உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 7 · 7 / 77

எங்கணும் எதிரிகள் சூழ்ந்தனர் அங்கே அங்கு நம்

"சங்கையிலா என் சிற்றப்பன் செய்திட்ட வேலை இது!

துரோகப் பங்கை முடித்திட்டான் - துணிக்கின்றேன் அவன் தலையை!"

சுழலும் வாளாய்ச் சுற்றினான் தேரில்!

அழல் போல் கண்கள் தோற்றமளித்திட

ஆயிரம் ஆனை பலமுடன் எதிர்த்தான்

கோபுரம் ஒன்று நடப்பது போலக்

குன்றம் ஒன்று அசைவது போலப்

புயலெனச் சீறிப் பொங்கு கடலாய் வந்தான்-

கயல் விழி மாதிடம் கனிவு பேசிடும்

கண்களோ அவைகள்?

அயலவர் மரபை அறவே அழித்திடும்

அனற்பொறி அவைகள்!

தங்கச் சிலையைத் தழுவிடும் கரமோ?

தருக்கர் தலையைக் கொய்திடும் கரமாம்!

எங்கும் அவனே; எதிலும் அவனே!

கங்குல் கிழிக்கும் கதிரும் அவனே!

போர் முடித்து இராமனின் தலையறுக்கும் நேரம்

தேர்ப்பாகன் சதியும் தொடங்கியது உடனே!

சக்கரங்கள் அச்சாணி காணவில்லை - அக்கணமே

தேட்டு சாய்ந்து வீழப் பதறிப் பாய்ந்தன குதிரைகள் நான்கும்!

சிதறித் தெறித்தன கடைக்கால் முழுதும்!

வஞ்சகத்தில் வீழ்ந்து விட்டான் மேகநாதன் -

நஞ்சுமன வீடணனும் அவன் கை நறுக்கி விட்டான்.

சிற்றப்பன் செய்திட்ட துரோகத்தை எண்ணிடவும்

நேரமில்லை... இருகரமும் ரத்தப் பிரவாகமுடன்

யுத்தம் செய்தான்!

ஈட்டிதனை வாயில் கௌவி எதிரிகளை வாட்டுகின்றான்

கூட்டமாகப் பகைவரெல்லாம் குழுமி விட்டார்

இருகரமும் இழந்த நிலையில்

பரபரவெனப் போராடும் ஆற்றல் தனைப்

பகைவரும் போற்றுகின்றார்-

பாவி வீடணன் ஒருவன் தவிர!

குமரன் முன்னே!

வேலாலே கணையாலே பகைவீழ்த்த முடியாமல்

காலாலே தலையாலே பலர் உயிரை மொண்டு விட்டான்!

போர்க்களத்தில் அத்தானின் கை அறுந்ததெனப்

பூங்கொடியாள் சுலோச்சனையும் தெரிந்து கொண்டாள்-

"தாவி அணைக்கின்ற கரமெங்கே?

பாவிநான் எப்படித்தான் காண்பேனோ அத்தானை!"

எனப் புலம்பி ஓடி வந்தாள்;

தனியொருவன் ஆயிரம்பேர் நடு நின்று

தமிழ்வீரம் காட்டுகின்ற காட்சி கண்டாள்:

"அத்தான்!" என்றாள் - "அன்பே" என்றான் - சற்று அயர்ந்தான்!

அப்போது இலக்குவனாம் பெருங்கோழை

தப்பாது கணையொன்றைத் தொடுத்து விட்டான் -

"தாய்நாடு வாழ்க!" எனும் ஒலியோடு

பாயில்லாக் கலம்போலப் போர்க்களத்தில் அசைந்தான்

எப்போதோ பழிநினைத்த இழிகுணத்தான் நாகநாட்டான்

இப்போது தீர்த்துக் கொண்டான் தலையறுத்துப் பழைய வஞ்சம்!

"பைந்தமிழர் பொன்னேட்டில் இடம் பெற்றேன்;

பைங்கிளியே வருகின்றேன்!" எனக் கூறித்

தலைமட்டும் அவள் கையில் விழுந்துவிட...

விலைமதியா இரத்தினமாம் சுலோச்சனையும் செத்து விட்டாள்!

"எனக்கு வேறு உயிரில்லை போரில் இழப்பதற்கு" - எனக்

கூறிச் சாய்ந்து விட்டான் இலங்கை வேந்தன்-

ஆஎன் இறந்த பின்னர் இறப்பதற்கு மட்டுந்தான்

நீள் இமையைத் திறந்திட்டாள் மண்டோதரி!

✤

இரணியன்

புவிப் பெண்ணாள் கழுத்தினிலே,

புரளுகின்ற முத்துவடம் தென்னாடு;

எடுத்து மீட்டுகின்ற எழில் வீணை!

கவிக்கூட்டம் பாமாலை கட்டுகின்ற கலைச்சோலை

காசினியோர் காணிக்கைக் கப்பங் கட்டிக்

குவிக்கின்ற கரம்போல இலங்கைத் தீவு!

செவிக்கினிய தேமதுரத் தமிழோசை

செகமெங்கும் தமிழ் வீரம் பரப்புகின்ற பழைய நாளில்....

இருமலையைத் தோளாகப் பெற்ற வீரன்

திருமலியும் தேகங்கொண்டோன்

திராவிடர்க்குத் தேனாய் - நிலவாய்த்-

தீந்தமிழ்க்கோர் படைக்கலனாய்த் திகழ்ந்த பெரியோன்!

போர் வாட்கள் உறங்குகின்ற உறைபோல மீசையுண்டு!

புவிமெச்ச வாழவேண்டும் தமிழ் நிலம் என்பதிலும்

தணியாத ஆசை உண்டு

புல்லேந்திப் படையெடுத்த ஆரியரைக் கண்டு விட்டால்

குரலில் சிங்கத்தின் ஓசை உண்டு!

இந்தத் தரங்குன்றாத் தமிழனுக்குப்

பெற்றோர்கள் இட்ட பெயர் பெருந்தகை வேந்து!

இழிகுணத்தார் ஆரியர்கள் இட்ட பெயர் இரணியனாம்!

திருக்குறளின் முப்பாலும் உணர்ந்த வேந்தன்;

பொருட்பாலும் அறத்துப்பாலும் ஆட்சிக்கப்பால்

விலகாவண்ணம் காத்து வந்தான்!

இறுதிப்பால் இன்பப்பாலை இனியவளாம்

அரசியின்பால் கண்டு வந்தான்!

அதன் விளைவாய்க்...

குழல்மிஞ்சி, யாழ்மீறி, மழலைச் சொல் அவிழ்ப்பதற்கு

மாதரசின் வயிற்றினிலே மாணிக்கப் பேழை தோன்ற-

மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்தார் நாட்டு மக்கள்!

கண்ணழகும் கவிதை சொல்லும் முகத்தழகும் கொண்ட காளை

பெண்ணழகை மிஞ்சுகின்ற பிறை நெற்றி கொண்டதாலே

பிறைநுதலான் எனச் சொல்லி அழைத்தார் பெற்றோர்;

பிற்போக்கு ஆரியரோ, பிரகலாதன் என்றார்!

மன்னவனை அழிப்பதற்கு மார்க்கமில்லா இச்சமயம்

மறவேந்தன் பரம்பரையில் குலக்கொடியும் முளைத்துவிட்டால்

மறையோதும் குலத்துக்கே நாசந்தான் எனச் சொல்லிக்

கொழுந்துவிடும் ஓமகுண்டத் தீ போலக் கொதித்தெழுந்தார்

சதி வகுக்க ஆரியர்கள்!

நரித்திட்டம் வகுத்துப் பின் கலைந்து சென்றார்.

நாட்டைக் காடாக்க வந்த புல்லோர்!

நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம்

வளர்கின்ற மன்னவனின் செல்வனுக்கு...

வாள்வித்தை, வில் வித்தை, கலைஞானம் கற்பிக்க

நானொருவன் திறனுடையேன் எனச் சொல்லி

நரியொன்று குறுக்கிடவே...

வெகுண்ட வேந்தன்,

"தாழை மடலை எதிர்ப் புறமாய்த் தடவுதற்கும் அஞ்சுகின்ற

கோழை நீ

வாழைமரம் வெட்டுதற்கும் வாள்பிடிக்கத் தெரியா

மோழை! வந்தவழி போ" என்றான்...

"நொந்தமனங் கொண்டு அவன் போவது நன்றல்ல;

கல்வி கற்பிக்கக் குலவேற்றுமை காட்டாதீர் மன்னா!"

என ஊடி நின்றாள்; கொற்றவனின் 'குறுநோக்' கைக் குறைகூறி

பரந்த மனப்பான்மைக்குத் தவறான இலக்கணத்தைப்

படித்துவிட்ட பட்டத்தரசி அவள்..

பாம்புக்குப் பால், முட்டை படைக்கச் சொன்னாள்!

குறுகிய நோக்கிற்கோர் அடையாளம் பூணுால் - மார்பில்!

குள்ளநரிச் செயல் உதிக்கும் கூனல் உள்ளம்-

ஆரியக் கொள்கை கூறும் சுவடி கையில்!

ஆனாலும் பெரு நோக்கால் ஏற்கச் சொன்னாள்

அடுத்துக் கெடுக்கவந்த ஆரியத்தின் தூதுவனை!

வட்டமுகப் பெருந்தேவி வார்த்தைக்குப் பதில் வார்த்தை

வழக்கத்தில் இல்லாத காரணத்தால்

பொட்டென்று சம்மதித்துப் போய்விட்டான்,

போர்முகத்தில் புலிவேகம் புயல்வேகம் காட்டுகின்ற பெருவீரன்!

'வாள்' என்றால் வானரத்தின் வால் என்றும்,

'வேல்' எனிலோ கருவேல மரமென்றும்,

'களம்' என்றால் நெல் குவிக்கும் இடமென்றும்

கருதி வாழும் உறுதியற்ற கூட்டத்தின்

உறுதுணைவன் - ஓதியமிலார்-ஓணான் குஞ்சு-

ஒப்பற்ற ஆசான்போல் உட்கார்ந்து பாடஞ்சொல்ல,

ஒடுக்கமுடன் எதிர் அமர்ந்து இளவரசு கல்வி கற்றான்.

ஆசானின் மூத்த மகள் ஆஷாதேவி

அருகிருந்து அவனோடு நட்புக் கொண்டாள்!

ஆரியத்தின் கருவுக்கும் சூழ்ச்சியுண்டு - அதன்

சுழற்சியிலே சிக்காதார் அவனியிலே யார்தான் உண்டு?

அரி நமோத்து சிந்தமென ஆரம்பித்தான்!

நரிபரியான கதை நயமாய்ச் சொன்னான்!

நங்கையும் பழமானாள்; இளவரசு கிளியானான்!

திங்களணி செஞ்சடையான், திருத்தொண்டர் மனைவிதனைத்

திருவிளையாடல் புரிந்த காதை....

திருலோகம் படைக்கின்ற பிரம்மதேவன் - மகள்