உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 1 · 1 / 77

இதயத்தைத் தந்திடு

அண்ணா

இதயத்தைத் தந்திடு

அண்ணா

(9.2.69 அன்று சென்னை வானொலியில்

பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக்

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்

அளித்த கண்ணீர்க் கவிதாஞ்சலி.)

பூவிதழின் மென்மையினும் மென்மையான

புனித உள்ளம்-அன்பு உள்ளம்-

அரவணைக்கும் அன்னை உள்ளம்! அவர்

மலர் இதழ்கள் தமிழ் பேசும்-

மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-

விழிமலர்கள் வேலாகும், வாளாகும்

தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகுதென்றால்!

கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;

கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை!

அம்மலரே எதிரிகளை மன்னித்து

நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்!

மக்களாட்சி மலர் குலுங்க

சமதர்மப்பூ மணக்க

தாய்மொழி தமிழே வாழ்வுப் பொழிலாக

ஆடிவரும் தென்றல்,

நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்

தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே - தினம்

பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்

உனக்காக எனைத் துறப்பேன்; என் -

ஒரு கோடித் தமிழ் இளைஞர்,

பாடி நின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன்....

முரசிற் செறிந்த தமிழார்வம்

முதிரா இளைஞர் ஆருயிரைப்

பெருகச் செய்த செயல் மறவர்

சிறப்பைப் பாடக் கேண்மினோ!

தங்கு சனி வேல் செய்த புண்களை

அன்பெனும் வேது கொண்டாற்றியும்

செங்கனி வாய் மருந்தாட்டுவார்

சீர்மையைப் பாடக் கேண்மினோ!

பொருதடக்கை வாளெங்கே; மணி மார்பெங்கே?

போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத

புரவலர்த் தோளெங்கே எங்கே யென்று

தம்பியரைக் கேட்டதனைக் கேண்மின்!

கேண்மின்!

காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த

கலவி மடவீர் கழற்சென்னி

காஞ்சியிருக்கக் கலிங்கம் தொலைந்த

களப் போர் பாடத் திறமினோ என்று

மயல் கொண்ட மாதர்தமைத் துயில் எழுப்பச்

செயல் கொண்டார் பாடினார்

களப்பரணி.. கலிங்கத்துப் பரணி

அளப்பரிய வீரத்தின் புகழ்ப்பரணி - யான்

கவிப்பரணியேற்றி, காஞ்சிபுரப் பரணி

பாடி நின்றேன் இன்று

அவலப் பரணி பாடுகின்றேனே...!

கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்

கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென

நிலவினில் குளிரென நிலமிசை வளமெனக்

குலவிடும் அருவி குழறிடும் மொழியென

உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென

அலையெழுங் கடலின் ஆடிடும் நுரையெனக்

கலைமணங் கமழக் கூடிய கவிஞர்

தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட

நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ!

வெள்ளம்!

வெள்ளம்!

மாபெரும் வெள்ளம்!

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எட்டாம்

தாயகத்தில் மொழிப் புரட்சி தோன்றுதற்கு

வித்திட்டார் சிலபேர் என்றால்: ஈரோட்டு

நாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர்

எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சி பூண்டு!

இரு மூன்று திங்கள் வரை சிறையில் வாடி,

தரும் ஊன்றுகோலாகத் தமிழைத் தந்து

அரு மூன்று எழுத்தாலே அண்ணாவானார்....

அன்றொரு நாள் அய்ம்பத்திரண்டுதனில்

சென்னையிலே சொன்னேனே

நினைவுண்டா உங்களுக்கு?

மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு

முத்தமிழ் மணமுண்டு...

மூவேந்தர் முக்கொடி முக்கனியென

மும்முரசார்த்தவர் தமிழர் - அவர் வாழ்ந்த

தமிழ் ‘வாழ்வு’க்கு மூன்றெழுத்து - அந்த

வாழ்வுக்கு அடிப்படையாம் ‘அன்பு’க்கு மூன்றெழுத்து...

அன்புக்குத் துணை நிற்கும் ‘அறிவு’க்கு மூன்றெழுத்து

அறிவாற்றோர் இடையிலெழும், ‘காதல்’க்கு மூன்றெழுத்து...

காதலர்கள் போற்றி நின்ற கடும் ‘வீரமோ’ மூன்றெழுத்து...

வீரம் விளைக்கின்ற ‘களம்’ மூன்றெழுத்து...

களம் சென்று காணுகின்ற ‘வெற்றி’ மூன்றெழுத்து

அந்த வெற்றிக்கு நமையெல்லாம் ஊக்குவிக்கும்

அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து

அறிந்திடுவீர் எனச் சொன்னேன்!

திக்கெட்டும் தமிழ் முழக்கம்

திசையெங்கும் சொன்மாரி

வக்கற்றோர் வகையற்றோர்

வாழ்வதற்குத் திட்டம் கோரி

வண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி!

எழுதுகிறார் அண்ணா எனில்,

ஏடெல்லாம் வீடெல்லாம் தமிழ்

நாடெல்லாம்.... புதுமை மணக்குதங்கே....

“ஏடா தம்பி எடடா பேனா....!”

“கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு”

கருத்துப்பேழை கற்பூரப் பெட்டகம்!

“மரக்கிளையிலே பிணம்!”

“வெந்த புண்ணிலே வேல்!”

மறந்திடப் போமோ! மனங்கவர் வாசகம்?

“சாலை யோரத்திலே வேலையற்றதுகள்-

வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள்-

வேந்தே! அதுதான் காலக்குறி!”

அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை?

அறிவு நடை!

“கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது”

தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ!

“இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?”

“தம்பியுடையான் படைக்கஞ்சான்”....

ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்

மனோன்மணியம் எனினும் - நம்

மனத்தில் பதித்தவர் அண்ணாவன்றோ!

“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்”

அரசியல் பண்பினைப் போதிக்கும் அழகே!

“மறப்போம் - மன்னிப்போம்”

மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே!

எவர் கற்றுத் தந்தார் இதனை?

சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல் போல்

நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல்

நன்றென்றார் அண்ணா -

அதை மறந்து

நாலைந்து பேர் குதித்திட்டார் என்றால்

அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா!

அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க

வயிறு தாங்காத காரணத்தால்

தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே! என அழைத்துக்

கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டிப்

பனிமலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக் கொண்டார்.

சொலல் வல்லார் சேதுப் பிள்ளைதனைச்

சோமசுந்தர பாரதியைச் சொற் போரிலே

சொக்க வைத்தார் - பாவம்; சிக்க வைத்தார்!

நீதிக் கட்சியென்று நெடியமதில் சுவருக்குள்ளே - பணச்

சாதிக்குக் கட்சியாய் இருத்தலாகாதெனும்

கொள்கையாலே - அதனை

வீதிக்குக் கொண்டு வந்தார்!

வீசிடுக வெள்ளையர்கள் பட்டத்தையென்று

சேலத்து மாநாட்டில் தீர்மானம் போட்டுவிட்டார்

- அண்ணாவின் போர்க்