மறத்தி
பகுதி 5 · 5 / 5
அழகுமிகும் மழலைமொழி அன்புத் தங்கம்
அப்பா, தாத்தா,ஊர் திரும்பினாரோ என்றான் -
திரும்பிவந்து சாவூர் சென்றுவிட்டார்-
கரும்பே - நீயும்வா என்றழைத்தாள்
"என்ன வாங்கிவந்தார்" என்றான்!
மானம்!மானம்!அழியாத மான மென்றாள் -
மகனே ! அதைச் சுவைக்க நீயும் வருக என்றாள்
வந்துவிட்டான் - குலக்கொழுந்து!
குடும்பவிளக்கு எரிந்துகொண்டே, கூறுகின்றாள்
எதிரிகளின் படையெடுப்பால் - நம் குடும்பம் தழை
உதிர்த்துவிட்ட மரமாகப் போனதடா தம்பீ!
கவலையில்லை - களம்சென்றார்; மாண்டார்!
ஆனாலும் இந்த,
நிலம் உள்ளவரையில் 'மானங்காத்தார்' என்ற பெயர் பூண்டார்!
என்மகனே! நீயும் தோளில்,
பலம் உள்ளவரையில் பகையைச் சாடு!
பரணிபாடு ! இதுஉன்
தாய்த் திருநாடு !-உடனேஓடு ! எனத்,
தாவி அணைத்துத் தளிர் மகன்தன்னை,
சீவிமுடித்துச் சிங்காரித்து, ரத்தக்
காவிபடிந்த வாள்கொடுத்து,
"சென்றுவா மகனே.. செருமுனை நோக்கி!"
என வாழ்த்திவிட்ட திருவிடத்துக்
காட்சிதனை - போற்றிப் பாடாதார் உண்டோ !--
திருமகளே! இந்தப் பூவுலகில் ?
