உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 2 · 2 / 77

கோலத்தை எதிர்க்க மாட்டாமல்

கோலற்ற குருடர் போலக் கொள்கையற்றோர்

வீழ்ந்து போனார்!

தீரர் அண்ணா திராவிடர் கழகமெனும்

பெயர் மாற்றத் தீர்மானம்

வீரர் கூடிய மாநாட்டில் கொண்டு வந்தார்!

அண்ணல் காந்தியார் அறவழி கண்டு

ஆங்கில ஆட்சியை அகற்றியபோது

துன்ப நாளென்னும் பெரியார் அறிக்கையை மறுத்துத்

தொடங்கினார் போரை!

இன்ப நாளிது! இனிய நாளிது!

என்பு தோலாய் ஆன இந்தியர்

அன்புறு காந்தியின் அருளால் இன்று

எழுந்தனர் அடிமைத் தளையினை அறுத்து!

முழங்குவோம் விடுதலை முரசினை எடுத்து

என்றே அண்ணா, அன்றே சொன்னார்....

அன்று முதல் அண்ணன் - அய்யா - உறவினிலே

கீறல் விழ

அது நாற்பத்தொன்பதாம் ஆண்டினிலே பிரிவாய்மாறி

முகில் கிழித்து வெளிக் கிளம்பும் முழு மதியாய்

முன்னேற்றக் கழகத்தை முகிழ்க்கச் செய்தார்!

தலைவருடன் கூடி வாழ முடியாமல்

பெரும்பான்மைத் தோழருடன் வெளியே வந்தவுடன்,

நிலைகுலையா நம் அண்ணன் அன்று சொன்னார் அது.

நேற்றுச் சொன்னது போல் இருக்குதம்மா!

தலைவரில்லை முன்னேற்றக் கழகத்துக்கு- என்

தலைவர் இருந்த நாற்காலி, காலியாக இருக்கும்! அதில்

தலைவர் அவர் என்றேனும் வந்தமர்வார்....

அதுவரையில் காத்திருப்பேன் என்றார்.

பூத்திருக்கும் மலர்த் தோட்டம்

காலை பனிநீர் வடிப்பது போல்

காத்திருந்து கூட்டம் கேட்டோர்

கண்ணீர் வடித்தார்.

கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே! -என அழைத்துச்

செந்நீர் சிந்துதற்கு அணிவகுத்தார்!

யாரேனும் கேட்டதுண்டா?

பாரேனும் பகர்ந்ததுண்டா?

பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம்

பதுங்கிப் பாயும் வேங்கையெனப் - பாராள வந்த கதை?

ஈராண்டு முடியவில்லை என் அண்ணா ஆட்சியேற்று-

சீரார்ந்த செயல் பலவும் செய்கலுற்றார்!

ஏரார்ந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்து

எழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி.

உலகத் தமிழ் மாநாடு துவக்க வந்த

ஓங்கு புகழ்க் குடியரசுத் தலைவரவர்

இணையற்ற காட்சி கண்டேன் மாட்சி கண்டேன்

இதுபோல வாழ்வில் என்றும் கண்டதில்லை'யென

ஊர் மெச்சப் புகழ்ந்துரைத்தார் அண்ணன் கீர்த்தி!

ஆந்திரத்துப் பிரம்மானந்த ரெட்டிகாரும்

ஆகா-நீர் தானே அசல் காந்தீய வாதியென்று

ஆராதனை செய்திட்டார் - ஆண்டொன்று முடியவில்லை!

மதுவிலக்கைத் தீவிரமாய் ஆக்குகின்றீர் பல மாநிலத்தில்

கை கழுவிக் கலயம் கட்டிவிட்டார்

மகாத்மாவின் தோன்றல் நீர்தான் என்று

கிரியென்றால் மலையன்றோ - அந்த

மரங்களிலே!

மலைதழுவும் முகிலானார் நம் அண்ணா!

வி.வி. கிரி தந்த வாழ்த்துக்கு விளக்கமிது.

பன்னாட்டுப் பேரறிஞர் வாழ்த்தி நின்றார் - அன்று

தென்னாட்டுச் சிகரமாக இருந்திட்டோர்

அண்ணன் பற்றி

என்ன சொன்னார்-?

பழந்தமிழ் வித்தகர் பல்லாவரத்தார் - அண்ணா,

பழத்தமிழ்ப் பேச்சால் மயங்கி நின்றார். அந்த

மறைமலை தந்த புகழ்மொழி ஆயிரம்.

பசுமலை பாரதி - பாண்டியன் தோற்றம்

நாவலர் என்று நாடே அழைக்கும் - அவர்

சழக்கரால் வீழ்ந்த தமிழ் நிலம் காக்க மன

அழுக்கில்லாத் தலைவன் கிடைத்தான் என்றே

அண்ணன் பெருமை சொன்னார் அன்று!

ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்

இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை

நூறாயிரம் கோடி என ஆண்டுபல வாழ்வதற்கு

நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;

கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்

தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.

மலர் என்றால் தாமரைதான்

மன்னன் என்றால் கரிகாலன்

நூல் என்றால் திருக்குறளே

எனப்போற்றும் அறப்பனுவல்

அளித்திட்டான்; மாந்தரெல்லாம்

களித்திட்டார்!

விண்முட்டும் மலையோரம் - நம்

கண்பட்டும் படாமலும் எழுகின்ற

நச்சுமரம் போலப் பண்பட்ட தமிழர் வாழ்வில் - முதுகில்

புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதந்தோ!

சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில்

பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்!

அறிவு மணங்கமழ்கின்ற ஆலயங்கள் அற்றுப்போய்

ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோயில்கள் கண்டுவிட்டார்.

மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் - தமிழ்

அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்

அறநெறியே குறிக்கோளாய்த் திகழ்ந்திட்ட பெருநிலத்தில்

பிறநெறிகள் பயிர் செய்தார்; பிழை குவித்தார்.

மழையற்றுப்போன வயல்போல மாறிற்றுத் தமிழர் மனம்

அழுக்காறு அவர் வெகுளி - இன்னாச் சொல் நான்குமின்றி

நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்!

பொருளிலார்க்கு இவ்வுலகமில்லையென்று

பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில் - இன்று

இருள் கவிந்து வாட்டம் கொடி போட்டதங்கே.

வாடினாள் தமிழன்னை சோகப் பாட்டுப் பாடினாள் தமிழன்னை;

சுடுநெருப்பில் ஆடினாள் தமிழன்னை...

ஓடினாள்...ஓடினாள்... ஒரு வழியும் கிடைக்கவில்லை!

புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான்

கவியூரின் பெருவேந்தன் குறளாசான்!

ஆண்டு சென்று, 'அருமை மகனே!

வேண்டுகோள் ஒன்று விடுத்தேன்' என்றாள்.

'என்னம்மா?' என்றான் குறளோன்.

'தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில்

மீண்டும் நீ பிறந்திட வேண்டு'மென்றாள்.

'தங்கம் எடுக்கவா?' என்றான்

'தமிழர் மனம் வாழ்வெல்லாம்

தங்கமாக ஆக்க' என்றாள்.

'இன்றென்ன ஆயிற்' றென்றான்.

குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;

சென்றமையக் குடில் இல்லை ஏழைக்கென்றான்;

கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்

கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில்

கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்

அழுத கண்ணைத் துடைத்தவாறு

அமுத மொழி வள்ளுவனும்

அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்;

தொழுத மகன் உச்சிமோந்து

ஆல விழுதனைய கைகளாலே.. அணைத்துக் கொண்டு

உழுத வயல் நாற்றின்றிக் காயாது.

இனிமேலே என எண்ணி

மனமகிழும்

உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ

காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே

கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!

நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.

பிறந்திட்டான் நம் அண்ணனாக;

அறிவு மன்னனாக.

பொதிகை மலைத் தென்றலாய்ப்

போதாகி மலர்கின்ற

பதிகத்துப் பொருளாய்ப்

பழந்தமிழர் புறப்பாட்டாய்

தமிழ் உணர்வின் புதுமணமாய்ப்

வந்துதித்தான் அண்ணன் - கீழ்

வானுதித்த கதிர்போல-

அவன் புகழைப் பாடுதற்கு

அவன் வளர்த்த தம்பி நானும்

அவன் தந்த தமிழ் எடுத்து