உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 5 · 5 / 77

ஒழிந்ததடா பகையென்று, நகை முழக்கம்

செய்து விட்டுத் திரும்புகின்ற வழிதனிலே

ஒளிந்திருந்து ஆரியர்கள் ஓரம்பு வீசி விட்டார்.

மார்பினிலே பட்ட கணை வெட்டித் தள்ளி,

யாரடா கோழையென்று வாள் ஓங்கித் திரும்பிவிட்டான்!

ஓடுதற்கு வழியின்றிச் சிக்கிவிட்ட இராமன் கூட்டம்

தேடுதற்கும் தசையின்றிப் பஞ்சாய்ப் போகும்!....

கன்னலடா என்றன் நாடு, அதை

இன்னலிலே மாட்டிவிட்ட உங்களுக்கு-இந்த வாள்வீச்சு

மின்னலடா எனக்கூறிச் சுழற்றி விட்டான்.

சூறாவளிதனையும் சூழ்ந்தெதிர்க்கும் கீர்த்தி பெற்றோன்!

இனி நிலைமை மோசமென்று, ஆரியக்

கனி சுவைக்கும் வீடணன் கண்டு விட்டான்!

ஈட்டியொன்று அவன் கையில்!... எறிந்து விட்டான்

அண்ணனது முதுகின் பக்கம்!

மறைந்திருந்து பறந்து வந்த அந்த ஈட்டி - அவன்

மலைப்பாறை முதுகினிலே ஊடுருவி, மார்பகத்தில்

தலைநீட்டிக் - கண்ணீர் கொட்டும்!

இமயமலை சாய்வது போல், இராவணனும் வீழ்ந்து விட்டான்!

"எனைக் கொன்றவன் என் தம்பி,

பனைமரத் தோளுடையான் பார்ப்பனத் தாளுடையான் - கையிலே

உயிர் பிழைக்க மருந்துண்டு! - ஆனால் என்றன்

உடன் பிறப்பு ஒளிந்திருந்து போரிட்டான்

எனக் கேட்டுச் சாகின்றேன்"

இது கேட்டுச் செத்தது போல் ஆகிவிட்டார்

இலங்கை மாந்தர்!

[Decorative printer's ornament centered below the final verse]

**இந்திரஜித்**

மண்ணெலாம் வீரம் துள்ளும் - மாதர்

கண்ணெலாம் கற்பு சொல்லும்;

விண்ணிலே ஏறுகின்ற

கொடி நிழல் பகையை வெல்லும்; நாட்டுப்

பண்ணெலாம் மானம் காட்டும்

எண்ணிலாத் திறம் முகிழ்க்கும் மறவர் கோட்டம்-

வெண்முகில் குடைபிடிக்கும்

பொன் சுவர்க் கோட்டை மீது

தண்ணென முத்தமிட்டுத் தடங்கடல் தவமிருக்கும்

இன்னுயிர் பெரிதேயல்ல இங்கு வாழ் மக்களுக்கு!

மன்னுயிர் காப்பதுவே மாத்தமிழர் இலக்கணமாம் எனக்கூறும்

தென்னிலங்கைப் பெருங்குடியின் வழிகாட்டி;

தன்மானச் சுடர்விளக்கு - தமிழர் தலைவன்;

எந்நாளும் புகழேட்டில் வாழுகின்ற இராவணன் காண்!

மின்னலிடைப் பெருந்தேவி மண்டோதரி அவன் மனைவி-

இருவரும்

கன்னல்மொழி கேட்பதற்கு மகவொன்று வேண்டுமென்று

கடுந்தவங்கள் இயற்றாமல், கங்கையிலே ஆடாமல்,

கனியொன்றைப் படைத்திட்டார் கட்டிலறைக் கவிபாடி!

காதல் அருவியிலே கண்டெடுத்த புதுமலரை -

ஆணழகைக் - களிப்புக் கடலாழ்ந்து பெற்றெடுத்த

நித்திலத்தைக்

கண்ணொற்றி மகிழ்ந்திருந்தார்;

கவலைகளை மறந்திருந்தார்.

மாணிக்கமிழைத்த தொட்டில்

மகவின் கால்பட்டு நொறுங்கிப் போகும்;

மறுநாளே திருநாள் உண்டு - மகன்காட்டும் வீரம் கண்டு!

உமிழ்கின்றான் வாய்நீர் என்றால் - அதனை

அமிழ்தென உண்ணுகின்றார் அன்னை தந்தை!

தவழ்கின்றான் கூடத்தில் -பின்னே தமிழ்பாடித்

தொடர்கின்றான் பெருவீரன்;

"அகழ்கின்ற நிலந்தனிலே ஆணிப்பொன் மணிக்குலத்தை-

எடுக்கின்றார்;

புகழ்கின்ற குறளைப்போல் ஓர் குழவிக் கீடாமோ

அவையெல்லாம்?

இகழ்கின்றார் இல்லறத்தை இளித்தவாயர்! என் சொல்வேன்

அவர் அறிவை!

மகிழம்பூப் பிள்ளை தரும் பேரின்பம் மறுக்கின்ற

காவியமும் இலக்கியமும் கள்ளி என்பேன்!

கவைக்குவதவாக் காட்டுச் சுள்ளியென்பேன்!

முக்கனியின் கூட்டன்றோ குழந்தை முத்தம்-

முத்தமிழின் சுவையன்றோ அதன் முறுவல்!''

எனக்கொஞ்சி, வஞ்சிதனை அணைத்துக் கொள்வான்.

"பார்க்கின்றான் குழந்தை" யெனப் பாவையும் விலகிக்

கொள்வாள்

'கோக்கின்றான் முத்தெடுத்துச் சிரிப்பாலே!' எனச் சொல்லி, 'உன்

வாக்குண்டாம். நல்ல மனமுண்டாம், வாடா என் கண்ணே!"

என்று கணைகளால்

தாக்குண்ட தழும்பு மார்பில் தங்கத்தைத் தழுவிக்கொள்வான்.

நுரைகடலில் பருவநாளில் உயர்கின்ற அலையைப் போலே

தரைமீது காலூன்றித் தாவிப் பாய்ந்தான்.

தளிர்மகன், மலை முகில் பிடிக்க என்று

குளிர்மொழி சிந்தி நின்றாள் - கோப்பெருந்தேவியவள்!

"வேகங்கொள் வீரனுக்குப் பிறந்த செல்வம்

காகம் போல் கோழிபோல் வாழ்ந்திடுமோ?-

'மோகங்கொள் உயிர் மீது' எனச் சொன்னால் கேட்டிடுமோ?

சாகவே அஞ்சாது பாய்ந்திட்டான் வெண்முகிலின் மேலே!

ஆகவே அவன் பேரை மேகநாதன் என்பேன் இனிமேலே!"

இலங்கைத் திருநகரின் இளவலுக்குப் பேர் சூட்டும் திருநாள்-

சதங்கை ஒலிக்கின்ற மயிலினங்கள் ஆட்டமுடன் நடைபெற்ற

அந்நாளில் எழில்மகனை அணைத்துக் கொண்டு

இந்நாடு ஆளவந்த குலவிளக்கே வாழ்கவென்று

வடித்து நின்றான் இன்பக்கண்ணீர் சிரித்து நின்றார் மாதரெல்லாம்;

பெருநாள்!

பாளை தெறித்ததுபோல் படித்து நின்றார் இளவலின் முகத்தினிலே

வீரத்தை - மறவ ரெல்லாம்!

மணவீட்டில், 'பாலி'யிலே வளர்கின்ற தானியம்போல்

மளமளென வளர்ந்திட்டான் மேகநாதன் மண்மீதொரு

மலைபோல!

இரட்டிப்பாய் எட்டாண்டு முடிவதற்குள் அடவி சென்று

இருசிங்கம் பிடித்து வந்து மாளிகையில் நாய்போலக்

காவல் வைத்தான்!

இருபதாம் ஆண்டினிலே இரும்புத்தூண் ஒன்றை ஒரே கையால்

உடைத்துப் போட்டான்!

இலங்கையிலே பகைநுழையா அரண் அமைத்தான்.

இலக்கியத் தமிழுக்கு எழிலான மன்றம் கண்டான்.

அப்போது, இந்திரனாம் தேவமன்னன் இவனோடு போரிட்டுத் தோற்றதாலே

இந்திரஜித்தனெனும் பெயருக்குத் தகுதியானான்.

"இனியவளே! என்னமுதே! நம்மகனின் பெருமைகளால்

இதயத்தில் புது எழுச்சி! புது உணர்ச்சி! புது இளமை

திரும்புதடி -

கனிமொழியே! அதன் நினைவாய்ப் பழமுத்தம் தந்திடடி!-

தனி நின்றால் தாங்கவில்லை காதல் தொல்லை!" எனக்

சொல்லிக்

கண்டுவிட்டான் முல்லைப்பல்லை! தமிழ்க்கொல்லைக்

காவலனாம் இராவணனைத் தழுவி நின்று;

''என்னுயிரே! அத்தானே! ஒன்று சொல்வேன்;

வண்ணமலர் முதிர்ந்தபின்பு பழமேயாகும் -

அந்நிலையை நோக்கித்தான் நடக்கின்றோம் நாமிருவர்

உண்மையன்றோ?

வெண்ணிலவுக் காலந்தன்னில் நாம்பட்ட பாடுகளை

எண்ணிக் கொண்டு

தண்ணமுதாம் மகனுக்குக் காதல் துணையொன்றைக்

காலத்தில் நாடுதலே நலமாகும்" எனச் சொன்னாள்

வண்டமரும் பூங்குழலாள் மண்டோதரி! அதுகேட்டு இராவணன்

'ஆம்' என்று தலையசைத்தான் - ஆனாலும் விடவில்லை -

அன்றிரவை இருவருமே வென்றிருந்தார்;

உதயத்தின் ஒளிபட்டு எழுந்திருந்தார் - அந்தச்

சமயத்தில் ஓர் தோழி ஓடிவந்தாள்;

மாம்பழப் பெண்ணொருத்தி மேகநாதன் மாளிகையில்

ஆம்பற்கொடி போல நாணமுடன் நிற்கின்ற சேதிகேட்டார்!

அதிசயத்தால் திகைத்துப்போனார் பெற்றோர்கள் - ஆனாலும்

அதிரசத்தைச் சுவைப்பதுபோல் மன்னன் மகிழ்ந்து,

"ஆருயிரே! நீ போய்ப் பார்த்துவா உன் மருமகளை! அவள்

தார்வேந்தன் மகளோ? - தளிர்க் கொடியோ?

கார்குழலாளேர்? - நம் கண்மணிக்கு ஏற்றவளோ?

என்பதெல்லாம் அறிந்துவா ஓர் நொடியில்" என்றான்.

அவள் சென்றாள் - பின்வந்தாள்!

"என்னடி கண்ணாட்டி! பொன்னடி பூமியில் படாமல் பறக்கின்றாய்?

சொல்லடி சுவைத்தமிழே!'' எனச் செவிநீட்டித் துடித்திடும்

ஆளனிடம்

உள்ளது உள்ளபடி உரைப்பதற்கு முன்வந்தாள் இலங்கைராணி,

"சந்தன மரங்கடைந்து சிலைசெய்து,

வெந்தழல் நிறமெடுத்து இதழ்பொருத்தி,