கலைஞரின் கவிதைகள்
கவிதை 3 · 3 / 77
இவண் வந்தேன் இதுதான் உண்மை-
தலைவரென்பார், தத்துவமேதை என்பார்,
நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார்
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்.
மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து
அமைச்சரென்பார்,
அன்னையென்பார், அருமொழிக் காவல் என்பார்,
அரசியல்வாதி என்பார் — அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் - நெஞ்சத்து
'அண்ணா' என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை
பெயரும் தந்தார்
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஒளவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்,
வணங்காமுடிப் பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல் போப்புக்கும் சிலை
கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
அன்பாலே திக்கெட்டும் குறள் பரப்பத் திருவள்ளுவர்க்கும் சிலை
பத்து சிலை வைத்ததனால் - அண்ணன் தமிழின் பால்
பற்றுதலை உலகறிய; அந்த
அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்த போது..
வைத்துள்ள ஆள்காட்டி விரல் மட்டும்
காட்டி நின்றார்...
ஆணையிடுகின்றார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ, இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்
ஒரு விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா... இதயமன்னா ....
படைக்கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்தும் பெரும்பயணம் ஏன் தொடர்ந்தாய்....?
உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே!
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்; நியாயந்தானா?
கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்
இன்று மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவு கண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்;
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்!
கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா!
எழுந்து வா எம்மண்ணா!
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா... நீ
இருக்குமிடந் தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா ....
நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா......
[Decorative printer's ornament centered below the closing verse]
**தென்னவன் காதை**
குறுந்தாடி; குள்ளத்தாடி; நெடுந்தாடி; வெள்ளைத் தாடி;
இப்படிப் பல தாடியுடனே....
புராண அங்காடி விரித்துப் புளிக்கும் பழங்காடி சுவைத்துப்
போதையேறிக் கூத்தாடும் பூசுரர்கள் கூட்டம்.
மாசு, மரு அற்றிருந்த மண்டிலத்தின் ஓரம்
மாடுகளை, ஆடுகளை, மனிதர்களை வெட்டிப் பிண
மேடுகளை வேள்விக்கெனக் குவித்துவந்த வேளை!
ஆரியரின் படையெடுப்பால்... இல்லை...
இடைநெளிவால்... கடை விழியால்.. இருடிகளின்
இன்பரச பானத்தால் -இருண்டுவிட்ட தென்புலத்தில்-
ஏற்றிவிட்ட விளக்கு போல
எழுந்து நின்றான் இலங்கைவேந்தன்!
அவன் சரிதம் சொல்வதென்றால்... தசையெல்லாம் ஆடுதய்யோ!
திசையெட்டும் புகழ் சேர்த்த தென்னிலங்கைக் கோமான்,
திராவிடரின் மூதாதை!
பழத்தமிழின் பால் பற்றுதலை வைத்த நம் பாட்டன்.
கண்ணுக்குள் பாவைபோல் இலங்கைத் தீவு.
கருவிழிதான் ஆழ் கடல்கள்! தமிழ்
மண்ணுக்குப் புகழ் தந்த பெருவீரன்.
உருவில் சிங்கம், உள்ளம் தங்கம்! யாழ்ப்
பண்ணுக்கு யாரும் நிகரில்லையென வாழ்ந்த
யாழ்ப்பாணத் திருநாட்டான் - மலைத் தமிழன்!
அவன் துணைவி, வண்டமரும் பூங்குழலாள்
மண்டோதரி - மாதர் குல மாணிக்கம் - எதிர் வீணை மீட்டும்
பேச்சுக்காரி!... இராவணனின் யாழோசை
தோற்ப தெல்லாம்.... பத்தினியின் பள்ளியறைக்
கனி மொழியின் முன்னேதான்!
இமைக் கதவு உண்டே எழில் விழியைக் காப்பதற்கு;
அப்படித்தான் - இலங்கைக்கு இராவணன்!
அவனுக்கு அவள்!
காடுகளில் நமதெல்லைக் கோடுகளில் ஆரியர்கள்,
கடவுளுக்குப் பலிதேடும் வேலை, ஆகாது
கொடுமையென உருவினான் உடைவாளை!
பர்ணசாலை அழைப்புக்கள் முத்தமிட்டன அவன்தாளை, அந்தப்
பருவ மங்கையரின் சிரிப்போ விளைந்த பாளை!
அட; தொடுவேனோ ஆரியத் தேளை என
எதிர்ப்புக் குரல் கொடுத்தான் அந்தக் காளை!.....
நரிகள் உள்ள காடெல்லாம், நயவஞ்சகர் உலவும்
நாடெல்லாம் காவல்! காவல்! அந்தப் படைகளுக்கு
இராவணன், காலம் காட்டும் சேவல்! சேவல்!
தமிழரசி முத்து நகை இராவணனின் தங்கை,
தண்டகாரண்யத் தவசிகளை எதிர்த்து ஊதிவிட்டாள் சங்கை!
வேங்கையெனத் கிளம்பிவிட்டாள் வீரர்குல மங்கை,
வேதமோதிகளின் விழிகளிலே வழிந்திடுதே கங்கை!
துரோகத்தால் சூழ்ச்சியினால் தமிழர்களைத் தோற்கடிக்கத்
தோள் வலியால் ஆகாதெனக் கண்டு விட்டதாலே
சின்னவனாம் இலக்குவனும் சீதையெனும் மனையாளும்
பின் தொடரப் புறப்பட்டான் இராமனெனும் மன்னன்,
தம்பிக்குக் கேடிழைத்து முடிசூட முனைந்து
நம்பிக்கைத் துரோகியென நாடெல்லாம் இகழக்
காடாகி விட்டவன் அந்த ராமன் எனும் மனிதன்!
அவன் ஒரு நாள்,
காட்டோரம் திரியும் போது, கரும்பனைய முத்துநகை
களைப்பினால் தூங்குகின்றாள் கனிமரச் சோலையோரம்,
காமத்தால் கருத்திழந்த கசடனவன்,
கமலமலர்க் கண்மூடித் தூங்குகின்ற தூயவளைத்
துன்மார்க்கத்தால் கெடுத்திடவே - தம்பி
துணையோடு அருகே போனான்.
காவலுக்குக் கைகாரி சீதாதேவி!
காவலின்றித் தூங்கிவிட்ட முத்துநகை,
கற்புக்கனல் காக்கக் கொதித்தெழுந்தாள்...
கனிமரம் போல் தனியொருத்தி - இருமந்தி!
என் செய்வாள்?
கற்புக்கு விலையாகக் கரமிழந்தாள்! மூக்கிழந்தாள்!
முத்துநகை கொட்டுகின்ற பல்இழந்தாள்! அம்மவோ
முலையிழந்தாள் - ஆயினும் கற்பு
நிலையிழந்தாள் இல்லை!
தலையிழந்து போயினும் மானங்காக்கும் தமிழச்சி,
இராவணனின் தங்கச்சி!
சூதறியாச் சோதரியைச் சூர்ப்பநகை ஆக்கிவிட்ட
காதெரியும் செய்தி கேட்டான் - கண்ணிலே புண் பெற்றதுபோல்
காட்சி தந்தான்.
கடலாளும் புவி வேந்தன், முத்துநகை
அண்ணனன்றோ?
படர் உறவு இல்லாவிடில்தான் என்ன?
இலங்கைக்கு அவளோர் பிரஜையன்றோ?
எழுந்து விட்டான் பழிவாங்க - காலை
இளம்பரிதிபோல் கண்களிலே சிவப்பு தேக்கி...!
வேந்தன் வரும் செய்தி கேட்டு விழியழகி சீதாதேவி,
பாந்தமுள்ள மானொன்று வேண்டுமென்று
