உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 74 · 74 / 77

ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலே

கொள்ளை போகுதும்மா தமிழ்நாடு!

டாமின் ஸ்பிக் பங்கு ஊழல் என்றும்

அரவைமில்லு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஊழல் என்றும்

டாம்பீக சுற்றுலா ஊதாரிச் செலவு ஊழல் என்றும்

அத்தனையும் எடுத்துச் சொல்ல முடியுமா இன்றும்!

ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலே

கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு!

என்ன தேசமடா இது?

என்ன தேசமடா இது? இங்கு,

எத்தனுக்கு வாழ்வு தரும் மோசமடா!

நீரும் எண்ணெயும் போல் பற்று பாசமடா! அட:

நீலிக் கண்ணீர் வடித்தே கழுத்தறுக்கும் நேசமடா!

கூளமெல்லாம் கூர்வாளாய் நினைத்துக்கொண்டு;

மேளங்கொட்டி முரசுதட்டி மெலுக்காக ஆடுதடா!

ஆளவந்தார் அடிக்கின்றார் கொள்ளையென்றால்;

தாளம் போடும் தாசர் கூட்டம் பெருத்ததடா!

கைநீட்டிக் காசுபணம் பதவிகளைப் பெறுவதற்குக்

கடைக் கோடிப் பல்வரிசை காட்டியே நிற்குதடா!

பைநிறைய லஞ்சத்தொகை பலலட்சப் கொட்டித்தந்து

வை தலையைக் காலில் என்றால் தட்டாமல் வைப்பாரடா!

என்ன தேசமடா இது? இங்கு

எத்தனுக்கே வாழ்வு தரும் மோசமடா!

வானுக்கோர் எல்லையில்லையடா வைகயத்தில்;

வறுமைக்கோர் எல்லையில்லையடா இந்தியத்தில்!

வருஷத்தில் பத்து ஊழல் வந்து வந்து போகுதடா:

அர்ஷத்து மேத்தா ஊழல் அவமானச் சின்னமடா!

கொள்கை உறுதியென்பார்; ஒழுக்மென்பார்;

கொடி, சின்னம் எமக்கேயென்பார்!

கொடுத்திட்ட பணத்துக்கு கூலிக்கு மாரடிப்பார்;

கொடுக்கறுக்கும் நாள் வரையில் குதிக்கின்ற தேள்களடா!

ஆதிக்கவர்க்கத்தார் ஆட்சியிலே வந்துவிட்டார்;

பாதிப்பு பலவரினும் பத்திரிகை பாராட்டுதடா!

என்ன தேசமடா இது? இங்கு

எத்தனுக்கே வாழ்வு தரும் மோசமடா!

பெரியார் அண்ணா வழித் தோன்றல் நானே என்பார்

நரியார் தன்னைச் சிங்கமென நம்பச் சொன்னால்;

நாடாள்வதால் நாமம் வாழ்க என நவில்கின்றார்!

நலம்பெற்றோம் அவராலே நாமார்க்கும்

குடியாவோம் என்கின்றார்.

குன்றிமணி மானம் சிந்திடினும் உயிர் வாழார் முன்பெல்லாம் -

குன்றளவு மானம் போனால்தான் என்னவென இன்று

குன்றனையார் சிறிதும் குன்றாமல் குனிகின்றார்!

குன்றாம் தாழ்ந்து கோடு உயர்ந்த கதை தொடர்கதையா?

நன்றியெனும் மூன்றெழுத்தை மலமாக்கித் தின்னும்

பன்றிகளும் புரளுகின்ற சாக்கடையாய்ப் போனதடா!

என்ன தேசமடா இது? இங்கு

எத்தனுக்கே வாழ்வு தரும் மோசமடா!

முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்த தாயின்

தொந்தி சரியக் குத்தீட்டி வீசும் பிள்ளையடா!

அந்திப் பொழுதை விரட்டி அழகாய்ப் பூத்த நிலா தி.மு.க.; அது,

மந்தி கைக்கு எட்டாததால் சந்தி சிரிக்க அலறுதடா!

இந்திதனை எதிர்ப்பதற்கும் இனம் மொழியைக் காப்பதற்கும்

இருக்கின்ற அரண் இதனை அழிப்பதற்குத் திட்டமடா!

பந்திக்கு நான் என்றும் படையென்றால் நீ என்றும்

சிந்தித்துச் செப்பியோடும் சில்லறைகள் ஓசையடா!

குந்திக்குக் குழந்தை எனக்கேட்டு - வயிற்றில்

குத்திக்கொண்ட காந்தாரிகள் ஆசையடா!

என்ன தேசமடா இது? இங்கு

எத்தனுக்கே வாழ்வு தரும் மோசமடா!

தலைவியின் பிறந்த நாள் என்றால் தவறாமல் போடட்டும் மாலை!

தலங்கள் தோறும் மந்திரிகள் காவடி எடுப்பதுவோ

பகுத்தறிவு வேலை?

தலைமொட்டை அடிக்கின்றார், தத்தோமெனக் குதிக்கின்றார்

தழையுடுத்தி உருளுகின்றார் தையலர்கள் தீயும் மிதிக்கின்றார்!

தன்மான இயக்கமென்றும் இனமான முழக்கமென்றும்

தமிழகத்தில் விளைத்து வைத்த அறிவுக்கதிர் அனைத்துமே

தாசர் புத்தி தலைக்கேறி தடுமாறிச் சாய்ந்தடா! இனித்

தமிழ் மண்ணில் புது எழுச்சி எப்போதடா?

தயங்காமல் புறப்படடா; தமிழா! உன்

தடந்தோள் தட்டிக் கிளம்பிடடா!

முகமூடி கிழித்தெறிவோம் வாரீர்!

சடை வளர்ப்பார் - பக்திக்

கடை விரிப்பார்; வலிய

படைகொண்டு பாராளும் அரசினையும்

பணிய வைப்பார்! மின்னல்

இடைகொண்ட மாதர்களும்; தங்கு

தடையின்றி அவர் மாயை வீழ்ந்திடுவார்!

முடிகட்டிக் குடில்கட்டி

முனிவர் என வாழ்ந்தார் அந்நாள்

அவர்கள்கூட முற்றும் துறக்காத நிலையில்

பற்றுண்டு மங்கையர் மேல் என்று பெற்றிட்டார் பிள்ளைகளை!

போதி மரத்துப் புத்தர் என்றும் மகாவீரர் என்றும்.

ஆதிசங்கரர் என்றும் இராமானுஜர் என்றும்;

ஓதினார்கள் உயர்கொள்கை எனினும்; அவர்தம்

வழி வந்தோர் எனச் சொல்லிக்கொண்டு

வன்முறையில் வழுக்கி விழுந்தோரும்

வருணாசிரமச் சகதியில் விஷவிதையை நட்டோரும்

பெருகிவிட்ட காரணத்தால்

கருகிவிட்ட தளிர் மரம்போல்

ஒழிந்துவிட்டதந்தோ அறவொழுக்கம் துறவொழுக்கம்

வழிந்துவிட்டது தரையில் பால்போல சமுதாய முன்னேற்றம்!

கடவுளைக் காட்டுகிறேன் வா என்று

கட்டிலுக்கு அழைப்பவனெல்லாம்

கடைந்தெடுத்த துறவியாம் சாதுவாம் சாமியாம்

காமன்கணை தொடுக்கும் தயவனெல்லாம்

காட்டுகிறேன் சொர்க்கமென்று பெண்களையே

மீட்டுகின்றான் வீணையாக!

ஆன்மீகத்தில் அஃதோர் அத்தியாயம் போலுமென

ஆட்சேபணை ஏதுமின்றி ஆரணங்குக் கூட்டம் - அவன்

ஆசையைப் பூசையென நம்பி;

ஏமாறுவது அத்தியாயமா? அநியாயமா?

எத்தனை மகாத்மாக்கள் சாயிபாபாக்கள்

எத்துணை அற்புதம் புரிந்து காட்டிவிட்டார்

அத்தனையும் ஓர் நொடியில் ஒரு மாஜிக் நிபுணன்

அரங்கொன்றில் காட்டுவதை அறிந்திருந்தும்

அடி முட்டாள்களாய் மக்கள் ஆவதென்ன கொடுமை!

ஆண்டவனுக்கும் மனிதனுக்குமிடையில்

அவன் என்ன தரகன்?

தெய்வத் திருவருள் பெற்றவனுக்கேன்

தட்சணை, காணிக்கை, தினந்தோறும் பூஜை?

அனைத்தும் துறந்தவனின் அங்கமெலாம்

நனைத்துக் குளிப்பாட்ட பன்னீர் ஏன்? பாவை ஏன்?

நிர்வாணநிலை பெற்றோன் என்பதற்கறிகுறிதான்

நிர்வாணமாய்ப் பெண்கைளப் படமெடுத்து ரசிப்பதுவோ?

தண்டு கமண்டலத்தில் முறையே

தகதகக்கும் வாளும் மதுவும்

உண்டு கொழுத்து உப்பிக் கிடக்கின்ற உருவும்

பெண்டுகள் பலர் உடலமுக்க உல்லாசம் புரிகின்ற குருவும்

கண்டு கண்டும் இன்னும் அறிவுத் தெளிவில்லா

மண்டுகளாய் மக்கள் கூட்டம் - இருப்பதேனோ?

கள்ள நோட்டு அடிப்பதற்கோர் ஆசிரமம் - தங்கத்தைப்

பள்ளம் தோண்டி புதைத்து வைப்பதற்கோர் ஆசிரமம் - இந்தக்

குள்ளமனத் திருடர்களை நம்பிக் கும்பிட்டுத் தொழுகின்ற

வெள்ளைமனப் பெண்டிரையோ திருத்துவது மகா சிரமம்!

ஊரை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதிலே ஆண் என்ன; பெண் என்ன?

கூரை வீட்டில் கொள்ளி வைப்பவரைத்

தேரில் வைத்து திருவிழா நடத்துகின்ற கூட்டத்தார்

சாரைப் பாம்புக்குச் சால்வை போர்த்திச்

சாக அடிக்கின்றார் பகுத்தறிவுச் சிந்தனையை!

பதவி உயர்வுக்கென்றும், பணமலை குவிப்புக்கென்றும்

பற்பல அதிகார வர்க்கத்தார் சாமியாரின் பொற்பாதம் கழுவுகின்றார்!

பிள்ளையில்லாக் குறை நீங்க அரசமரம் சுற்றிவிட்டு

கிள்ளைமொழிப் பேதைகளும் இந்த ஆண்டிமடம் செல்கின்றார்;

கையருள் பாலித்து அவள் மெய்யது போர்த்திக்

கணவனாய் மாறிக்கொண்டு தருகின்றான் தையலர் கேட்டவரம்!

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்புச் சேட்டை என

அலை அலையாய்ச் செய்திகள் அன்றாடம் வந்தாலும்

ஆசிரமத்துச் சடாமுடியில் ஒரு மயிர்கூட உதிராதபடிக்கு

அரவணைத்துப் பாதுகாக்க அரசுகள்தான் இருக்கின்றனவே!

அமைச்சர்களே சாமிகளின் அடிமைகளாய் மாறி; - ஊரின்

புகைச்சலுக்கு அஞ்சாமல் வீற்றிருப்பின்

நெருப்பின்றிப் புகையாது என்பதை நிரூபிக்கத்