச் சிறைக்கூண்டிலிட்டு இழுத்துச் சென்றதால்
செவிலித்தாயை மீட்டுவர - நாளைக்குச்
செருமுனை செல்கிறார் நற்கிள்ளி!’’
இன்பச் செய்தியினைத் தொடர்ந்து - இந்தத்
துன்பச் செய்தி வந்ததாலே;
இரவுணவை மறந்துவிட்டு, உறங்குதற்கு
இருவருமே தனித்தனி அறைக்குச் சென்றார்!
♦ ♦ ♦
‘‘காலையிலே பாணன், கட்டி இருவர் நகர் முற்றுகையிட்டு
காவற்பெண்டுத்தாயை மீட்பேன்’’ எனச் சூளுரைத்து;
நள்ளிரவில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்த
நற்கிள்ளிச் சோழன் காதில் கதவுதட்டும் ஒலிகேட்க; ‘‘இந்த
நற்கண்ணையின் தொல்லை தாங்க முடியவில்லை’’ என
முணுமுணுத்தவாறு அசைந்தெழுந்து சென்று அறையின்
முன்வாசல் கதவுதனைத் திறந்து பார்த்தான்!
‘‘அம்மா வந்து விட்டார்களா?’’ என ஆச்சரியத்தால்
அலறிவிட்டான்!
ஆமாம்! காவற்பெண்டு எதிர்வந்து நின்றாள்!
‘‘மகனே நற்கிள்ளி! மன்னன் கட்டியையும் அவன்
தோழன் பாணனையும்
மாழுவனார், கல்லாடனார் எனும் இருபுலவரும் சந்தித்து,
‘பகைவர்களின் உயிர்பறிக்கும் போர்முனையில்கூட
பண்பாடு காக்கின்ற நெறிமுறைகள் உண்டு!
உறையூரின் இளவரசியை சிறைப்பிடிக்கச் சென்றீர்;
ஓடிவந்தீர் நற்கிள்ளி வந்துவிட்ட செய்தியினைக் கேட்டு!
எதிரியின் வலிவு பெருகியதுணர்ந்து நீவீர் எடுத்த முடிவு நன்று!
எனினும் எங்களில் ஒரு தமிழ்க்கவியைக் கைது
செய்தமைக்கு என்ன நியாயம் உண்டு?
கணநேரமும் தாமதிக்காமல் காவற்பெண்டை
விடுவித்திடுக! - அப்படியோர்
கட்டளையினை இப்போதே நீவீர் பிறப்பிக்காவிடில் இன்றோடு
கல்லாடனார், மாழுவனார் உறவு அற்றுப் போயிற்றென
முற்றுப்புள்ளி வைத்திடுக!’
இரு புலவர்களும் இவ்வாறு சினந்து கொண்டவுடன்
ஒரு நொடியும் தயங்காமல் எனை விடுவித்தார்!
திருமகனே! உனைக்காண ஓடோடி வந்தேன் - என்
மருமகளாய் நற்கண்ணை இங்கு வந்தாளே; எங்கே?’’ என்றாள்!
‘‘தாயே! அடியேனை மன்னித்திடுக; அவளை நான்
மணந்து கொண்டால்
தமிழுக்குக் கிடைக்கவேண்டிய இலக்கிய
அணிகலன்கள் பல கிடைக்காமலே போகும்!
தமிழ் இனமானமும் தடந்தோள் வீரமும் மேலும்
உயர்ந்து சிறந்திட,
அமிழ்தாய்க் கவிதைகள் அவள் இயற்றிட வேண்டும்;
அதை விடுத்து,
அந்தப்புரச் சிறையினில் அந்தப் பாடும் பறவையை
அடைத்துப் போட்டால் அணுப் பயன்தான் உண்டோ,
தமிழுக்கு?’’ என்றான்!
‘‘இலக்கியங்கள் தமிழில் வார்த்தெடுக்க;
இல்வாழ்க்கை தடையாக இருக்குமென்று யார் சொன்னார்?
மாந்தோப்பில் குலுங்குகின்ற பழங்களைப்போல்
மங்காப்புகழ் தமிழ்க்கவிதை குவிப்பதற்கு
மணவாழ்வே மறுப்பா கூறும்?
மாதுளைச் சாறுடன் மலைத்தேன் கலப்பதாலே கசப்பா
தோன்றும்?
மகனே கேள்; மறுக்காமல் என் வேண்டுகோளை
ஏற்றிடுக!’’ என்றாள்.
‘‘மறுப்பதாக எண்ணிடாதீர் அம்மா! நான்
வெறுக்கவில்லை நற்கண்ணையினை - ஆனால்;
போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்.
பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே அல்ல;’’ என்றான்!
‘‘வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது மகனே - ஊரார்
கூறுவதுபோல் உனைப்பெற்ற உண்மைத் தாயாக
இருந்திருந்தால்,
தாய்சொல் தட்டாத தனயனாகத் திகழ்ந்திருப்பாய்! இந்தச்
சேய் வளர்த்த செவிலித்தாய்தானே காவற்பெண்டு!
அதனாலே அலட்சியப்படுத்துகின்றாய் என்னை;
அன்புள்ள இளவரசே! நான் வருகின்றேன்’’ என நகர்ந்தாள்!
‘‘இதயத்தில் ஈட்டியினை எறிந்துவிட்டீர் தாயே!
இனியும் நான் பிடித்த பிடியில் உடும்பாக இருக்கப்
போவதில்லை!
எனைப் பெற்றெடுத்த தாய்தான் தாங்கள் - அதற்கு
எடுத்துக்காட்டாக; நாளைக்காலையிலே
நற்கண்ணையினை நானே போய்ச் சந்தித்து
நல்ல முடிவை அறிவிப்பேன்’’
கிள்ளியின் உச்சிமோந்து வாழ்த்துக்கூறி
‘‘நள்ளிரவு ஆயிற்று அதனால் நாளைக்கு வருகின்றேன்;
இருவருமே நற்கண்ணையினைப் பார்த்து
இனிய செய்தி கூறுவோம்’’ என்றுரைத்து
விழிவடிக்கும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தவாறு தன்
வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள் காவற்பெண்டு!
♦ ♦ ♦
நற்கண்ணையின் தூய காதல் வெற்றியினை நினைத்தவாறு
நற்கிள்ளி இமை மூடி இன்பத்தில் ஆழ்ந்திருந்தான்!
நாழிகை ஒரு சிறிது கழிந்த பின்னர்,
ஆழிசூழ் உலகமே அவளாய் மாற - கற்பனைக்
கனவுலகில் பயணமானான் - காதற்
கிளியுடனே இணையாகப் பறக்கலானான்!
அச்சத்தால், நாணத்தால், மடம், பயிர்ப்பால்
அருகில் வாராது அசைந்தாடிச் சென்றவளை
‘இச்’ சென்ற முத்தத்தால் புலன்மாற்றி
இழுத்தணைத்துப் பஞ்சணையில் போட்டுக்கொண்டான்!
இருமேனி - திருமேனி - ஒன்று கருமேனி; அது அவன் மேனி!
மறுமேனி - மாம்பழ நிறமேனி - மங்கையவள் மாயமேனி!
அமுதக்கலசங்கள் இரண்டும் நெஞ்சில் அழுந்த அழுந்த -
அவள்
குமுதவிழிகளோ குறுகுறுக்க இன்பம்! இன்பம்! இந்தக்
கனவுப்பனியின் பொழிவு கலைத்து
நினைவுக் கதிரோன் முளைத்திடவே
கண்விழித்துக் கொண்ட கிள்ளி;
களிப்பு சிந்தும் முகத்தினராய் - ஒரு
கால்தூக்கித் தலையணைமேல் போட்டுக் கொண்டான்!
இவ்வாறு
பஞ்சணையில் பரவசமாய்ப் படுத்திருந்த கிள்ளிமீது
பறந்து வந்து விழுந்தது ஓர் ஓலைச்சுருள்!
எடுத்துப் படித்துப் பார்த்த கிள்ளி,
துடித்துப் போய் எழுந்து நின்றான்!
‘இன்றிரவு இளவரசி ஐயை
இங்கிருந்து சிறையெடுக்கப்படுகின்றாள்’
ஓலையிலே இச் செய்தி கண்டு
உரக்கச் சிரித்திட்டான் கிள்ளி!
ஓடி ஒளிந்த கட்டிக்கும் பாணனுக்கும்
உடல்தினவு அடங்கவில்லை போலும் - என்
உடன்பிறப்பாம் ஐயையினைக் காப்பாற்ற; இந்த
உடைவாளே போதுமென உறுமிக்கொண்டு,
ஊழித்தீயெனப் புறப்பட்டான் - தங்கை
உறங்குகின்ற மாளிகைக்கு!
♦ ♦ ♦
1. ‘‘வலிமிகும் முன்பின் பாணனொடு மலைதாற்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி
போரடு தானைக் கட்டி
