கலைஞரின் கவிதைகள்
கவிதை 73 · 73 / 77
தூவப்படும் எதிரிகளின் கலக விதைகள் முள்ளாக விளைந்து
தூயவனே! உன் கால்களில் குத்தும் உன்னைத்
தொடர்ந்து வருவோர் பாதங்களைக் காயப்படுத்தாதிருக்க
அதைத்
தூக்கி, முனை முறித்துத் தொலைவில் போட்டுவிடுக!
பாதையில் குறுக்கிடும் காட்டாறு கண்டு பதறத் தேவையில்லை
உன்
பாட்டன், பூட்டன், தாய், தந்தையர் கடந்தது எப்படி எனக்
கணக்கிட்டுப்
பாலம் அமைத்தோ. தோள்பலம் காட்டி நீந்தியோ
பாதியில் பயணம் தடைபடாமல் ஏறுக கரையில்!
ஊளையிடும் நரிகளின் கூட்டம் ஒன்று வலப்புறம் போகும்
மற்றொன்று இடப்புறம் போகும் அவை
வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே
விழுந்து பிடுங்காத அளவுக்குப் பார்த்துக் கொள்க!
புதர்களில் விலங்குகள் மலைப்பாம்புகள் புரளும் - அந்த
இடர் களைய மட்டுமே கையில் ஆயுதம் தேவை!
பதர் என மண்டும் மனிதப் பகையினை மாய்க்க
பண்பெனும் வாளும் அன்பெனும் கவசமும் ஏந்திச் செல்க!
உறைபனி மூடிய முகடுகள் மீது
ஊக்கமுடன் நீ ஏறிடும் போது;
உட்பூசலற்ற காலணி இருந்தால் தோது.
ஒருக்காலும் வழுக்கவே வழுக்காது!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்க் குவிந்த
அழுக்குச் சிந்தனை. ஆதிக்கச் சுமைகள்
அகற்றிடவே உன் பயணம்; அதனை மறந்து
அகதியாய்த் தமிழனை விட்டு விடாதே!
பாயிரம்பாடி உனக்குப் பாராட்டு படித்து,
பதவியைக் காட்டிப் பல்லக்கும் சுமந்திட,
பகைவர்கள் நண்பராய்க் காட்சி தருவர் - அந்தப்
படுகுழியில் விழாமல் உன்னையும் காத்து இனத்தையும்
காத்திடு
அய்யா பெரியார் வாழ்க என முரசறைந்து பாடு!
அறிஞர் அண்ணா வாழ்க என சங்கொலித்து ஆடு!
களைப்பின்றித் தொடரலாம் கடும் பயணம் அனைத்தும்;
உழைப்பின்றி இருப்போரைச் சிற்றெறும்பும் பழிக்கும்!
கடமையினை உணர்ந்து, கண்ணியத்தில் மலர்ந்து வெல்க;
கட்டுப்பாடு குலையாமல் கழகப் பயணம் செல்க!
கணநேரமும் ஓய்வில்லை என்று சபதம் செய்க! உடன்பிறப்பே
வளம் பரப்பத் தமிழகத்தில் மழையாய்ப் பெய்க!
எலிகளுக்கும் கரையானுக்கும்
இடையிடையே உன் வழியில்
தீனி போட்டாலும் போடு; ஆனால், சில
ஏடுகளுக்கு மட்டும் தீனி போடாமல் எச்சரிக்கையாய் இருந்திடு
நூறாயிரம் காலத்துப் பயிரப்பா கழகம் - இதனை
வேரோடு வீழ்த்திட எத்தர்கள் சிலபேர்
தேனோடு விஷம் கலந்து தருகின்றார் கவனி! நம்
ஊனோடும் உயிரோடும் இணைந்த கொள்கைக்கு
நடத்திடுவோம் வெற்றி பவனி!
பாமரர் நிறைந்த பட்டிக்காடு!
பாமரர் நிறைந்த பட்டிக்காடு-
பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!
இருக்கும் ஒன்றிரண்டு நல்லோர் பதறி;
எதிர்த்துக் கூற எழுந்து நின்றால்,
இழுத்துத் தள்ளுவர் எரியும் நெருப்பில்!
கொழுத்துத் திரிவோர் கூட்டம் அல்லவா?
பாமரர் நிறைந்த பட்டிக்காடு-
பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!
★
குட்டி நாய்கள் குரைக்குமென்றறிந்து
ரொட்டித் துண்டுகளை வீசி அவற்றின்
வாயை அடைத்து வலையில் மாட்டுவர்!
"மாயை" ஒன்று மண்டபத்து நடுவில்-
உருகப் பேசும்; உண்மையை ஒளிக்கும்!
கருவிலிருந்தே அது கற்ற வித்தை!
பாமரர் நிறைந்த பட்டிக்காடு -
பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!
ஊர் வாழ உருப்படியாய்த் திட்டமில்லை
சீர் மேவித் தான் மட்டும் வாழ்வதற்கு,
ஊழல் விளைப்பதுதான் மாயைக்கு வேலை!
உதவாது இது என்றாலோ உரித்திடுவார் தோலை!
ஒவ்வொரு நாளும் புதுப்புது சட்டம் - இன்னும்,
உறக்கம் கலையா காரணத்தால் அடிக்கின்றார் கொட்டம்!
பாமரர் நிறைந்த பட்டிக்காடு-
பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!
★
பத்தினிக் கண்ணகி அன்று கனன்று
மதுரையை எரித்தாளாம்; அதுபோல்
பதிலுக்கு நானும் எரிக்கின்றேன் பார் என்று
பாஞ்சாலிதேவி பத்திரிகையை எரித்திட;
முதுகுக்கு எலும்பை முட்டுக் கொடுத்தும்-
முட்டாள் கூட்டம் கூனிக் கிடக்குதாம்!
பாமரர் நிறைந்த பட்டிக்காடு-
பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!
★
"இந்தக் கிராமத்தையே இலையில் இட்டு
வெந்ததும் வேகாததுமாய்த் தின்று தீர்ப்பேன்
எந்தன் முடிவு இதுதான்" என்று
அந்த மாயை சொன்ன போதிலும்
ஆதரவு அளித்துக் காலில் வீழ்ந்திட
ஆமாம் சாமிகள் அப்போதும் தயார்!
பாமரர் நிறைந்த பட்டிக்காடு -
பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!
முரணாகப் பேசுவதே வேதம் என நவின்று
முருங்கைமரம் வீடுகட்டப் பயன்படுமென்பார்!
அரணாக மெழுகுவத்திச் சுவர் ஒன்று வைத்தால்
அக்கினியும் அஞ்சியோடி ஒளிந்து விடும் என்பார்!
ஆயிரம் பாபங்கள் நான் செய்வேன் என்பார்-
ஆண்டவன் என் பக்கம்!... அதுவுமில்லை; அந்த
ஆண்டவனும் நானேதான் என்பார்!
பாமரர் நிறைந்த பட்டிக்காடு-
பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!
★
எல்லோரும் கைதூக்கும் பதுமைகளாய் இருந்து-
இடது கை, வலதுகை இருகையும் தூக்கும்போது,
பொல்லாத மாயைக்குப் பொங்காதோ பூரிப்பு?
நில்லாத நெடுஞ்சுவராய்ச் சரிவதற்குள்;
கல்லாரும் கற்க வேண்டும்; அறவழியில்,
கயமையினை விரைவினிலே மாய்ப்பதற்கு!
பாமரர் நிறைந்த பட்டிகாடு-
பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!
கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு
ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலே
கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு - ஒரு
பாழும் ஆட்சி செய்யும் கொடுமையாலே; வாழ்வில்
பகலும் இருள் ஆகுதம்மா கவலையாலே!
ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலே
கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு!
ஜான்சிராணி யென்று கூறியல்லோ ஆட்சியிலே ஏறினார்
அரசின்
டான்சி நிலத்தை வாங்கியன்றோ சட்டம் மீறினார்!
ஆணவத்தின் உச்சியிலே ஆட்டம் போடுகிறார் - இதோ
அகந்தையை மாய்ப்பதற்கு மக்கள் கூறுகிறார்!
ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலே
கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு
ஆம்னி பஸ்களில் ஊழல் ஆறுகோடி என்கிறார்
அரசின் பீர் தொழிற்சாலை விற்று இருகோடி சுருட்டுறார்.
நாமினியும் விழிக்காவிடில் தம்பி;
நமது நாட்டை சுடுகாடாக்கி நீட்டிடுவார் கம்பி!
ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலே
கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு!
குண்டர் படையை வைத்து ராஜ்யமே நடத்துறார்
குறை சொல்லும் ஏடுகளை வீதியிலே கொளுத்துறார்
டெண்டர் விடாமலே சர்க்கார் சொத்துக்களை விற்கிறார்;
அண்டர் கிரவுண்டிலே பல லஞ்சங்களை வாங்குறார்!
ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலே
கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு!
பழிவாங்க மட்டும் உச்சமன்ற அப்பீல் என்று
பலகாத தூரம் டெல்லிக்கு ஓடுறார்; ஆனால்
அய்க்கோர்ட்டு தீர்ப்பே போதுமென்று
தனியார்க்கு மருத்துவக் கல்லூரியைத் தாரை வார்த்துத்
தருகிறார்!
