உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 4 · 4 / 77

பர்த்தாவை விரட்டிவிட்டாள்!

"அண்ணனில்லா நேரத்தில் அண்ணிக்கு வலைவீசும்

நினைப்போ தம்பி?

முன்னவன் பின் ஓடு நீயும்" - எனத் துரத்தித்

தென்னவன் வருகைக்குக் காத்திருந்தாள்.

தீ பறக்கும் கண்ணுடனே தேர்போல வரும் வீரன்

தேன்மொழி கொட்டிச் சீதை தெருவாசல் வருதல் கண்டான்.

"மூத்தவனும் இளையவனும் ஓடிவிட்டார் - எனக்கு

ஏற்றவன் நீ வந்து விட்டாய் - என்னை உனக்குத்

தந்துவிட்டேன்" எனத் தழுவினாள்

இராவணனின் தடந் தோளில்,

படர் முல்லை போலப் பைந்தொடி சீதாதேவி!

என்னுயிர்த் தங்கைக்கு இடையூறு விளைவித்தவனின்

மனைவி நீ!

உன்னுடலைக் காக்கைக்கும், கழுகிற்கும்,

காமங்கொள் கரடிக்கும் அளிப்பதல்லால்-

கரம் படவும் விடமாட்டேன், கப்பலிலே ஏறென்றான்.

மானத்தைக் கப்பலிலே ஏற்றிவிட்ட

மரபினிலே வந்தவனின் துணைவி, என் உடல்,

தானத்தை ஏற்றிடுக என உரைத்தபடி-

உரம்பெற்ற அவன் மார்பில் சாய்ந்திடவே - எப்படியும்

வரம் பெறுவேன் என நினைத்துக்

கலம் ஏறி நின்றாள், பீடுநடைச் சிங்கம்பின்,

ஒரு பெண் நரி போல்!

"சிறையெடுத்துப் போன சீதாதேவிதனைச்-

சிங்காதனத்திலேற்றிப் பட்டத்து ராணியாக்கிடுவான்,

சீதைக்கோர் செல்வனுதித்தால்

இலங்கைச் செங்கோலில் அவனுக்கும் பங்கு.

பன நுங்கு போல ஆரியர்க்கோர் தேசம்-

பாடுபடாமல் வருவதென்றால்-

பதினாயிரம் சீதை போனால்தானென்ன மோசம்!"

இப்படி ஆரியர்கள் நினைத்தபடி நடக்காமல்,

செப்படி வித்தைக்காரி சீதைக்குச் சிறைச்சாலை

ஏற்பாடு செய்துவிட்டான் இலங்கைக் கோமான்!

வேதமென்றும், வேள்வியென்றும்,

விளம்புகின்ற கூட்டந் தன்னை...

விறகொடித்து வருதல் போல்

விலா எலும்பொடித்து வருக என்றான்!

வெற்றி வேந்தனுக்கோர் தம்பி வீடணன்....

வேங்கை மரத்துப் புல்லுருவி,

அண்ணனைச் சாய்த்துவிட்டு அரசாளக் காத்திருப்போன்.

அனுமன் எனும் ஐந்தாம்படை யொன்றின் கையினிலே

அக்கினிக்கோல் எடுத்துத் தந்து,

அழித்திடுக இலங்கைமா நகரையென்றான்...

தென்னிலங்கைச் சீமையெங்கும் தீக்காடு பிணக்காடு!

குணக்கேடன் வீடணனின் ஒத்துழைப்பால்

குலம் வளர வழி கண்டார், குள்ளநரி ஆரியர்கள்!

[Line illustration occupies the lower portion of the page]

தமையனாம் வாலியெனும் தமிழ் வீரன் தன்னைத்

தர்ப்பைகளின் சூழ்ச்சியினால் கொன்றுவிட்ட கொடியன்

சுயமரியாதையை விலைகேட்கும் சுக்ரீவன் என்போன்-

கண் சுழற்றும் ஆரியரின் காலடியில் வீழ்ந்தான்.

தம்பியிடம் நம்பிக்கை வைத்திருந்த தங்கம்,

தரணியெலாம் நடுநடுங்க ஆண்டுவந்த சிங்கம்,

கடல் அலைமேல் எதிரிகளின் படைகள் வரக்கண்டு,

உடன்பிறப்பே, விபீஷணா! உடன் கிளம்பு! என்றான்.

படமெடுக்கும் பாம்போடு விளையாட்டு வேண்டாம்-

கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கிடுவாய்: அண்ணா

உடன் சென்று சரணடைவோம் வந்திடுக! என்றே,

மதுக் குடங்காட்டும் ஆரியர்க்குப் புகழ்பாடி நின்றான் - தம்பி

குரங்காட்டம் கண்டுவிட்ட தென்னவனும் - கண்கள்

குளங்காட்ட ''குலங்கெடுக்க வந்தவனே!

கோடரியின் பிடியே! கொடிய உன் நாக்கை

அறுத்தெறியாமல் இருந்ததற்கு நன்றி சொல்லி

நடந்திடுக'' என நடந்தான் களம்நோக்கி ....!

ஒரு கருவில் ஊறிவிட்ட உத்தமனாம் - சிந்தனை

உறக்கத்தில் வல்லவனாம், எழில்

கும்பகர்ணனெனும் தம்பி, அண்ணன்

இடையினிலே இருக்கின்ற உடைவாளைப் போலப்

படைமோதும் இடம் நோக்கிப் பின் தொடர்ந்தான் பாய்ந்து!

கடைக் குட்டித் தம்பியவன் எதிர்வந்து நின்றான்,

ஜடை கட்டி வாழுகின்ற ஆரியரை ஜெயிக்கப்

படை திரட்டிப் பயனில்லை - பாழாகும் என்றான்!

துரோகக் கடை கட்டி வாழுகின்ற தம்பியல்ல நான்!

நாசத்தின் பிறப்பிடமே! நடைகட்டு என்றே

மடையுடைத்த வெள்ளம்போல் சீறிவிட்டுச் சென்றான்!

"என்னருமை வீரர்களே! ஏற்றங்கொள் தோழர்களே!

இன்றிந்தத் தென்னிலங்கை ஆண்டிருக்கும் இராவணன் நான்-

இழிதொழிலோர் -பண்பிழந்தோர் -எத்திப் பிழைப்போர்-

அவரை நத்திக் கிடப்போர்

அனைவரையும் அரை நொடியில் அழித்துவிடப்

போர்க்கோலம் பூண்டு விட்டேன்!

புலிநிகர் நண்பர்களே! பொல்லாத புரோகிதர்கள்,

படை இல்லாதவர் என்றிருந்தேன்!

பாவையரைப் பாசறையாய் ஆக்கிக் கொண்டு

தேவையுள்ள படைகளெல்லாம் குவித்து விட்டார்,

கோவை இதழ், கொய்யாக் கன்னம்,

போர்வை உடல் கொண்டுவிட்ட இளங் குமரிகளால்,

இனத்திலுள்ள மன்னரெல்லாம் இருடிகள்பால் சாய்ந்து விட்டார்!

முழு நிலவு முகங்காட்டி, முனிவர்களின் பெண்டாட்டி

முடி மன்னர்களை வாட்டி விட்டார் - தமிழ்க்

கொடி பறந்த கோட்டை யெல்லாம்

மடியேந்தும் ஆரியர்க்கு மடங்களாய்ப் போனதய்யோ!

அருமைத் தம்பிக்குத் தீமை சூழ்ந்து ஆரண்யம் ஓடி வந்த

எருமைக்குமில்லாத தடித்த தோலன்,

இழி சுக்ரீவன் இவனுக்குத் தோழன்,

அண்ணனுக்கு மரணம் தந்தோன்!

இன்னொருவன், அனுமன் எனும் துரோகியுடன்

இலங்கைக்குத் தீ வைத்த என்றன் தம்பி!

இராமன், இவர்கள் எல்லாம் எதிர்க்கின்றார் என்னை யென்றால்,

இதிலேதோ மர்மம் இருக்கத்தான் வேண்டுமன்றோ?

நான்,

சீதைக்கோர் மகன் தந்து, இலங்கைச் செங்கோலும்

அந்த மகனுக்கே தந்துவிட வேண்டுமென்று,

தீப்பந்தனைய நிபந்தனைகள் போடுகின்றார்.

தீய இராமனது கூட்டத்தார்!

பூப்பந்தனைய பொன் மகளாம் - என் துணைவி

பாப்புனையும் புலவர்க்கும் கிட்டாத பைந்தமிழாம்-

கோப்பெருந் தேவியவள், குளிர் நிலா! வைரக் கட்டி! இந்த

யாழ் மீட்டும் பாணனுக்கு, சீதையெனும்

பாழ்பட்ட வீணை ஏன்? சிறிது

நாள்பட்டேனும் நம் நாடும் ஆரியரின் தாள் தொட்டு

வணங்குதற்கு வழி திறவேன்!

விழி மூலம் வீரத்தைக் காட்டுகின்ற வீரர்காள்!

மொழி மீது ஆணை தந்து புறப்படுவீர் - முள்ளம் பன்றிகளைப்

பழி தீர்த்துத் திரும்பிடுவோம்!"

என முரசறைந்தான், முதுகுன்றத் தோளுடையோன்!

அது கேட்டு அனைவருமே ஆர்ப்பரித்தார்!....

கொலை மணக்கும் போர்க்களத்தில்

இரு தரப்புப் படைகளுமே ரத்தங் கொட்டும்!

தலை நொறுங்கிச் செத்தவரும், குடல் கிழிந்து போனவரும்

தமிழினத்தார் - ஒரு குலத்தார்!

மலையோரம், மரத்தோரம் மறைந்திருந்து

எலிபோலப் போரிட்டான் எதிரி இராமன்!

அம்புவியில் கண்டதில்லை இந்த முறை

அம்பு வில்லை எட்டா என்று

கும்பகர்ணன் கொதித்தெழுந்தான்! அது கண்டு

குதித்தோடும் இராமன் தன்னைக் கோழையே திரும்பு என்றான்!

கரும்போ உயிரென்று களிறு போல் முழங்கி நின்றான்!

முடிக்கவில்லை அவன் பேச்சை... முதுகுப் புறத்தினிலே,

சரமாரி பொழிந்து விட்டான் இலக்குவனும்!

ஆனையெனச் சாய்ந்துவிட்ட அன்புத் தம்பிதனைச்

சேனைதனை நடத்தி வந்த செந்தமிழன் கண்டுவிட்டான்!

சிந்தையெலாம் அணுவெல்லாம் தழல் பறக்கப்

பூனைகளே!... நில்லுங்கள் எனச் சொல்லிப்

பூட்டி விட்டான்... போர்க் கணையை!

குளிர் மேகம் கொட்டுகின்ற மழைதானோ?

கோடையிலே அதிர்கின்ற இடிதானோ? எனப்

புயல்வேகம் - புதுவேகம் கொண்டு விட்டான்!

வேல்பட்ட புலி போல - விடுபட்ட கணைபோல-

அணை விட்ட வெள்ளம் போல - ஆயிரம் வாள்பட்ட மார்புடையான்,

போரிட்டான்!...

கால்பட்ட பிடரியுடன் கயவர்களும் மறைந்து போனார்!