மறத்தி
பகுதி 4 · 4 / 5
இந்தக் குடும்பம்!
அதைக் கொத்தாமல் கொத்திவிட்ட
கொடும்சாவைப் பழித்தாள்- இழித்
துரைத்தாள்! "இனி என்ன மிச்சம்!"
என்றும், கனி அழுகிப் போனதென்றும்
கதறி அழுதாள்!
பனி வெல்லும் விழிகாட்டி,
பனவெல்ல மொழி உரைத்து,
பள்ளியறைக் கவிபாடும்
நாளெல்லாம் மண்தானோ?
இனி, இது, தூங்காத கண்தானோ?
என அழுதாள்! அத்தான் பிணம்
கிடக்கும் களம் நோக்கித் தொழுதாள்!
சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள் காதில், வெற்றி
வேகத்தால் பகைவர் தட்டும் போர்முரசம்
பட்டதுதான் தாமதம்;
கெட்டதுதான் கெட்டது நம்குடி- முழுவதுமே
பட்டொழிந்து போகட்டும் எனஎழுந்தாள் !
மட்டில்லாப் புகழ்கொண்ட நாட்டுக்கே அன்றி
வீட்டுக்கோ வாழ்வேன் என்றாள் -
வட்டிலினால் நாழிபார்க்கும் விதங்கண்ட தமிழ்நாட்டு மாதரசி,
தொட்டிலிலே இட்டு, தான் வளர்த்த தூயசெல்வன்
அட்டியின்றிக் கல்வி கற்க, ஆலமரத்தடி
ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்!
அங்கு சென்றாள் - அம்மா எனப் பாய்ந்தான்,
