உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 71 · 71 / 77

"வெண் மூக்குக் குதிரை” யைத் தாக்குதல்

வெட்கக்கேடன்றோ!

எனவே தான் ஏசட்டும் சிலர் என்றே

எதிர்த்தொரு வார்த்தை சொல்லாது

விடுகின்றேன்!

விரல் கொண்டு நசுக்குகின்ற எறும்பை

வேல் கொண்டு வீழ்த்துவது அறிவாமோ?

கிட்டியதைத் தட்டிப் பறிக்காமல்

காப்பதற்கும்

எட்டி எட்டிப் பாய்ந்து ஓர் பதவி

பெறுவதற்கும்

திட்டித் தீர்க்கின்றார், என்னை

கட்டிப் பிடிக்கின்றார் அவர் காலை!

"பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்"

எனும் குறட் பொருளை

அன்றுணர நான் தவறிடினும்

இனும் வேதனை சூழாமல் இருந்திடவே

இன்றவர் உணர்வாரோ - யாரறிவார்?

தேன் மலரில் கூத்தாடி

தெரு மணக்க வருகின்ற

தெற்கத்திச் செல்வமே;

தென்றல் மென் காற்றே!

ஊன் உயிர் உருகிடவே

வான் பரப்பாய் எனைநேசித்த

உடன்பிறந்தார் ஏழுபேர்

உனைத் தழுவுதல் போல்

உடலிறுகத் தீப்பிழம்பைத் தழுவி விட்டார்!

மொழி காக்க; விழி தெறிக்கச்

சுழன்றோடும் தீயினிலே

அன்றொருநாள் எண்மர் குளித்திட்டார்;

இன்றோ; தமிழர் இனியேனும் எழுவர் என்றே

குன்றாப் புகழ் பூண்டோர் எழுவர் குதித்திட்டார்!

கொள்கைக் கோ" கோயிலடி பிருந்தாவன்

தீர இளைஞன் திருச்சியிலே மனோகர்

அயராத்தொண்டன் ஆரூர் கிட்டு

அரிமா நெஞ்சன் முத்துப்பாண்டியன்

அன்னையர் குலத்துக்கொரு சென்னை மேரி

கடமையில் தளரா கல்லாவி ராஜேந்திரன்

வேல் பாய்ந்து வரினும் விழிஇமையா

மேல் மாயில் ஜெகநாதன்

இந்த இளந்தருக்கள் எரிதழலில்

வெந்துசாகும் நிலை எதற்கு?

நெருப்புத் தேமல்களை தேகமெங்கும்

விருப்பமுடன் அணிந்துகொண்டு

நாமக்கல் வீரன் நல்இளைஞன் ராமசாமி,

சிக்கலூர்ச்சீயம் ஏழுமலை, இராமய்யா,

திருப்பூர் வேங்கை திருவேங்கடம், முத்துச்சாமி

சிகிச்சை பெறுகின்றார் -

"சிங்கங்கள் அஞ்சிடுமோ

சிறுநரிக் குழுவிற்"கென்று

செம்மாந்து உரைக்கின்றார்!

ஏற்கும் முறையல்ல இதுவெனினும்

எரிநெருப்பைப் பனி மழையாய்

ஏற்கின்றார் எனும் போது

தோற்கின்றோம் தியாகத்தில் அவர்முன்னே -

தொழுகின்றோம்

அழுகின்றோம் -

எழுகின்றோம்; அவர் வீரம் நம் கையில்

போர்வாளாய்ச் சுழலட்டும் - துரோகக்

கூர்வாட்கள் உடையட்டும் தூள் தூளாய்!

இன்னும் யார் யார்

பெயர்கள் வரவில்லை?

உடன்பிறப்பே,

உன்னிடம் உரிமையுடன் கேட்டு

நீ தருகிற நிதியைப் பெற்றுத்தான்

கழகப்படகை கடும்புயல்களைத்தாண்டி

ஓட்டி வந்திருக்கின்றோம்!

எப்போது நிதி கேட்டாலும்

இல்லையென்று சொல்லாத வள்ளல்பாரியாய்

இல்லாதபோதும்

இருக்கவே இருக்கிறது என் தலையெனக்

கொடுக்க முன்வந்த

கொங்குக்குல குமணனாய்

அன்புக் கண்மணியே! நீ

அன்றும் இன்றும் விளங்குகிறாய்!

முன்னமே தெரிந்துதான்

நிதியெனப் பெயரிட்டார்போலும்

முத்துவேலரும் அஞ்சுகமும்என

மூதறிஞர்முன்னால் பேரறிஞர் உரைத்துப்

பதினொரு லட்சத்தைப் பெற்றுக் கொண்டாரே.

ஓடியாடி நான் உன்னை நாடியபோது - நீ

தேடிவந்து தந்த நிதியை!

நினைவிருக்கிறதா;

நெஞ்சில் பசுமை குலையா அந்த நிகழ்ச்சி!

கழகக் கருவூலம் கருவுற்றிருக்கவில்லை -

என்செய்வது; தேவையில்லாத இடத்தில் குடும்பக்

கட்டுப்பாடு!

சிலரது கருவூலங்கள் ஊடல் கூடலால் அல்ல;

ஊழலால் திளைத்து மகிழ்ந்து

உப்பிக் கொண்டே போகின்றன! அவை

மழலைகள் அல்ல - மகோதரக் கட்டிகள் என்று

மத்தியப் புலனாய்வு மருத்துவர்கள் உரைக்கின்றனர்.

அளவுடன் பெற்று வளமுடன் வாழ்ந்திடும்

அரிய நோக்குச் செயல்பட

அன்றுமுதல் இன்றுவரை

கறைபடாத கருவூலமாய்க் கழகம் திகழ்கிறது!

உன்கையில் கிடைத்த ஐந்தும்பத்தும்

உடனடியாகக் கழகத் தேர்தல் நிதியெனமாறி

உன்னை என்முன் நிறுத்துகின்றன.

உளமார வாழ்த்துகின்றேன் உன்பெயரைப்

பார்த்தவுடன்!

இன்னும் யார் யார் பெயர்கள்

மின்னிடவில்லை முரசொலியில் என்பதையும்

எண்ணிடத்தவறேன்

நாளைக்கொருசொல்

என்னை நீ அறிவாய்!

வாளைப்போல் வீச்சு கொண்டு சுழன்றால்

நன்றாயிருக்காதல்லவா உனக்கு!

"இவர் என்ன தந்தார்?" என்று

இன்மொழியில் கேட்டால் கூட

இடியொலியாய்த் தாக்குமன்றோ! அதனாலே

இன்றைக்கே உடன்பிறப்பே!

சாக்குப்போக்குச் சொல்லாமல்

சடுதியிலே அனுப்பிவைப்பாய் கழகநிதி!

பெரியகுளம் நீந்தவேண்டும் - நின்

அரிய உழைப்புடனே -

அளித்திடுக கழகநிதி! இந்தக்

கருணாநிதி கேட்டுக் கழகமாமணியே; நீ

கைமூடி இருந்ததுண்டோ? உம்!

கண்மூடித் திறப்பதற்குள்

குவித்திடுக

குன்றம்போல்!

உடன் பிறப்பே,

''பசி நோக்கார் கண் துஞ்சார்

கருமமே கண்ணாயினார்"

பழைய பாடல் இது -

பதிந்திருக்கும் உன் மனதில்!

புதிய திருப்பம் காண்பதற்கும்

'புனிதர்' வேடம் கலைப்பதற்கும்

பொல்லாச் செயல்கள் வீழ்வதற்கும்

போர்க் கோலம் பூண்டுள்ளோம்!

அதில் ஒரு கட்டமே இந்தத் தேர்தல்!

அள்ளிப் பொழிகிறார் பணத்தோட்டா

துள்ளியாடுது தோரணமாய்

கண்ணைப் பறிக்குது வண்ண விளக்கு!

கருப்புப் பணத்தால் "குளத்தையே' மூடுவர்!

கண்மணி நீயோ கவலைப்படாமல்

கழகக் கொடியைக் கையினில் ஏந்து!

உதயசூரியனை உடையினில் பொறித்திடு!

வீதிக்குவீதி சென்றிடுக!

வீட்டுக்குவீடு வாக்குத் திரட்டிடுக!