உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 6 · 6 / 77

இந்திர வில்லனைய புருவத்தின் கீழ்

எழில்நீல மணியிரண்டை இமைக்குள் பதித்துச்,

செந்தமிழ் மணக்கின்ற திருவாயை அசையச் செய்து,

சந்ததம் புகழ்பாடும் பான்மையிலே உயிரூட்டிக் கொண்டுவந்த

அற்புதமாம்?

அழகரசி! அமுதமொழி! அன்புமொழி!

பழகுதமிழ்ச் சுவடியிலே வார்த்தையில்லை உவமை காட்ட!

ஒன்று சொல்வேன்.

[Large reclining-figure illustration]

பதறாதீர் அதனைக் கேட்டுப் - பகைவனின் புதல்வி அன்னாள்!

சிதறாமல் சிந்தாமல் நம்செல்வன் எடுத்துவந்த செந்நெற்கதிர்!

நம்மைப்

படைகொண்டு எதிர்த்துப்பார்த்து உயிர்தப்பி ஓடிவிட்ட

நாகன் மகள்!

அவள் பெயர் சுலோச்சனையாம் - சுவைநிறைந்த

பலாச்சுளையாம்! ஓர்நாள்

மணிமாடச் சோலையோரம் மங்கைநல்லாள் உலவுங்காலை

பணியாரம் பார்த்துவிட்ட பூனைபோல் மேகநாதன் அங்கு

சென்றான்!

தணியாத காதலாலே தவிக்கின்றேன் அன்பேயென்று,

யார்க்கும் பணியாத தலைதாழ்த்திக் காதற்பிச்சை கேட்டு நின்றான்!

''துணியாத காரணத்தால் முதலில் நான் துவங்கவில்லை-

தூயவரே, உமது பேர் கேட்டுப் பலநாள் நான் தூங்கவில்லை.

புலி நகம் அணியாத என் கழுத்தைப் பாரும் உடன் அதைக் கொண்டு வாரும்!

இனி யாரும் எனக்கு வேண்டாம் இந்த அன்பிருந்தால் போதும்'' என்றாள்!

உங்கள் மகன் சிங்கமன்றோ!

பொங்கும் வேங்கைக்குப் பூனையா பிறந்துவிடும்?

தங்கம் பெயர்த்தெடுத்துத் தோள்மீது தூக்கிக் கொண்டான்

அங்கமெலாம் குளிரேற அவளுமே தொத்திக் கொண்டாள்;

மங்கையுடல் தந்திட்ட புதுப்பலத்தால் நாகநாட்டு

மதிற்சுவரைத் தாண்டி விட்டான்!

நங்கை அவள் சொன்ன கதை இதுதான் மன்னா, அறிக" என்றாள்;

அகமகிழ்ந்தாள்!

கொடுங்கைத்தேர் பவனி வரும் வீதிகளில் விழாவெடுத்து

இலங்கைத் தீவின் மருமகளாய்ச் சுலோச்சனையை

ஆக்குவதே நலமென்றான் இராவணனும்;

அவளும் நன்றென்றாள்!

"திருப்பித்தா என்மகளை!" எனக்கேட்டு நாக நாட்டான்

கிறுக்கிவிட்ட ஓலைதனைக் கிழித்துப் போட்டான் மேகநாதன்

"அறுக்கின்றேன் அவன் தலையை" என சொல்லிப்

பழியேற்றுக் காத்திருந்தான் நாகமாமன்!

இந்நிலையில் இராவணனை அழிப்பதற்கு இழி சூழ்ச்சி

மேற்கொண்டார் வடவாரியர்கள் - திராவிடனைத்

தீர்த்துவிடத் திரைமறைவில் சதிக்கூத்து!

புறாவினம் போலிருந்து பொல்லாத கழுகாக மாறிவிட்டான் ஓர்

தம்பி -

அனுமன் எனும் ஐந்தாம்படையொன்றை அனுப்பிவைத்த

இராமனுக்கு

அறிவு புகட்டுகின்ற வழி கண்டான் மேகநாதன்!

தீயிட்டு நகர் அழிக்க முயன்றவனின் வால் நறுக்கித் தோலைப்

பதம்பார்த்து ஓட்டிவிட்டான்!

தாவிற்றுத் துரோக வெள்ளம் இலங்கை மீது!....

'காவிற்கு அழகில்லை பூவின்றி!

பாவிற்கு அழகில்லை பொருளின்றி!

நாவிற்கு அழகில்லை நயமின்றி!

அதனாலே இராமனிடம் இறங்கிப் பேசல் நலம்" என்றான்.

குகனோடு ''எழுவரான" கொடிய வீடணன்! அது கேட்டு

"நாகாக்கும் இலக்கணத்தை நன்றுரைத்தீர் சிற்றப்பா!

நாடு காக்கும் போர் மூண்ட பின்னர்

நம் தலைகாக்க மண்டியிடல் மரபல்ல - மானச் செயலல்ல

நடப்பீர்" என்றான்

நடுக்கமிலா உளங்கொண்ட மேகநாதன்.

துடுக்குமிகு வடநாட்டார் துவங்கி விட்டார் போராட்டம்!

இடுக்கண் வருகின்ற நேரமெல்லாம் நகுகின்ற

இந்நாட்டுப் பெருமக்கள் குதித்து விட்டார் சமர்க்களத்தில்;

உடன்பிறந்தே கொல்லுகின்ற பிணியாக வந்திட்ட தம்பிசெயல்

திடங்கொண்ட இராவணனின் சிந்தையெலாம் கலக்கிற்று;

''புடம்போட்ட பொன்னே! நான் பெற்றெடுத்த கண்ணே!

போருக்கு அனுப்புகின்றேன் உன்னை!

போய்வா மகனே''

என்றான்.

''தினவெடுத்த தோளுக்குக் கிடைத்தது தீனி!

தீயவர்க்குக் கட்டுவோம் சாவூர் ஏணி!''

எனமுழக்கி எழுந்து விட்டான் காளை- என்றான்.

"தாய்நாடு காப்பதற்குத் தலைதருவேன் - பகைநாட்டு

நாய்நுழைய வழிதிறக்கும் பாவிகட்குப் பாடம் சொல்வேன்!

வருகின்றேன் என்றன் தாயே! வழியனுப்பி வையம்மா!

தருகின்றேன் வெற்றிச் சேதி" - எனக்கூறிப் பறந்து போனான்.

எதிர்ப்பட்டாள் அவன் துணைவி;

புறப்பட்டேன் போருக்கென்றான்!

"அரையாண்டும் முடியவில்லை மணவிழா நடந்து-

தரையாண்டும் போதாமல் கடலாண்டு வருகின்ற மன்னர்

மகனே! காதல்

கரை தாண்டும் வழியின்றித் தவிக்கின்ற பேதையிடம் -போர்ப்

பறை யாண்டு முழங்கிற் றென்று

பயணம் கூறல் நியாயமோ? சொல்க!" என்றாள்.

"விழுதுபோல் கண்ணீரைச் சிந்துவது அழகல்ல! வில்லால்

உழுது வீரம் விளைக்கின்ற பரம்பரையில் பிறந்து விட்டோம்:

தொழுது வாழ்வது அறிஞரையன்றிப் பகைவரையல்ல!

பெண்கள்

அழுது தடுப்பது ஆண்களின் கள்ளத்தையன்றிக் களம்புகு

நிகழ்ச்சியையல்ல!

பழுது வருவது உடல் பொருள் ஆவிக்கேயன்றிப் பழந்தமிழ்ப்

பண்புக்கல்ல!

பொழுது விடிந்ததும் புறப்பட விடை கொடுத்திடு" என்றான்,

போர் முகங் காணத் துடித்திட்ட வேங்கை!

"கொடிபோல எனை வளைத்துத் தோளில் போட்டு

நெடியமதில் தாண்டும் போதும் அஞ்சவில்லை - நாளை

விடிவதை நினைத்தால் ஏனோ குலுங்குகின்றதத்தான் உள்ளம்?

அவள் அழுதாள்! அவன் சொன்னான்:

"இடியோசை கேட்கும் மழலை, கைகொட்டிச் சிரிக்கும் நாடு!

'முடியாமை' என்ற சொல்லை அறியாத தமிழர் நாடு - இதைப்

படியாமல் பேசலாமோ, பைங்கிளியே! என்னை உன்றன்

மடியில் போடு"

ஆறுதலாய் அஞ்சா நெஞ்சன் உதிர்க்கின்ற வார்த்தைகளால்,

தேறுதல் அடைதற்கு வழியின்றித் தவித்த பெண்ணாள்

ஏறு தழுவும் அவன் மார்பில் எழில் மலராய் ஒட்டிக் கொண்டாள்

"ரத்தச்

சேறு படிகின்ற திண்மார்பில் முத்தமிடு" எனக் கேட்டான்;

ஒன்றிரண்டு நூறாகப் பொழிந்து விட்டாள் முத்தமாரி-

ஒளிந்திருந்த சந்திரனும் எட்டிப் பார்த்தான்-

இணையில்லா வீரன் இந்திரஜித்தன் வெட்கிப்போனான்!

போருக்கு வருகின்றான் எனக் கேட்டார்.

"அணையில்லா நதி போல வருவானே" என்றார். "அவன்

தேருக்குச் சாரதி நம் ஆள்தான்!

வீணுக்குப் பயம் வேண்டாம் விட்டொழிக!

ஊருக்குள் போய் வருவேன் ஒற்றனாக!" எனக்கூறி

ஒளிந்து சென்றான் வீடணனும்!

"நெற்றி சுருங்காமல் நீல விழி கலங்காமல் நெடும்பகையை

வெற்றி கொள்வீர் அத்தான்!

பெற்றி நிறை தாயகத்தின் பெரும் நிதியே!

கற்றறியா மூடர்கள் கைவரிசை காட்டுதற்குப்

புற்றீசல் போல் புறப்பட்டு வருகின்றார் - என்

கொற்றவனே! குலப்பெருமை காத்திடுவீர்!" எனப்

போர்க்கோலம் பூண்டுவிட்ட வீரனுக்குத்

தார் சூட்டித் திலகமிட்டாள்! வாழ்த்தி நின்றாள் வடிவழகி

சுலோச்சனா தேவி!!

"இத்தரை மீதினில் எத்தரைப் புகவிடேன் - என்

பத்தரை மாற்றே! முத்திரை ஒன் "றெனப் பெற்றுச் சென்றான்!

"நிகும்பலை என்னுமிடம் நெடியதோர் பாசறை

கும்பலை அழித்திடும் கருவிகள் உண்டு!

இந்திரஜித்தனின் பெரும்படை அதுதான்;

தந்திரமாய் அதைத் தகர்த்திட வேண்டும்" இதை

வீடணன் சொன்னான் வீணர்கள் முகாமில்!

ஆடினார் அனைவரும் ஆனந்த மிகுதியில்!

போர்ப்படையுடனே புலிநிகர் தமிழன்

புகுந்தான் நிகும்பலைப் பாசறை தன்னில்!

யார்க்கும் தெரியாக் கருவிகள் எல்லாம்

எடுத்தான் - கொடுத்தான் வீரர்கள் கையில்!

ஆர்த்தது முரசம் பாசறை வெளியே!

அதிர்ந்தது பாசறை எதிரிகள் வரவால்!

குகைக்குள் திடுமெனச் சிக்கிய வீரன் - எரிமலைப்

புகையைக் கக்கினான் சினந்தே!