கலைஞரின் கவிதைகள்
கவிதை 72 · 72 / 77
★
ஒருவருக்கொருவர்
உங்களுக்குள்ளே
ஒரு துளி கசப்பும் வேண்டாம் - அந்தச்
சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமன்றோ!
★
ஏன் காத்து இருக்கின்றாய்?
எவர் வருவார் என எதிர்பார்த்து இருக்கின்றாய்?
வந்தாலும் ஒரு சொட்டுத் தேன்தானே
தருவார் - அது
வரவில்லையென நினைத்து வளைத்திடுக உடலை
வில்லாய்!
★
வகை வகையாய் குடம் குடமாய்த் தேனும் பாலும்
தொகை தொகையாய்க் கொள்ளை கொண்டோர்
கூடாரத்தில்
கண்ணாலே கெஞ்சுகின்றாய் அன்பே!
இங்கேது அந்தக் குடம்?
அண்ணாவின் தம்பியென்ற 'மகுடம்'தான் உண்டு!
★
புண்ணான தமிழகத்தின் துயரம் போக்கி-
மண்ணாளும் மமதையாளர் கொடுமை நீக்கி
புதியநிலை உருவாக்கப் புயலே! எழுக!
புலிப் போத்தாய்ச் செயல்பட உடனே எழுக!
★
இடையில் இருக்கும் நாட்கள் குறைவு
படைக்கலம் போலே பாய்ந்திடு கண்ணே!
கடையில் விற்கும் பண்டமோ வெற்றி? தளரா
நடையுடன் விரைந்திடு தொகுதியைச் சுற்றி!
அயர்வை உதிர்த்திடு! ஆற்றலைக் காட்டிடு!
வியர்வை துடைத்திட நேரமும் இன்றி
ஆல்போல் தழைத்த கழகத்தின் உயிரே! நீ
வேல்போல் பறந்து வெற்றி பறித்திடு!
விதையாய் முளைத்து
விழுதுகள் விடட்டும்!
உழவரது வியர்வையினால் சூல் கொண்ட
கழனித்தாய் வயிற்றினிலே மகளாய் வந்து,
அனைவரது சீராட்டும் பெற்றுக் கொண்ட
கதிராம் மங்கை;
நிற்கின்றாள், பொங்கல் நாளில்!
மணவறையில் பெண் போல தலைகுனிந்து
தமிழர் என்போர் மகிழ்கின்றார்;
தைதை என்றே குதிக்கின்றார்!
ஒளிவரவால் இருள் மறையும்
உளிவரைந்த சிற்பங்கள் பளபளக்கும்!
பொங்கல் நாளில் புதுப்புது இன்பம்
எங்கணும் தோன்ற எழுந்தான் கதிரோன்!
எதையும் பண்புடன் அணுகி வென்றிட
உதயசூரியன் உயர்ந்தான் இன்று!
"கதையாய்ப் போனதோ தமிழ் இன வாழ்வு?"
எனும் நிலைமாற்றி --
விதையாய் முளைத்து விழுதுகள் விடட்டும்;
நம் இனமான உணர்வு!
சூரியனைப் பனிக்கட்டி என்கின்றார்!
உடன்பிறப்பே.
ஆட்சி போய்விடுமோ என்று
அழுகிறேனாம் நான்!
ஆனந்த விகடன் சிரிக்கிறது!
அட்டா; என்ன திருப்தி அதற்கு!
செங்கோல் பறிக்கப்படினும்
சிறிதும் கவலையில்லை - என் கை
எழுதுகோலை எவரும்
பறிக்க முடியாதென்று
முத்தமிழ்ப் பேரவையில்
முழங்கினேன் நான்! அது
முகாரியாகத் தெரிகிறதாம்
மூதறிஞர் விகடனார்க்கு!
★ ★ ★
"எழுதுகோல் இவர் கையில்
இருக்கும்வரை;
செங்கோல் போயினும்
கவலையுறார் கருணாநிதி" என்று
கண்ணதாசக் கவிஞன் பலமுறை
கர்ச்சித்த வாசகத்தைத்தான்
கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில்
பீடு தமிழில் பெருமிதமாய்க் கூறினேன் நான்
★ ★ ★
தழுதழுத்த குரலில் பேசினேன் என்றும்-
தவுலைப் போல் அடிவாங்கத் தயார் என;
தண்டனிடும் தொனியிலே உவமை சொல்லி
தலைதொங்கிப் போனேன் என்பது போல்-
தரமுள்ள விகடனார் இந்த வாரம்;
தகுதியென எண்ணி ஓர்
விமர்சனம் செய்துள்ளார்!
தலையங்கத்திலும் கூட எனைப் பழித்து
தலையாய வீரத்திற்கு
இலக்கண முரைத்துள்ளார்!
★ ★ ★
சென்னை டெல்லிக்கு ஆணையிட்ட நாள்
சென்று விட்டதென்று;
செப்பினார் பிரதமர் என்பதற்காக நான்
சீறி விழவில்லையாம்!
சீண்டி விடுகிறார் விகடன்!
அப்படி நான் ஆணையிட்டிருந்தால் அல்லவா
எப்படிச் சொல்லலாம் இப்படி எனச்சினந்திட?
★ ★ ★
ஏனோ விகடனார் மறந்து விட்டார்-
எமர்ஜன்சி நேரத்தில்;
என் வீட்டுக்கே டெல்லி தூதனுப்பி;
எமர்ஜன்சி எதிர்ப்பைக் கைவிட்டால்-
அவதிகள் எவையும் அணுக மாட்டா,
அவதூறு வழக்கும் தொடுக்க மாட்டோம்
ஆட்சியின் ஆயுளும் ஓராண்டு நீட்டிக்கும் என
ஆசைகளை மூட்டிப்பார்த்தார்!
அசைந்து கொடுத்திருந்தால்
ஆண்டொன்று மிசாச் சிறையில் - என்
அருமைக் கண்மணிகள் ஐநூறு பேர்
அவதிப்பட்டிருக்க மாட்டார்!
ஆட்சியும் தொடர்ந்திருக்கும்-
ஆனால் ஒன்று; மானம் போயிருக்கும்!
★ ★ ★
எமை நத்துவாயென
எதிரிகள் கோடி இட்டழைத்தாலும்
தொடேன் என்றுரைத்துத்
தோளுயர்த்திக் காட்டிய
பாவேந்தர் பாட்டை மட்டுமல்ல; அவர்
பாட்டையையும் மறக்காதோர் நாம்!
கேலி புரிகிறார் நமைப் பார்த்து விகடனார்!
போலிக்கும் உண்மைக்குமுள்ள
முரண்பாட்டை;
சிரித்து மகிழும் அந்தப் பண்பாளர்
சிந்தித்தால் உணர்ந்திடுவார்!
★ ★ ★
அறுபத்து ஏழாம் ஆண்டு தேர்தலிலே
அண்ணா, ராஜாஜி, காயிதேமில்லத்,
ம.பொ.சி. நம்
அணியில் இருந்த பி.இராமமூர்த்தி
அனைவரையும் கழுதை மீது அமர்த்திக்
கார்ட்டூன் போட்டுச்
சிரித்தவர்தானே விகடனார்
கற்பூர வாசனையை கழகத்தின் உறுதியினை,
சுலபத்தில் அவரால் உணரத்தான் முடியாது!
அதனால்தான்
சூரியனைப் பனிக்கட்டி என்கிறார்!
நடையை நிறுத்தாதே!
உடன்பிறப்பே.
நாய்கள் குரைத்துக் கொண்டேயிருக்கும்
அதற்காக நீ உன் நடையை நிறுத்தாதே!
நடுங்கி, ஒடுங்கி, ஓரம் ஒதுங்கத் தேவையில்லை
நாம் போவது கொள்ளையடிக்க அல்லவே; கொள்ளைகளை
தடுத்து நிறுத்தத்தானே!
கொள்கை பரப்ப - குறிக்கோளை எட்டிப்பிடிக்க - வெற்றிக்
குன்றின் மீது ஏறிக் கொடி நாட்ட!
